வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்!!
வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள் குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளை ...

வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்
குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளை நிறப் பொருள் படிந்திருக்கும். அதைப் போக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகிவிடும்.
குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அவர்களுக்கு ஒரு வயது ஆகும்வரை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார் அதிகம். அப்போது, வீட்டிலிருக்கும் பாட்டிகள் அல்லது பெரியோர்தான் இதைக் கண்டறிந்து குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தாயின் பரிதவிப்புக்கு ஆறுதல் அளிப்பார்கள். அவ்வாறு பாட்டிகள் சொல்லும் வைத்தியங்கள் என்னென்ன என்பதுகுறித்து பார்ப்போம்.
* வயிற்றுவலியால் துடிக்கும் ஐந்துமாதக் குழந்தையின் வயிற்றுப்பகுதியில், கடுக்காயை சந்தனம்போல அரைத்துப் பூசினால் வலி குறையும்.
* சில குழந்தைகளின் நாக்கில் மாவுபோன்று வெள்ளைநிறப் பொருள் படிந்திருக்கும். அதைப் போக்க, மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி அதன் விழுதை குழந்தையின் நாக்கில் தடவினால் சரியாகிவிடும்.
* ஆறு மாத குழந்தைகளுக்கு பத்து நாள்களுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்கக் கொடுத்தால் குழந்தையின் வயிற்றில் வாய்வு எதுவும் சேராது.
* குழந்தைகளின் உடலில் சொறி, சிரங்கு மற்றும் வேறு எந்தவித சருமப் பிரச்னைகளும் வராமலிருக்க எளிய வழி இருக்கிறது. அதாவது, சுத்தமான தேங்காய் எண்ணெய்யை காயவைத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் விட்டு அது கொதித்து அடங்கியதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரிமஞ்சள் பொடியைப் போட்டு இறக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை இந்த எண்ணெய்யை தேய்த்து பாசிப்பயறு மாவு தேய்த்து குளிக்க வைத்து வந்தால் சருமப்பிரச்னைகள் நீங்கும்.
* மார்கழிப் பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். எனவே சளித்தொல்லையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சற்று வெதுவெதுப்பான உணவுகளைக் கொடுப்பதே மிகவும் நல்லது. அவர்களுக்குக் கொடுக்கும் உணவில் சிறிது மிளகு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வது, எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். அதிகமாக இனிப்புப் பொருள்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக பால் சேர்ந்த உணவுகளைக் கொடுக்கக் கூடாது.
* குழந்தைகளுக்கு வயிற்றுப்பொருமல் ஏற்பட்டால், ஓமத்தை இளம்வறுப்பாக வறுத்துப் பொடித்து ஒரு சிட்டிகை அளவு வெந்நீரில் கலந்து தரவும்.
* குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்ணுக்கு, மாசிக்காயைப் பொடித்து தேனில் கலந்து தரலாம். தேங்காய்ப்பால் கொடுத்தாலும் வாய்ப்புண் ஆறும். பருப்பு சாதத்துடன் மணத்தக்காளிக்கீரை கலந்து சாப்பிடக் கொடுத்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
* குழந்தைகளுக்கு வரும் வாந்தியை நிறுத்த எளிய மருந்து உள்ளது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அக்கரகாரம், திப்பிலி, சீரகம் சம எடை எடுத்து சிறிது தேன் விட்டு பொன்வறுவலாக வறுக்க வேண்டும். அதில் நீர் விட்டுக்காய்ச்சிய குடிநீரில் 15 முதல் 30 மில்லி வரை கொடுத்தால் வாந்தி நிற்கும். அதிமதுரத்தைப் பொடியாக்கி பாலில் போட்டு அது நன்றாக ஊறியதும் அதை வடிகட்டிக் கொடுத்தாலும் வாந்தி நிற்கும்.
* குழந்தைகளின் செரிமான சக்தி மிக எளிதாகத் தூண்டலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை இளவறுப்பாக வறுக்க வேண்டும். அதனுடன் சிறிது பொரித்த பெருங்காயத்தைச் சேர்த்துப் பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து நெய்யுடன் கலந்து முதலில் சாப்பிட்டும் சாதத்துடன் சேர்த்துக் கொடுக்க நல்ல செரிமானம் உண்டாகும்.
* குழந்தைகளின் செரியாக் கழிச்சலுக்கு ஓமக் குடிநீர் நல்ல மருந்து. அதாவது ஓமம், கோஷ்டம், கோரைக்கிழங்கு, சுட்ட வசம்பு சமஅளவு எடுத்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து, வயதுக்கு தக்கவாறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் கழிச்சல் நிற்கும்.
* குழந்தைகளுக்கு வரும் குடல் கிருமிக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், சுக்கு, மிளகு, கறிவேப்பிலை, வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு வாரம் ஒருமுறை தரலாம். வாய்விடங்கத்தைச் சூரணமாகச் செய்து ஒன்று முதல் இரண்டு கிராம்வரை குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப தரலாம்.
* குழந்தைகளின் நெஞ்சுச்சளி மற்றும் கோழைக்கட்டைப் போக்க, பிரண்டைத் துண்டின் கணுவை நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி பிழிந்த ரசத்தை வயதுக்கு ஏற்ப கொடுக்கலாம். ஆடாதோடை இலையை குடிநீரிட்டு தேன் சேர்த்து 30 மில்லி அளவு இரண்டுவேளை தரலாம்.
* குழந்தைகளின் மூக்கு நீர் பாய்தல், தும்மல் மற்றும் தொண்டைக் கட்டைப் போக்க தும்பைப்பூ நான்கு கிராம், மிளகு இரண்டு கிராம் சேர்த்து தேன் விட்டு அரைத்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
சித்த மருந்துகளான உரை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரையை இளைத்தும் கொடுக்கலாம். ஓமத்தைக் கசக்கி அதனுடன் சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து துணியில் கட்டி அடிக்கடி மோந்து வந்தாலும் தும்மல், தொண்டைக்கட்டு குணமாகும்.
குழந்தைகளின் உடலில் ஏற்படும் இந்த உபாதைகளுக்கு எந்தவித சந்தேகமுமின்றி கொடுக்கலாம். ஆனால், தொடர்ந்து இரண்டு நாள்களுக்குமேல் ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகே உள்ள சித்த மருத்துவர்களை அல்லது உங்களின் குடும்ப மருத்துவர்களை ஆலோசித்து மருந்துகள் கொடுப்பது சிறந்தது.
Post a Comment