‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’ - திப்பு சுல்தான் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

ப தினாறாம் நூற்றாண்டின் மத்தியிலேயே விரிந்திருந்தது மைசூரு. இந்த நகரில் ஓரளவுக்கு வசதி படைத்த மனிதர் ஹைதர் அலி. இவரின் முதல் மனைவி ஷ...



தினாறாம் நூற்றாண்டின் மத்தியிலேயே விரிந்திருந்தது மைசூரு. இந்த நகரில் ஓரளவுக்கு வசதி படைத்த மனிதர் ஹைதர் அலி. இவரின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். படுக்கையைவிட்டு நகர முடியாமல் பக்கவாதத்தால் படுத்திருந்த ஷாபாஸ் பேகத்துக்கு, அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஆனாலும், அவர் மனதில் இருந்த கவலை... தன் கணவருக்கு ஓர் ஆண் குழந்தை இல்லை என்பதுதான். இதுகுறித்து கணவரிடம், ‘‘நீங்கள் நிச்சயம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார். ‘‘வேண்டாம். பெண் குழந்தையே போதும். நீ ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஹைதர் அலி.
‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு...’’
நம்மால் இனி எந்தப் பயனும் இல்லை என்ற மனநிலையிலேயே இருந்த ஷாபாஸ் பேகத்தை, கணவரின் மறுமொழி மேலும் வருத்தியது. இருந்தாலும், தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை அடிக்கடி வந்து நலம் விசாரித்த ஃபக்ர் உன்னிஸாவை, தன் கணவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டு ஆண்டுகள் ஓடியும் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனிடையே ஷாபாஸ் பேகம் இறந்துவிட்டார். கடவுளைத் தரிசித்து கண்ணீர் சிந்தினார் ஃபக்ர். 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அப்போதே, ‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு... இனி, பிறக்கும் குழந்தைகள் நமக்கு’’ என்று கணவரிடம் கோரிக்கை வைத்தார். ‘‘பார்க்கலாம்’’ என்றபடியே பதில் அளித்தார் ஹைதர் அலி.
அந்தக் குழந்தைதான் பின்னாளில் சூரப்புலியாக வளர்ந்த திப்பு சுல்தான். அவருடைய பிறந்த தினம் இன்று. அவருக்கு மதம் பாராமல் அனைத்துச் சம்பந்தமான பாடங்களும், கதைகளும் குருமார்களால் போதிக்கப்பட்டன. ‘‘திப்புவின் மனம் முழுவதும் இறைவன் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும்’’ என்றும் கட்டளையிட்டார் ஹைதர் அலி. அதன்படியே அவர்களும் போதித்தனர். ‘‘பிற குழந்தைகளைப்போல் இல்லை, திப்பு’’ என்றார் குருமார். ‘‘எப்படி’’ என்று வினவினார் ஹைதர் அலி. ‘‘ஒருநாள், ஓட்டப்போட்டி நடத்தியபோது திப்புதான் அதில் முதலாவதாக வந்தார். மற்றவர்கள் அவரைப் பாராட்டியபோதும், அவர் அமைதியாகவே இருந்தார்’’ என்றார்.
‘‘வாருங்கள் கிளம்பலாம்!’’
தன்னுடைய 15-வது வயதில் கல்வியுடன், போர்ப் பயிற்சியையும் முழுமையாக முடித்திருந்தார் திப்பு. பதின்மப் பருவத்தில் இருந்த திப்புவை, போர்க்களத்துக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்தார் தந்தை ஹைதர் அலி. அந்த நேரத்தில்தான் பெத்தனூரின் மன்னன், ஹைதர் அலியை வம்புக்கு இழுத்திருந்தார். போரை, திப்பு பார்க்க வேண்டும் என்பதற்காக, பாலம் என்ற நகரம் அருகே ராணுவத் தளபதி காஜிகான் பொறுப்பில்... அவரை விட்டுச்சென்றார் ஹைதர் அலி. சிறிது நேரத்தில் முன்னேறிச் சென்ற ஹைதர் அலியின் படைகள், காணாமல் போயின. மூன்று மணி நேரம் கடந்தது. பதில் எதுவும் ஹைதர் அலியிடம் இருந்து வரவில்லை. 500 வீரர்களை திப்புவிடம் விட்டுவிட்டு, காஜிகான் போர்க்களத்துக்குச் சென்றார். அவர் சென்றும் பதில் இல்லை. பொறுமை இழந்த திப்பு, ‘‘வாருங்கள் கிளம்பலாம்’’ என்று படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். போர்க்களத்துக்குள் நுழையாமல் அவர்கள், ஒரு காட்டுப் பாதையில் சென்றனர். அப்போது, திப்புவின் முன் கைக்குழந்தையுடன் தோன்றிய பெத்தனூர் மன்னனின் மனைவி, ‘‘உங்களிடம் சரணடைந்துவிட்டோம். தயவுசெய்து எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்’’ என்று மன்றாடினார். வீரர்களை நோக்கித் திரும்பிய திப்பு, ‘‘இவர்கள் மீது சிறு கீறலுமின்றிப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று உத்தரவிட்டார்.

‘‘உனக்கு என்ன சன்மானம் வேண்டும்?’’
இந்தச் செய்தி பெத்தனூர் மன்னனின் காதில் விழுந்த அடுத்த நொடி, அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார். விவரம் அறிந்த ஹைதர் அலியின் படைத்தளபதி மக்பூல்கான், ‘‘சபாஷ் திப்பு... உன் வீரத்துக்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்க முடியாது’’ என்று புகழ்ந்துரைத்தார். ‘‘இல்லை மக்பூல். நான் அவர்களைச் சிறைபிடிக்கவில்லை. அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன்’’ என்று பதிலுரைத்தார் திப்பு. அதை, காதில் வாங்காத மக்பூல்கான் அவர்களை நோக்கி நகர்ந்தான். ‘‘நில் மக்பூல். அவர்களை நெருங்காதே’’ என்று கத்தினார். புன்னகைத்தபடியே மீண்டும் முன்னேறினான் மக்பூல்கான். அடுத்தநொடி, துப்பாக்கியால் அவனைச் சுட்டுத் தள்ளினார் திப்பு. கொலையையும், ரத்தத்தையும் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தார் திப்பு. சிறிது நேரத்தில் ஹைதர் அலி, காஜிகான், பெத்தனூர் மன்னன் ஆகியோர் அங்கு வந்தனர். ‘‘அருமை திப்பு. சொல், உன் கைதிகளை விடுவிக்க உனக்கு என்ன சன்மானம் வேண்டும்’’ எனக் கேட்டார் ஹைதர் அலி. ‘‘அப்பா... இவர்கள் பெண்கள். கூடவே குழந்தைகள். ஆகவே, இவர்களை விடுவித்துவிடுவதுடன் தக்க மரியாதையுடன் அனுப்பிவைக்கவும்’’ என்று கனிவோடு சொன்னார் திப்பு. இதைக் கண்ட பெத்தனூர் மன்னன் திப்புவின் முன்னால் மண்டியிட்டு, ‘‘பயத்தின் காரணமாக உங்கள் தந்தையிடம் மண்டியிட்டேன். இப்போது மரியாதைக்காக உங்களிடம் மண்டியிடுகிறேன்’’ என்றார் கண்ணீர் மல்க.
‘‘வலி எல்லோருக்கும் பொதுவானது!’’
இதற்குப் பிறகு திப்புவுக்கு நன்றாகப் போர் பழகிப்போனது. ஆனாலும், ஹைதர் அலி அவருடைய அருகில் இருந்து இன்னும் பல நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தார். 1767-ல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். அப்போதுதான் திப்புவுடைய முழுத் திறமையும் வெளிப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் தன்னுடைய படைக்கு புலி சின்னம் பொறித்த கொடியை உருவாக்கினார் திப்பு. 1780-ல் காஞ்சிபுரத்தில் ஆங்கிலேயரான பெய்லியை சிறைபிடித்து, தந்தையிடம் அழைத்துச் சென்றார். ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார் பெய்லி. ஆங்கிலேயர் சரித்திரத்தில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி இது. அவர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் சிம்ம சொப்பனமாக விளங்கியதும் இந்தப் போரில்தான். அவருடைய போர்த் திறன் ஆங்கிலேயர்களிடம் விவாதிக்கப்பட்டது.
அவர், வில், அம்பு பயன்படுத்தியதையும், வாள் சுழற்றியதையும் ஆங்கில வரலாற்றுக் குறிப்புகள் பதிவுசெய்தன. இந்தப் போர் திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது. காரணம், முதன்முதலாக பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் திப்பு. வலியால் வேதனைப்பட்டவர்களிடம் அக்கறையுடன் நலம் விசாரித்தார். ‘‘திப்பு... வா நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் ஹைதர் அலி. ‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது அப்பா. அந்த வலியை நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது’’ என்று வருந்தினார்.
‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’
தந்தையுடன் பல போர்களில் வெற்றி கண்ட திப்பு, 1782-ம் ஆண்டு தன் தந்தையை இழந்தார். சாதாரண குதிரை வீரனாக இருந்து மன்னரான தன் தந்தைக்குப் பிறகு, தன்னுடைய 32-வது வயதில் அரியணை ஏறினார் திப்பு. ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண அடிப்படையில் அவரது ஆட்சி மாற்றம் இருந்தது. எந்த சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம்; ஆதரவற்ற சிறுமிகளை தேவதாசிகளாகக் கோயில்களுக்கு விற்கும் நடைமுறை ரத்து; உள்நாட்டு வணிகம் ஊக்குவிப்பு; மத நம்பிக்கைகள் மீது மரியாதை போன்ற புதிய தளங்களில் கால்பதித்தார். பட்டு உற்பத்தி, பிராணிகள் வளர்ப்பு, முத்துக் குளித்தல் போன்ற துறைகளை முதன்மைப்படுத்தினார். குறிப்பாக 1787-ம் ஆண்டு மதுவை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார். அதற்கு அவர், ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான். அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான். அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று பதிலுரைத்தார்.
‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!’’
இப்படி அவர் அறிவித்த ஒவ்வோர் ஆணைகளையும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். குற்றம் புரிந்த விவசாயிகளுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பதில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வைத்தார். அதுமட்டுமல்லாது எதிரிகளிடம்கூட விசுவாசத்துடன் நடந்துகொண்டார். ஒருமுறை மங்களூர் கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தது திப்புவின் படைகள். ஆனாலும் கோட்டையைப் பலப்படுத்திக்கொண்டே இறுதிவரை போராடிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில், இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன் கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல். எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து, ‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’ என்று பாராட்டினார். மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல், ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.

ஜாகோபியன்களுக்கு ஆதரவு!
ஃபிரான்ஸ் மன்னர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஜாகோபியன்களுக்கு ஆதரவு அளித்தார் திப்பு. இதனால் அவர்கள் ஃபிரான்ஸிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களை மைசூருக்கு அழைத்து உபசரித்தார். பின்னர், ஜாகோபியன்களின் புரட்சி வெற்றி பெற்றபோது அந்த விழாவில் கலந்துகொண்டார். இதில்தான் திப்புவுக்கு, அவர்கள் ‘குடிமகன் திப்பு’ என்னும் பட்டத்தை அளித்தனர். அத்துடன், ஆங்கிலேய சிப்பாயைக் கடித்துக் குதறும் இயந்திரப் புலி கொண்ட உருவத்தையும் பரிசாக வழங்கினர். அந்தப் புலியின் தோள்பட்டையில் விசை ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதை, திருகினால் ஆவேசமாக உறுமிக்கொண்டே கீழே விழுந்து கிடக்கும் சிப்பாயைக் கடித்துக் குதறும் ஒலி வடிவில் அது அமைக்கப்பட்டிருந்தது.
‘‘மணி ஓசை எந்த மதத்தைச் சேர்ந்தது?’’
‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’ என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர் திப்பு. துரோகிகளைக்கூட மன்னித்துவிடக் கூடியவர். இவருடைய நெருங்கிய கமாண்டர் முகம்மது அலி. அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார். ‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்டார். ‘‘அவன் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன் முன்பு செய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’ என்றார். அதுபோல் எல்லா மதங்களையும் உயர்வாகவே கருதினார். எல்லோரிடமும் அன்பாகவே நடந்துகொண்டார். மசூதி ஒன்றைக் கட்டவேண்டி நிதி கேட்டு திப்புவிடம் மதகுரு ஒருவர் வந்திருந்தார். அவருக்குத் தாராளமாக நிதி அளித்து உதவி செய்தார். அப்போது மதகுரு, ‘‘இதுபோன்று கோயில்கள், தேவாலயங்கள் கட்டவும் நிதி தருகிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் இஸ்லாத்தை நம்பவில்லை என்றுதானே பொருள்? இஸ்லாம் மீது நம்பிக்கை இருப்பின் எதற்காக இதர இறை சிந்தனைகளை வளர்க்கிறீர்கள்’’ என்று சந்தேகத்துடன் வினவினார். திப்பு உடனே அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்று... அங்கு தெரிந்த ரெங்கநாதன் கோயிலைக் காட்டி, ‘‘இங்கு ஒலிக்கும் மணி ஓசை எந்த மதத்தைச் சேர்ந்தது’’ என்று வினவினார். பதில் தெரியாத மதகுருவிடம் மதத்தைப் பற்றிப் பேசி நிறையப் புரியவைத்தார்.
ஒருநாள் திப்புவின் திருமண நாளன்று ஹைதர் அலி, ‘‘உனக்கு என்ன பரிசு வேண்டும்’’ என்று கேட்டார். ‘‘ஒரு நூலகம் அமைத்துக் கொடுங்கள்’’ என்றார் திப்பு. ‘‘படிக்க வேண்டிய அனைத்தையும் படித்து முடித்துவிட்டாய் என்று அல்லவா நினைத்தேன். இங்குள்ள அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதியை வாங்கிவரச் சொல்கிறேன்’’ என்றார் தந்தை. சிரித்தபடியே திப்பு, ‘‘இங்கு மட்டுமில்லை, அப்பா... உலகம் எங்கிலும் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் சேகரிக்க விரும்புகிறேன்’’ என்றார். ‘‘ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு மொழியில் அல்லவா இருக்கும்’’ என்றார் தந்தை. ‘‘அதனால்தான் அவைகளை மொழிபெயர்க்க விரும்புகிறேன்’’ என்றார் திப்பு. அவருடைய விருப்பப்படியே அது, பெரிய நூலகமாக பின்னாளில் வளர்ச்சி பெற்றது.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்!’
‘நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற கொள்கையிலேயே எல்லோரிடமும் போரிட்டார். இதனால் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் அச்சத்தை விதைத்த அசகாய சூரராக திப்பு விளங்கினார். ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்று அவரது அரசை லண்டன் பத்திரிகைகள் எழுதின. ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டு இறந்துபோனார் திப்பு. அவருடைய வீரமரணத்தைக் கேள்விப்பட்ட ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ், ‘‘இன்று முதல் இந்தியா நம்முடையது’’ என்றான்.
மனதளவில் யாருக்கும் துன்பம் தரக் கூடாது என்று கல்வி பயின்ற அவர், பின்னாளில் ஆங்கிலேயர் போற்றும் அளவுக்கு ஒரு சிறந்த போர் வீரனாக விளங்கினார். ‘‘திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா, எப்போதோ விடுதலை பெற்றிருக்கும்’’ என்று திப்புவைப் பற்றி பின்னாளில், காந்தியடிகள் ஒரு நாளிதழில் எழுதியிருந்தார்.
சிறுவயது முதல், புத்தகப் புழுவாக அமைதியான வாழ்க்கை நடத்திவந்த திப்புவை... ஆக்ரோஷமான விடுதலைப் போர் வீரனாக உருமாறச் செய்த பெருமை, அவரைச் சுற்றியிருந்த எதிரிகள் மற்றும் ஆங்கிலேயரையேச் சாரும்.

Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 8727111326508083110

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item