இஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள்!
இஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி சட்டம் பெண் கையில் ...

இஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
பெண்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படையிலேயே விவாகரத்து பெற முடியும். இஸ்லாம் மதத்தில் விவாகரத்துக்கு உள்ள நடைமுறைகள் பற்றி விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
இஸ்லாம் மதத்தில் ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் தனித்தனி விவாகரத்து நடைமுறைகள் உள்ளன. இஸ்லாமிய தனிச்சட்டத்தில் உள்ள திருமண முறிவுச் சட்ட நடைமுறைகள் பற்றிப் பார்ப்போம்.
இஸ்லாமிய ஆணும் ‘தலாக்’ நடைமுறையும்
இஸ்லாம் மதத்தில் ஆண்கள் மனைவியை விவாகரத்து செய்ய தலாக் வழிவகை செய்கிறது. ‘தலாக்’ பற்றி இஸ்லாம் சட்டம் சொல்வது என்ன?
மனைவியுடன் சேர்ந்து இல்லற வாழ்வைத் தொடர விரும்பாத ஆண், தன் மனைவியிடம், ‘தலாக்’ என்று சொல்லுவார். அன்றிலிருந்து விவாகரத்துக்கான நடைமுறை தொடங்கிவிடும். முதல் ‘தலாக்’ சொன்னதில் இருந்து மனைவியின் மூன்று மாதவிடாய்க் காலம் முடியும்வரை காத்திருக்க வேண்டும். இதை ‘இத்தா’ காலம் என்று சொல்கின்றனர். ஒருவேளை அந்த மூன்று மாத கால அவகாசத்தில் மனைவி கருத்தரித்திருந்தால் குழந்தையின் நலன் கருதி இருவரும் ஒன்றுசேர உண்டாகும் ஒரு வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
இரண்டாவது ‘தலாக்’ சொன்னதில் இருந்து மீண்டும் மனைவியின் மூன்று மாதவிடாய்க் காலம் முடியும்வரை காத்திருக்க வேண்டும். இரண்டாம் கட்ட மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்த பின்னரும், இருவருக்குள்ளும் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற மனமாற்றம் ஏற்படாவிட்டால், மூன்றாவது ‘தலாக்’கை ஆண் சொல்லலாம். மூன்றாம் ‘தலாக்’ சொன்னதும் விவாகரத்து நடைமுறைக்கு வந்துவிடும். மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து அமலுக்கு வரும் காலகட்டத்தில் மனைவியின் பராமரிப்புக்குக் கணவன் பணம் தர வேண்டும். ஒருவேளை மனைவி கர்ப்பமாக இருந்தால் குழந்தை பிறந்த பிறகே விவாகரத்து பெற முடியும்.
ஆனால், நடைமுறையில் மூன்று முறை ‘தலாக்’ சொன் னாலே திருமணம் ரத்தாகி விடும் என்று அப்பாவி இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அதனால், ‘கணவன் மனைவியின் முன்னிலையில் நேரடியாகவோ, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், முகநூல் வாயிலாகவோ ‘தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் கூட விவாகரத்து நடைமுறைக்கு வந்துவிடுகிறது. இந்த ‘முத்தலாக்’ பெண்களுக்கு எதிரானது; ஏற்க இயலாதது’ எனப் பலதரப்பினரும் போராடினர்.
‘முத்தலாக்’... நீதிமன்றத் தடை!
‘முத்தலாக்’ முறையை நிராகரிக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ‘முத்தலாக்’ சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற கருத்தைத் தெரிவித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், ஆறு மாதங்களுக்கு ‘முத்தலாக்’ விவாகரத்து நடைமுறைக்குத் தடை விதித்தது. அதோடு நாடாளுமன்றம் ‘முத்தலாக்’ தொடர்பாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு இஸ்லாமியரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைக்கு வருமா, ‘தலாக்’குக்கு எதிரான சட்டம் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இஸ்லாமியப் பெண்ணும் திருமண ஒப்பந்தமும்
தன் வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்யும் உரிமை ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கும் இஸ்லாம் மதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதைச் செயல் படுத்துவதில்தான் சிக்கல்கள் எழுகின்றன. இஸ்லாமியரின் தனிச் சட்டமான ‘ஷரியத்’ சட்டத்தில் கணவன் மனைவி விவாகரத்து செய்யும் உரிமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் சொல்வதைப் பார்ப்போம்.
தலாக் - ஐ - தப்விஸ் (Talaq - i -Tafweez)
திருமணத்தின்போது மணமக்களின் இருவீட்டார் தரப்பும் சம்மதித்துக் கையெழுத்திடு வார்கள். அதற்கு ‘நிக்கா நாமா (திருமண ஒப்பந்தம்)’ என்று பெயர். திருமணத்துக்கு முன்போ, திருமணம் நடந்த பின்போ இவை கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தப் பத்திரத்தில் கணவன், தன்னை விவாகரத்து செய்யும் உரிமையை மனைவிக்கு வழங்குவது பற்றியும் குறிப்பிடுகிறார். ‘நிக்கா நாமா’வில் விவாகரத்தைப் பற்றி எழுதியிருந்தால், அந்த உரிமையானது பெண்ணுக்குத் தானாகவே வந்தடையும்.
லைன் (Lian)
மனைவியை மணவிலக்கு செய்ய விரும்பும் கணவர்கள் முன்வைக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று, அவர்கள் நடத்தையைக் களங்கப்படுத்துவது. ‘என் மனைவிக்குத் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது’ என்ற குற்றத்தைக் கணவன், மனைவி மீது சுமத்தினால் அதைப் பொறுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அந்தக் குற்றச்சாட்டை பொய் என் நிரூபிக்கலாம். அதற்குப் பிறகு, அந்தப் பெண் விரும்பினால் ‘லைன்’ சட்டத்தின் கீழ் விவாகரத்து வழங்கப்படும்.
இஸ்லாமிய தம்பதியும் பரஸ்பர விவாகரத்தும்
குலா (Khula)
சொத்து, நகை, பணம் ஆகியவற்றை மனைவி, கணவனுக்குக் கொடுத்து விவாகரத்தை வாங்குவது ‘குலா’ எனப்படுகிறது. மனைவியிட மிருந்து கொடையைப் பெற்றுக்கொண்டதும் விவாகரத்து வழங்கக் கணவன் சம்மதிப்பார். பணம் கொடுத்து வாங்குகிற விவாகரத்தாக இது கருதப்பட்டாலும், இது கொடுத்ததைத் திரும்பக் கொடுக்கும் முறையே.
திருமணத்தின்போது கணவன் மனைவிக்கு ‘மஹர்’ எனும் மணக்கொடை கொடுத்திருப்பார். கணவனை மணவிலக்கு செய்யும் மனைவி, ஜமா அத்துகள் முன்பு மஹர் பொருள்களைக் கொடுத்து விட்டு விவாகரத்து பெறுவதே இதன் நோக்கம். இதில் இருதரப்பும் நேரில் வரமுடியாவிட்டாலும் அவர்கள் சார்பாக ஒருவரை நியமித்தும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம்.
முபாரத் (Mubarat)
‘முபாரத்’ என்பது பரஸ்பரம் விவாகரத்துப் பெறுவது; தம்பதி இருவரும் பிரிவதற்கு மனமுவந்து முன்வருவது. கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டும் என்று சம்மதித்து இருதரப்பும் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, ‘மஹர்’ போன்றவற்றை செட்டில் செய்து, இரு தரப்பும் சம்மதித்து ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை விவாகரத்து.
மேற்கூறிய நடைமுறைகளின்படி கணவரிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சுலபமில்லை என்ற நிலையில் உள்ள இஸ்லாமியப் பெண், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இஸ்லாமியர்களுக்கான மணமுறிவுச் சட்டம் 1939 (The dissolution of muslim marriages act) உள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 2-ல் கூறப்பட்டுள்ளவை:
* இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் கணவன் நான்கு ஆண்டுகள் காணாமல் போனவராக இருந்தால்...
* மனைவியின் பராமரிப்புக்கான தொகையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்தால்...
* நீதிமன்றத் தீர்ப்பில் கணவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தால்...
* எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கணவன் தன் திருமணப் பொறுப்புகளைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தட்டிக்கழித்தால்...
* திருமணத்தின்போதும் அதற்குப் பிறகும் கணவன் ஆண்மையற்றவராக இருந்தால்...
* தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மனநலம் குன்றியவராக இருந்தால்...
* தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால்; தாம்பத்ய உறவின் மூலம் பரவும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால்...
* பதினைந்து வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம் நடத்தப்பட்டிருந்தால்...
* கணவன் கொடுமைப்படுத்தினால் (உடல், மனரீதியாகத் துன்புறுத்துவது, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வற்புறுத்துவது, மனைவியின் சொத்துகளை விற்பது)...
* கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பின், வழக்கு தொடர்ந்திருக்கும் மனைவியைச் சமமாக நடத்தாமல் இருந்தால்...
இந்தக் காரணங்களை முன்வைத்து இஸ்லாமியப் பெண்கள் சட்டப்படி விவாகரத்து பெறலாம்.
Thanks to Aval Vikatan
Post a Comment