மரக்கன்றுகள் கொடுக்கும் கலைமணி... டெல்டா மாவட்டத்தில் ஒரு ‘பச்ச மனுஷன்’
க லைமணி என்ற இளைஞர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து உழைத்து, பணத்தைச் செலவழித்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை உற்பத்தி செய்து ...

மரம் வளர்ப்புப் பயணம் குறித்து மிகுந்த உற்சாகத்தோடு பேசும் கலைமணி “இப்ப நான் திருவாரூர் டவுன்ல வசிக்கிறேன். நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலூகா, கொழையூர்தான் எனக்குச் சொந்த ஊரு. நான் கல்லூரி மாணவனாக இருந்தப்ப நாட்டு நலப்பணித்திட்டத்துல சேர்ந்திருந்தேன். இதன் இயக்குநராக இருந்த சிவராமன்தான் மரம் வளர்க்கும் ஆர்வத்தை எனக்குள் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இளநிலை தாவரவியல், முதுநிலை வனவாழ்வு உயிரியல் படிச்சதுனால மரம் வளர்ப்புல இன்னும் தீவிரமான ஆர்வம் ஏற்பட்டுச்சு. மழலையர் மக்கள் நல மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி மயிலாடுதுறை நகர வீதிகள்ல நிறைய மரக்கன்றை நட்டோம். என்னோட சொந்த ஊர்லயும் நிறைய மரத்தை வளர்த்தோம்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு கேந்திரா அமைப்பு, எனக்கு மாவட்ட அளவிலான சிறந்த இளைஞருக்கான விருது வழங்கியது. இதுக்கிடையில என் குடும்ப ஜீவனத்துக்காக வேலை தேடிக்கிட்டு இருந்தேன். ஊரக வளர்ச்சித்துறையின் புது வாழ்வுத் திட்டத் தற்காலிகப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அரசுத் திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளைக் கிராமப்புற மக்களிடம் கொண்டுசேர்க்குறதுதான் என் பணி. அதுல கிடைச்ச ஊதியத்துல மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி, மற்றவர்களுக்கு இலவசமா கொடுத்தேன்.
மரக்கன்றுகள் இலவசமா வேணும்னா என்னை அணுகலாம்னு, என் செல்போன் நம்பர் போட்டு நோட்டீஸ் அடிச்சு டீக்கடை, சலூன் கடைகள்ல எல்லாம் ஒட்டினேன். நிறைய பேர் தொடர்பு கொண்டாங்க. உண்மையான ஆர்வமும் அக்கறையும் உள்ளவங்களுக்குக் கன்றுகள் வாங்கிக் கொடுப்பேன். என் வேலை சம்பந்தமா கிராமங்களுக்குப் போகும்போது, அங்கே இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களைப் போய்ப் பார்ப்பேன். போதியளவு மரங்கள் இல்லைனா, கன்றுகள் வாங்கிக்கிட்டுப் போயி, நானே நட்டுட்டு வருவேன். கல்யாணம், காதுகுத்துனு எந்த விஷேசங்களுக்குப் போனாலும் அன்பளிப்பாக மரக்கன்றுகள்தான் கொடுப்பேன். இலவச மரக்கன்றுகளுக்காக மாசத்துக்கு மூவாயிரம் ரூபாய்க்குமேல் செலவு பண்ணிக்கிட்டு இருந்தேன். சம்பளம் வாங்கி 20-ம் தேதி வரைக்கும், இதை என்னால செய்ய முடிஞ்சது. அதுக்குப் பிறகு யாராவது கன்றுகள் கேட்டால், என்னால் வாங்கித் தர முடியல. இது என் மனசுக்கு உறுத்தலா இருந்துச்சு.
சொந்தமா கன்றுகள் உற்பத்தி செஞ்சா, செலவு குறையுறதோடு, அதிகளவுல கன்றுகள் உற்பத்தி செய்யலாம்னு முடிவெடுத்தேன். திருவாரூர் நகரத்துல நான் வசிக்குற வீட்டுல அதுக்கேத்த இட வசதி இல்லை. தியானபுரம் கிராமத்துல மீனாட்சி என்ற பெண்மணி இடம் கொடுத்தாங்க. சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல நான், என் மனைவி, அம்மா மூணு பேரும் அங்க போயி கன்றுகள் உற்பத்தி செய்வோம். நான் தினமும் காலை, மாலை அங்கே போயிடுவேன். எங்க வீட்டுல இருந்து அந்தக் கிராமம் 2 கிலோமீட்டர் தூரம். அதனால், வீட்டுக்குப் பக்கத்திலயே நர்சரி அமைஞ்சா, நல்லா வசதியா இருக்கும்னு ஆசைப்பட்டேன்.
என்னோட ஆர்வத்தையும் செயல் பாடுகளையும் பார்த்துட்டு, வேணி என்ற பெண்மணி நாலாயிரம் சதுர அடி பரப்புகொண்ட இந்த இடத்தை எங்களுக்கு வாடகை இல்லாம கொடுத்தாங்க. பக்கத்து வீட்டுல வசிக்குற சுந்தரிங்கறவங்க, தண்ணீர் கொடுக்குறாங்க. இதுமாதிரி இன்னும் சிலர் நல்லா மனசோடு உதவி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. முகநூல் மூலமா அறிமுகமான நண்பர்களும், தங்களால் முடிஞ்ச பங்களிப்பு செய்றாங்க. நான் யார்கிட்டயும் நன்கொடையா பணம் வாங்குறதில்லை. கொடுத்தால் மறுத்திடுவேன். விதைகள், மண் கொடுத்தால் வாங்கிக்கிவேன்.
காஞ்சிபுரத்துல காவல்துறையில் பணியாற்றும் காந்திராஜன் என்பவர், ஒரு மூட்டை வாதாம் மர விதைகள் அனுப்பினார். வெளிநாட்டில் வசிக்கும் இளங்கோ, ஒரு லோடு மண் வாங்கிக் கொடுத்தார். இவங்களையெல்லாம் நான் நேர்லகூடப் பார்த்ததில்லை. சமூக அக்கறையினால பங்களிப்பு செலுத்துறாங்க. நான் வசிக்குற பகுதியில, ஒவ்வொரு வீட்டு வாசல்லயுமே ஒரு மரக்கன்று வெச்சிருக்கேன்.
ஆக்சிஜனை அதிகளவுல உற்பத்தி செய்ற ஆலம், அரச மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்றோம். இந்த மரங்கள் ரொம்பவே அரிதாகிடுச்சு. தனியார், அரசாங்க நர்சரிகள்லகூட, இந்தக் கன்றுகள் கிடைக்க மாட்டேங்குது. முன்னாடியெல்லாம் சாலை ஓரங்கள்ல நாவல், இலுப்பை மரங்கள்தான் அதிகமா இருக்கும். இவற்றை மறுபடியும் உருவாக்கணும்.
கொடுக்காப்புளி, மகிழம், பூவரசு, மந்தாரைனு இன்னும் பல வகையான, நம்மோட நாட்டு மரங்களை மட்டும்தான் உற்பத்தி செஞ்சிக்கிட்டிருக்கேன். காற்றைச் சுத்தப்படுத்தக்கூடிய நெட்டிலிங்கம் மரக்கன்றுகளையும், அதிக எண்ணிக்கையில உருவாக்கிக் கிட்டிருக்கேன். இலையை ஒடிச்சா பால் வரக்கூடிய மரங்கள் எல்லாமே மழையை ஈர்க்கக்கூடியது. அதனால, பலா மரங்களையும் நிறைய உருவாக்கிக்கிட்டு இருக்கேன். எல்லா வகையான மரக்கன்றுகளும் சேர்த்து ஆண்டுக்குப் பத்தாயிரம் கன்றுகள் உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருக்கோம். ஒரு லட்சத்தைத் தொடணும்ங்கிறது தான் என்னோட இலக்கு.
மண், எரு, விதை, பாலித்தீன் பை எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு கன்றுக்கு 3 ரூபாய் செலவாகுது. கடந்த மார்ச் மாதம் நானும் என் நண்பர் ஹரிதாஸும் சேர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்ல 300 கிலோமீட்டர் தூரம், சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு சைக்கிள் பிரசாரப் பயணம் போனோம். பள்ளி, கல்லூரி மாணவர்களை அதிகளவுல சந்திச்சு, மரம் வளர்க்கும் அவசியத்தை வலியுறுத்தினோம். தமிழ்நாட்டை மரங்கள் நிறைந்த மாநிலமாக மாத்தணும்ங்கிறதுதான் என்னோட நீண்டகாலக் கனவு” என்றார் கலைமணி.
கலைமணியின் மனைவி செல்லமீனாள் “ஆரம்பத்துல எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்லாமல்தான் இருந்துச்சு. படிப்படியா இதோட அவசியத்தை என் மனசுல பதிய வெச்சாரு. இப்ப நானும் இதுல ஆர்வமா இருக்கேன். இவரால் வளர்ந்த மரங்களைப் பொது இடங்கள்ல பார்க்கும்போது மனசுக்குச் சந்தோசமா இருக்கும். ஊர் மக்கள் நெகிழ்ச்சியோடு இவரைப் பாராட்டும்போது, இதுல இருக்கிற சிரமங்கள் எல்லாம் பெருசாவே தெரியாது” என்கிறார்.
இப்பகுதியைச் சேர்ந்த குமார் “எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, இந்தப் பணிகளைக் கலைமணி செஞ்சிக்கிட்டு இருக்கார். இவரால் எங்க பகுதியில நிறைய மரம் நிழல் கொடுத்துக்கிட்டு இருக்கு.
தனியொரு ஆளாகவே வந்து குழி எடுத்துக் கன்றுகளை நட்டுட்டுப் போயிடுவார். யாரோட உதவியையும் எதிர்பார்க்கமாட்டார்” என்றார் நெகிழ்ச்சியாக.
தொடர்புக்கு, கலைமணி, செல்போன்: 97865 92738, .
Post a Comment