எதிர்ப்பு சக்தியைக் கூட்டலாம்... கொரோனாவை விரட்டலாம்...! 30 வகை மருந்து உணவுகள்!
நாட்டுப் பொன்னாங்கண்ணிக்கீரைக் கூட்டு தேவை: நாட்டுப் பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 5, சீரகம் -...

நாட்டுப் பொன்னாங்கண்ணிக்கீரைக் கூட்டு
தேவை: நாட்டுப் பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 5, சீரகம் - கால் டீஸ்பூன், பாசிப்பருப்பு - 150 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். கீரையைச் சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். வேகவைத்த பருப்பில் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் சீரகத்தைச் சேர்க்கவும். நன்றாக வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.
சிறப்பு: இது உடல் சூட்டை தணிப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வேப்பம்பூ ரசம்
தேவை: வேப்பம்பூ - ஒரு கையளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பற்கள், சின்ன வெங்காயம் - 3, தக்காளி - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிப்பதற்கு: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: மிளகு மற்றும் சீரகத்தை இடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து காய்ந்த மிளகாய், வேப்பம்பூ, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு இடித்துவைத்த மிளகு - சீரகத்தைச் சேர்க்கவும். இத்துடன் நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் நான்கு டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கிமூடவும். பொங்கி வரும்போது கொதிக்க விடாமல், அரை டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.
சிறப்பு: இது குடலை சுத்தம் செய்யும். நோய்த் தொற்று வராமல் தடுக்கும்.
பிரண்டைத் துவையல்
தேவை: தோல் சீவி நறுக்கிய பிஞ்சு பிரண்டை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, பூண்டு - 10 பற்கள், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையை நான்கைந்து முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு, புளி, பிரண்டை ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். அதை ஆறவைத்து அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரைத்த கலவையை இதில் நன்றாக வதக்கி இறக்கவும்.
சிறப்பு: இது எலும்பு மற்றும் நரம்புகளை வலுவாக்கி உடலின் பலத்தை அதிகரித்து நோய் தொற்றைத் தடுக்கும்.
கோவைக்கீரைப் பொரியல்
தேவை: கோவைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயை வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கி, அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். கீரை வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.
சிறப்பு: கொரோனாவைத் தடுப்பதற்கு, கீரை உணவுகள் மிகவும் நல்லது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றைத் தடுக்கும்.
மணத்தக்காளிக்கீரை சூப்
தேவை: மணத்தக்காளிக்கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன், சோம்பு - சிறிதளவு, பிரிஞ்சி இலை - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, பாசிப்பருப்பு - 25 கிராம், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மணத்தக்காளிக்கீரை ஆகியவற்றை வதக்கவும். அத்துடன் பருப்பைச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர்விட்டு சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். கீரை வெந்ததும் இறக்கவும்.
சிறப்பு: நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்குக் கீரை உணவுகள் அதிகம் உட்கொள்வது நல்லது. அதிலும் மணத்தக்காளிக்கீரை மிகவும் உகந்தது
Post a Comment