காந்தியை உங்களுக்குத் தெரியுமா? இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!,
ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி பி ரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும், மதவாத கொலைபாதகர்களுக்கும் அடிபணியா காந்தியை, ...

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும், மதவாத கொலைபாதகர்களுக்கும் அடிபணியா காந்தியை, ‘பனியா’ காந்தி என்று சாதிப்பட்டம் சூட்டிச் சுட்டுள்ளார் அமித்ஷா. ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? மகாத்மா காந்தியை இன்னும் எத்தனை தடவை சுடுவார்கள்! தன்னை நிச்சயம் ஒருவன் சுடுவான்; அதற்கு, தான் போட்டிருக்கும் சட்டைகூடத் தடையாக இருக்கக் கூடாது என்று திறந்தமேனியாய் அலைந்தவர், தியாகத்திரு காந்தி. இந்திய அடையாளமாய்ச் சொல்வதற்கு இருக்கும் ஒற்றை உருவத்தை, ராய்ப்பூரில் வைத்து ரணம் ஆக்கியிருக்கிறார் அமித் ஷா. அவர், யாரோ உமி என்றால் கவலைப்படத் தேவையில்லை. இந்திய தேசத்தை ஆளுகிற கட்சியின் தலைவர். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியால் ஒப்புக்கொள்ளப்படும் ஒரே மனிதர். அதனால்தான், அமித் ஷாவின் உளறல்கள் அகில இந்தியக் கவனிப்புக்கு உள்ளாகின்றன.
‘காந்திக்குப் பிறகு இந்தியா’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ராமச்சந்திர குஹா, ‘‘அமித் ஷாவின் இந்தக் கருத்து கொடூரமானது. தீய எண்ணம் கொண்டது. மத்தியில் ஆளும் கட்சியின் தலைவருடைய கருத்தைப்போல் இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸும் கோரிக்கை வைத்துள்ளன. ‘மன்னிப்புக் கேட்க மாட்டார் அமித் ஷா. ஏனென்றால், அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று அவருக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
‘பனியா’ என்றால் வர்த்தகத் தொழில் புரியும் சமூகம். அந்த சாதியைச் சார்ந்த காந்தி, காங்கிரஸைக் கலைக்க வேண்டும் என்று வியாபார மூளையோடு கணித்துச் சொன்னார் என்பதுதான் அமித் ஷா சொன்னது. கொஞ்சம் கஞ்சத்தனமாக இருப்பவனை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சொல்லியும், அதிகக் கோபக்காரனைக் குறிப்பிட்ட சாதியைச் சொல்லியும் கிண்டல் அடிப்பது எல்லாம் நாம் சமூகத்தில் பார்க்காததா? அதையே ஓர் அகில இந்தியக் கட்சித் தலைவர் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?
இந்து, இந்து, இந்து என்று சொன்னாலும், உள்ளே ஊடாடுவது எல்லாம் என்ன சாதி, என்ன குலம், என்ன இனம் என்பதுதான். அதுவும் மகாத்மாவுக்கும் அந்தச் சாதி பெயின்ட் அடிப்பதன் அர்த்தம், ‘எல்லா இந்தியர்களும் கொண்டாடும் மனிதராக இந்த காந்தி இருக்கிறாரே?’ என்ற வயிற்றெரிச்சல்தான். காந்தி ஜயந்தி நாளை, குப்பைக் கூட்டும் நாளாக ‘ஸ்வெச் பாரத்’ ஆக்கிய நாற்றம் இன்னும் நிற்கவில்லை. அதற்குள், அமித் ஷாக்களின் வன்ம வார்த்தைகள்.
காங்கிரஸைக் கலைக்கச் சொன்ன காந்தியைத்தான் உங்களுக்குத் தெரியுமா அமித் ஷா? அது, அவர் கடைசிக் காலத்தில் சொன்னது. ஆனால், தன் கடைசி 28 ஆண்டுகளாக காந்தி சொன்னது மதச்சார்பின்மை... மதச்சார்பின்மை... மதச்சார்பின்மை. காந்தி, இந்தியாவுக்கு போதித்துவிட்டுச் சென்ற, இன்றுவரை நாம் பொன்போல் போற்றியாக வேண்டிய தத்துவம் அதுதான். அதைக் கடைப்பிடிக்காவிட்டால், இந்தியா இருக்காது. இந்தியா, இந்தியாவாக இருக்காது.
1920-ல் கிலாபத் இயக்கக் கலந்துரையாடல்கள் முதல், அவர் கொலை செய்யப்பட்ட 1948- ம் ஆண்டு வரைக்கும், திரும்பத் திரும்ப இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்துத்தான் காந்தி பேசினார்; எழுதினார்; அறிவுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கூட்டிய கூட்டத்தில் பேசியபோதும் அதைச் சொல்லும் துணிச்சல் காந்திக்கு மட்டும்தான் இருந்தது.
வார்தா ஆர்.எஸ்.எஸ் முகாமுக்குக் காந்தி வந்தார். 1,500-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவக்குகள் கலந்துகொண்ட முகாம் அது. அவர்களைப் பார்த்தபோது காந்தி மகிழ்ச்சியடைந்தார். எதற்காகத் தெரியுமா? ‘அவர்களிடம் தீண்டாமை இல்லை; ஒருவர் சாதி இன்னது என்று அறியவில்லை; கண்டிப்பான எளிமை அவர்களிடம் இருந்தது’ என்பதற்காக மகிழ்ந்தார் காந்தி. அந்த அமைப்பில் உருவான அமித் ஷாதான், காந்தியின் சாதியைக் கண்டுபிடிக்கிறார்.
அந்தக் கூட்டத்தில்தான், காந்தி பேசி முடித்தபிறகு, ‘`தீமை செய்பவரைக் கொன்றுவிட இந்து தர்மம் அனுமதிக்கிறதா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காந்தி, ‘`அனுமதிக்கவில்லை. தீமை செய்யும் ஒருவர், இன்னொருவரைத் தண்டிக்க முடியாது. தண்டிப்பது என்பது அரசாங்கத்தின் வேலையேயன்றி, மக்களின் வேலை அல்ல” என்று பதில் சொன்னார். இதற்கு நான்கு மாதங்கள் கழித்துத்தான் காந்தி கொலை செய்யப்பட்டார்.
‘`நானும் ஒரு ஸனாதன இந்து. வேதகாலத்தில் இருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு மதமும் ராஜ்ஜியமும் ஒன்றுதான். மதமில்லாத ராஜ்ஜியத்தை நான் வெறுத்துத் தள்ளுகிறேன். மதத்தைக் கைவிட்ட ராஜ்ஜியம் மரணக் கூண்டுக்குச் சமமானதாகும். ஏனெனில், அது ஆன்மாவையே கொன்றுவிடுகிறது” என்று சொன்னவர் காந்தி. அரசியலில் அதிகமாக மதச் சிந்தனைகளைக் கலந்தவரும் அவர்தான். அது, அவருடைய கையைமீறிப் போகும் அளவுக்கு அதிகமானபோது, ‘‘அந்தப் பாவத்தைச் செய்தவன் நான்தான்” என்று மன்னிப்புக் கேட்டவரும் காந்திதான். இதை நீங்கள் பின்பற்றுவீர்களா அமித் ஷா?
காந்தி ஆன்மிகவாதிதான். அவரது ஆன்மிகம், மதம் கடந்ததாக இருந்தது. தன் தாயின் வழியில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றார். வேலைக்காரப் பெண் சொன்னதால், ராமரட்சை கற்றுக் கொண்டார். அவருடைய குடும்பம் சிவன் கோயிலுக்கும் சென்றது. பள்ளிக்குச் செல்லும் வழியில் கிறிஸ்தவ பிரசாரகர் பேச்சையும் கேட்டார் காந்தி. இங்கிலாந்து சென்றபோது மது, மாது, மாமிசம் தொடுவதில்லை என்று ஜைன சாமியார் பேச்சார்ஜி சுவாமியிடம்தான் சத்தியம் செய்தார். இங்கிலாந்தில் பிரம்மஞான சங்கத்துடன் தொடர்பில் இருந்தார். பாரீஸில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றுவந்தார். தென்னாப்பிரிக்காவில் அப்துல்லா சேத் மூலமாக இஸ்லாம் பற்றி முழுமையாக அறிந்தார். ‘`விஷயங்களின் உண்மையை அறிய விரும்புவோர் குரானைப் படிக்கலாம். அதில் இந்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நூற்றுக் கணக்கான வாக்கியங்களைக் காணலாம். அதுபோலவே, பகவத்கீதையிலும் ஒரு முகமதியனும் மறுக்கலாகாத வாக்கியங்கள் உண்டு” என்றார். அவரது இறுதிக்கால பிரார்த்தனைக் கூட்டங்களில், பகவத்கீதையைப் போலவே குரானும் வாசிக்கப்பட்டது. அவருடைய கொலைக்கு அதுவும் அடித்தளமாக அமைந்தது.
பிரார்த்தனையின்போது குரான் ஓதக் கூடாது என்று காந்திக்கு மிரட்டல் கடிதம் வந்தது. ‘`நான் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் விரும்பினால், என்னைக் கொன்றுவிடட்டும். நான் கொல்லப்பட்டாலும்கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை உச்சரிப்பதை விடமாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்தாம். இந்தப் பெயர்களை உச்சரித்துக் கொண்டே நான் சந்தோஷமாக இறப்பேன்” என்றார் காந்தி.
அதே கூட்டத்தில்தான் காந்தி சொன்னார், ‘`இந்தியா இந்துக்களுக்கு மட்டும், பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று சொன்னால், இரண்டும் விஷம் வழிந்தோடும் தேசங்களாகிவிடும். ஆனால், நான் கனவு காணும் நாடு அன்புநதிகள் வழிந்தோடும் நாடாகும்” என்றார். விஷம் வழிந்தோடுவதற்கான சூழ்நிலைகளைத்தான் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். காந்தியின் பிம்பத்தைச் சிதைப்பதன் மூலமாக, ‘எல்லோரும் இந்தியர்’ என்ற சித்தாந்தம் சிதைக்கப்படுகிறது.
நடக்கவிருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. அதை எதிர்கொள்வதற்கு காந்தியைக் கொச்சைப்படுத்தக் கிளம்பியிருக் கிறார்கள். ‘`நாங்கள் காப்பாற்றி வைத்திருந்த காந்தியை, இரண்டு ஆண்டுகள்கூட இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை” என்று பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் சொன்னதாகச் சொல்லப் படுவதுண்டு. இந்தியாவுக்கு இருக்கும் ஒரே ஒரு கையிருப்பான காந்தியையே திரும்பத்திரும்பச் சுட்டுக்கொண்டு இருக்கிறோம்.
மளிகை வியாபாரம் ஆபத்தில்லை. மரண வியாபாரம் ஆபத்தானது.
Thanks to Ananda vikatan (ஆனந்த விகடன் - 21 Jun, 2017)
Post a Comment