18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…!!!

வி வசாயம் சார்ந்த உபதொழிலாகப் பெரும்பாலான விவசாயிகள் தேர்ந்தெடுப்பது, கறவை மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைப்பதைத்தான். அதே நேரத்தில், பா...

விவசாயம் சார்ந்த உபதொழிலாகப் பெரும்பாலான விவசாயிகள் தேர்ந்தெடுப்பது, கறவை மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைப்பதைத்தான். அதே நேரத்தில், பால் பண்ணை வைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட விவசாயிகளும் பலர் உண்டு. இந்நிலையில், ‘தெளிவான புரிதலோடு பால் பண்ணைத் தொழிலில் இறங்கி, பால் விற்பனை மட்டுமில்லாமல், பாலில் மதிப்புக்கூட்டிய பொருள்களையும் உற்பத்தி செய்தால் நல்ல லாபம் எடுக்க முடியும்’ என்று நம்பிக்கையூட்டுகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது, சொக்கலிங்கபுரம் எனும் கிராமம். இங்குதான், கருப்பசாமியின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த கருப்பசாமியிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார்.



“விவசாயம்தான் பூர்வீகத்தொழில். பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே அப்பாகூடச் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இறவையில் காய்கறி, நெல், நிலக்கடலைச் சாகுபடி செய்வோம். மானாவாரியா மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள்னு சாகுபடி செய்வோம். அப்பாவுக்கு அப்புறம் நான் முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். அதுக்கப்புறம்தான் தொடர் வருமானம் கிடைக்கிற மாதிரி, விவசாயம் சார்ந்த தொழில் ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு கறவை மாடுகளை வளர்க்கலாம்னு முடிவு செஞ்சேன். அதுக்கப்புறம் நிறைய பண்ணைகளைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஓரளவுக்கு அதுபத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு… 8 கலப்பின மாடுகளை வாங்கிப் பண்ணையை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சு 9 வருஷம் ஆச்சு. இப்போ தொழுவத்துல ஜெர்சி, ஜெர்சி+சிந்தி கலப்புனு மொத்தம் 26 உருப்படிகள் இருக்கு. இதுல 18 கறவை மாடுகள், 3 கன்னுக்குட்டிகள், ஒரு காளை, 3 சினைப்பசுக்கள் இருக்கு” என்ற கருப்பசாமி, தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே தொடர்ந்தார்.



“இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். அதுல இரண்டு ஏக்கர் நிலத்துல மாட்டுத் தொழுவம், தண்ணீர்த் தொட்டி, தீவனச் சேமிப்பு அறை எல்லாம் இருக்கு. ஒன்றரை ஏக்கர் நிலத்துல பசுந்தீவனம் சாகுபடி செஞ்சுருக்கேன். மீதி நிலத்துல தென்னை, வேம்பு, பழ மரங்கள் இருக்கு. நிறைய இளைஞர்கள் ரொம்ப ஆர்வமா பால் பண்ணையை ஆரம்பிக்கிறாங்க. கொஞ்ச நாள்லயே நஷ்டம்னு மூடிடுறாங்க. பண்ணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல பண்ணைகளைப் போய்ப்பார்த்துத் தொழில்நுட்பங்களைக் கத்துக்கணும். தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, பால் விற்பனைனு எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகுதான் தொழில்ல இறங்கணும். மாடுகளை வாங்குறதுக்கு முன்னாடியே தேவையான பரப்புல பசுந்தீவனங்களைச் சாகுபடி செஞ்சுக்கணும். எடுத்த உடனேயே அகலக்கால் வைக்காம குறைஞ்ச எண்ணிக்கையில் மாடுகளை வெச்சு ஆரம்பிக்கணும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் அதிகரிக்கணும். மாடுகளுக்குத் தீவனம் கொடுக்கிறது, பால் கறப்பது மாதிரியான விஷயங்கள்ல நேரத்தைச் சரியா கடைப்பிடிக்கணும். கூடுமான வரைக்கும் நம்ம குடும்ப உறுப்பினர்களை வெச்சுப் பராமரிச்சா, நஷ்டம்ங்கிற பேச்சே இருக்காது. இங்க பண்ணையை நான் பராமரிச்சுட்டு இருக்கேன். விற்பனையை என் மருமகன் விஜயராஜ் பார்த்துக்குறார்” என்று சொல்லி விஜயராஜை அறிமுகப்படுத்தினார்.

விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசிய விஜயராஜ், “ஆரம்பத்தில் தனியார் பால் பண்ணைகளுக்குத்தான் பாலை விற்பனை செஞ்சோம். அதுக்கப்புறம் உள்ளூர்க்காரர்கள் பண்ணைக்கே வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் கேட்டு வரவும், நாங்களே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சிவகாசியில் ஒரு பால் விற்பனை நிலையம் ஆரம்பிச்சிட்டோம். மொத்தம் 18 கறவை மாடுகள் மூலமா தினமும் 150 லிட்டர் வரை பால் கிடைக்கிது. தினமும் 130 லிட்டர் அளவு பாலை நேரடியா விற்பனை செய்றோம். மீதி 20 லிட்டர் பாலைத் தயிர், பால்கோவா, பன்னீர்னு என மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம்.



ஒரு லிட்டர் 40 ரூபாய்னு ஒரு மாசத்துக்கு 3,900 லிட்டர் பால் விற்பனை செய்வது மூலமா 1,56,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது. ஒரு லிட்டர் 50 ரூபாய்னு ஒரு மாசத்துக்கு 200 லிட்டர் தயிர் விற்பனை செய்வது மூலமா 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது. ஒரு கிலோ 250 ரூபாய்னு ஒரு மாசத்துக்கு 50 கிலோ பால்கோவா விற்பனை செய்கிறது மூலமா 12,500 ரூபாய் வருமானம் கிடைக்கிது. ஒரு கிலோ 600 ரூபாய்னு ஒரு மாசத்துக்கு 18 கிலோ பன்னீர் விற்பனை செய்வது மூலமா 10,800 ரூபாய் வருமானம் கிடைக்கிது. மொத்தமாகப் பார்த்தா ஒரு மாசத்துக்கு 1,89,300 ரூபாய்க்கு மேல வருமானமாகக் கிடைக்கிது. இதில், அடர்தீவனம், பராமரிப்பு, போக்குவரத்து, வேலையாள் கூலி, மதிப்புக்கூட்டல் செலவுனு எல்லாம் சேர்த்து 1,00,000 ரூபாய் வரை செலவாகிடும். மீதி எல்லாம் லாபம்தான். கிடைக்கிற பால்ல ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மதிப்புக் கூட்டுறதாலதான் இவ்வளவு வருமானம் எடுக்க முடியுது” என்றார்.

தொடர்புக்கு, கருப்பசாமி, செல்போன்: 94862 02826, விஜயராஜ், செல்போன்: 94435 45401

கிழக்கு மேற்காகக் கொட்டகை!

றவைமாடு வளர்ப்பு முறை குறித்து கருப்பசாமி சொல்லியவை இங்கே இடம் பிடிக்கிறது...

மாடுகளுக்கான கொட்டகையைக் கிழக்கு-மேற்காக அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி தண்ணீர் தேங்காதபடி இருக்க வேண்டும். மாடுகளைத் தெற்கு-வடக்காகக் கட்ட வேண்டும், தரையிலிருந்து ஒன்றேகால் அடி உயரத்தில் தளம் அமைத்து அதன்மேல் ஒன்றரை அடி உயரத்தில் தீவனத்தொட்டி அமைக்க வேண்டும். கொட்டகையில் சாணம் தேங்கி இருக்கக் கூடாது. அவ்வப்போது கொட்டகையைக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மாடுகளையும் அவ்வப்போது குளிப்பாட்ட வேண்டும்.

வளர்ப்புக்குத் தேர்வு செய்யும் கறவை மாடுகளின் தலைப்பகுதி சிறியதாகவும், கண்விழி பெரியதாகவும் இருக்க வேண்டும். கால் குழம்புகள் விரிந்த நிலையில் இருக்க வேண்டும். தோல் மென்மையாக இருக்க வேண்டும். கொம்பின் முனை முன்புறம் கொக்கிபோல வளைந்து இருக்க வேண்டும். மாட்டின் தலைப்பகுதியிலிருந்து பார்த்தால் உடல் ஆங்கில எழுத்து ‘V’ வடிவத்தில் இருக்க வேண்டும். மடிக்கும் தொப்புளுக்கும் இடையில் ஒரு ‘சாண்’ இடைவெளி இருக்க வேண்டும். இந்த அம்சங்களுள்ள மாடுகள் ஆரோக்கியமானதாகவும் அதிகப் பால் கொடுப்பவையாகவும் இருக்கும். புதிதாக வாங்கி வரும் மாடுகளை இரண்டு வாரங்கள்வரை தனியாக வைத்துப் பராமரித்துப் பிறகுதான் கொட்டகைக்குள் மற்ற மாடுகளுடன் சேர்க்க வேண்டும். இதனால், நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.

தினமும் காலை 7-8 மணிக்குள் ஒருமுறையும் மதியம் 1-2 மணிக்குள் ஒருமுறையும், அடர் தீவனக்கரைசல் கொடுக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு முக்கால் கிலோ பருத்தி விதை, அரைக்கிலோ மக்காச்சோளம், அரைக்கிலோ கோதுமைத்தவிடு, முக்கால் கிலோ உளுந்தங்குருணை, 500 மில்லி முந்திரிப் பிண்ணாக்குக் கரைசல், 200 மில்லி சுண்ணாம்புத் தண்ணீர், 20 கிராம் தாது உப்புத்தூள் ஆகியவற்றுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் மாலை 4-4.30 மணிக்குள் 20 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் உப்பு கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை பால் கறப்பதற்கு முன்பும் காம்புகளைக் கழுவ வேண்டும். காலையில் பால் கறந்த பிறகு, ஒரு மாட்டுக்கு 20 கிலோ வீதம் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். மதியக் கறவைக்குப் பிறகு ஒரு மாட்டுக்கு 5 கிலோ வீதம் உலர் தீவனம் கொடுக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகளைப் படுக்கவிடக் கூடாது. படுத்தால், காம்புகளில் நோய்க்கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு. கறந்தவுடன் தீவனம் கொடுத்தால் மாடு நின்றுகொண்டே சாப்பிட ஆரம்பிக்கும். சாப்பிடும் நேரத்தில் காம்புகள் மூடிக்கொள்ளும்.

மாடுகளுக்குத் தினமும் சுண்ணாம்புத்தண்ணீர் அவசியம் என்பதால், பண்ணையில் சுண்ணாம்புத் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். 50 லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டியில் 3 கிலோ சுண்ணாம்புக் கற்களைப் போட்டு 35 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில், தினமும் தெளிந்த நீரை எடுத்துக்கொண்டு தொட்டி நிரம்பும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 40 நாள்களுக்கு ஒருமுறை தொட்டியைச் சுத்தம் செய்து, மீண்டும் சுண்ணாம்புக் கற்களைப் போட வேண்டும்.

மாடுகளுக்குக் கழிச்சல் ஏற்பட்டால் பசுந்தீவனத்தை நிறுத்த வேண்டும். மழை நேரத்தில் மடிநோய் வர வாய்ப்புண்டு. மடிநோய் தாக்கினால், ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். தேவைப்படும் தடுப்பூசிகளைப் பருவம் தவறாமல் போட்டு வர வேண்டும்.


Related

வேலை வாய்ப்புகள் 6684788519346333386

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item