இன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு!
இன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு! சினை மேலாண்மை பற்றி பேசும் குறுந்தொடர்கால்நடை முனைவர் க.கிருஷ்ணகுமார், அ னைத்துச் சூழ்நிலைகளில...

இன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு!
சினை மேலாண்மை பற்றி பேசும் குறுந்தொடர்கால்நடை முனைவர் க.கிருஷ்ணகுமார்,அனைத்துச் சூழ்நிலைகளிலும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். அதிலும் கறவை மாடு வளர்ப்பு பெரும்பாலான விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவி செய்துவருகிறது. ஆனாலும், கறவை மாடு வளர்ப்பில் முறையான மேலாண்மை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் குறைவான லாபம்தான் ஈட்டி வருகிறார்கள். கறவை மாடு வளர்ப்பில் சரியான நேரத்தில் சினைப்பிடிக்க வைப்பது முக்கியமான விஷயம். சரியான நேரத்தில் சினைப்பிடிக்க வில்லையென்றால் பெரிய நஷ்டம் உண்டாகும். பால்மூலம் கிடைக்கும் வருமானம், அதற்காக நாம் செய்யும் செலவு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், மாடு சினைப்பிடிக்காமல் காலதாமதமாவதால் ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
அதாவது, ஒரு பசு ஆண்டுக்கொருமுறை கன்று ஈன வேண்டும். அது தாமதமாகும்போது மாடு வளர்ப்போருக்கு, எப்படி நஷ்டம் வருகிறது என்பதைப் பார்ப்போம். சராசரியாகத் தினமும் பத்து லிட்டர் பால் கொடுக்கும் ஒரு பசு சினைப்பிடிக்காத நிலையில், மூன்று மாதங்கள் பண்ணையில் இருந்தால்... அதன்மூலம் கிடைக்கக்கூடிய 900 லிட்டர் பால் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். 900 லிட்டர் பாலின்மூலம் கிடைக்கக்கூடிய 22,500 ரூபாய் நஷ்டமாகிவிடும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அறிவியல் பூர்வமாகப் பண்ணையை மேலாண்மை செய்து பசுக்களை வளர்த்தால், கண்டிப்பாக ‘நஷ்டம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
காளைகளோடு இணைத்து இனச்சேர்க்கை செய்தபோது, பசுக்களில் 5 சதவிகித அளவுதான் சினைப்பிடித்தலில் குறைபாடு இருந்தது. தற்போது, செயற்கை முறைக்கருவூட்டலில் 20 சதவிகித அளவுக்குச் சினைப்பிடித்தல் குறைபாடு இருக்கிறது. அதேபோல மேய்ச்சல் முறையில் வளர்த்தபோது, மாடுகளுக்குப் பிரச்னைகளே இருக்காது.
தற்போது பண்ணைகளில் அடைத்து வளர்க்கும்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால், காலச் சூழ்நிலைக்கேற்ப நம்முடைய பராமரிப்பு முறைகளையும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். அது குறித்த சின்னச்சின்ன தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பார்ப்போம். சினை மேலாண்மையில் ‘கன்றுப் பராமரிப்பு’ முக்கியமானது. அதைப் பற்றி முதலில் பார்ப்போம்.
கன்றுப் பராமரிப்பு
பெரும்பாலான விவசாயிகள், கறவையில் உள்ள மாடுகளைக் கவனிப்பதில்தான் கவனம் செலுத்துவார்களே ஒழிய கன்றுகளைச் சரியாகக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். ‘இன்றைய கன்றுதான் நாளை பசு’வாக நமக்குப் பால் கொடுக்கப்போகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், கன்று பிறக்கும்போதிருந்தே சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம்.
பல விவசாயிகள் கன்று பிறந்து நஞ்சுக்கொடி விழுந்தபிறகுதான் கன்றைப் பால் குடிக்கவிடுகிறார்கள். இது தவறான பழக்கம். கன்று பிறந்த அரை மணி நேரத்துக்குள் சீம்பாலைப் குடிக்கவிட வேண்டும். அப்போதுதான் கன்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். நஞ்சுக்கொடி விழ கிட்டத்தட்ட எட்டு மணிநேரம்கூட ஆகலாம். அவ்வளவு நேரம் சீம்பால் கொடுக்காமல் இருக்கக் கூடாது.
இதனால், கன்றுக்கு நா வறட்சி ஏற்படும். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடும். மேலும் கன்று, பசுவின் காம்பைச் சப்பும்போது பசுவின் மூளைப்பகுதியில் ஆக்ஸிடோசின் சுரப்பு ஏற்பட்டுக் காம்பு, கருப்பை போன்ற பாகங்களில் தசைகள் சுருங்கி விரியும். இதனால், நஞ்சுக்கொடி விரைவில் விழுந்து பால் சுரப்பு அதிகரிக்கும். நஞ்சுக்கொடி விழுந்தபிறகு தாய்ப்பசுவை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டிச் சுத்தமான இடத்தில் விட வேண்டும். கன்றை அதிகமான அளவு பால் குடிக்கவிடக் கூடாது. அப்படி விட்டால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதனால், தேவையான அளவு பாலை மட்டுமே குடிக்க அனுமதிக்க வேண்டும்.
கன்றுப் பராமரிப்பு முறைகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்...
கறவை மாடு வளர்ப்பில் முக்கியமான மூன்று!
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் ரமேஷ் சரவணகுமார், கால்நடை வளர்ப்பு குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மலாவி நாடு, கிட்டத்தட்ட தமிழ்நாட்டைப்போலவே சீதோஷ்ண நிலை கொண்டது. அந்த நாட்டில் பால் மாடு வளர்ப்பு சம்பந்தமாக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அந்நாட்டு அரசு, என்னை அழைத்திருந்தது. மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என்று இருந்தாலும், அந்நாட்டு விவசாயிகளுக்குப் பால் மாடு வளர்ப்பில் போதிய அனுபவம் இல்லை.
அவர்கள், வெளிநாட்டு மாடுகளையோ கலப்பின மாடுகளையோ எதைக் கொடுத்தாலும் வளர்ப்பதில்லை. அந்நாட்டின் பாரம்பர்ய ரகங்களான மலாவி இன மாடுகளை மட்டும்தான் வளர்க்கிறார்கள். அதுவும் உழவு உள்ளிட்ட பணிகளுக்காக. நாங்கள் கொடுத்த பயிற்சியில் அந்நாட்டு விவசாயிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அந்நாட்டோடு ஒப்பிடும்போது, நம் நாட்டு விவசாயிகள் பலமடங்கு முன்னேறியுள்ளனர்.
ஆனாலும், கன்று வளர்ப்பு, சினை மேலாண்மை, தீவன மேலாண்மை ஆகியவற்றில் இன்னும் நாம் முழுமையடையவில்லை. தற்போது, உலகளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில், கன்று வளர்ப்பு, சினை மேலாண்மை, தீவன மேலாண்மை ஆகியவற்றில் முழுக்கவனம் செலுத்திச் சிறப்பாகக் கறவை மாடுகளைப் பராமரித்தால், லாபத்தைப் பலமடங்கு அதிகரிக்கலாம்” என்றார் ரமேஷ் சரவணகுமார்.
இவரைப் பற்றி... முனைவர் க.கிருஷ்ணகுமார், 1996-ம் ஆண்டில், நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் மற்றும் ஈனியல்துறை உதவிப் பேராசிரியராகப் பணியில்சேர்ந்தார். 2003-ம் ஆண்டில் சிகிச்சைத்துறையின் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வுபெற்று அந்த ஆராய்ச்சி நிலையத்திலேயே பணியாற்றினார்.
2009-ம் ஆண்டில் சிகிச்சைத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராகப் பதவி உயர்வுபெற்றார். 2013-ம் ஆண்டில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
2015-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில், கறவை மாடு மற்றும் எருமையினப் பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
Post a Comment