உடலைத் தளர்த்தும் ஆசனங்கள்--உடற்பயிற்சி,
உடற்பயிற்சியை நீண்ட நாள் செய்யாமல்விட்டால், உடல் இறுகிவிடும். சில நேரம் தசைப் பிடிப்பு ஏற்படும். ரத்தமும் க...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_17.html
உடற்பயிற்சியை நீண்ட நாள் செய்யாமல்விட்டால், உடல்
இறுகிவிடும். சில நேரம் தசைப் பிடிப்பு ஏற்படும். ரத்தமும் காற்றும்
உடலுக்குள் இயல்பாகப் போய்வர சிரமம் இருக்கும். சுவாசம் குறைந்து சிறுசிறு
வேலைகள் செய்யும்போதே மூச்சுவாங்கும். எரிச்சல்படுபவராக இருந்தால், அது
மேலும் அதிகரிக்கும். இதற்கு உடலைத் தளர்த்தி, மூச்சில் சிறிது பயிற்சி
செய்தால் உடனடியாகப் பலன்கிடைக்கும்.
எனவே, பெண்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை
ஒதுக்கி, உடற்பயிற்சியில் உற்சாகமாக ஈடுபடலாம். கடந்த இதழில்
உத்தானாசனத்தில் முடித்தோம். தொடர்ந்து அந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோம்.
திரிகோணாசனத் தழுவல்
உத்தானாசனத்துக்குப் பிறகு, மூச்சுவாங்கினால் சிறிது
ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு இரு கால்களுக்கு இடையில் நன்றாக
இடைவெளிவிட்டு, வசதியாக நின்றுகொள்ளுங்கள். எப்போதும் 'நிலை’ மிகவும்
முக்கியம். நிலை சரியில்லை என்றால், ஆசனத்தை சரிவர செய்ய முடியாது.
மூச்சை உள்ளிழுத்தபடி, கைகளைப் பக்கவாட்டில் தோள் வரை
உயர்த்த வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி,
முன்பக்கமாக சற்று குனிய வேண்டும். பிறகு உடலைத் திருகி வலது கையை, இடது
பாதத்துக்கு வெளியே வைக்க வேண்டும். அதே நேரம் இடது கையை மடித்து வசதியாக,
தளர்வாக முதுகில் வைக்க வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பின், மூச்சை
உள்ளிழுத்தபடி முதலில் தலையைத் தரையை நோக்கித் திருப்பி, உடலை மேல்நோக்கிக்
கொண்டுவர வேண்டும். இப்போது நேராக நிற்பீர்கள், கைகள் தோள் அளவுக்கு
உயர்ந்து இருக்கும்.
இந்த நிலையில் இருந்து மூச்சை வெளியேவிட்டபடி, இடது
கையை வலது பாதத்துக்கு அருகில் வைக்க சற்று குனிந்து, உடலை வளைத்து திருப்ப
வேண்டும். இப்போது வலது கையை மடித்து, முதுகில்வைத்துக்கொள்ளவும். ஓரிரு
வினாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே தலையை முதலில் திருப்பி,
மேல் உடலை நேராகக் கொண்டுவரவும். இந்த நிலையிலிருந்து மூச்சை வெளியே
விட்டபடி கைகளை மட்டும் கீழே இறக்க வேண்டும். இது ஒரு முறையாகும். இதேபோல்
இடது வலது என மொத்தம் ஆறு முறை செய்ய வேண்டும்.
திரிகோணாசனம் செய்யும்போது, சிறு பிடிப்போ, வலியோ, நடுக்கமோ, மூச்சுவாங்கலோ இருந்தால், அதைச் சரிசெய்ய அடுத்த ஆசனம் இருக்கிறது.
பலன்கள்: மேல்
உடல், வயிறு, கைகள் நன்கு தளர்ச்சியடைகின்றன. இதனால், இந்தப் பகுதிகளில்
பிராண சக்தி நன்கு போய்வரும். உடல் வலி, பிடிப்பு குறையும், உடலைக் கனமாக
உணர்ந்தவர்கள், அந்த உணர்விலிருந்து விடுபடுவர். கழுத்து உட்பட முழு உடலுமே
ஆரோக்கியம் பெறத் தொடங்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.
நிம்மதி கூடும்.
சக்கரவாகாசனம்
கால் முட்டிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி
இருக்கட்டும். முட்டிபோட்டு, உடலை முன்புறமாகக் கொண்டுசென்று, கைகளை
நீட்டி, தலையைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். வயிறு அமுங்கி இருக்கும்.
இது தயார் நிலை.
இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மேல்
நோக்கி முன்னுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். முதுகு லேசாக வளைந்திருக்கும்,
பார்வை சற்று மேல்நோக்கி இருக்கும். கைகள் தோள்பட்டை அளவில் நேராக ஊன்றி
இருக்கும். வசதியான உணர்வு ஏற்படும். அந்த நிலையில் இருந்து, ஓரிரு
விநாடிகளுக்குப் பின், தலையை முதலில் தாழ்த்தி மூச்சை வெளியேவிட்டபடி வயிறு
அமுங்கிய பழைய நிலைக்கு செல்லவேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பின், முன்
பக்கமாக மூச்சை உள்ளிழுத்து வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்த பின்பு,
ஓய்வெடுக்கலாம்.
பலன்கள்:
முதுகெலும்பு, முதுகுப் பகுதி பலம் பெறும். சுவாசம் அதிகரிக்கும்.
வயிற்றில் காற்று முழுவதுமாக வெளியேறுவதால், அந்தப் பகுதி மேலும்
ஆரோக்கியம் அடைகிறது. கீழ் முதுகு, கழுத்து பகுதி நன்கு வேலை செய்யும்.
ஓய்வு
தரையில் முதுகெலும்பு நன்குபடும்படி கால்களை நீட்டி
கைகளை உடலுக்கு சற்று வெளியே வைத்துக்கொள்ளவும். இரு கால்களுக்கு இடையிலும்
சற்று இடைவெளி இருக்கட்டும். கண்களை மூடி, உடலையும் மூச்சையும் மேலும்
அமைதிப்படுத்தலாம். ஓரிரு நிமிடங்கள் ஓய்வுக்காக செலவழிக்கலாம்.
Post a Comment