அஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்!

உ ரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழ வைக்கும் அன்பன். கூடுத...

ரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழ வைக்கும் அன்பன். கூடுதல் கரிசனத்துடன், நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தைத் தரும் வெங்காயம், இயற்கையின் பிரமிப்பும்கூட!

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் ஆகிய பல்வேறு பெயர்களைக்கொண்ட வெங்காயத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, கோழையகற்றி போன்ற செய்கைகள் இருக்கின்றன. இது சிரங்கு, மூலம், வாய்ப்புண், தாகம், கழிச்சல் போன்ற குறிகுணங்களை நீக்கும் என்பதை, ‘வெப்பமூலங் கிரந்தி வீறுரத்த பித்தமுடன்…’ எனத் தொடங்கும் அகத்தியரின் சித்த மருத்துவப் பாடல் சுட்டிக் காட்டுகிறது.

நெடுங்காலத்துக்கு முன்பே இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்ட நறுமணமூட்டி இது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கல்லறைகளில், வெங்காயம் சார்ந்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. குரான், விவிலியம், இந்து புராணங்களில் வெங்காயம் பற்றி எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன. மெசபடோமியா நாகரிகத்தில், `சர்வரோக நிவாரணி'யாகச் செயல்பட்டது வெங்காயம். எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சீன இலக்கியங்களில் வெங்காயத்தின் மேன்மை குறித்துப் பேசப்பட்டுள்ளன.

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற சத்துகளைத் தனது உடலில் வெங்காயம் நிறையவே சேமித்துவைத்துள்ளது. வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், நிறைய கந்தகச் சத்தை தன்னகத்தே வைத்திருப்பதே.

வெங்காயத்தில் உள்ள `குயிர்செடின்’ (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது. வெங்காயத்தில் உள்ள ஆந்தோசயனின்களும் வெங்காயத்தின் மருத்துவ மதிப்பைக் கூட்டுகின்றன. வெங்காயத்தைப் புற்றுநோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் ஓர் எல்லை வீரன் என்கின்றன ஆய்வுகள். ரத்தக்குழாய்களில் கொழுப்புத் திட்டுகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க, சமையலில் வெங்காயத்தை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் செயல்திறனை அதிகரித்து நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.

இந்தோனேசியா மற்றும் சீனாவில் வெங்காயத்தை நறுக்கி நூடுல்ஸ் மற்றும் அரிசி உணவுகளின்மீது தூவிச் சாப்பிடும் வழக்கம் அதிகம். `லக்ஸா’ எனப்படும் நூடுல்ஸ் சூப்பில், வெங்காயத் தைத் தூவுவதால்தான் சுவை கூடுவதாக வாதிடுவோர் பலர் உண்டு.
சிறுதானிய உப்புமாவில், நொதிக்கவைத்த வெங்காயப் பசையைக் கலந்து பரிமாறும் `கஸ்கஸ்’ என்னும் உணவு, துனீஷியா நாட்டில் பிரபலம். வெங்காயம் பற்றிப் பேசும்போது, `ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப்’ பற்றி குறிப்பிடாவிட்டால், பிரான்ஸ் நாட்டினர் மல்லுக்கட்டத் தொடங்கிவிடுவார்கள். பீட்சா போல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளின்மீது வெங்காயப் பசையைத் தடவித் தரும் உணவும் மேற்கத்திய நாடுகளில் அதிகம்.

வெங்காயத்தை வெட்டிச் சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யப்படும் ‘வெங்காய வடகங்கள்’, கீரைக் கடைசல் மற்றும் புளிக்காரக்குழம்பையும் அமிர்தமாக்கும். முந்தைய நாள் ஊறவைத்த சாதத்தின் நீர் அமுதத்தை, வயிற்றுக்குள் இனிமையாகக் குழைத்து அனுப்பிவைக்கும் கருவி வெங்காயம்.

ஆண்மையை அதிகரிக்க பாதாம், பிஸ்தா வைத் தேடிப்போகிறவர்கள் வெங்காயத்தைச் சாப்பிட்டாலே போதும்; அந்த அளவுக்கு இதில் வீரிய சக்தி உள்ளது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `நறுமணத் தோட்டம்’ (The perfumed garden) என்னும் அரேபிய நூலில் வெங்காயத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வீரியம் அதிகரிக்கும் என்னும் குறிப்பு காணப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு பாரம்பர்யத்தில் திருமணமான தம்பதியருக்கு `வெங்காய சூப்’ கொடுக்கும்முறை இன்றைக்கும் தொடர்கிறது.

உடல்சூட்டைத் தணிக்க, வெங்காயத் துண்டுகளை நெய்விட்டு வதக்கிச் சுவைக்க லாம். கீரை மசியலுக்குக் கைகொடுக்கும் வெங்காயம், மூலநோய்க் குறிகுணங்களைக் கட்டுப்படுத்த உதவும். குளிர்க்காய்ச்சல் இருக்கும்போது, மூன்று மிளகை வெங்காயத் துடன் சேர்த்துச் சாப்பிட்டால், சீக்கிரமாகக் காய்ச்சல் அடங்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, வெங்காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரிட்டுப் பருகலாம். புகையிலையால் ஏற்படும் நஞ்சை முறிக்க வெங்காயம் பயன்படும் என்கிறது சித்த மருத்துவம். உணவு ரகங்களில் சேர்க்கப்படும் வெங்காயத்தின் இலைகள் (தாள்), வயிற்றுப்புண்ணைத் தடுப்பதற்கான சிறந்த பொருளாகும். வெங்காயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலியைத் தவிர்க்கலாம்.

வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்தி னால் வாய்வுப் பெருக்கத்தை உண்டாக்கும்; கவனம் தேவை. இரண்டு நிமிடங்கள் மிதமான வெந்நீரில் வெங்காயத்தை ஊறவைத்து வெட்டினால், கண் எரிச்சல் ஏற்படுவதை ஓரளவு தவிர்க்கலாம்.
வெங்காய விதைகள், கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு சமஅளவு சேர்த்துத் தயாரிக்கப்படும் வங்காள மசாலா வகை, உடலுக்கு வலிமை கொடுக்கும். வெங்காய விதைகளுக்கும் வீரியத்தை அதிகரிக்கும் செய்கை உண்டு. ஆட்டிறைச்சியில் அதிக அளவில் வெங்காயம், சில வகையான தாவர இலைகள் மற்றும் வேர்கள், நறுமணமூட்டிகள், வெண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவு ரகத்தைக் கண்டு பிரமிப்படைந்ததாக, ஐரோப்பிய பயணி ஒருவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பேரரசர் அக்பர் சார்ந்த ‘ஐன்-இ-அக்பரி’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகள் பெரும்பாலானவற்றில் வெங்காயம் இடம்பிடித்துள்ளது.

வெங்காயம்… உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்!
- டாக்டர் வி.விக்ரம்குமார்

டேஸ்டி ஆனியன்

மிஸ்ஸி ரொட்டி (Missi-roti):
கோதுமை மாவுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, பொடித்த வெந்தயம் சேர்த்துச் செய்யப்படும் `மிஸ்ஸி ரொட்டி'யின் ருசி சிறப்பானது.

சமுசாக் (Samusak):
இறைச்சியுடன் பாதாம், பிஸ்தா, வெங்காயம், சீரகம் சேர்த்துச் சமைத்து கோதுமை ரொட்டிகளுக்கு இடையே வைத்து, நெய்யில் பொரித்து எடுக்கும் `சமோசா’ போன்ற சிற்றுண்டி ரகம் இது. ராஜ விருந்தினர்களை உபசரிக்க, முகமது பின் துக்ளக்கின் விருந்து பட்டியலில் `சமுசாக்’ நீங்கா இடம்பிடித்திருந்தது.

சர்கி (Sarki):
வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்து சுடச்சுட தயாரிக்கப்படும் இந்த சூப் வகை, 11-ம் நூற்றாண்டு ’போஹ்ரி’ முஸ்லிம்களின் சிறப்புத் தயாரிப்பு.

சாஃப்ரிஜிட் (Sofregit):
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், நறுக்கிய மூன்று தக்காளி, இரண்டு சின்ன வெங்காயம், மூன்று பூண்டுப் பற்கள், இரண்டு மிளகு, ஒரு கப் காளான், சிறிது சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழைகள் என அனைத்தையும், கடாயில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். இந்த உணவை எவ்வளவு பொறுமையாகச் சமைக்கிறோமோ, அவ்வளவு சுவை கூடும். வெங்காயம், பூண்டு போன்றவற்றின் சாரங்கள் உள்ளே இறங்கி உணவை மெருகேற்றும். தக்காளி சாஸ் போன்று காணப்படும் இந்த உணவு வகை, ஸ்பெயின் நாட்டினரின் ஃபேவரைட்!

யுகாடன் (Yucatan) - `வெங்காய ஊறுகாய்’: ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி தேவையான அளவு நீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். நீரை வடித்ததும், நன்றாக உலரவிட வேண்டும். பொடித்த மிளகு (ஐந்து), ஒரு டீஸ்பூன் சீரகம், அரைத்த மூன்று பூண்டுப் பற்கள், கொத்தமல்லி இலைகள், அரை டீஸ்பூன் உப்பு, அரை கப் வினிகரை ஒன்றாகச் சேர்த்து வெங்காயத்தின்மீது ஊற்றி 24 மணி நேரம் காத்திருந்தால் சுவைமிக்க வெங்காய ஊறுகாய் தயார். மெக்ஸிகோ நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தொடு உணவு ரகமாக இது இருக்கிறது.

வெங்காயம் - மாதுளை டிப் (Dip):
வெண்ணெய் (அவகாடோ) பழத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாகப் பிசைய வேண்டும். ஒரு கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு பூண்டுப் பற்கள், சிறிது புதினா இலைகள் மற்றும் மிளகாய், மூன்று டீஸ்பூன் மாதுளைச்சாறு போன்றவற்றை ஒன்றாக அரைத்து வெண்ணெய்ப் பழத்துடன் கலக்கவும். கடைசியாகத் துருவிய வெங்காயம் மற்றும் மாதுளை முத்துகளைத் தூவியதும் உடனடியாக ருசித்துவிட ஆசை ஏற்படும். சட்னி வகையாக இதைப் பயன்படுத்தலாம்.


Thanks to Aval vikatan

Related

உணவே மருந்து 8480540525748417860

Post a Comment

1 comment

AAB College said...

Thank you for sharing
https://aab-edu.net/

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item