நாட்டு மருந்துக் கடை - 13
நாட்டு மருந்துக் கடை - 13 சி த்த மருத்துவம், ஆயுர்வேதம், கிரேக்க இலக்கியம், உலகப் புகழ்பெற்ற...

கொத்தமல்லித் தழையைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி உடையாத புண்களின் மீது பற்றிட, பழுத்து, உடைந்து புண்ணும் ஆறிப்போகும். கொத்தமல்லி விதையான தனியாவை வறுத்துப் பொடித்து கழிச்சல் நோய்க்கு, கால் தேக்கரண்டி அளவு கொடுக்கலாம். பெருஞ்சீரகத்துடன் சேர்த்துச் சாப்பிட வாயு, சத்தமான ஏப்பம் உடனடியாகத் தீரும். அதுவே, குழந்தைகளுக்கு வரும்போது, தனியாவை அப்படியே கொடுக்காமல், அரை ஸ்பூன் தனியாவை அரை டம்ளர் நீரில் 30 நிமிடங்கள் மூடி, ஊறவைத்து ஊறல் கசாயமாகக் கொடுக்கலாம். மைக்ரேன் தலைவலிக்கு நீரில் தனியாவை அரைத்துப் பற்றுப் போடலாம்.
தனியாவின் இத்தனை நல்ல மருத்துவக் குணத்துக்கும் காரணம், அதிலுள்ள எண்ணெய் சத்துக்கள். தனியாவில் 85 சதவிகிதம் நறுமண எண்ணெய்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, லினாலூல் (Linalool) மற்றும் ஜெரானைல் அசிடேட் (Geranyl acetate) ஆகிய எண்ணெய் சத்துக்கள்தான் தனியாவின் மருத்துவக் குணங்களுக்கு முக்கியக் காரணம்.
இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome (IBS)) எனும் மனமும் குடலும் சேர்ந்து பரபரப்பாய் இயங்கும் கழிச்சல் நோய்க்கு, கொத்துமல்லி விதை பயனாவதைப் பல ஆய்வுகள் ஆவணப்படுத்தி உள்ளன. குடலில் வரும் இழுப்பால் (Spasm) ஏற்படும் திடீர் வயிற்றுவலிக்கு, தனியா கஷாயம் சிறந்த மருந்து என நம் மருத்துவப் பாட்டி பலமுறை சொன்ன பக்குவத்தை ஆய்வு செய்து ஜர்னல் ஆஃப் எத்னோபார்மாக்காலஜி (Journal of ethnopharmacology) என்ற நூலில் ஆய்வுக்கட்டுரைகளாகச் சமர்ப்பித்துள்ளனர்.
தசைகளை இளக்கி உறக்கத்தை சீராக வரவழைக்கும் நாட்டுமருந்து தனியா. இதில் உள்ள நறுமணமூட்டி எண்ணெய்க்கு, அந்த மருத்துவக் குணம் இருப்பதை ஆய்ந்து அறிந்துள்ளனர்.
நம் ஊரில் புற்றுநோய்க் கூட்டம் எக்குத்தப்பாக எகிறிவரும் வேளையில், சிறிது ஆறுதலான விஷயம். நம்மவர்கள் உணவில் தனியாவை உணவில் கணிசமாகச் சேர்ப்பதனால், குடல் புற்றின் வருகை கணிசமாகக் குறைகிறது என்கிறார்கள் நவீன புற்று ஆய்வாளர்கள்.
இன்றைக்குப் பலரும் எதற்காவது வயிறை ஸ்கேன் செய்கையில் அகஸ்மாத்தமாய் வரும் கிரேட் 1 ஃபேட்டி லிவர் டிஜெனரேஷன் (Grade 1 fatty liver degeneration) என்ற வார்த்தைக்கு பயந்து கல்லீரலுக்கு என்ன ஆனதோ எனப் பதறுவர். இந்தக் கொழுப்புப் படிந்த கல்லீரலை, அதன் குணம் கெடாமல் பாதுகாக்கவும், தனியா உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். மொத்தத்தில் தனியா, ஒரு தன்னிகரற்ற நாட்டு மருந்து.
Post a Comment