ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை!

“ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது ஒரு தேர் போன்றது. தேர் ஓடுவதற்கு எப்படி நான்கு சக்கரங்கள் தேவையோ, அதேபோல ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கும் நான...

“ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது ஒரு தேர் போன்றது. தேர் ஓடுவதற்கு எப்படி நான்கு சக்கரங்கள் தேவையோ, அதேபோல ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கும் நான்கு முக்கியமான அம்சங்கள் தேவை.
முதல் சக்கரம், ‘பீஜாமிர்தம்’ எனப்படும் விதை நேர்த்திக்கான கரைசல். இரண்டாவது சக்கரம், ‘ஜீவாமிர்தம்’ எனப்படும் முக்கிய இடுபொருள் கரைசல். மூன்றாவது சக்கரம், ‘அச்சாதனா’ எனப்படும் மூடாக்கு. நான்காவது சக்கரம், ‘வாபாஸா’ எனப்படும் நிலத்துக்குள்ளான காற்றோட்டம். ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் தேர் சாய்ந்து விடுவதுபோல, இந்த நான்கு அம்சங்களில் ஏதாவதொன்று இல்லாவிட்டாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் முழுப்பயனை அடைய முடியாது” என்று அடிக்கடி சொல்வார், ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகன்’ சுபாஷ் பாலேக்கர்.

இந்த நான்கு அம்சங்களில் இரண்டாவது அம்சமான ஜீவாமிர்தம்தான் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளுக்கான முக்கிய இடுபொருள். பல ஆண்டுகளாக ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்தி வந்த நிலத்தைக்கூடத் தொடர்ந்து ஜீவாமிர்தத்தைப் பாய்ச்சி விரைவாக இயற்கை முறைக்கு மாற்றிவிட முடியும். வாய்க்கால் பாசனம் செய்யும் விவசாயிகள், ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்துவிடுவது எளிதான விஷயம். அதே நேரத்தில் சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனம் செய்யும் விவசாயிகள் ஜீவாமிர்தத்தை வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும். வடிகட்டுவதற்குப் பல முறைகள் இருந்தாலும்... வட இந்திய விவசாயிகள் பயன்படுத்தும் ஓர் எளிய முறையைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தி நல்ல பலன் பார்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி முனைவர் கே.சம்பத்குமார்.
முனைவர் பட்ட ஆய்வை முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் சம்பத்குமார், பொள்ளாச்சி வட்டம், ஜக்கார்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். ஒரு விடுமுறை நாளில் தனது மனைவி செல்வநாயகியுடன் பண்ணை வேலைகளைச் செய்து கொண்டிருந்த சம்பத்குமாரைச் சந்தித்தோம்.

“எனக்குப் பூர்வீகமே இந்தக் கிராமம்தான். சொந்தமா 10 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. ‘பசுமை விகடன்’ முதல் இதழ்ல இருந்து தொடர்ந்து படிச்சுட்டுருக்கேன். இதுவரை வெளிவந்த எல்லாப் புத்தகமுமே என்கிட்ட பத்திரமா இருக்கு. பசுமை விகடன்ல இடம்பெறுகிற விவசாயிகள்கிட்டப் பேசி, எனக்குத் தேவைப்படுற தொழில்நுட்பங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். இந்தப் பத்து ஏக்கர் நெலத்துலயும் முழுசா ஜீரோபட்ஜெட் விவசாயம் நடக்குறதுக்கு வழிகாட்டியா இருக்குறது, பசுமை விகடன்தான். என் மனைவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல துணைப் பேராசிரியையா இருக்குறாங்க. அவங்களும் நிறைய ஆலோசனை சொல்வாங்க. இயற்கை விவசாயத்துல சில விஷயங்களைக் கடைப்பிடிச்சா அதுல கண்டிப்பா நஷ்டம் வர வாய்ப்பேயில்லை. அதனாலதான் பேராசிரியர் வேலை செஞ்சுக்கிட்டே வெற்றிகரமா விவசாயத்தையும் செய்ய முடியுது. என்னோட வெற்றிக்குக் காரணம், நாட்டுமாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஊடுபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டல் எல்லாத்தையும் கடைப்பிடிக்கிறதுதான்” என்ற சம்பத்குமார், தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே ஜீவாமிர்தப் பயன்பாடு குறித்துப் பேச ஆரம்பித்தார்.
“என்கிட்ட 6 கன்னுக்குட்டிகளோடு சேர்த்து மொத்தம் 20 காங்கேயம் பசுக்கள் இருக்கு. இந்த நாட்டுப்பசுக்கள் மூலமாகக் கிடைக்கிற சாணம், மூத்திரம் ரெண்டையும் வெச்சு ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். அதைத்தான் 10 ஏக்கர் நிலத்துல இருக்கும் 700 தென்னை மரங்கள், ஊடுபயிரா இருக்குற பப்பாளி, வாழை, பழமரங்கள்னு எல்லாத்துக்கும் இடுபொருளாப் பயன்படுத்துறேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனத்துலதான் ஜீவாமிர்தத்தைக் கலந்துக்கிட்டுருந்தேன். அப்புறம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்னு முடிவு செஞ்சு சொட்டுநீர்ப் பாசனத்தை அமைச்சேன். ஆனா, சொட்டுநீர்க் குழாய்கள் மூலமா ஜீவாமிர்தத்தைக் கலந்து விடுறப்போ குழாய்கள்ல அடைப்பு ஏற்பட்டதோடு அடிக்கடி குழாய்களைக் கழட்டிச் சுத்தப்படுத்த வேண்டியிருந்துச்சு.

அதுக்கான தீர்வைத் தேடிக்கிட்டுருந்தப்போ, ஒரு நண்பர் மூலமா... மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நிறைய விவசாயிகள் தொட்டி அமைச்சு ஜீவாமிர்தத்தை வடிகட்டிப் பயன்படுத்துறாங்கனு கேள்விப்பட்டேன். உடனே புனே போய், சில விவசாயிகளைப் பார்த்து அவங்க பயன்படுத்துற தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டு வந்து, அந்தத் தொழில்நுட்பங்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திப் பயன்படுத்த ஆரம்பிச்சேன்” என்ற சம்பத்குமார் ஜீவாமிர்தம் வடிகட்டும் தொட்டியைக் காட்டி விளக்க ஆரம்பித்தார்.

“இங்க ஜீவாமிர்தம் கலக்கி விடுறது எல்லாம் எந்திரத்தோட உதவியாலதான். கையால் கலக்க வேண்டிய அவசியமில்லை. அதுக்காக ஒரு மோட்டாரை அமைச்சுருக்கேன். நிலத்தோட மேடான பகுதியில மாட்டுத் தொழுவம் இருக்குறதால பக்கத்துலேயே ஜீவாமிர்தத்தொட்டியை அமைச்சேன். இதனால, புவி ஈர்ப்பு விசையிலேயே ஜீவாமிர்தம் ஓடிடும். மொத்தம் 3 தொட்டிகள் அமைச்சுருக்கேன். முதல் தொட்டி 3 அடி விட்டம், 3 அடி உயரம் கொண்டது.

தொழுவத்துல இருந்து சாணம், மூத்திரம் ரெண்டும் இந்தத் தொட்டிக்கு வந்து சேரும். இந்தத்தொட்டி 50 லிட்டர் மூத்திரம், 50 கிலோ சாணம் பிடிக்கிற அளவு கொள்ளளவு கொண்டது. சாணம், மூத்திரம் தொட்டியில சேர்ந்ததும், 5 கிலோ நாட்டுச்சர்க்கரை, 5 கிலோ மாவு, நிலத்து மண் மூணையும் சேர்த்து மோட்டார் சுவிட்சைப் போட்டா மோட்டார் இயங்கி மத்து மாதிரியான கருவியைச் சுத்த வைக்கும். அதுமூலமா எல்லாம் நல்லாக் கலந்துடும்.
முதல் தொட்டியில ஜீவாமிர்தம் கரைசல் தயாரானதும் இரண்டாவது தொட்டிக்கு அந்தக் கரைசல் வரும். இந்தத்தொட்டி 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி. இங்கு ஜீவாமிர்தம் மூன்று நாள்கள் வைத்து நொதிக்கவிட வேண்டும். காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடியைக் கொண்டு கலக்கிவிட வேண்டும். இங்கு ஜீவாமிர்தக் கரைசல் ஆட்டோமேட்டிக்காக வடிகட்டப்பட்டடு அதற்கு கீழே அமைந்துள்ள சிமென்ட் தொட்டியில் சேகரிக்கப்படும். அங்கிருந்து சொட்டுநீர்க் குழாய்களுக்குப் போகும். வடிகட்டும்போது கிடைக்கிற கசடுகள் மூன்றாவது தொட்டியில சேகரமாகும். அந்தத்தொட்டியில் எருக்கன் இலை, வேப்பிலை, நொச்சியிலை, சீத்தா இலை, ஊமத்தன் இலை மாதிரியான கசப்புதன்மை கொண்ட இலைகளை ஊறவெச்சுப் பூச்சிவிரட்டியாப் பயன்படுத்துறேன்” என்ற சம்பத்குமார் நிறைவாக,

“இந்த அமைப்பை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாச்சு. இப்போ தடங்கல் இல்லாம நிலம் முழுக்க ஜீவாமிர்தம் பாய்ஞ்சு செழிப்பான மகசூல் கிடைச்சுட்டுருக்கு. சாணம், மூத்திரம்னு பசுக்கள்கிட்ட கிடைக்கிற பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுல கணிசமான வருமானம் கிடைச்சுட்டுருக்கு. நம்ம நிலத்துல என்னென்ன சாத்தியமோ அதையெல்லாம் செயல்படுத்தி, வருமானத்தை உண்டாக்கிட்டா, விவசாயத்துல கண்டிப்பா லாபம்தான்” என்று சொல்லி விடை கொடுத்தார்.  

தொடர்புக்கு

முனைவர் கே.சம்பத்குமார், செல்போன்: 86108 66479

- ஜி.பழனிச்சாமி,  படங்கள்: வ.இர.தயாளன்

பசு விடுதி

பால் வற்றிய கறவை மாடுகளைப் பராமரிப்பதற்குப் பசு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார், சம்பத்குமார். அதுகுறித்துப் பேசியவர், “நிறைய பேர் நாட்டு மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுறாங்க. பசுக்கள் பால் வத்தினவுடன் அடுத்துச் சினைபிடிக்கிற காலம் வரைக்கும் வெச்சுப் பராமரிக்க முடியாதவங்களுக்காக இந்த விடுதியை நடத்துறோம். பால் வத்துன மாடுகளை எங்க விடுதியில விட்டா, அதுக்குத் தீவனம் கொடுத்துப் பராமரிச்சுச் சினைபிடிக்க வெப்போம். கன்னு ஈனுற சமயத்துல அந்தப் பசுவை உரிமையாளர்கிட்ட ஒப்படைச்சுடுவோம். அதுக்கு ஒரு மாட்டுக்கு மாசத்துக்கு 1,200 ரூபாய் கட்டணம் வாங்குறோம். மாடுகள்ல இருந்து கிடைக்கிற சாணம், மூத்திரம் எங்களுக்குக் கூடுதல் லாபம். இப்போ இது மாதிரி ஏழு பசுக்கள் எங்க விடுதியில இருக்கு” என்றார்.

ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் லாபம்!

தனது பண்ணையின் வருமானம் குறித்துப் பேசிய சம்பத்குமார், “இங்க 26 தேனீப்பெட்டிகள் வெச்சுருக்கேன். அது மூலமா மகரந்தச்சேர்க்கை அதிகரிச்சு மகசூல் கூடுது. மாசம் 10 கிலோ தேன் கிடைக்குது. தேன் மூலமா மாசம் 6,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துக்கு 72,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

இங்க நாட்டுக்கோழிகள்ல 36 கோழிகளும் 10 சேவல்களும் இருக்கு. கோழிகளுக்குப் பெருசா தீவனச்செலவு கிடையாது. இங்க மேய்ச்சல்லயே அதுகளுக்குப் போதுமான தீவனம் கிடைச்சுடுது. வருஷத்துக்கு 4,200 முட்டைகள் விற்பனை மூலமா 63,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. சேவல் விற்பனை மூலமா வருஷத்துக்கு 24,000 ரூபாய் கிடைக்குது.

தேங்காய், நெத்துக்காய் விற்பனை மூலமா வருஷத்துக்கு 10,00,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுடுது. இடுபொருள் இங்கேயே கிடைக்கிறதால அதுக்குச் செலவு கிடையாது. அப்படியே லாபம்தான்.
பசுக்கள்ல இருந்து கிடைக்கிற பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது, இடுபொருள்கள் விற்பனை எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 2,00,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. ஆக, மொத்தம் வருஷத்துக்கு 13,59,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல மொத்த பண்ணைப் பராமரிப்புச்செலவும் போக வருஷத்துக்கு 10,00,000 ரூபாய்க்கு மேல லாபம் நிக்கும்” என்றார்.

உரமாகும் உயிர் மூடாக்கு

“ஜீவாமிர்தத்துக்கு அடுத்து பாலேக்கர் சொல்ற இன்னொரு முக்கியமான விஷயம், மூடாக்கு. அதையும் இங்க சரியாகக் கடைப்பிடிக்கிறோம். தென்னந்தோப்பு முழுசும் ஏகத்துக்குத் தட்டைப்பயறை விதைச்சு விட்டுட்டா, அது வளர்ந்து உயிர்மூடாக்கா இருக்கும். இதனால, வேற களைகள் வளராது. தட்டப்பயறு செடிகள்ல இருந்து விழுற இலைகள் மட்கி உரமாகிடும். காத்துல இருந்து நைட்ரஜனை இந்தச் செடிகள் கிரகிச்சு மண்ணுல நிலை நிறுத்தும். தட்டப்பயறு அறுவடை மூலமா ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும். தட்டப்பயறு கொடிகள் மாடுகளுக்குத் தீவனமாகிடும்” என்கிறார், சம்பத்குமார்.

கழிவுகளை மதிப்புக்கூட்டுதல்

“என்னோட காங்கேயம் மாடுகள், பசு விடுதியில் இருக்கிற மாடுகள் மூலமாகக் கிடைக்கிற சாணம், மூத்திரம், பால் எல்லாத்தையும் பயன்படுத்திப் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், நீம் அஸ்திரா, பத்திலை க‌ரைசல், சோப்பு, விபூதினு தயார் செய்றோம். இதில்லாம மீன் அமினோ அமிலம், தேமோர்க்கரைசல் மாதிரியான இடுபொருள்களையும் தயாரிச்சு விற்பனை செய்றோம். நாட்டுப்பசுக்கள் இல்லாத விவசாயிகள், எங்ககிட்ட வாங்கிட்டுப் போய்ப் பயன்படுத்துறாங்க. வீட்டுத்தோட்டம் அமைச்சுருக்குறவங்களும் இடுபொருள்களை வாங்கிட்டுப் போறாங்க. எங்க தென்னந்தோப்பை இயற்கை விவசாயத்துல பராமரிக்கிறதால, இயற்கை விவசாயிகள் எங்ககிட்ட நெத்துக்காயை வாங்கிட்டுப் போய்க் கன்னு உற்பத்தி செஞ்சுக்குறாங்க” என்கிறார், சம்பத்குமார்.


Related

வேலை வாய்ப்புகள் 8128565379972743939

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item