சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை!
''மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு!''
- உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை உண்பவரின் உயிருக்கு எந்தத் துன்பமும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும்
உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்...
நோய்கள்... துன்பங்கள்!
நாம்சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா... உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்று யோசித்திருக்கிறோமா?
'தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்’ என்று சொன்னாலும்,
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி,
முளைகட்டிய பயறுகள், ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து
இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும்.
ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே
மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான
சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும். மூலிகைத் தாவரங்களின்
மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால்
மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க
முடியும்.
மூலிகைகளின் மருத்துவ உணவுகளை, சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன் செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார்.
நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
பழங்களின் பலன்கள், முளைகட்டிய தானியப்பால் தயாரிக்கும்
முறைகள், மூலிகை சூப் வகைகள் என இயற்கை உணவுகளைச் செய்து காட்டி, அதன்
பலன்களையும் பட்டியலிடுகிறார், இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல்.
இயற்கையோடு இணைவோம்! நோயின்றிக் காப்போம்!
''செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே, மசாலா வாசமும்,
சுள்ளென்ற காரமும்தான் நினைவில் வரும். ஆனால், செட்டிநாடு உணவுகளில் உடல்
உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவுகள் நிறைய இருக்கின்றன''
என்கிறார் கானாடுகாத்தானைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன்.
கேழ்வரகு இட்லி
செய்முறை: கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு
மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க
வைக்கவும். இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில்
வேகவிடவும்.
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில்
கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கச் செய்யும்.
சோளம் தினை தக்காளி தோசை
செய்முறை: சோளம், தினை தலா ஒரு கப் எடுத்து, சிறிது
நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைமாவுடன் கலந்து, எட்டு
மணி நேரம் புளிக்கவிடவும். இதனுடன் நான்கு தக்காளியைப் பொடியாக நறுக்கி
தேவையான அளவு சேர்த்து, தோசையாக ஊற்றி வார்க்கவும்.
மருத்துவப் பலன்கள்:
சோளம், தினையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம். ரத்தசோகையைத் தடுக்கும்.
வல்லாரை தோசை
செய்முறை: ஒரு கப் அரிசி, தினை மற்றும் உளுந்து கால்
கப் எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் வல்லாரைக்
கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் ஊற்றி தோசையாக
வார்க்கவும்.
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்
செய்முறை: கம்பு, சோளம், தினை, வரகு இவற்றைச் சம அளவு
எடுத்து நன்றாக ஊறவைத்து, தண்ணீர்விட்டு அரைக்கவும். இதை, பணியாரமாவுடன்
கலந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். சிறிதளவு வெல்லம் சேர்த்துப் பணியாரக்
குழியில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
பீட்டாகரோட்டின் இதில் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
செய்முறை: மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் சம அளவு அரிசிமாவு, சாமை மாவு மற்றும்
சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, தோசை மாவுடன் கலக்கவும். இந்த மாவை எட்டு மணி
நேரம் ஊற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் தோசையாக ஊற்றி எடுக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம். மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.
சாமைப் பொங்கல்
செய்முறை: சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வாசனை
வரும் வரை லேசாக வறுத்து, தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.
கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம்
தாளித்து, பொங்கலில் கொட்டிக் கலக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
சாமையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். ரத்தசோகை வராமல் தடுக்கும்.
கேழ்வரகுக் கூழ்
செய்முறை: பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்கவைத்து
அதில் மாவைக் கொட்டி கெட்டி ஆகாமல், கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
அதில் தயிரை ஊற்றிக் கூழாக்கி மாம்பருப்பு (மாவற்றல்) குழம்புடன்
சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்:
இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு கொஞ்சமும்
இல்லை. அதிக அளவு நீர்ச் சத்தும், நார்ச் சத்தும் இதில் இருக்கின்றன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி
மேற்கொண்டால் உடல் வலிமையாகும்.
கவுனி அரிசி
செய்முறை: கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்க
வேண்டும். மறுநாள், அதை நீராவியில் வேகவைத்து, அதனுடன் கருப்பட்டி வெல்லம்,
நெய், தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துக் கலக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
மூட்டு வலிக்கும், இடுப்பு வலிக்கும் நல்ல நிவாரணி.
மசாலா சீயம்
செய்முறை: பச்சரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒரு மணி
நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த
மாவை எலுமிச்சைப் பழ அளவில் உருட்டி, கடலை எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.
காரச் சட்னியுடன் இதைச் சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்:
கடலை எண்ணெயில் பொரிப்பதால் இது உடலுக்கு எந்தத்
தீங்கும் விளைவிக்காது. மேலும், உளுத்தம்பருப்பு சேர்ப்பதால், இளம்
பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
கூழ் பாயசம்
செய்முறை: பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அரைத்து
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து வேகவைக்க வேண்டும். பிறகு வெல்லம்
சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பால் அல்லது தேங்காய்ப்பால் ஊற்றிக்
கலக்கவும். நெய்யில் முந்திரி, தேங்காய்த் துருவலை வறுத்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்புண்ணுக்கு இது நல்ல மருந்து. வயிற்று
எரிச்சல், பொருமலைப் போக்கும். இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடுவார்கள்.
வெண்டைக்காய் மண்டி
செய்முறை: வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம்,
பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி
வதக்கிக்கொள்ளவும். மொச்சையை ஊறவைத்து அதையும் விழுதுபோல்
அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது புளிக் கரைசலை ஊற்றி, அதில் வதக்கி
வைத்துள்ளவற்றையும், விழுதையும் சேர்த்து சூடு செய்யவும். அடுப்பிலிருந்து
இறக்கும் முன்பு, பருப்பு ஊறவைத்த அடித் தண்ணீரைச் சேர்க்கலாம்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் தூவி விடவும்.
மருத்துவப் பலன்கள்:
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்கும் இதன் சுவை நிச்சயமாகப் பிடிக்கும், ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.
சாமைக் கிச்சடி
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,
சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைக் தாளிக்கவும். நறுக்கிய
காய்கறிக் கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். இதில் அரை கப் சாமை
சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும்
கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்:
ஆண்மைக் குறையை நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்தது.
தினைப் பொங்கல்
செய்முறை: அரை கப் தினை, பச்சைப் பயறு கால் கப்
இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில்
வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கி, கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம்,
மிளகு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்:
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதயத்தைப் பலப்படுத்த உதவும். மாதவிலக்கு பிரச்னையைச் சரிசெய்யும்.
>>>>>
''உடல் நலம் பாதிக்கப்படும்போது, மருந்து மாத்திரைகளை
எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், எவற்றைச் சாப்பிடக் கூடாதோ... அவற்றைத்
தவிர்த்தாலே, பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம்
மெனக்கெடலும், சமையலறையில் கூடுதல் கரிசனமும் முறையான மருத்துவத்துடன்
சேர்ந்து இருந்தால் மட்டுமே எந்த நோய்க் கூட்டத்திலிருந்தும்
தப்பிக்கலாம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், நோய் வந்தால் உணவு
விஷயத்தில் எவற்றைத் தவிர்க்கலாம்... எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என்பது
குறித்து விளக்குகிறார்.
வாதம்
புளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய்,
காராமணி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும்
குளிர்பானங்கள், செரிமானத்துக்குச் சிரமம் தரும் மாவுப் பொருட்களைத்
தவிர்க்கவேண்டும்.
வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, சீரகம்,
புதினா, பூண்டு, முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றைச் சேர்ப்பதன்
மூலம் வாதத்தைக் குறைக்கலாம்.
பித்தம்
உணவில் காரத்தைக் குறைக்கவேண்டும். கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்த அளவு கோதுமை, கைக்குத்தல் அரிசி,
கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, தனியா, சீரகம், எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி
ஆகியவை பித்தத்தைக் குறைக்கும்.
கபம்
பால், இனிப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.
சுரைக்காய், வெண்பூசணி மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் இவற்றை மூன்று முதல் ஐந்து மாதங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கலாம்.
அப்படி முடியாதபட்சத்தில், மிளகு சேர்த்துச் சாப்பிடலாம்.
பழங்களில் கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை வேண்டாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில்
கபத்தைச் சேர்ப்பதால் தவிர்த்துவிடுவது நல்லது. மோர், மிளகு, சுக்கு,
திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை கபத்தைக் குறைக்கும்.
சிறுநீரக நோய்
அதிக உப்பு, ஊறுகாய்கள், பொட்டாஷியம் நிறைந்த பழங்களான
வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் தவிர்க்க வேண்டும். சோடியம்
நிறைந்த பழங்களான பைனாப்பிள், பப்பாளி, கொய்யா மற்றும் காய்கறிகளில்
பீட்ரூட், நூல்கோல், கேரட், பருப்புக் கீரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர். வாரம்
மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி,
பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை அவசியம் சேர்க்க வேண்டும்.
ஆஸ்துமா
வாயுவை உண்டாக்கும், செரிக்க நேரமாகும் உணவுகள்,
எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள், இனிப்பு வகைகள் தவிர்க்கவேண்டும். மருந்து
எடுத்துக்கொள்பவர்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை இவற்றைக்
கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
சிவப்பு அரிசி அவல், புழுங்கலரிசிக் கஞ்சி, திப்பிலி
ரசம், மிளகு ரசம், தூதுவளை ரசம், முருங்கைக்கீரைப் பொரியல், லவங்கப்பட்டைத்
தேநீர், மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள்,
சீரணத்தை வேகப்படுத்தும் எளிய உணவுகளைச் சாப்பிடலாம். பல் துலக்கியதும் 2, 3
கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது.
மலச்சிக்கல்
பிஸ்கட், மைதாவில் செய்யப்பட்ட பீட்சா, பர்கர், பரோட்டா
போன்ற கடின உணவுகளைத் தவிர்க்கவேண்டும். தினசரி மூன்றரை முதல் நான்கு
லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். நார்ச் சத்து அதிகம் உள்ள
பிடிகருணை, வாழைத்தண்டுப் பச்சடி, பாசிப்பருப்பு சேர்த்த கீரை, வெந்தயம்,
கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத கோதுமை நல்லது.
இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம், சில துண்டுகள்
பப்பாளி சாப்பிடலாம். மாலை நேரத்தில் 10 முதல் 15 காய்ந்த திராட்சை
எடுத்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய்
சர்க்கரை, பட்டை தீட்டிய அரிசி, கோதுமை, கேரட்,
பீட்ரூட், பூமியில் விளையும் கிழங்குகள் குறிப்பாக உருளைக்கிழங்கைத்
தவிர்க்கவேண்டும். கொத்தவரங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை,
வெண்டை, கோவைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுண்டை வற்றல்,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா மற்றும் துவர்ப்புள்ள பழங்கள் மிகவும்
நல்லது.
புழுங்கல் அரிசி, தினை அரிசி, வரகரிசி, மாப்பிள்ளை சம்பா அவல் என வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.
உயர் ரத்த அழுத்தம்
அதிக உப்பு, ஊறுகாய், மிளகாய்ப்பொடி, அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும்.
வெந்தயம், சீரகம் மிகவும் நல்லது. மதிய வேளையில் ஐந்து
முதல் பத்து பூண்டு பற்கள், தினசரி 50 கிராமுக்குக் குறையாமல் வெங்காயம்
மற்றும் வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு
சேர்த்துக்கொள்ளலாம்.
அலுப்பு / சோர்வு
அதிகம் புளி சேர்த்த உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும்.
இரவில் நல்ல செரிமானத்தைத் தரக்கூடிய,
தூக்கத்துக்குத் தடையில்லாத எளிய உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
நெல்லிக்காய், காய்ந்த திராட்சை, உலர் அத்தி தினசரி காலை வேளையில்
சாப்பிடும்போது, அன்று முழுவதும் உற்சாகத்தைத் தரும். தினசரி 4 முதல் 5
லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
மூட்டுவலி
'புளிர் துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த
மருத்துவம். அதிகப் புளிப்பு, காரக்குழம்பு, புளியோதரை, ப்ரென்ச் ஃப்ரை,
உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் தவிர்க்கவும்.
தினசரி 40 நிமிட நடை, 15 நிமிட ஓய்வு, 30
நிமிடம் மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், 4, 5 யோகாசனங்கள், கால்சியம்
நிறைந்த கீரை, ஒரு கப் மோர், ஒரு கப் பழத்துண்டுகள் இவற்றை தினசரி
மேற்கொள்ளவேண்டும்.
ரத்தசோகை
எள், பனைவெல்லம், பச்சைப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை,
பெரிய நெல்லிக்காய், கீரைகளில் சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை,
பசலைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை... பழங்களில் காய்ந்த
திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி தினமும் சேர்க்கவேண்டும்.
காய்ச்சல்
கடின உணவுகள், வறுத்தல், பொரித்த உணவு வகைகள், கிழங்கு
வகைகளைத் தவிர்க்கவேண்டும். கண்ணுக்கும் உடலுக்கும் அதிக அளவு ஓய்வு
கொடுக்கவேண்டும்.
காய்ச்சலுக்கு மருந்து, பட்டினிதான். இன்றைய காலத்தில்
உடல்வலுவுக்கு பட்டினி இருப்பதும் நல்லது அல்ல. இட்லி, இடியாப்பம்,
புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற எளிய உணவுகளை குறைந்த அளவு
எடுத்துக்கொள்ளலாம். சுக்கு, மிளகு, ஓமம் சேர்த்த கஷாயம் நல்லது.
குழந்தைகளுக்கு சீரகக் கஷாயம் நல்லது.
உடல் பருமன்
உடல் பருமனைக் குறைக்க, பட்டினி ஒரு தீர்வு அல்ல.
சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க
வேண்டும்.
அளவான சாப்பாடு, குறைந்த கலோரி நிறைந்த நார்ப்
பொருட்கள். ஒரு கப் (150 கிராம்) சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து அதாவது,
ஒரு பங்கு சாதத்துடன் குழம்பு, ரசம், மோர் என சாப்பிடவேண்டும். கொள்ளு
ரசம், கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.
நம் உடலில் உள்ள ரத்த அமிலத்தன்மையை பழங்களும், தாவர
உணவுகளும் சுலபத்தில் மாற்றி சீர்செய்துவிடும். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை
சாப்பிடலாம். மூன்று வித வண்ணங்களில் உள்ள பழங்களைச் சேர்த்துக் கொள்வதன்
மூலம் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும்'' என்று கூறும் இயற்கை
மருத்துவர் ரத்தின சக்திவேல், பழங்கள், தானியங்கள், சூப் வகைகளின்
சத்துக்களைப் பட்டியலிட்டார்.
பழங்கள்
வாழைப்பழம்: தினமும் ஒன்று முதல் ஐந்து வரை
சாப்பிடலாம். அதிக குளுகோஸ் இருக்கிறது. மலச்சிக்கலைப் போக்கும். மூலம்,
வயிற்றுப்புண்களை மட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க
வேண்டும்.
மாம்பழம்: ஒரு வேளைக்கு 500 கிராம் வரை சாப்பிடலாம். மாலைக்கண் நோயை விரட்டும். மலச்சிக்கலை சரியாக்கும். தோலுக்கு மிகவும் நல்லது.
பலாப்பழம்: தேனுடன் சேர்த்து ஒரு வேளை உணவாகச்
சாப்பிடலாம். ஆர்வக்கோளாறில் அதிக சுளைகளைச் சாப்பிட்டு வயிற்றுப் பிரச்னை
ஏற்பட்டாலும் இதன் கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
பப்பாளி: செரிமானத்தைத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கு
மருந்தாகவும் இருக்கிறது. தோலில் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலை
விரட்டும். வயிற்றுப் பூச்சிகளை விரட்டும். நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அகோரப் பசியைப் போக்கும். உடல் வனப்பு கூடும். குரல் வளம் பெருகும்.
தானியங்கள்
முளைவிட்ட தானியங்கள் மற்ற உணவுகளைப் போல் உடனடியாகச்
செய்து சாப்பிடக்கூடியது அல்ல. எட்டு மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை
காத்திருக்க வேண்டி உள்ளதால் சோம்பலாகக் கருதி தவிர்த்துவிடுகிறோம்.
முளைவிட்ட தானியங்களை சுலபமான முறையில்
தயாரிக்கலாம். 'ஸ்ப்ரவுட்ஸ் மேக்கர்’ இருப்பதிலேயே சுலபமானது. கீழ்
அடுக்குகளில் தானியமும் மேல் அடுக்கில் தண்ணீரும் ஊற்றிவைத்தால், தண்ணீர்
சொட்டுச் சொட்டாக இறங்கும். எட்டு முதல் 12 மணி நேரத்தில் தானிய முளை
வரும். நாம் கழுவிச் சாப்பிடலாம். தண்ணீரை அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ
ஊற்றினால், சரியாக முளைக்காது.
பொதுவாக ஊறிய தானியங்களில் சத்துக்கள் அதிகரிக்க
ஆரம்பித்துவிடும். முளைத்து தோல் வெடிக்கும்போது அதில் மிக அதிக அளவு
வைட்டமின்களும், தாது உப்புக்களும் சேரும். இதை மாவாக அரைத்தும்
அருந்தலாம். முளை தானியமாக சாலட் செய்தும் சாப்பிடலாம். கடைகளில் விற்கும்
பாக்கெட் முளைதானியங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், முளைகட்டிய
தானியங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.
முளைகட்டிய தானியங்கள் மிகுந்துவிட்டால், அதை உலர வைத்து அரைத்துக் கஞ்சி, அடை அல்லது சப்பாத்தியாகச் செய்து சாப்பிடலாம்.
எள் முளைப்பால்
எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க
வைத்துச் சாப்பிடலாம். வெள்ளை எள்ளை நன்றாகக் கழுவி, மண் இல்லாமல் அரித்து
தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டித் தொங்கவிட
வேண்டும். முளைத்த எள்ளை தண்ணீர்விட்டு அரைத்து, வெல்லம், பேரீட்சை
சேர்த்துச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: உடல் பருக்க விரும்புபவர்கள், அடிக்கடி ஒரு பிடி முளைகட்டிய எள்ளை சாப்பிடலாம்.
கொள்ளு முளைப்பால்
உடல் மெலிந்தவர்கள் எள்ளை நாடுவதுபோல, உடல் பருமனாக இருப்பவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுப் பாலையும் அருந்தலாம்.
கொள்ளுப் பயறை எட்டு முதல் 12 மணி நேரம் நீரில் ஊற
வைத்து ஈரத் துணியால் கட்டிவிடுங்கள். முளைவிட்டதும், அரைத்து பால்
எடுத்து அருந்தலாம்.
மருத்துவப்
பலன்கள்: குதிரைக்கு இணையான ஆற்றலைப் பெற, அடிக்கடி கொள்ளு முளைப்பால்
சாப்பிட, உடல் பலம் பெறும். கொழுப்பு கரைந்துவிடும்.
கறுப்பு உளுந்து முளைப்பால்
உளுந்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற ஈரத் துணியில்
கட்டித் தொங்கவிடுங்கள். 12 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும். இதை நீர்
சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம்.
மருத்துவப் பலன்கள்: உடல் போஷாக்குடன்
இருக்கும். குளிர்ச்சி மிகுந்த உணவு. தாய்ப்பால் அதிகரிக்கும். உடல்
மெலிந்தவர்கள் புஷ்டியாகிவிடுவார்கள்.
கொண்டைக்கடலை முளைப்பால்
கொண்டைக்கடலை ஊறி, முளைவிட 24 மணி நேரம் ஆகும். 12 மணி
நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி முளைவிட்டதும் அரைத்துப் பால்
எடுத்துப் பருகலாம்.
மருத்துவப் பலன்கள்: அதிக புரதச் சத்து நிறைந்தது.
வளரும் குழந்தைகள், கடின உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள்
சாப்பிட்டுவந்தால், ஆற்றல் அதிகரிக்கும். பச்சைப்பயறு முளைப்பால்
எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாக அலசி,
ஈரப் பருத்தித் துணியில் கட்டி எட்டு மணி நேரம் முளைக்கவிடலாம். இதனுடன்
நீர் கலந்து மிக்ஸியில் அடிக்கவும். பச்சைப் பயறு பாலாகக் கிடைத்ததும்,
இதில் தேன், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
கோதுமை முளைப்பால்
பஞ்சாப் கோதுமையைக் குறைந்தது எட்டு முதல் 12 மணி நேரம்
ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி. காற்றோட்டமான அறையில் தொங்கவிட வேண்டும்.
எட்டு மணிக்கு மேல் ஊறவைத்தால் புது நீர் மாற்ற வேண்டும். கோதுமை முளைவிட,
12 முதல் 18 மணி நேரம் ஆகும். முளைத்த கோதுமையை ஒரு கைப்பிடி அளவு
எடுத்து 150 மி.லி. தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், வெல்லம், மிளகுத்தூள்
கலந்து பருகலாம்.
மருத்துவப் பலன்கள்: புற்றுநோய் வீரியத்தைக் குறைக்கும். ஊட்டச்சத்தானது. கொழுப்பைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு நல்லது.
கம்பு முளைப்பால்
8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரம் ஈரத்துணியில் அல்லது முளை தானியப் பாத்திரத்தில் வைத்தால், முளை கிளம்பி வரும்.
அடிக்கடி ஒரு கைப்பிடி முதல் இரண்டு கைப்பிடி அளவுக்குச் சாப்பிடலாம். நீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் காய்ச்சி அருந்தலாம்.
மருத்துவப் பலன்கள்: உடலில் தெம்புகூடும். சக்தி அதிகரிக்கும். உடல் யானை பலம் பெறும். திடகாத்திரமாக இருக்கும்.
இதேபோல் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், பார்லி, சோயா, வெந்தயம், வேர்க்கடலையை வைத்துத் தயாரிக்கலாம்.
மூலிகை சூப் வகைகள்
சா£ப்பிடுவதற்கு
முன்பு சூப் சாப்பிடும் வழக்கம் இன்று அதிகரித்துள்ளது. சூப் நல்ல
பசியைத் தூண்டும். அதிலும் மூலிகை சூப் குடித்து வந்தால், நோயைக் கிட்ட
நெருங்கவிடாது. பொதுவாக சூப் மூலம் 50 கலோரி சக்தியும், கூடவே
முளைதானியப்பால், பவுடர்கள் கலப்பதால் 100 கலோரி சக்தியையும் பெறலாம்.
காலை, மாலை டீ, காபிக்குப் பதிலாக இந்த வகை சூப் சாப்பிட்டுப் பாருங்கள்...
உடலில் தெம்பும் ஆரோக்கியமும் கூடும்!
முடக்கத்தான் சூப்
50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான்
பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.
இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை,
புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து
கொதிக்கவிட்டு மசிக்கவும். இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம்.
மருத்துவப்
பலன்கள்: 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய், வாதம்,
வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம்
குணமடையும். உடல் வலுப்பெறும்.
வல்லாரை சூப்
50 கிராம் வல்லாரைக் கீரையைப் பொடியாக நறுக்கி, பசுமை
மாறாமல் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கூடவே விரும்பிய காய்கறிகளைச்
சேர்த்துக் கொதித்ததும், மசித்து வடிகட்டவும். இதில் சிறிது கோதுமை மாவு
கலந்து தயாரிக்கலாம்.
மருத்துவப் பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல்புண், மாலைக்கண் நோய் சரியாகும்.
பொன்னாங்கண்ணி சூப்
75 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து பொடியாக
நறுக்கி 250 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இதனுடன் 50 கிராம்
காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதித்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள்,
இரண்டு டீஸ்பூன் கேழ்வரகு மாவைக் கலந்து இறக்கவும். விருப்பப்பட்டால்
ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்க்கலாம்.
மருத்துவப் பலன்கள்: உடலில் தேமல், சொறி சரியாகும்.
ரத்தசோகை விலகி, முகம் பொலிவு பெறும். குடல்புண், பித்தம்
அகலும். பொன்னிறம் கூடும். கண்ணுக்கு மிகவும் நல்லது.
துளசி சூப்
ஒரு கைப்பிடி துளசி அல்லது 10 கிராம் துளசிப் பொடியை
நீர் சேர்த்து, 50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து
மசிக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.
மருத்துவப் பலன்கள்: கபத்தைப் போக்கும். கல்லீரல்
வீக்கம், பல் வலி குறையும். மூச்சுப்பிடிப்பு, விஷக்காய்ச்சல், ஆஸ்துமா
சரியாக்கும்.
கொத்தமல்லி சூப்
ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன்
பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இதனுடன் பீன்ஸ்,
முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தூள்,
சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள்.
மருத்துவப் பலன்கள்: வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல்,
அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும். சளி, இருமல், உயர் ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
முருங்கைக்கீரை சூப்
75 கிராம் காய்கறிக் கலவையை வேகவைத்து
மசித்துக்கொள்ளவும். ஒரு கட்டு முருங்கை இலையை உதிர்த்து, கழுவி நீர்விட்டு
வேகவிடவும். இதில் மசித்த காய்கறிக் கலவையைப் போட்டு மிளகுத்தூள்,
சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது முளைதானியப்பாலைச் சேர்த்துச்
சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம்,
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நல்ல குணம்
தெரியும். நரம்புத் தளர்ச்சி, பெண்களுக்கு அதிக உதிரப்போக்கும் சரியாகும்.
எலும்பு வலுவடையும்.
Post a Comment