படித்ததில் பிடித்தது! ‘நீ பெரிது, நான் பெரிது’ என்றில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது!!
மா மரத்தின் கீழ் கந்தையா வாத்தியார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் புல்தரையில் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தோம். அன்றைய பாடத்தை ...
‘‘பாட்டி, பழம் சுடுகிறதா?’’
ஒளவையார் திடுக்கிட்டார். அவமானமாகிவிட்டது. அப்பொழுது அவர் பாடியது என்று வாத்தியார் பாடலைச் சொன்னார்.
‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்.’
எங்கள் எல்லோருக்கும் வயது எட்டு, ஒன்பதுதான் இருக்கும். வாத்தியார், ‘‘பொருள் தெரியுமோ?” என்றார். முன்வரிசையில் உட்கார்ந்திருந்த வாகேஸ்வரி பட்டென்று கையைத் தூக்கினாள். இரண்டு சடை போட்டு இறுதியில் இரண்டையும் ஒன்றாக்கி சிவப்பு ரிப்பன் கட்டியிருந்தாள். ஸ்டைல் ஒன்றும் இல்லை. அவளிடம் இருந்தது ஒரு ரிப்பன்தான். அவள் கையைத் தூக்கிவிட்டுத்தான் பதிலை யோசிப்பாள்.
எனக்குப் பாடல் பிடித்தது. ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. என் வாழ்நாள் முழுக்க அந்தப் பாடல் என்னைத் தொடர்ந்தது. எல்லாம் தெரியும் என்ற அகந்தை கூடாது. ஒருவருக்குத் தெரியாத ஒன்று இன்னொருவருக்குத் தெரியும். அதுதான் உலக மகா அற்புதம்.
நான் பெரியவன் ஆனதும் இன்னொரு கதை படித்தேன். இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவியங்களைப் படைத்த ஹோமர், போன வழியில் ஒரு சிறுவனைச் சந்தித்தார். அவன் ஒரு விடுகதை போட்டான். ‘‘நீ பிடித்தால் கொல்வாய்; பிடிக்காவிட்டால் எடுத்துப் போவாய்’’. எவ்வளவு யோசித்தும் ஹோமருக்கு விடை தெரியவில்லை. பையன் சொன்னான், ‘‘பேன்’’ என்று. ஹோமரால் அவமானம் தாங்கமுடியவில்லை. தற்கொலை செய்துகொண்டார் என்று கதையுண்டு.
இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ ‘Good for Nothing’ என்ற அருமையான சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒருவனுக்குச் சப்பாத்துக் கயிறு கட்டத் தெரியாது. எத்தனை முறை கட்டினாலும் அது அவிழ்ந்து போனது. அவனைச் சந்திக்கும் ஒரு மனிதன் சொல்வான். ‘‘கவலையை விடு. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்றில்லை. ஒருவனுக்குத் தச்சு வேலை தெரியும். ஒருவனுக்கு விதை விதைக்கத் தெரியும். இன்னொருவனுக்கு வாசிக்கத் தெரியும். சமுதாயம் செயல் படுவது ஒருவர் கையை ஒருவர் பிடித்து முன்னேறுவதால்தான்’’.
ஒரு பழம்பாடல் உள்ளது. தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டத்தெரியும். மனிதனால் அது முடியாது. கறையான் புற்று எடுக்கும். எந்தப் பெரிய இன்ஜினீயருக்கும் அது சாத்தியமில்லை. சிலந்தி வலை பின்னும். தேர்ந்த விஞ்ஞானியால்கூட அதை நகல் செய்ய ஏலாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வலிமை இருக்கும். பாடல் இப்படி முடியும். ‘எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது’.
தோமஸ் அல்வா எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர். மின்சார பல்பை கண்டுபிடித்தவர். அவர்தான் முதன்முதலாக நியுயோர்க் நகரத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கினார். டி.சி மின்சாரம் விநியோகித்ததால், அவரால் மின்சாரத் திட்டத்தை விரிவாக்க முடியவில்லை. ஏ.சி மின்சாரம் வழங்கும் கம்பனி இவரை முந்திக்கொண்டு போனது. ‘‘நான் மின்சாரத்தை மிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்குக் கொடுப்பேன். பணக்காரர்களுக்கு மட்டுமே மெழுகுவர்த்தி கட்டுபடியாகும்...’’
இப்படிச் சொன்ன பெரிய அறிவாளியான எடிசன், ஏ.சி மின்சாரத்தை எதிர்த்தார். இறுதியில் எடிசன் ஆரம்பித்த கம்பனியே அவரை வெளியே தள்ளியது. எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பு, அவர் அறிவை மறைத்துவிட்டது.
கணிதமேதை ராமானுஜனால் இந்தியாவில் பி.ஏ பரீட்சை பாஸ் பண்ண முடியவில்லை. அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி 17 வயதில் ‘Wren and Martin’ இலக்கணப் புத்தகம் புரியாமல் வீசி எறிந்துவிட்டு திருவண்ணாமலை ஏகினார். 500 மில்லியன் ஆண்டுகள் முன்தோன்றிய கரப்பான் பூச்சி, தலையைக் கொய்த பிறகும் சிலநாள் உயிர் வாழும். தேனீக்களை ஒழித்தால் மனித இனம் நாலு வருடங்களில் அழிந்து போகும். உலகத்து சிலந்திகள் முடிவெடுத்தால், ஒரு வருடத்தில் அவை மனித இனத்தைத் தின்று தீர்த்துவிடும்.
ஒவ்வொரு புதுத்தகவலின்போதும் நான் இன்றும் கந்தையா வாத்தியாரை நினைக்கிறேன். ஆதியிலிருந்து வல்லமைகள் பகிர்ந்து அளிக்கப் பட்டிருக்கின்றன. ‘நீ பெரிது, நான் பெரிது’ என்றில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது.
Post a Comment