பேலன்ஸ் டயட் சுவையான டிபன் ரெடி!
ஆரோக்கியமான வாழ்வுக்கு சரிவிகித உணவு அவசியம். ஆனால், 'சரிவிகித உணவு’ என்றால் என்ன என்பதிலேயே பலருக்கும் குழப்பம் இருக்கிறது.
'நம் உடலுக்குத் தேவையான உணவு தரமானதாகவும், அளவோடும்
இருப்பது போல சாப்பிடும் முறையைத்தான் (குவாலிட்டி அன்ட் குவான்டிட்டி)
சரிவிகித உணவு என்கிறோம்.
சரிவிகித உணவால், உடலுக்கு சகலவிதமான சத்துக்களும் சேர்வதுடன், சோர்வே இல்லாமல்

புத்துணர்வோடு இருக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத்
தவிர்க்கவே கூடாது'' என்கிற சீஃப் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, ஒரு
வாரத்தின் ஏழு நாட்களுக்கான காலை, மதியம், மாலை நேரச் சிற்றுண்டி, இரவு
உணவு என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
இரவு உணவுக்குப் பிறகு, நீண்ட நேரம் சாப்பிடாமல் காலை
வரை ஃபாஸ்ட்டிங் இருந்து, அதை 'பிரேக்’ செய்வதால்தான், காலை
உணவை 'பிரேக்ஃபாஸ்ட்’ என்கிறோம். 9 மணிக்குள் சாப்பிட்டால்தான் அது,
பிரேக்ஃபாஸ்ட். இல்லையெனில், நோய்கள் நம் உடலுக்குள் ஃபாஸ்ட்டாக
நுழைந்துவிடும். கலோரி, மாவுச்சத்து, புரதம், கால்சியம், கொழுப்பு,
இரும்புச் சத்து என அனைத்தும் கலந்த சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே நல்லது.
'பேலன்ஸ்டு’ டயட்டில், ஏழு நாட்களுக்கான காலை பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பிகளைச்
சொல்ல, அவற்றைச் சமைத்துக்காட்டி, சப்புக் கொட்டவைக்கிறார் சமையல் கலை
நிபுணர் பத்மா.
முதல் நாள்: வெந்தய தோசை பூண்டுப் பொடி
வெந்தய தோசை
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், வெந்தயம் - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - - தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்
களைந்து மையாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்
கல்லில், மாவைப் பரவலாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக
வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி. வயிற்றுப் புண் வராமல் காக்கும். உளுந்தில் புரதச் சத்து உள்ளது.
பூண்டுப் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 10, உளுந்து, கடலைப் பருப்பு - ஒரு சிறிய கிண்ணம், பூண்டுப் பல் - 20, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த
மிளகாய், உளுந்து, கடலைப் பருப்பு இவற்றை வெறும் கடாயில் தனித்தனியே
வறுத்துக்கொள்ளவும். தோல் உரித்த பூண்டை, சிறிது எண்ணெயில் வதக்கி பருப்பு,
வற்றலுடன் சேர்த்து அரைக்கவும். இதில், தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு
சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இரண்டாம் நாள்: மினி இட்லி வெஜிடபிள் சாம்பார்
மினி இட்லி
தேவையானவை: இட்லி அரிசி - 300 கிராம், உளுந்து - 100 கிராம், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
உளுந்தை தனித்தனியே ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை
மூன்று மணி நேரம் வெளியில் வைத்தால், நன்றாகப் பொங்கிவரும். மினி இட்லித்
தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை குழிகளில் நிரப்பி குக்கரில்
வேகவிட்டு எடுக்கவும்.
வெஜிடபிள் சாம்பார் செய்ய: புளி
- பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன், காரட், பீன்ஸ்,
குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா 1, பச்சைப் பட்டாணி, பாசிப்பருப்பு தலா -
100 கிராம், பச்சை கொத்தமல்லி சிறிதளவு. கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காரட்,
பீன்ஸ், குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பட்டாணியை தோல்
உரித்துக்கொள்ளவும். பாசிப் பருப்பை குழைய வேகவைக்கவும். புளியை
தண்ணீர்விட்டுக் கரைத்து சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு நறுக்கிய காய்களை வதக்கி, கொதிக்கும் சாம்பாரில்
போடவும். காய்கள் வெந்ததும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பச்சை
மிளகாய் போட்டுத் தாளித்து, வேகவைத்த பருப்பையும் சேர்த்து சிறிது நேரம்
கொதிக்கவிட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி நறுக்கிப்போட்டு இறக்கவும்.
குறிப்பு: இட்லிகளை ஓர் அகலமான கிண்ணத்தில் போட்டு, இந்த சாம்பாரை இட்லிகள் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிடலாம்.
மூன்றாம் நாள்: வெஜிடபிள் ஊத்தப்பம் மசாலா மோர்
வெஜிடபிள் ஊத்தப்பம்
தேவையானவை: இட்லி
அரிசி - 300 கிராம், உளுந்து - 100 கிராம், உப்பு தேவையான அளவு, கோஸ்
துருவல், காரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - வெங்காயம் - தலா
ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது அளவு, பச்சை மிளகாய் 1, எண்ணெய் -
தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
உளுந்தை தனித்தனியே ஊறவைத்து தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு சேர்த்து
கலக்கவும். சிறிது எண்ணெயில் காய்கறிகளை லேசாக வதக்கி மாவுடன் சேர்த்துக்
கலக்கவும். காய்ந்த தோசைக் கல்லில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
மசாலா மோர்
தேவையானவை: தயிர் -
500 மி.லி., சோம்பு, சீரகம் தலா - கால் ஸ்பூன், இஞ்சி ஒரு சிறிய துண்டு,
சிறிய பச்சை மிளகாய் - 1, பெருங்காயத் தூள், உப்பு, கறிவேப்பிலை
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
செய்முறை: தயிர்,
உப்பு, பெருங்காயத்தூளைத் தவிர எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து
வடிகட்டவும். தயிரை மத்தினால் கடைந்து அரைத்த சாறுடன் கலந்து, உப்பு,
பெருங்காயத் தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம். ஊத்தப்பத்தை இந்த
மோரில் தொட்டு சாப்பிடலாம். அல்லது ஊத்தப்பம் சாப்பிட்டதும் இந்த மோரை
அருந்தலாம்.
நான்காம் நாள்: புரோட்டீன் அடை அவியல்
புரோட்டீன் அடை
தேவையானவை: இட்லி
அரிசி - 200 கிராம், முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு,
கோதுமை மற்றும் உளுந்து - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மிளகு -
ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு, உப்பு எண்ணெய் - தேவையான
அளவு.
செய்முறை: இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, முளைகட்டி
ய பயறு வகைகள், காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து
அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி மிதமான தீயில்
வேகவிட்டு எடுக்கவும்.
அவியல்
தேவையானவை: தேங்காய்
எண்ணெய் - 2 ஸ்பூன், பீன்ஸ் - அவரைக்காய் தலா 10, காரட், பூசணி பத்தை -
தலா 1, கத்தரிக்காய் - 2, உருளைக் கிழங்கு 2, தேங்காய்த் துருவல் - ஒரு
கப், பச்சை மிளகாய் - 4, தயிர் - ஒரு கப், உப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: எல்லாக்
காய்கறிகளையும் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து தயிருடன் கலந்து
வேகவைத்த காய்களுடன் சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு
கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கலக்கவும்.

பொதுவாக மனிதனுக்கு 2000 முதல் 2200 கிலோ கலோரி, நாள் ஒன்றுக்குத் தேவை.

காலை 7 மணி 100 கலோரி (காபி, டீ, பூஸ்ட்)

காலை பிரேக்ஃபாஸ்ட் 350 முதல் 400 கலோரி (டிபன்)

மிட் மார்னிங் (11 மணிக்கு) - 100 முதல் 150 கலோரி (மோர், இளநீர்)

மதியம் 500 கலோரி - (சாப்பாடு)

மாலை 3 மணிக்கு 100 கலோரி (ஜூஸ், பழ சாலட்)

5 மணிக்கு ஸ்நாக்ஸ் + டீ (அல்லது) காபி 200 கலோரி

இரவு 8 மணிக்கு 400 கலோரி (மிதமான சப்பாத்தி போன்ற உணவு)

தூங்கப் போகும்போது - 100 கலோரி (பால்)
Post a Comment