டிஜிட்டல் முறையில் மார்பக (கதிரியக்கமில்லா) பரிசோதனை அறிமுகம் இல்லுமினா 360° (Illumina 360°) என்கிற நவீனக் கருவி!
உ லகில் 28 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் மிகவும் காலம் தாழ்த்தியே பரிசோதனை...

உலகில் 28 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் மிகவும் காலம் தாழ்த்தியே பரிசோதனை மேற்கொள்வதால் எந்த வகை மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடிவதில்லை. இந்த அச்சமூட்டும் கணக்கு மார்பகப் புற்றுநோயை மிகவும் அபாயகரமான பிரச்னையாக முன் நிறுத்துகிறது.
பரிசோதனைகளுக்கு ஏன் தயங்குகிறார்கள்?
இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் அடுக்கப்படுகின்றன. ஒன்று, இதுகுறித்த விழிப்புஉணர்வு அனைவருக்கும் இருப்பதில்லை. இரண்டாவது மார்பகப் பரிசோதனைகள் அனைத்தும் மிகவும் வலி ஏற்படுத்துபவை என்கிற எண்ணம். மூன்றாவதாக, கதிரியக்கம் இருப்பதால், பக்க விளைவுகள் ஏற்படுமோ என்கிற பயம்.
மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை முறைகளில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) தவிர மற்ற இரண்டு முறைகளும் சற்றே வலி மிகுந்தவைதான். மேமோகிராம் (Mammogram) முறை, மார்பில் கதிர்களைச் செலுத்திப் பிரச்னையை மருத்துவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. பயாப்ஸி (Biopsy) முறை, மனித உடலில் உயிருடன் இருக்கும் திசுக்களைப் பரிசோதிக்கிறது. இந்தப் பரிசோதனைகளில் ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், மக்களிடம் பயம் இருக்கவே செய்கிறது.
இந்த மூன்று பரிசோதனைகளும் நோயைக் கண்டறியவே பயன்படுகின்றன. ஆனால், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லிகளுக்கு அதை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பத்தால் மட்டுமே சவால் விட முடியும். அந்தத் தொழில்நுட்பமும் வலி, கதிரியக்கம், பக்க விளைவுகள் போன்ற பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு தொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கதிரியக்கமில்லா பரிசோதனை அறிமுகம்
இல்லுமினா 360° (Illumina 360°) என்கிற நவீனக் கருவி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்துள்ளது. நடப்பு முறைகளைவிட மேம்பட்ட முறையாக இருக்கும் இதைக்கொண்டு முரண்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். இளம் வயதிலேயே மார்பகப் பரிசோதனைகள் மேற்கொள்வதில் உள்ள தடைக்கற்களை அகற்றுகிறது. ரோபோட்டிக் தொழில்நுட்பத்துடன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் டிஜிட்டல் முறையில் மார்பகப் புற்றுநோயை அதன் ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவுகிறது. இதன் கூடுதல் சிறப்பம்சம், மானுடத் தொடுதல் இன்றிப் பரிசோதனையைச் செய்ய முடியும் என்பதே.
நான்-அயோனைசிங் (Non-ionising) கதிரியக்கம் இன்றி வெப்ப வரைவியல் (Thermography) முறை கொண்டு இந்தக் கருவிச் செயல்படுவதால், எவ்விதப் பக்க விளைவுகளும் ஏற்படாது. அகச்சிவப்புக் கதிர்வீச்சு (infrared radiation) கொண்டு மார்பகப் பரிசோதனை நடத்தப் படுவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் இதை வடிவமைத்தவர்கள்.
கருவியின் எளிமையான வடிவமைப்பு
ஒரு படுக்கைபோல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியின் மேடைமீது படுத்துக்கொள்ள வேண்டும். மார்பகங்களை எந்தப் பரிசோதகரிடமும் வெளிப்படுத்த வேண்டியதில்லை. கருவியின் உள்ளே இருக்கும், இன்ஃப்ராரெட் கொண்டு இயங்கும் கேமரா, மார்பகத்தை 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம்பிடிக்கிறது. இதில் மார்பகத்தின் உள்வெப்பநிலையில், இயல்பு நிலையில் இருந்து ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியும். அப்போது மார்பகத்தில் கோளாறு இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். வரப்போகும் மார்பகப் பிரச்னைகளை அதன் வெப்பநிலையைக் கொண்டு முன்னரே அறிவிப்பதுதான் இதன் சிறப்பு. ஓர் எம்.ஆர்.ஐ (MRI) செய்வதைக் காட்டிலும், மேமோகிராம் செய்ய ஆகும் செலவை விடவும், குறைவான கட்டணமே இதற்கு ஆகும் என்பது கூடுதல் சிறப்பு.
Post a Comment