அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ!
அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ! Dr.வி.விக்ரம்குமார்.,MD(S) அஞ்சறைப் பெட்டி டாக்டர் வி.விக்ரம்குமார் ந றுமணமூட்டி...
அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ!
நறுமணமூட்டிகள்... நீளம், உருளை, தட்டை போன்ற வடிவங்களில் இருந்தாலும், நட்சத்திர வடிவத்தில் வித்தியாசமாகக் காட்சியளிப்பது அன்னாசிப்பூ. எனவே, இது அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் என்று சொல்லப்படுகிறது. ருசிக்கும்போது லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவைக் கலவையைக் கொடுக்கக்கூடியது இது. இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவைகளை நாவில் ஆங்காங்கே படரவிடும் தன்மை படைத்தது.
அன்னாசிப்பூவின் சுவையை அதிகமாக உணர, காஷ்மீர் உணவு ரகங்களின் மீது காதல் கொள்ளலாம். அன்னாசிப்பூவுடன், பல்வேறு நறுமணமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் தேநீர், தாய்லாந்து வீதிகளை உற்சாகமடைய வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பானங்களில் அன்னாசிப்பூவை இப்போது அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், வாதநோய்களுக்கும் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.
சமீபகாலமாகப் பரபரப்பாகப் பேசப்படும் பன்றிக்காய்ச்சலுக்கு `டாமிஃப்ளூ’ மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையைத் தயாரிக்க, `ஷிகிமிக் அமிலம்’ எனும் இயற்கை மூலக்கூறு முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது. மருத்துவக் குணம் நிறைந்த அந்த அமிலம் அன்னாசிப்பூவில் அளவில்லாமல் கிடைக்கிறது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட ஆண்டில் நோய்த் தொற்று அதிகமாக இருந்தபோது, அன்னாசிப் பூவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாக மருத்துவ வரலாறு குறிப்பிடுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கி, பல்வேறு காய்ச்சல் வகைகளைத் தடுக்கும் திறன் படைத்த அன்னாசிப்பூவை, காய்ச்சல் பரவிவரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது. `அனித்தோல்’ என்னும் பொருளும் அன்னாசிப்பூவின் மருத்துவ மகத்துவத்துக்குக் காரணமாகிறது.
இதன் தாயகம் சீனா. அன்னாசிப்பூவுடன் மேலும் நான்கு நறுமணமூட்டிகளைச் சேர்த்துப் பொடித்து செய்யப்படும் `ஐந்து நறுமணமூட்டிகள் மசாலா’ சீனாவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்புகிறது.
அன்னாசிப்பூ, மிளகு, ஏலம் போன்றவற்றைப் பொடித்து இறைச்சித் துண்டுகளின்மீது சூடு பறக்கத் தேய்த்துச் சமைக்கும் நுணுக்கத்தை அறிந்தவர்கள், தங்கள் சமையலுக்கு மற்றவர்களைச் சுண்டி இழுக்கும் தன்மையுடையவர்கள். நீண்டநேரம் சமைக்கப்படும் உணவுகளுக்குத் துணையாக அன்னாசிப்பூவைச் சேர்த்துக் கொள்ளுங்கள். எங்கும் உணராத ஒரு வாசனையை உணவுகளுக்குப் பரிசளிக்க, சின்ன வெங்காயத்துடன் அன்னாசிப்பூவைச் சேர்த்து வதக்கி சமையலில் சேர்க்கலாம். மிளகு, சீரகத்தைப் போல முழு அன்னாசிப்பூவையும் அப்படியே கடித்து சாப்பிடக் கூடாது. சமையலில் உறவாடவைத்து, அதன் சாரத்தை உணர்வதே சிறப்பு. பொடித்துப் பயன்படுத்தினால், குறைந்த அளவே போதுமானது. பழங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் சிற்றுண்டி வகை களிலும் ஜாம் வகைகளிலும் இதன் பொடியைச் சேர்த்துக்கொள்ள சுவை அதிகமாகும்.
`ஃபோ' (Pho) எனப்படும் வியட்நாம் பாரம்பர்ய சூப் வகையில் அன்னாசிப்பூ நீக்கமற இடம்பிடித்துள்ளது. காரமான உணவுகளுக்குக் கொஞ்சம் இனிப்புச் சுவை கூட்ட, அன்னாசிப்பூவைச் சேர்ப்பது மலேசிய வழக்கம்.
கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப்பூவைப் போட்டு, வடிகட்டிப் பருகினால் அதன் மருத்துவக் குணங்களைப் பெறலாம். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த் தால், சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.
கலப்படக்காரர்களுக்குத் துணை நிற்கும் ஜப்பானிய அன்னாசிப்பூ வகையில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நஞ்சு உள்ளது. ஆறு முதல் எட்டு பிளவுகள் இருப்பது ஒரிஜினல் அன்னாசிப்பூ; பத்துக்கும் மேற்பட்ட பிளவுகளுடன் ஈட்டி போன்று கூர்மையாக இருந்தால் அது ஜப்பானிய அன்னாசிப்பூ. அன்னாசிப்பூவைக் கைகளுக்கு இடையே வைத்து நசுக்கினால், சிறிய விதையுடன் நறுமணமும் சேர்ந்து வெளியாகும். மணம் வீசவில்லை என்றால் சில வருடங்கள் பழைமையான அன்னாசிப்பூ உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். ஜப்பானிய அன்னாசிப்பூ ரகத்தில், கொஞ்சம் ஆல்கஹால் மணம் இருக்கும். இது, சில நாடுகளில் புகை போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முழு அன்னாசிப்பூவின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? இரண்டு வருடங்கள்.
நட்சத்திர வடிவிலான அன்னாசிப்பூ, நோய்களைச் சுட்டெரிக்கும் `எரி நட்சத்திரம்!’
மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்
ஊறல் பானம்: அன்னாசிப்பூ, சீரகம், லவங்கப்பட்டை, ஏலரிசி, மிளகு, தனியா சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடிக்கவும். அதில், ஒரு டீஸ்பூன் எடுத்து, துணியில் முடிந்து வைத்துக்கொள்ளவும். கொதிக்க வைத்த ஒரு டம்ளர் நீரில் அந்தத் துணி முடிப்பைப் போட்டு ஊற வைத்து, பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு தேவையான அளவு தேன் சேர்த்துப் பருகினால், ஊறல் பானத்தின் மணம் நாசியில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கும் கேடயம் இது.
அன்னாசிப்பூ - பேரிக்காய் சாறு: ஒரு கப் திராட்சைச் சாற்றுடன் முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை, அரை கப் தண்ணீர், நான்கு அன்னாசிப்பூ, இரண்டு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்து ஒரு கடாயில் போட்டு மூடி, (மெல்லிய தீயில் எரித்து) பத்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு தோல் சீவிய இரண்டு பேரிக்காய்களைக் கடாயில் போட்டு மெல்லிய சிவப்பு நிறமாகும்வரை வதக்கவும். சிவந்த பேரிக்காய் மற்றும் சிவப்பான சாறும் சேர்த்து, சுவை ஊறிய ஊட்டச்சத்து பானத்தைக் கொடுக்கும். இந்தச் சாற்றை, பழத்துண்டுகளின் மீதும், பிரெட்களின் மீதும் குழையவிட்டுச் சாப்பிடலாம்.
மணக்கும் முட்டை: முட்டையைத் தண்ணீரிலிட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்துவிட்டு, அதன் ஓட்டை லேசாக உடைக்கவும். பிறகு அந்த முட்டையை அன்னாசிப்பூ, சீன மசாலா, சோயா சாஸ் ஊறிய நீரில் முழுமையாக வேகும்வரை கொதிக்கவிட்டு எடுத்தால் மணக்கும் முட்டை ரெடி.
புளிப்பு – இனிப்பு பானம்: பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறிது பனை வெல்லத்தைக் கரைத்து நன்றாகக் கொதிக்கவிடவும். அதில் மூன்று அன்னாசிப்பூ மற்றும் மூன்று லவங்கப்பட்டையைப் போட்டு, சிறுதீயில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, அன்னாசிப்பூ மற்றும் லவங்கப்பட்டையை நீக்கிவிடவும். அதில் ஒரு கப் புளிக் கரைசல், இரண்டு கப் தண்ணீர், மூன்று கப் அன்னாசிப் பழச்சாறு, சிறிது வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை, ஒருமுறை சுவைத்தால் பலமுறை சுவைக்கத் தூண்டும்.
Post a Comment