மாத கடைசி நேர நெருக்கடி உரியகாலத்தில் வருமான வரிக் கணக்குக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவதுதான்.!
அரசு ஊழியர்களின் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு, இந்த பிப்ரவரி மாத சம்பளத்துடன் முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மார்ச் மாத ச...
மற்ற மாதங்களைப்போல், பிப்ரவரி மாத சம்பளமும் பிப்ரவரியின் கடைசி வேலைநாளில் (Last working Day) தரப்படுகிறது என்றாலும், சிலரது பிப்ரவரி மாத சம்பளம் வழங்கும் நாள் மார்ச் 31 வரை தாமதமாகக்கூடும். காரணம், ஊழியர், உரியகாலத்தில் வருமான வரிக் கணக்குக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவதுதான். தாமதம் செய்பவர் ஊழியர் என்றாலும், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் சம்பளம் தரும் அலுவலகத் தலைவரே ஆவார்.
தரவேண்டிய ஆவணங்கள்
நிதியாண்டின் தொடக்கத்திலேயே கீழ்க்கண்ட ஆவணங்களை ஊழியர்களிடமிருந்து பெறுவது சம்பளம் வழங்கும் அதிகாரியின் பொறுப்பாகும்.
1. சம்பளம் தவிர்த்து, வட்டி போன்ற இதர வருமானம் இருக்குமானால், அவை பற்றிய தகவல்களை விவரித்து, ‘தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை’ என்கிற சான்றுடன் கூடிய ஊழியர் கையொப்பம்.
2. வீட்டுக் கடன் வட்டிமீது வரிக் கழிவு கோருபவர்களிடம் கீழ்க்காணும் விவரங்களுடன் உறுதிமொழி...
* வருடாந்திர வாடகை / மதிப்பு
* நகராட்சி வரி செலுத்திய விவரம்
* கோரப்படும் வரி விலக்குக்கான வட்டித் தொகை
* பிற கழிவுகள் பற்றிய விவரம்
* சொத்து இருக்கும் முகவரி
3. வீட்டு வாடகைக்கு வரிக் கழிவு கோருவோரிடமிருந்து படிவம் (10BA)
4. கீழ்க்காணும் விவரங்களைத் தரும் படிவம் 12BB-ம், அதற்குரிய ஆவண ஆதாரங்களும் பெற வேண்டும்.
* வீட்டு வாடகைக்கு வரிக் கழிவு கோரும்போது வாடகை பெறுபவர் பெயர் மற்றும் அவருடைய பான் எண்.
* வீட்டுக் கடன் வட்டிக்கு வரிக் கழிவு எனில், யாரிடமிருந்து கடன் பெறப்பட்டது என்ற விவரம்
* அத்தியாயம் VI-A-ன் கீழ் கோரப்படும் 80C முதல் 80TTA வரையான வரிக் கழிவு விவரங்கள்
மேற்கண்டவற்றைப் பெற்றுக்கொண்டு சம்பளம் வழங்கும் அதிகாரியின் நிர்வாகப் பிரிவு, ஊழியரின் வருமான வரியைக் கணக்கிட்டு, அதனை 12 மாதத் தவணையில், மார்ச் மாத சம்பளத்தில் தொடங்கிப் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால், சில அலுவலகங்களில், குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ள அலுவலகங்களில், ஊழியரே வருமான வரிப் படிவம் தரும் வரை காத்திருப்பதுதான் கடைசி நேர நெருக்கடிக்குக் காரணம். விளைவு..?
பதினொரு மாதங்களுக்கு முன்பே அரசுக் கணக்கில் சேர்ந்திருக்க வேண்டிய வருமான வரி, பிப்ரவரி வரை தாமதமாவதால் அரசின் அன்றாட வரவு செலவு நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானம் தாமதமாவதால், நலத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகிறது.
அத்துடன், கடைசி நேர நெருக்கடி காரணமாக, சம்பளம் வழங்கும் அலுவலர் வருமான வரிக் கணக்கீட்டில் தவறு செய்துவிட்டால், பாதிப்பு சம்பளம் வழங்கும் அதிகாரிக்கே. எனவே, வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கும்போது செய்யக்கூடாதவை என்ன என்று பார்ப்போம்.
செய்யக் கூடாதவை
* நடப்பு நிதியாண்டுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியை, பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த விதிமீறல் (Gross violation of Rule) என்கிறது வருமான வரிச் சட்டம்.
* ஒட்டுமொத்த வரியையும் பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய சம்பளத்தில் நிகரத் தொகை போதவில்லை என்ற காரணத்துக்காகக் கட்டாயப் பிடித்தங்களான கீழ்காண்பவற்றைப் பிடித்தம் செய்யாமல் விடக்கூடாது. அவை...
* பொது வருங்கால வைப்புநிதி திருப்புத் தொகை (Refund)
* குடும்பப் பாதுகாப்பு நிதி, சிறப்பு சேம நிதி, காப்பீட்டு நிதி போன்றவற்றுக் கான மாதச் சந்தா
* அரசுக் குடியிருப்பு வாடகை
* அரசுக் கடன் தவணை ஆகியவை விடுபாடின்றிப் பிடித்தம் செய்யப்பட வேண்டியவை.
* வருமான வரிக்குப் பிடித்தம் செய்ய சம்பளத்தில் எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அந்தத் தொகையை வருமான வரிக் கணக்கில், ரொக்கமாக ஊழியரைச் செலுத்தச் செய்து பின்னர் சம்பளம் வழங்கலாம்.
* சந்தேகம் எழும் தருணங்களில், சந்தேகத்தில் தெளிவு பெற்று வரிப் பிடித்தம் செய்ய வேண்டுமே தவிர, சம்பளப் பட்டியலைக் கருவூலத்துக்கு அனுப்பிவிட்டால், கருவூல அலுவலர் பிழையாக இருந்தால் பட்டியலைத் திருப்பிவிடுவார். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு கூடாது. ஏனென்றால், வருமான வரிக் கணக்கை ஆவண ஆதாரங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது சம்பளம் தரும் அதிகாரியின் பொறுப்பே தவிர, கருவூலத்தின் பொறுப்பல்ல.
* மேலும், நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியை மார்ச் 31 வரைதான் டி.டி.எஸ் முறையில் கருவூலத்தில் பிடித்தம் செய்ய ஏற்றுக்கொள்வார்கள். மார்ச் 31 வரை பிப்ரவரி சம்பளம் கருவூலத்தில் தாக்கல் செய்யப் படாவிட்டால், வருமான வரியை வங்கியில் ரொக்கமாகச் செலுத்தி, அதற்கான செலானை இணைத்து, ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகுதான் பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
நடப்பு ஆண்டுக்கான வருமான வரியை அடுத்தாண்டு சம்பளத்தில் டி.டி.எஸ் முறையில் கருவூலத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை இல்லை. கருவூல டி.டி.எஸ் பிடித்த நடைமுறை இவ்வாறு இருப்பதாலேயே, காலம் தவறி பிப்ரவரி மாத சம்பளம் பெறும்போது வருமான வரியை ரொக்கமாகச் செலுத்த நேரிடுகிறது. ஆக, வருமான வரிப் பிடித்தத்துக்குத் தேவையான ஆதார ஆவணங்களை உரிய நேரத்தில் பெறாதபட்சத்தில், மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.மேலும், ‘வரிச் செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், வரி வரம்பைத் தொட்டுவிட்ட அனைவருமே வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்பது வருமான வரித் துறையின் நிலைப்பாடு என்பதால், ஊழியர்களில் பெரும்பாலானவர்களிடம் ‘இதர வருமானம்’ முதலான விவரங்களைப் பெற வேண்டியது இருக்கும்.
வரிக் கணக்கைச் சரியாக சமர்ப்பித்து, சரியாக வரி செலுத்துபவர்களே நாட்டின் உண்மையான பிரஜைகள் ஆவார்கள். வரி விஷயத்தில் முதலில் நம் கடமையைச் செய்வோம். அதன்பிறகு நம் உரிமையைக் கேட்போம்!
வரிக் கணக்கீட்டில் மாற்றம்!
முந்தைய ஆண்டு வரை, வருமான வரிப் படிவத்துடன், வரிக் கழிவு முதலானவற்றுக்குத் தேவையான ஆவணங்களெல்லாம் சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வந்தது. தற்போதைய சுற்றறிக்கையின்படி ஆவண ஆதாரங்களை இணைப்பது அவசியமல்ல; உரிய முறையில் கணக்கிட்டு, வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டு விட்டது என்று சம்பளம் வழங்கும் அதிகாரி சான்று செய்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரிக் கணக்கீட்டைத் தீர்வு செய்வதில், சம்பளம் தரும் அதிகாரியின் பொறுப்பு அதிகமாகி உள்ளது எனலாம்.
Post a Comment