''கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படிக்கும் எனக்கு, தீவிரமான மனநல பாதிப்பு இருப்பதாக
அறிகிறேன். பிரச்னைகள் வரும்போது, அதற்கான தீர்வுகள் தெரிந்திருந்தும்,
தவறான முடிவுகளையே எடுக்கிறேன். ஆற அமர யோசிக்கும்போது தடுமாற்றத்தை உணர
முடிகிறது. ஆனால், மறுபடியும் தவறான முடிவுகளையே நாடும் என் சிந்தனையைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்காலத்தில் பெரிய இக்கட்டில் மாட்டிக்
கொள்வேனோ என்று அஞ்சியே... உங்களிடம் என் பிரச்னைகளை சொல்கிறேன். ஆலோசனைகள்
ப்ளீஸ்''
- அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத கடலூர் மாணவி
நவரத்தினா தேவகுமார், மனநல ஆலோசகர், சென்னை:
''எதிர்மறை
எண்ணங்கள் ஏற்படாத மனிதரே உலகில் இல்லை. அதற்காக எதிர்மறை எண்ணத்துடனேயே
வாழ்வது ஆரோக்கியமல்ல. பொதுவாக, அச்சம் மற்றும் படபடப்பு காரணமாக ஒரு சில
நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்துவிடுவோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை
உணரும்போது, 'நான் ரொம்ப அதிர்ஷ்டக்கட்டை. எனக்கு எப்பவுமே இப்படித்தான்
நடக்கும்' என்று தவறான நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வார்கள். பிறிதொரு
சந்தர்ப்பத்தில் நல்ல மனநிலையில் முடிவுகள் எடுத்து, அதனால் நல்ல பலன்கள்
கிடைக்கும்போதுதான் மனம் தெளிவடைவார்கள். ஆரம்ப நிலையிலேயே மனதைத் திடமாக
வைத்திருப்பதுதான் இதற்கான எளிய மருந்து.
உங்களைப் பொறுத்தவரை, பிரச்னை எதிர்பட்டாலே நீங்கள்
மிரளத் தேவையில்லை. அந்தப் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல்வதே,
தீர்வின் பாதிக் கிணற்றைத் தாண்டச் செய்யும். இதற்கு, உண்மையிலேயே நீங்கள்
எதிர்கொள்வது பிரச்னைதானா என்பதை நன்றாக யோசியுங்கள். அப்படியென்றால்,
அவற்றின் முக்கியத்துவம், அதற்கான தீர்வு, அதனால் ஏற்படப்போகும் பலன்
மற்றும் இந்த சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கப்போகும் மரியாதையை
எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, பின்பு நிதானமாக முடிவுகளை எடுங்கள்.
இப்படி பலவிதமாக யோசித்து அணுகினாலே, கிட்டத்தட்ட தீர்வை எட்டிவிடுவோம்.
முதலில் உங்களைப் பற்றிய சுயமதிப்பை அதிகமாக்கிக்
கொள்ளுங்கள். சுயமதிப்பில் தொய்வு கண்டவர்களுக்கு மிரட்சியும், எதிர்மறை
எண்ணங்களும் சுலபமாக எழும். தினமும் கண்ணாடி முன் நின்று 'நான்
தன்னம்பிக்கையானவள். நான் எடுக்கப்போகும் முடிவு என்னை மென்மேலும்
உயர்த்தும். அதனால் இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும்' என்று சொல்லிப்
பழகுங்கள். தவறே இல்லை. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து
விடுபடுவது, உங்களுடைய பலவீனங்களை உணர்ந்து அவற்றிலிருந்து வெளிவருவது,
சுயமதிப்பை உயர்த்திக்கொள்வது, பிரச்னைகளை சரியாக இனங்கண்டு அவற்றின்
சரியான தீர்விற்கு முனைவது என தெளிவான மாற்றத்துக்குத் தயாராகுங்கள்.
இந்த முயற்சிகளில் எல்லாம் நீங்கள் பலனடையாதது போல
தோன்றினால், அவசியம் மனநல ஆலோசகரை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவரிடம் பேசும்போது, உங்களது வளர்ப்பு
சூழ்நிலை, நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், என்ன காரணத்துக்காக
தடுமாற்றம் வருகிறது என எல்லாவற்றையும் கூச்சமின்றி தெளிவாகப் பகிர்ந்து
கொள்ளுங்கள். அவர், உங்களுக்குக் கொடுக்கும் மூன்று முதல் நான்கு
கவுன்சலிங் சிட்டிங்குகளில், உங்களுடைய சஞ்சலம் விலகி நம்பிக்கையும்,
தெளிவும் பிறக்கும்.
இனி நான் சொல்லப்போவது... பொதுவான பெற்றோர்களுக்கானது.
பொதுவாக எந்த ஒரு பிரச்னை வந்தாலும், அவற்றுக்கானத் தீர்வை
அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து எடுக்க பழக வேண்டும். 'ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது’ என்ற பழமொழிக்கேற்ப, தாய்மார் கள் அவர்களுடைய
குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். வளரிளம் பருவத்தினருக்கு
தங்களுடைய ஆரோக்கியமான குடும்பச் சூழலால் இத்தகைய பலன்கள் சாத்தியமாகின்றன.
உங்கள்
குழந்தைக்கு ஓர் இடர்பாடு ஏற்பட்டால், அதற்கான முடிவுகளையும்,
யோசனைகளையும் நீங்கள் சிந்திக்காமல் அவர்களைச் சிந்திக்கவிடுங்கள். அந்தப்
பிரச்னையை எப்படியெல்லாம் அணுகலாம் என்று யோசனை சொல்லுங்கள். அவர்கள்
எடுக்கும் முடிவு தவறாக போனால்... குற்றம்சொல்வது, கத்தி ஆர்ப்பாட்டம்
பண்ணுவது, குத்திக் காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். அது,
அவர்களுடைய எண்ணங்களைப் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்குப்
பதில், எதனால் அப்படி ஒரு தவறு ஏற்பட்டது என்பதை அவர்களுடன் இருந்து
அலசுங்கள். காரணத்தை அவர்களுக்குப் புரிய வைத்து, நீங்கள் பக்கபலமாக
மட்டுமே நில்லுங்கள்.
விளையாட்டில் கீழே விழும் குழந்தைக்கு மட்டுமே தெரியும்
அடிபட்ட வலியும், இனி அப்படி விழக் கூடாது என்பதும். அதனால் வளர்
இளம்பருவத்தில் உங்கள் பிள்ளைகள் இருந்தால்... அவர்களுடைய எதிர்காலம்
நன்றாக அமைவதற்கு பெற்றோர்களான நீங்கள் கொடுக்கும் பக்கபலமே அவர்களை
சிறந்தவர்களாக, தெளிவானவர்களாக வளரச் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள்.''
Post a Comment