தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா? - மருத்துவம் என்ன சொல்கிறது?

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S) வா னிலிருந்த பொழியும் இயற்கையான மழைக்கு இணையாக ஒரு தூய பொருளைக் கண்டுபிடிக்க முடியுமா? அறிவியல் முன்னேற்ற...

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
வானிலிருந்த பொழியும் இயற்கையான மழைக்கு இணையாக ஒரு தூய பொருளைக் கண்டுபிடிக்க முடியுமா? அறிவியல் முன்னேற்றத்தால் செயற்கை முறையில் மேகங்களுக்கு நடுவில் ரசாயனக் கலவைகளைத் தூவி மழையை ஆங்காங்கே வரவைத்தாலும், இயற்கையாக வாஞ்சையோடு வந்து விழும் வான்மழைக்கு அவை ஈடாகுமா? மேற்சொன்ன ‘பொருந்தா தத்துவம்’, 'தாய்ப்பால்' பற்றி பேசும்போது பொருந்தும். தாய்ப்பாலுக்கு எந்த பாலும் மாற்றாகாது. ’தாய்ப்பாலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் எங்கள் நிறுவன பால் பவுடரில் இருக்கின்றன…’ என்று கதை கதையாய் அளந்து விட்டாலும் தாய்ப்பாலுக்கு இணையாக எதையும் குறிப்பிட முடியாது.

”மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல்…”
என்ற ’பழமொழி நானூறு’ பாடல் வரி, குழந்தைக்கு பாலூட்டுவது தாயின் கடமை என பதிவுசெய்கிறது. தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் பலவும் பேசி இருக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பது மரபு சார்ந்த விஷயமாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், பால் சார்ந்த அரசியலும் வணிகமும் அதிகரித்த பின்புதான், தாய்ப்பால் சுரந்துகொண்டிருக்கும்போதே, தாய்ப்பாலுக்கான மாற்று (வணிக ரீதியில்), குடும்பங்களைத் தேடி வரத்தொடங்கின. தாய்ப்பால் மாற்றுக்கான பிரசாரங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இவற்றை ’பால் அரசியல்’ அல்லது தாய்ப்பாலுக்கு எதிரான அரசியல் என்று சொல்லலாம்..!
சீம்பால்:
தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலில் (Colostrum) இருக்கும் சத்துகள் வேறு எந்த உணவிலும் குழந்தைக்குக் கிடைக்காது. குழந்தைகளுக்கு சீம்பாலைக் கட்டாயமாக கொடுப்பது அவசியம். சீம்பாலை தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்தும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. குழந்தை பிறந்த சில மணிநேரத்தில்… ’பால் கொஞ்சமாகத் தான் சுரக்குது. குழந்தைக்குப் பத்தல போல, அழுதுகிட்டே இருக்குது பாரு... அந்த பவுடர் பாலையும் சேத்து கொடுமா…’ இப்படிப்பட்ட தவறான அறிவுரைகளே நிறைய பிரசவ அறையில் நிகழ்கின்றன. முதல் மூன்று நாளைக்கு சிறிதளவு சீம்பாலே குழந்தைக்குப் போதுமானது. குழந்தை அழுவதற்கு பசி மட்டுமே காரணம் கிடையாது. புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள சிறிது சிரமும் இருக்கலாம். இதைப் புரிந்துகொள்ளாமல் செயற்கை பவுடர்களை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் மருத்துவர் அறிவுறுத்தலின்றி, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது தவறு. முதல் சில நாள்கள் மட்டுமன்றி அதன் பிறகும் குழந்தை அழுதுகொண்டே இருந்தால், வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று அறிந்து நிவர்த்தி செய்யலாம். எதற்கும் அவகாசம் கொடுக்காமல், தடாலடியாக பால் பவுடர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமே. விலங்கினங்கள் மீதும் பரிவுகொண்டு கன்றுக்கு கிடைக்க வேண்டிய சீம்பாலை நாம் ருசித்து சுவைக்காமல், கன்றுகளுக்கு முழுமையாக கிடைக்கச் செய்தால், நோய்கள் அவற்றைத் தாக்காது.
ஹார்மோன் – மனம்:
பால் சுரப்பதற்கு ஹார்மோன் செயல்பாடுகளோடு சேர்த்து மனதும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரசவித்த அடுத்த நொடியே அருவிபோல பால் சுரந்துவிடாது. முதலில் சீம்பால் சுரந்து பின் குழந்தை வாய் வைத்து இழுக்கத் தொடங்கியவுடன் பால் சுரப்பு படிப்படியாய் அதிகரிக்கும். ’பாலே சுரக்கவில்லை’ என்று பரிதவித்து, தாய்க்கும் மன அழுத்தத்தை உண்டாக்கி இயற்கையான பால்சுரப்பு செயல்பாடுகளைக் கெடுக்கவேண்டாம். ’நமக்கு ஏன் பால் சுரக்கவில்லை’ என்று தாய்க்கு உண்டாகும் மனஅழுத்தமே பால் சுரப்பினை குறைக்கும் காரணியாகிவிடும். உறவுகளும், முக்கியமாக கணவரும் இதுபோன்ற சமயங்களில் ஊக்கமளிப்பது அவசியம்.
முதல் ஆறு மாதம்:
முதல் ஆறுமாதம் தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவுமே தேவையில்லை. ஏன் தண்ணீர்கூட அவசியமில்லை. குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து முதல் பல்வேறு ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் உள்ளன. வெகு சமீபத்தில் நடைபெற்ற தாய்ப்பால்குறித்த ஆய்வு, ’தாய்ப்பால் மற்றும் மார்பு காம்புப் பகுதியில் உள்ள சில பாக்டீரியாக்கள், குழந்தையின் குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆரோக்கியமான நுண்ணுயிர்க் கூட்டத்தை அதிகரிப்பதாக’ தெரிவிக்கிறது. தாய்ப்பால் சிறிதும் குடிக்காமல் வளரும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடற்பருமனும் நீரிழிவு நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையின் செரிமானத்துக்கு ஏற்ற உணவு அன்னையின் பால்தான். செயற்கைப் பாலோ அல்லது வேறு விலங்கினங்களின் பாலோ செரிப்பது சிறிது கடினம். பால் பவுடர் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு கழிதல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுவதைப் பார்க்கலாம்.
பலன்கள்:
குழந்தைக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் என அனைத்தும் தாய்ப்பாலில் இருக்கின்றன. நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிடும் திறனை தாய்ப்பால் அதிகரிக்கும். ’நுரையீரல் சார்ந்த தொந்தரவுகளும், ஒவ்வாமை சார்ந்த பிரச்னைகளும் பிற்காலத்தில் ஏற்படாது’ என்கின்றன ஆய்வுக் கட்டுரைகள். தாய்ப்பால் கொடுக்கும்போது, தாயின் உடலில் சுரக்கும் ’ஆக்ஸிடோசின்’ (oxytocin) ஹார்மோன், கருப்பையை விரைவாக பழைய நிலைக்குக் கொண்டுவர உதவும்.
’ஐம் எ தாய்ப்பால் பாய்’:
தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு கூறுகள் எதிலும் கிடைக்காது. இதன் காரணமாகவே தாய்ப்பால் தேவையான அளவு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ’ஐம் எ காம்ப்ளான் பாய்’ என்பதைவிட, ’ஐம் எ தாய்ப்பால் பாய்’ என்பதில்தான் பெருமையே! முதல் ஆறுமாதங்களில் வெறும் தாய்ப்பாலும் அதன் பிறகு இணை உணவுகளோடு சேர்த்து இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது. நீண்ட நாள்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு, மார்பகப் புற்றுநோயும் சினைப்பைப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
குறைப்பிரசவம்:
தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலைகளில் செயற்கை உணவுகளுக்கு தாவுவதைத் தவிர வழியில்லை. இயற்கையாக பால் சுரக்க வாய்ப்பு இருக்கும்போது அதைத் தடுக்க வேண்டாம் என்பதே வாதம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மார்பில் வாய்வைத்து உறிஞ்ச முடியாது. அப்போது தாய்ப்பாலை எடுத்து (Expressed milk) கிண்ணத்தில் வழங்கலாம். குழந்தையின் செயல்பாடுகள் தேவையான வளர்ச்சி பெற்றவுடன், நேரடியாக மார்பில் தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் தவிர்க்க வேண்டிய நிலைகள்:
புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் மேற்கொள்பவர்கள் (On Chemotheraphy) தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. ஆனால், புற்றுநோய் இருப்பது தெரியாமல் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு புற்றுநோய் பரவாது. அது தொற்று நோயல்ல. எய்ட்ஸ் நோய், காச நோய் (Active HIV and Tuberculosis) போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். போதைப் பொருளுக்கு அடிமையான தாய்மார்கள் (இந்த கலாசாரம் நம்மிடம் இல்லாததால் கவலைப்படத் தேவையில்லை), மார்புப் பகுதியில் ரேடியஷன் சிகிச்சை (Radiation theraphy) மேற்கொள்பவர்களும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அரிதாக குழந்தைகளுக்கு உருவாகும் ’Galactosemia’ (தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட சர்க்கரையை செரிக்க முடியாத நிலை) நோய்நிலையில் கொடுக்க முடியாது.
இதுபோன்று நோய்நிலைகள் தவிர்த்து மற்ற அனைவரும் தாய்ப்பால் கொடுக்கலாம். சில தவிர்க்க முடியாத நேரங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும்போது, உணவின் மூலமாகவும் மருந்துகளின் மூலமாகவும் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க வழிவகை செய்துகொள்ளலாம். சித்த மருத்துவத்தில் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. அனைத்து அரசு சித்த மருத்துவப் பிரிவுகளிலும் குழந்தை ஈன்ற தாய்மார்களுக்கு சதாவரி லேகியம் எனும் மருந்து வழங்கப்படுகிறது. உணவில் பூண்டு, வெந்தயம், கீரைகள், பழங்கள் போன்றவற்றை தேவையான அளவில் சேர்த்து வந்தாலே போதும். தாய்ப்பாலை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் செய்து முடியாத பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாய்ப்பாலுக்கான மாற்றினை ஆராயலாம்.

``துயரமே எனக்குத் தூண்டுகோல்!’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி
பணிக்குச் செல்பவர்களாக இருந்தாலும் முதல் ஆறுமாதம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் நலமான அடித்தளத்துக்கு அன்னையின் அரவணைப்பும் தாய்ப்பாலின் உணர்வு கடத்தலும் தேவை. ’தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நாடுகளில் தான், குழந்தைகளுக்கு நோய்கள் அதிகம் உருவாகின்றன’ என்று பெரிய அளவில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து, அரசும் பல தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கின்றன. குழந்தைக்கு அன்னை கொடுக்கும் அரவணைப்புதான் மனிதருக்கு கிடைக்கும் முதல் ’கட்டிப்புடி வைத்தியம்.’ தாய்ப்பாலுக்கு ஈடான உணவினைக் கண்டுப்பிடுத்துவிட்டால் அதுவே அடுத்த உலக அதிசயம்!

Related

தாய் சேய் நலம்! 2575491775004183047

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item