30 வகை ஈஸி ரெசிப்பி!

30 வகை ஈஸி ரெசிப்பி!   கா லில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் இந்த அவசர யுகத்தில், 'சமையலறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக...

30 வகை ஈஸி ரெசிப்பி!

 காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் இந்த அவசர யுகத்தில், 'சமையலறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று விரும்புபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கைகொடுக்கும் விதத்திலும், திடீரென்று வரும் நண்பர்கள், உறவினர்களை உபசரிக்க உதவும் வகையிலும்...
குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக, அதேசமயம் சுவைமிக்கதாக இருக்கும் 'ஈஸி ரெசிப்பி’க்களை இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கும், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், ”சட்டுபுட்டுனு சமையலை முடிங்க... மிச்சமாகுற நேரத்துல படிக்கிறது, எழுதறது, என்டர்டெய்மென்ட்னு லைஃபை என்ஜாய் பண்ணுங்க!'' என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.

அரிசி வடை
தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: 2 கப் நீரைக் கொதிக்கவிட்டு... அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.  இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித் தெடுக்கவும்.
விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை. இது, விரத நாட்களுக்கேற்றது.

அவல் - பொட்டேட்டோ மிக்ஸ்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு, எண்ணெய் - 150 கிராம், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். ஊறிய அவல், பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு புரட்டவும். உப்பு, எலுமிச்சைச் சாறு, வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

ரவா - சீரகம் நொறுக்ஸ்
தேவையானவை: ரவை - 200 கிராம், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,  உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ரவை, மைதா, உப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய், தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். இந்த மாவை மெல்லிய அப்பளங்களாக திரட்டி, சதுரமாக / டைமண்டாக கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆறியபின் மிளகுத்தூள், பெருங்காயத்தூள் தூவி கலந்து பரிமாறவும்.
இது, ஒரு வாரம் வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

சன்னா - பொரி டிலைட்
தேவையானவை: வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை -  50 கிராம்,  பொரி - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் பொரி, கொண்டைக்கடலை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு குலுக்கி, டொமேட்டோ சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: டொமேட்டோ சாஸை பரிமாறும் சமயத்தில்தான் சேர்க்க வேண்டும்.

பூரி ஸ்வீட் ரோல்ஸ்
தேவையானவை: பொரித்த பூரிகள் - 6, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 6, டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

கோவைக்காய் சிப்ஸ்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம், எண்ணெய் - 200 கிராம்.
செய்முறை: கோவைக் காய்களை நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது), சூடான எண்ணெயில் உதிர்க்கவும். சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்பைஸி பப்பட்
தேவையானவை: மிளகு - சீரக அப்பளம் - 4 (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) நெய் - அரை டீஸ்பூன். காராபூந்தி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், வெள்ளரி, கேரட் - தலா ஒன்று (நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: மிளகு - சீரக அப்பளத்தை சுட்டு மேலே நெய் தடவும். அதன் மேல் நறுக்கிய காய்கள், காராபூந்தி, மிளகாய்த்தூள், உப்பு தூவவும். எலுமிச்சைச் சாறு சில துளிகள் சேர்த்து அப்பளம் நமர்த்துப் போகும் முன் பரிமாறவும்.

அவசர மோர்க்குழம்பு
தேவையானவை:  கடைந்த தயிர் - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம், சீரகம் - தலா ஒரு சிட்டிகை,  தக்காளி - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம் தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வதங்கும் வேளையில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது கடைந்த தயிர்விட்டு அரைத்து, இதை மீதமுள்ள கடைந்த தயிரில் கலந்து, வதங்கும் தக்காளி மசாலாவில் ஊற்றவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக நுரைக்கும்போது, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். மிகவும் திக்காக இருந்தால், சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்ளலாம்.

லெமன் - ஜிஞ்சர் பிக்கிள்
தேவையானவை: தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இளம் இஞ்சி (நாரின்றி வாங்கவும்) - அரை கப், சிறிய பச்சை மிளகாய் - 6, (பொடியாக நறுக்கவும்), கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறவும்.
இஞ்சியுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்ப்பதனால் ஊறுகாய் சிறிது நிறம் மாறி இளம் சிவப்பாகும். இதுபற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஊறுகாய் வாய்க்கசப்பு, பித்தம், வயிறுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சிக்குப் பதிலாக, மாங்காய் இஞ்சி உபயோகித்தும் செய்யலாம்.

மல்ட்டி பர்ப்பஸ் வேர்க்கடலைப்பொடி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 8  பூண்டுப் பல் - 3, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி, பூண்டு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியபின் வேர்க்கடலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். இந்தப் பொடியை பலவிதமாகப் பயன்படுத்தலாம். பொரியல்கள் மீது தூவலாம். இட்லி, தோசை, உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ளலாம். வடித்த சாதத்தில் நெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தயிரில் கலந்து, கடுகு தாளித்து தயிர் பச்சடி செய்யலாம்.

புதினா - முந்திரி பக்கோடா
தேவையானவை:  உடைத்த முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா - அரை கப், எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு  - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலந்து, காயும் எண்ணெயில் இருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்து இதில் விட்டுக் கிளறி, சிறிதளவு நீர் தெளித்துப் பிசையவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, நசுக்கிய பூண்டுப் பற்கள் இரண்டு ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.

வெள்ளரி விதை மில்க்‌ஷேக்
தேவையானவை: வெள்ளரி விதை - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 2, ஏலக்காய் - ஒன்று, சர்க்கரை - 3 டீஸ்பூன், காய்ச்சி, ஆறவிட்டு, குளிரவைத்த  பால் - 200 மில்லி.
செய்முறை: வெள்ளரி விதை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, ஏலக்காயும் சேர்த்து விழுதாக்கவும் (பாதாமை தோல் நீக்கவும்). இதனுடன் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, மிக்ஸியில் நுரை பொங்க அடித்து டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரை தேவையில்லை என்றால், அதற்குப் பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.

பொரித்த அப்பளக் குழம்பு
தேவையானவை: பொரித்த உளுந்து அப்பளம் - 4, புளித்தண்ணீர் - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து நன்கு வறுக்கவும். இதனுடன் புளித்தண்ணீரை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போன பின் பொரித்த உளுந்து அப்பளத்தை நொறுக்கிப் போடவும். ஒரு கொதி வந்த பின் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
இந்த அப்பளக் குழம்பின் வாசனையில் வீடே மணக்கும்.

டிரைஃப்ரூட் ரைஸ்
தேவையானவை:  வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை - தலா 2 டீஸ்பூன், லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 3 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய்யை விட்டு சூடாக்கி... ஏலக்காய், லவங்கத்தைப் பொரித்து, பொடித்த சர்க்கரையைச் சேர்க்கவும் (சற்றே இளகும் கவலை வேண்டாம்). பிறகு, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி... முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

தயிர் சேமியா
தேவையானவை: சேமியா - 200 கிராம் (வேகவிட்டு், நீரை வடிக்கவும்), தயிர் - ஒரு கப்,  சர்க்கரை - ஒரு சிட்டிகை, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
தாளிக்க: மிளகு - 10, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2
செய்முறை: தயிருடன் உப்பு, சர்க்கரையை சேர்த்துக் கடையவும். இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்க்கவும். வெண்ணெயை உருக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதனை சேமியா கலவையுடன் சேர்க்கவும். பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

நூடுல்ஸ் பான் கேக்
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப்,  பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று (துருவவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 50 கிராம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: நூடுல்ஸை வேகவிட்டு, வடிகட்டி, ஆறியபின் தோசைமாவில் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். சூடான தவாவில் ஒன்றரை கரண்டி மாவை கனமான `பேன் கேக்’ ஆக ஊற்றவும். எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு மேலே சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடி தூவவும். தேங்காய் சட்னி, புதினா/கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

கேபேஜ் துவட்டல்
தேவையானவை: துருவிய கோஸ் (கேபேஜ்) - ஒரு கப், நறுக்கிய புதினா - அரை கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய்யை சூடாக்கி, நறுக்கிய புதினா சேர்த்து, நன்கு வதங்கிய பின் துருவிய கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். அடிப்பிடிக்காமல் கவனமாக கிளறிவிட்டு செய்யவும்.

மாவற்றல் ரசம்
தேவையானவை: மாவற்றல் (காதி கிராஃப்ட் கடைகள், டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 10 துண்டுகள், பருப்பு நீர் - ஒரு கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவைத்து, நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: மாவற்றலை குக்கரில் வேகவிட்டு நன்கு மசிக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவற்றல் விழுது, பருப்பு நீர், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, கொதி வருகையில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி  இறக்கவும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு புளியும் தக்காளியும் தேவையில்லை.

ரவா டோக்ளா
தேவையானவை: ரவை - 200 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளிள் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (கீறவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: குக்கரில் ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். ரவை, கடலை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் - இஞ்சி் விழுது, ஃப்ரூட் சால்ட், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாகக் கரைக்கவும். இதை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் இருக்கும் கொதிநீரில் வைத்து மூடி, வெயிட் போடாமல் 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் வில்லைகள் போடவும். இதுதான் டோக்ளா.
கடுகு, பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து, டோக்ளாவின் மீது ஊற்றி... கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல், கேரட் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். எலுமிச்சைச் சாறை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

பச்சை மிளகு ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகு - 100 கிராம் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகை காம்பு நீக்காது உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு ஊறவைத்தால், ஊறுகாய் ரெடி!
இது தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.  இதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாட்கள் பயன்படுத்தலாம்.

சிவப்புப் பூசணி வெல்லப் பச்சடி
தேவையானவை: சிவப்பு பூசணி - கால் கிலோ (நறுக்க வும்), வெல்லம் - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3, பச்சை மிளகாய் - ஒன்று (பொடி யாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: சிவப்பு பூசணித்துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு, புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்த பின் வெல்லம் சேர்த்து கெட்டியானதும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.

தயிர் நெல்லி
தேவையானவை: முழு நெல்லி - 10 (வேகவிட்டு கொட்டை நீக்கவும்), கடைந்த தயிர் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்).
செய்முறை: தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆறவிட்டு, கடைந்த தயிரில் சேர்த்துப் பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

டொமேட்டோ - கார்லிக் தொக்கு
தேவையானவை: நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள், துருவிய இளம் இஞ்சி - 50 கிராம், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நல்லெண்ணெயை காயவிட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்குகையில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

பூரி கார ரோல்ஸ்
தேவையானவை: பொரித்த பூரிகள் -  6, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு, தோல் நீக்கி, துருவவும்), கேரட் - ஒன்று (துருவவும்), லவங்கம் - 6, பனீர் துருவல், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: நெய்யில் கேரட் துருவலை வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு துருவல், மிளகுத்தூள், உப்பு, பனீர் துருவல் சேர்க்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஜவ்வரிசி வெல்லப் பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவிப் பரிமாறவும்..

முளைகட்டிய  வெந்தயக் கறி
தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - 3 டீஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு - 50 கிராம், தேங்காய்த் துருவல், - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, சர்க்கரை  - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை வேகவிட்டு எடுக்கவும் (குக்கரில் சாதம் வைக்கும்போது, மேல் தட்டில் வைத்து வேகவிடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, வேகவிட்ட வெந்தயம் சேர்த்து, உதிர் உதிராக வரும் வரை நன்கு புரட்டி எடுத்துப் பரிமாறவும். வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை இவை மூன்றும் சேர்ந்து வெந்தயத்தின் கசப்பை வெகுவாகக் குறைத்துவிடும்.

திடீர் போண்டா
தேவையானவை: இட்லி / தோசை மாவு - ஒரு கப், ரெடிமேட் பஜ்ஜி - போண்டா மிக்ஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். இந்த மாவை, சூடான எண்ணெயில் போண்டாக்களாக போட்டுப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: மேற்கூறிய மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, நறுக்கிய காய்களைத் தோய்த்து பஜ்ஜியும் போடலாம்.

கேழ்வரகு கீர்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 5 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த பாசிப்பருப்பு மாவு - 3 டீஸ்பூன், பால் - 2 கப், சர்க்கரை - 150 கிராம், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சீவிய முந்திரி - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: நெய்யை சூடாக்கி கேழ்வரகு மாவை நன்கு சிவக்க வறுத்து பாசிப்பருப்பு மாவைச் சேர்க்கவும். பிறகு 150 மில்லி தண்ணீர், சர்க்கரை சேர்க்கவும். நன்கு கொதி வருகையில் இறக்கி, பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள், சீவிய முந்திரி சேர்த்துப் பரிமாறவும். பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் இதை செய்யலாம்.

ஈஸி பாஸந்தி
தேவையானவை: ஃபுல்கிரீம் மில்க் - ஒரு பாக்கெட் (500 மில்லி), சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு - அரை டீஸ்பூன், சீவிய முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்.
செய்முறை: பாலை ஏடு படிய காய்ச்சவும். 10 நிமிடத்தில் நன்கு காய்ந்துவிடும். இதனுடன் சர்க்கரை சேர்த்து (இளகும்... கவலை வேண்டாம்), நன்கு கரைந்த பின், சோள மாவை சிறிதளவு நீரில் கரைத்து சேர்த்து, கெட்டியானதும் இறக்கவும். சீவிய முந்திரி, குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

சீஸ் அவல்
தேவையானவை: அவல் - 200 கிராம், சீஸ் - 50 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலை சேர்த்து, சீஸை துருவிக் கலந்து பரிமாறவும்.



Related

திருமணம் - சைவ விருந்து!

திருமணம் - சைவ விருந்து இது திருமண சீஸன். திருமண விருந்தின்போது வாழை இலையில் என்னனென்ன உணவுகள் பரிமாறப்படும் என்பதைச் செய்து காட்டி வாழை இலையில் பரிமாறியிருக்கிறார் சங்கீதா. இங்...

30 வகை பிரெட் சமையல் !

30 வகை பிரெட் சமையல் 'பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்கள...

30 வகை தீபாவளி பட்சணங்கள்!

30 வகை தீபாவளி பட்சணங்கள் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி, கண்களையும் மனதையும் ஒருசேர உற்சாகத் துள்ளலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த ஆனந்த பரவசத்தை முழுமையாக்க உங்களுக்கு உதவ ஓடோ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 1:24:16 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,492

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item