எலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள்
ஆயுட்காலம், அசத்தல் செயல்பாடு உங்கள் கையில்!
வாட்டர்
ஹீட்டர். ஃபேன், டி.வி, டி.வி.டி, கணினி, மின்சார அடுப்பு என எலெக்ட்ரிக்
மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் சூழ வாழும் நாம், அவற்றைப்
பராமரிப்பதிலும் உரிய கவனம் கொடுக்க வேண்டும். அதற்கு வழிகாட்டுகிறார்
சென்னை, வேளச்சேரியில் உள்ள ‘ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்’
உரிமையாளர் ராமகிருஷ்ணன்.
இண்டக்ஷன் ஸ்டவ்
இண்டக்ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் இடையே குறைந்தது 5 அடி இடைவெளி இருக்க
வேண்டும். தண்ணீர், எண்ணெய் இதன் மேல் படக்கூடாது. ஸ்டவ்வுக்கு நிர்ணயிக்
கப்பட்டுள்ள அதிகபட்ச எடையைக் காட்டிலும் அரை கிலோவாவது குறைவாக வைத்துச்
சமைக்க வேண்டும். சமையலை முடித்த பின், ஃபேன் நின்ற பிறகே மெயின் ஸ்விட்சை
ஆஃப் செய்ய வேண்டும். இண்டக்ஷன் ஸ்டவ்வின் கீழ்ப்பக்க ஓட்டைக்குள்
கரப்பான் பூச்சி நுழைந்து பழுது ஏற்படலாம் என்பதால் அங்கே ரச கற்பூரம்
வைத்து, கரப்பான் வருவதைத் தடுக்கலாம்.
இம்மெர்ஷன் வாட்டர் ஹீட்டர்
வாட்டர் ஹீட்டரின் ஸ்கேலிங் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வைக்க வேண்டும்.
குறைவான அளவில் தண்ணீர் வைத்தால், ஹீட்டரில் பொத்தல் ஏற்பட்டு விரைவில்
பழுதாகிவிடும். ஒவ்வொரு முறை ஹீட்டரைப் பயன்படுத்திய பிறகும், குறைந்தது 10
நிமிடங்கள் பச்சை தண்ணீரில் வைத்து எடுக்க, ஆயுள் நீடிக்கும். ஹீட்டரின்
‘கோட்டடு’ பகுதியில் உப்பு பிடிக்காமல் இருக்க மிருதுவான துணியால் நன்றாகத்
துடைக்க வேண்டும். எப்போதும் ஹீட்டரை உயரமான பாத்திரத்தில், நடுவாக
வைத்துப் பயன்படுத்த
வேண்டும். படுக்கவைத்த பொசிஷன் கூடாது.
குளிர்சாதனப் பெட்டி
குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிக்கும் அந்தந்த பருவநிலைக்கு
ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக
மின்சாரம் செலவாவதோடு செயல்பாட்டிலும் பழுது ஏற்படும். வாரத்தில் ஒருநாள்
சர்ஃப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து
உட்புறம், வெளிப்புறம் துடைக்கலாம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை உட்புறம்
உள்ள `கிளாஸ் டோர்'களை வெளியே எடுத்துத் துடைக்க வேண்டும். பழைய மாடல்
பிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு
ஒருமுறை சுத்தம் செய்யவும்.
அயர்ன் பாக்ஸ்
பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் லைட் வெயிட் அயர்ன் பாக்ஸில்,
ஒருபோதும் உச்சபட்ச சூட்டினை வைக்கக் கூடாது. அதிக மின்சாரம் செலவாவதோடு,
இயந்திரமும் பழுதாகும். `ஆஃப்' நிலையில், அயர்ன் பாக்ஸை படுக்கவைத்தால்
எனாமல் கோட்டிங் போய்விடும் என்பதால் நிமிர்த்தித்தான் வைக்க வேண்டும்.
ஒயரை, அயர்ன் பாக்ஸைச் சுற்றி வைத்தால், விரைவில் ஒயர் உடைந்துவிடும்.
ஏ.சி
ஸ்பிளிட் ஏ.சி-யில், உள்ளே அணில் கூடுகட்டவும், எலிகள் அட்டகாசம்
செய்யவும் வாய்ப்புண்டு. மேலும் அவை உள்ளுக்குள் இறக்க நேரிட்டால்
துர்நாற்றமும், அவை சேர்க்கும் குப்பையும் இலவசம். எனவே, கடைகளில்
கிடைக்கும் சுண்டு விரல் அளவுக்குத் துளைகள் கொண்ட வலையை வாங்கி,
வெளிப்புறத்தில் பொருத்துவது நல்லது. ஏ.சி-யில் படிந்த தூசியை மாதம்
ஒருமுறை பல்விளக்கும் பிரஷால் உட்புறம் தேய்த்துத் துடைத்து, தண்ணீரில்
நனைத்துப் பிழிந்த மிருதுவான துணியால் துடைத்து வந்தால், சர்வீஸ் நன்றாக
இருக்கும்.
`மைக்ரோவேவ் அவன்'
`மைக்ரோவேவ் அவன்'னில் ஸ்டீல் பொருட்களைக்கொண்டு சமைத்தால் வெளியாகும்
கதிர்கள் நமக்கு பாதிப்பை உண்டாக்கவும், விபத்து ஏற்படுத்தவும் வாய்ப்பு
உண்டு என்பதால் அதற்கான பிரத்யேகப் பாத்திரங்களையே பயன்படுத்தவும். உணவுப்
பொருட்களை கட்டாயம் மூடியபடியே உள்ளே வைத்துச் சமைக்க வேண்டும்.
கரப்பான்பூச்சி நுழைய அதிக வாய்ப்புள்ளதால், ரசகற்பூரத்தை ஓட்டை இருக்கும்
இடங்களுக்கு அருகில் வைக்கலாம். `ஆன்' செய்த நிலையில் ஒருபோதும் அடுப்பின்
டோரை திறக்கவோ, மூடவோ கூடாது; கதிர் பாதிப்பு ஏற்படும். இதைக் கிளீன் செய்ய
அவசியமில்லை. அப்படிச் செய்ய நினைத்தால், மெக்கானிக் உதவியுடன் செய்ய
வேண்டும்.
மிக்ஸி
நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு கொஞ்சம் குறைவாகவே பயன்படுத்துவது
நல்லது. அரைத்து முடித்ததும் நேரடியாக மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யக்
கூடாது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ஜாருக்குள் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய்
விட்டால், சத்தம் வராமல் தடுப்பதோடு, செயல்திறனும் நன்றாக இருக்கும்.
ஃபேன்
ஃபேனில் நன்றாகக் காற்று வர 10 அடி உயரம் கொண்ட அறை என்றால், ஒன்றரை
முதல் இரண்டரை அடி அளவுக்கு ராடு கொண்டு ஃபேனைப் பொருத்த வேண்டும். அதுவே
12 முதல் 15 அடி உயரம் என்றால், இரண்டரை முதல் மூன்றரை அடி வரை ராடு கொண்டு
பொருத்த வேண்டும். அறைக்கு ஏற்றாற்போல் ஃபேனின் எண்ணிக்கையை
நிர்ணயிக்கவேண்டும். 10 -15 அடி அளவு கொண்ட அறைக்கு இரண்டு, 8 - 10 அடி
அளவு கொண்ட அறைக்கு ஒன்று என அமைக்கலாம். மூன்று இறகு உள்ள ஃபேன்தான்
சிறந்தது. சுத்தம் செய்யும்போது, பிளேடை இழுப்பது, வளைப்பது கூடாது. மிக
மெதுவாக ஓடினால் கண்டன்ஸரை மாற்றலாம். முடிந்தவரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதன் கெப்பாசிட்டரை மாற்றுவதும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதும்
ஆயுள் நீட்டிக்க உதவும். டேபிள் ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்யவும்!
வாஷிங் மெஷின்
வெயில் பட்டால் வண்ணம் மாறும், மேற்புறம் உள்ள ஸ்டிக்கர் உருகி
பிசுபிசுப்பாகும் என்பதால், வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் தண்ணீரில் பாசியும், துகள்களும்... பயன்படுத்தும் பவுடரில்
துகள்களும் இருக்கக்கூடும் என்பதால், தண்ணீருடன் அதற்கென விற்கப்படும்
லிக்விட் கலந்து 15 நிமிடங்கள் வரை டெஸ்ட் மோடில் வைத்து ‘டிரம் கிளீன்’
செய்ய வேண்டும். அதிகபட்ச அளவைக் காட்டிலும் குறைவாகப் பயன்படுத்துவதுடன்,
வாஷிங்மெஷினின் கீழ்பாகத்தில் தண்ணீர் பட்டு துரு ஏறாமல் இருக்க ஸ்டாண்ட்,
சின்ன மேடை, கட்டை என ஏதாவது ஒன்றின் மீது வைக்கவும். தண்ணீர் தடையின்றி
வெளியேறும் விதத்தில் ஹோஸைப் பொருத்த வேண்டும்.
டி.வி
டி.வி-யை வாரத்துக்கு ஒருமுறை துடைக்கலாம். அதன் அருகில் காந்தம்
மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை வைக்கக் கூடாது. செல்போனுக்கு
எஸ்.எம்.எஸ், அழைப்பு வரும் சமயங்களில் அது டி.வி-க்கு பாதிப்பை
ஏற்படுத்தும் என்பதால் மொபைலை டி.வி-க்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும்.
இடி இடிக்கும் நேரங்களில் டி.வி-யை ஆஃப் செய்வதுடன், கரன்ட் மற்றும் கேபிள்
ஒயரை நீக்கிவிடுவதும் நல்லது. ஆன்/ஆஃப் செய்ய ரிமோட் பயன்படுத்தாமல்
மெயின் ஸ்விட்சை நாடவும். அதிகபட்ச வால்யூமை வைத்தால் ஸ்பீக்கர் மற்றும்
ஆடியோ ஐ.சி-யின் ஆயுளுக்கு தீங்கு என்பதால் அதைத் தவிர்க்கவும். ஒருபோதும்
டி.வி-யை தரையில் வைக்காமல், குறைந்தது 4 அடி உயரத்தில், பின்பக்கம்
சுவரில் இருந்து அரையடி இடைவெளி விட்டு வைக்கவும். ஆறு மணி நேர
பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரம் வீதம் டி.வி-க்கு கட்டாயம் ஓய்வு கொடுக்க
வேண்டும்.
எல்.ஈ.டி டி.வி-யைப் பொறுத்தவரையில் பர்மனன்ட் ஸ்டாண்டைவிட, அட்ஜஸ்டபிள்
ஸ்டாண்ட் வசதியாகவும், காற்று போக, வர சுலபமாகவும் இருக்கும். சுத்தம்
செய்யும்போது மிருதுவான துணி பயன்படுத்தவும். அழுத்தித் துடைக்கக் கூடாது.
ஹாரிசான்டல் வியூவாக மட்டுமே துடைக்க வேண்டும். ஸ்க்ரீன் பழுதானால் பேனல்
மாற்ற வேண்டும்.
கம்ப்யூட்டர்
எல்.சி.டி மானிட்டர், சி.ஆர்.டி மானிட்டர்... எதுவாக இருந்தாலும் தூசு
படியாமல் இருக்க கவர் பயன்படுத்தலாம். கீ-போர்டுக்கும்கூட கவர்
பயன்படுத்தலாம். இல்லையெனில், வேக்குவம் க்ளீனர் கொண்டு அதை வாரத்துக்கு
ஒருமுறை சுத்தம் செய்யலாம். கீ-போர்டுக்கு அருகே தண்ணீர், டீ, ஜூஸ்
வைப்பதைத் தவிர்க்கவும். சி.பி.யூ-வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
வேக்குவம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். கணினி ஏ.சி ரூமில் இருந்தால்,
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதும்.
சி.டி மற்றும் பென்டிரைவ்
சி.டி-யின் மையப்பகுதி துளையில் ஆள்காட்டி விரல் பயன்படுத்தி எடுத்தால்
கீறல் விழாமல் பாதுகாக்கலாம். டேபிள் டிராயர், பாக்ஸ் என்று போட்டு
வைக்காமல், சி.டி-க்களை எப்போதும் அதற்கான பவுச்சில் மட்டுமே வைத்துப்
பராமரிக்க வேண்டும். பென்டிரைவைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறை
பயன்படுத்துவதற்கு முன்னும் ஆன்டி வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும். இதனால்
கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். அதேபோல, அடிக்கடி பென்டிரைவை ஃபார்மட்
செய்து பயன்படுத்துவது நல்லது. இதனால் நிரந்தரமாக வைரஸ் அதில் தங்காமல்
அழிக்க முடியும். இந்த சிறிய பொருள் தொலைந்துவிடாமல் இருக்க, கீ-செயினுடன்
இணைத்து வைக்கலாம்.
டி.வி.டி / ஹோம் தியேட்டர்
ஹோம் தியேட்டரைக் குறைந்தது வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய
வேண்டும். இதனுள் இருக்கும் போர்டுகள் மிகவும் சாஃப்டானவை, எளிதில்
பழுதடைந்துவிடும் என்பதால், எக்ஸ்டெண்ட் பாக்ஸ் கொண்டு பயன்படுத்துவதைத்
தவிர்ப்பது நல்லது. இதைக் குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்த
வேண்டும். நீண்ட நாட்கள் பயன்பாடின்றி இருந்தால், பாகங்கள் செயலிழக்கத்
துவங்கும். கேசட் போடும்போது கேசட் வைக்கும் பகுதி முழுவதுமாக வெளியில்
வந்தபிறகு, கேசட்டை சரியாகப்
பொருத்தி, ஒருமுறை ஷேக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும். மூடிய பிறகு உடனே
திறப்பதைத் தவிர்க்கவும். மெயின் பவர் பட்டனை பயன்படுத்தி மட்டும்
ஆன்/ஆஃப் செய்யவும்.
செல்போன்
மணிக்கணக்கில் சார்ஜ் போட்டால் பேட்டரி பழுதடையும். அதிகபட்சமாக 3 மணி
நேரம் சார்ஜ் போடலாம். தண்ணீர் பட்டுவிட்டால், உடனடியாக செல்போனை ஆஃப்
செய்துவிட்டு பேட்டரியைப் பிரித்து, சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம்.
அதிக தண்ணீர் பட்டிருந்தால் சர்வீஸ் சென்டரில் சரிசெய்ய வேண்டும். அந்தந்த
மொபைல் மாடலுக்கு அதற்குரிய சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். டி.வி
பக்கத்தில் வைக்கக்கூடாது. செல்போன் மெதுவாக வேலை செய்தால் ரீசெட் அல்லது
பார்மட் செய்து
கொள்ளலாம். மிகமுக்கியமாக, செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை குறித்து
வைத்துக்கொள்வது நல்லது. இது செல்போன் தொலைந்து போகும் சமயத்தில் கண்டறிய
உதவியாக இருக்கும்!
வீட்டு உபயோக பொருட்களின் பராமரிப்பு பற்றி விலாவாரியாக சொன்ன
ராமகிருஷ்ணன்... ``அனைத்து விதமான எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்
பொருட்களுக்
கும் ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது மிகஅவசியம். இன்று மின்சாரம் சரியான,
சமமான விகிதத்தில் கிடைப்பதில்லை. அதனால் எந்த நேரத்திலும் பொருட்கள்
பழுதடையலாம். ஸ்டெபிலைசர், பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய பொருட்களின்
ஆயுளுக்கு அரண்!’’ என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.
Post a Comment