பல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்! நீங்கள் கேட்டவை
‘‘பல்லாண்டுகள் பலன்தரும் தீவனப் பயிர்கள் பற்றிச் சொல்லுங்கள்?’’ ஆர்.ராதிகா, புதுச்சேரி. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை...

ஆர்.ராதிகா, புதுச்சேரி.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தீவனப் பயிர் துறையின் பேராசிரியர் பதில் சொல்கிறார்.
‘‘பல ஆண்டுகளுக்குப் பலன் தரும் தீவனப் பயிர் ரகங்களைத் தீவனப் பயிர் துறை வெளியிட்டுள்ளது. கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்தத் தீவனப் பயிர்கள் வரப்பிரசாதமாக உள்ளன என்றால், அது மிகையல்ல. இந்தத் தீவனங்களைச் சாகுபடி செய்து, கால்நடை வளர்ப்பில் வெற்றிபெற்ற விவசாயிகள் தமிழகம் முழுவதும் உள்ளனர்.
தீவனப்பயிர் துறையிலிருந்து வெளியிடப்பட்ட ரகங்களில் அதிக சுவையுள்ள, உயர் விளைச்சலைத் தரவல்ல தீவனப்பயிர் ரகமான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ (சி.என்)-4 2008-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகத்தின் உன்னதமான பண்புகளால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வரவேற்பைப் பெற்று அனைத்து உழவர்களாலும் பயிரிடப்பட்டு வருகிறது.
கினியாப்புல், கோ (ஜிஜி)-3 இந்த ரகம் நிழலைத் தாங்கி வளரக்கூடியதால் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிட ஏற்றது. மென்மையான தண்டுகளை உடையது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டில் 320 டன் விளைச்சலைத் தரவல்லது. ஹெக்டேருக்கு ஐந்து லட்சம் வேர்க்கரணைகளை உற்பத்தி செய்யமுடியும்.
வேலிமசால், ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது. அதிக விளைச்சலையும், வறட்சி யையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது. ஹெக்டேருக்கு ஓர் ஆண்டுக்கு 125 டன் பசுந்தீவன விளைச்சலையும், 250 கிலோ விதை விளைச்சலையும் தரும்.
தட்டைப்பயறு, கோ (எப்.சி.)-8, இந்த ரகத்தை விதைத்த 60 முதல் 70 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும். ஹெக்டேருக்குப் பசுந்தீவன விளைச்சலாக 30 டன்னும் 625 கிலோ விதை விளைச்சலையும் கொடுக்கும்.
முயல்மசால், ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது. பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரிச் சாகுபடிக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. ஹெக்டேருக்கு 30 முதல் 35 டன்கள் பசுந்தீவன விளைச்சலையும், 50 கிலோ விதை விளைச்சலையும் தரும். தீவனப் பயிர்கள் குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
’’தொடர்புக்கு, தீவனப்பயிர் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி: 0422 6611228.
Post a Comment