தமிழச்சி தங்கப்பாண்டியனின் ஆரோக்கியத்தின் ரகசியம்!
க விஞர், பேராசிரியை, பேச்சாளர், பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். தலைநகரத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும்...
டயட் என்பது நல்ல உணவுகளைச் சாப்பிடுவதுதானே தவிர, சாப்பிடாமல் இருப்பது கிடையாது. நான் எந்த டயட்டீஷியன் உதவியையும் நாடுவது இல்லை. என் அம்மா, பாட்டி பின்பற்றி வந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறேன். ஹைபிரிட் காய்கறிகள், பழங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நாட்டுக் காய்கறிகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். வேலையைப் பொறுத்து நான் தூங்கும் நேரம் மாறுபடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவேன். காலையில் எழுந்தவுடன் அரக்கப்பரக்க இல்லாமல், பூனைகள் சோம்பல் முறித்து எழுவதுபோல இயல்பாக என் நாளைத் தொடங்குவேன்.
வாரத்தில் மூன்று நாட்கள் யோகா செய்வேன். மற்ற நாட்களில் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வேன். உடல் என்ன சொல்கிறது, எதைக் கேட்கிறது என்பதைக் கவனிப்பேன். அதற்குத் தேவையானதைக் கொடுத்தாலே, ஆரோக்கியமாக இருக்கலாம். எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் தினமும் காலை 10 மணிக்கு முன் செல்போனைப் பயன்படுத்த மாட்டேன். காலை நேரத்தை தியானம், உடற்பயிற்சி என எனக்காக மட்டுமே செலவிடுவேன்.
காலை உணவில் பப்பாளி நிச்சயம் உண்டு. அதனுடன் ராகியில் சேமியா அல்லது கோதுமை உப்புமா ஒரு கிண்ணம் சாப்பிடுவேன். தற்போது வெயில் காலம் என்பதால், அதிகம் தர்பூசணி எடுத்துக்கொள்கிறேன். வெளியே எங்கு சென்றாலும் வீட்டில் கடைந்த மோரை எடுத்துச் செல்வேன். அதிகம் காபி குடிப்பது இல்லை. தினமும் காலையில் கருப்பட்டி காபியும், மாலை நேரத்தில் டீயும் குடிப்பது வழக்கம்.
நம் உடலில் எளிதில் பாதிக்கப்படுவது நம் தோல்தான். ஆனால், அதனைப் பாதுகாப்பது கடினம் அல்ல. வெளியே சென்று வந்தவுடன், தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து, பின் பன்னீரைத் தடவி வந்தாலே போதும். தோல் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும். புளித்த தோசை மாவை நல்ல ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தலாம். பாலாடையை எடுத்து குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு முகத்தில் தேய்த்துவிட்டுக் குளித்தால், முகத்துக்கு நல்லது. வெளியில் செல்லும்போது நிச்சயம் ஆயுர்வேத சன் ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவேன். வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவறாமல் செய்வேன். முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களை வைத்தே தோல் மற்றும் கூந்தலைப் பராமரிக்கிறேன்.
வீட்டிலேயே செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதாணியை அரைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டுவைத்தால், அதன் சாறு அதில் இறங்கிவிடும். அதையே தலைக்குத் தடவுவேன். ரசாயன ஷாம்பூக்களைப் பயன்படுத்த மாட்டேன். இன்னமும் சிகைக்காயைத்தான் பயன்படுத்துகிறேன். நமக்கு டயட்டீஷியனோ, பியூட்டிஷியனோ தேவை இல்லை. நம் அம்மா, பாட்டி சொன்னவற்றைத் தவறாமல் செய்துவந்தாலே போதும். நம் அழகும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்” என்று புன்னகைக்கிறார் அழகுத் தமிழச்சி.
Post a Comment