மழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள்!
மழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள் கனமழையால் ஏற்பட்ட குளிர், மழையில் நனைவது போன்றவற்றால் தலையில் நீர்கோர்த்து தலைவலி வருகிறது. ...

https://pettagum.blogspot.com/2015/12/blog-post_64.html
மழைக்கால நோய்களை குணமாக்கும் மருந்துகள்
கனமழையால் ஏற்பட்ட குளிர், மழையில் நனைவது போன்றவற்றால் தலையில் நீர்கோர்த்து தலைவலி வருகிறது. ஈரமான காற்றை சுவாசிப்பதால் தலைபாரம் இருக்கும். மூக்கடைப்பு, நீர்கோர்வை பிரச்னைகளுக்கான மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: விரலி மஞ்சள், விளக்கெண்ணெய். அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பின்னர், மஞ்சளை நெருப்பில் காட்டும்போது அதிலிருந்து புகை வெளிவரும். இந்த புகையை மூக்கின் ஒவ்வொரு நாசியிலும் தலா ஐந்து முறை சுவாசிக்கும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும்.
அதிக நேரம் ஈரத்தில் இருப்பது, மழையில் நனைவது, அடிக்கடி தலைக்கு நீர் ஊற்றி குளிப்பது, பனியில் இருப்பது போன்றவற்றால் மூக்கடைப்பு, தலைவலி ஏற்படுகிறது. சளி பிடிக்காமல் இருக்க மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள், நோய் நீக்கியாக பயன்படுகிறது. மூக்கடைப்புக்கு காரணமாக சளியை மஞ்சள் கரைக்கிறது. சுவாசத்தை சீர்படுத்துகிறது.ஜலதோசம், நீர்க்கோர்வை ஆகியவற்றை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தும்பை இலை, பூக்கள், அதிமதுர பொடி, தேன். ஒருபிடி தும்பை இலை மற்றும் பூக்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் அதிமதுர பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சளி பிரச்னை தீரும். தலைபாரம் தணிந்து போகும். தலைவலி இல்லாமல் போகும்.
சளி பிடிப்பதை தடுப்பதில் தும்பை முக்கிய பங்கு வகிக்கிறது. தும்பை பூக்களை எண்ணெயில் இட்டு, சிறிது அரிசி, மிளகாய் துண்டு சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு தலையில் தேய்ப்பதால் சளிப்பிடிப்பது தடுக்கப்படும். வெற்றிலையை பயன்படுத்தி ஜலதோஷத்துகான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகு, சீரகம், தேன்.3 வெற்றிலைகளை துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 10 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். இது ஜலதோஷ பிரச்னையை தீர்க்கிறது. நீண்ட நேரம் மழையில் நனைந்தது, ஈரப்பதத்தில் வாழ்வது போன்றவற்றால் ஏற்படும் சளி, தலைபாரம் போன்றவற்றுக்கு இந்த தேனீர் மருந்தாகிறது. குழந்தைகளுக்கு இதில் பாதி அளவுக்கு பொருட்கள் சேர்த்து தயாரிக்காவும். வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெற்றிலை வாயு பிரச்னையை தீர்க்க கூடியது. சளியை கரைக்கும் தன்மை உடையது. உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது.
Post a Comment