நாட்டை ஆட்சி செய்வது அரசியலமைப்புச் சட்டமா, ஆர்.எஸ்.எஸ். திட்டமா? - தொல்.திருமாவளவன் அறிக்கை!! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!,
நாட்டை ஆட்சி செய்வது அரசியலமைப்புச் சட்டமா, ஆர்.எஸ்.எஸ். திட்டமா? - தொல்.திருமாவளவன் அறிக்கை. மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆ...
நாட்டை ஆட்சி செய்வது அரசியலமைப்புச் சட்டமா, ஆர்.எஸ்.எஸ். திட்டமா? - தொல்.திருமாவளவன் அறிக்கை.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நாடெங்கும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது உயர் கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன.
நேற்று குவாலியரில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பா.ஜ.க. இளைஞரணியினர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் மௌரியா என்ற தலித் மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனிடையே பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, கம்யூனிஸ்ட் தலைவர்களை தேசத் துரோகிகள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் டி.ராஜாவின் மகளும் மாணவர்கள் தலைவருமான அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். இவையெல்லாம் காவிவெறியாட்டம் கட்டுமீறிச் செல்வதன் அடையாளங்களாகும்.
இந்தியாவை ஆட்சி செய்வது அரசியலமைப்புச் சட்டமா? அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டமா? என்கிற ஐயம் இப்போது எழுந்துள்ளது. இதற்கு விடை சொல்ல வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி மௌனவிரதம் பூண்டிருக்கிறார். இது இந்தியாவின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைத்து, நாட்டு மக்களுக்கு பொறுப்போடு பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்ற அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை பிரதமர் என்ற வகையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Post a Comment