ஒரு சட்ட விழிப்பு உணர்வு: பெண்கள் சொத்து யாருக்கு? ---- உங்களுக்கு உதவும் சட்டங்கள்,
பெண்களுக்கான சொத்துரிமைகள் குறித்து பலருக்கும் பல கேள்விகள் இருப்பதால் தொடர்ந்து அதுபற்றி கட்டுரை வெளியிட்டு வருகிறோம். ஆனால், எத்தனைமு...

https://pettagum.blogspot.com/2013/05/blog-post_8615.html
பெண்களுக்கான சொத்துரிமைகள் குறித்து
பலருக்கும் பல கேள்விகள் இருப்பதால் தொடர்ந்து அதுபற்றி
கட்டுரை வெளியிட்டு வருகிறோம். ஆனால், எத்தனைமுறை எழுதினாலும் வாசகர்கள்
புதிது புதிதாக கேள்விகளைக் கேட்டபடி இருப்பதால், பெண்களுக்கான சொத்துரிமை
மற்றும் பெண்கள் சொத்து யாருக்குச் சேரும் என்பது பற்றி சென்னை
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச்
சொன்னார் அவர்.
''பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு
உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக
தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது'' என்று ஆரம்பித்தார் அவர்.
''முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து
பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை
இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே
இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக (Coparcener) ஆண்கள் மட்டுமே இருக்க
முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக்
குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல,
மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.
இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில்
பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக்
குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால்,
முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச்
சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும்
பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப்
பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு
வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு
அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது.
ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும்
வழங்கப்படவில்லை.
2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக
(சிஷீஜீணீக்ஷீநீமீஸீமீக்ஷீ) கருதப்படுவார் என்றது. அதன்
விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து
என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும்
உள்ளது.
2005 முதல் இந்தச் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
தற்போது சொத்துகளில் ஆண், பெண் பேதம் கிடையாது. காலப்போக்கில் இப்படி பல
மாற்றம் கண்டுவந்திருக்கிறது பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம்.
அடுத்து, நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம்,
ஆண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமையும், பெண்கள் பெயரில்
உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமைகளும் என்ன என்பதைத்தான்.
ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர் களுக்கு எப்படி
கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது,
மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும்,
பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண்
பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக்
குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே
ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக்
கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி
சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து
இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு
14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய
தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர்
மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர
முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு
14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது
பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என
எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே
கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு
எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.
ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில்
சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி
தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே
அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும்
அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.
ஆனால், இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது,
ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை
வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே
செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது
கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச்
சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.
ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க
முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு
15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள்
வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச்
சொத்து போய் சேரும்.
கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும்
மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால்
அவருக்கு வாரிசு யார்? என்று நீங்கள் கேட்கலாம். விவாகரத்து
வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும்.
ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து
கணவனுக்குச் சென்றடையும்.
திருமணம் ஆகாமல் ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு
யார் வாரிசு என்று கேட்கிறீர்களா? திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது
பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின்
வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தை அவர் எவ்வாறு அனுபவிக்க
முடியும்? ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான
உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க
முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித்
தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம்
செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஓர் இந்துப் பெண் மதம் மாறுவதால், குடும்பச் சொத்தில்
உள்ள உரிமைகளோ, பங்கு கேட்கும் உரிமைகளோ பாதிக்கப்படுமா? என்று கேட்கலாம்.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி
மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின்
அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது.
இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி
இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை.
இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.
இந்துப் பெண்களுக்கான இந்த சொத்துரிமை சட்டங்கள்
முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்குப் பொருந்துமா? என்பதும்
பலருக்கு இருக்கும் கேள்வி.
பரம்பரைச் சொத்து, தனிக் குடும்பச் சொத்து போன்ற
தத்துவங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. ஆகவே,
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஆணாக இருந்தாலும், பெண்ணாக
இருந்தாலும் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அவரது தனிப்பட்ட சொத்தாகவே
இருக்கும்'' என்று விளக்கம் தந்தார் வழக்கறிஞர் ரமேஷ்.
பெண்களுக்கான சொத்துரிமையும், பெண்கள் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டீர்களா?
Post a Comment