“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்!”
பிக்னிக்...
டூர் என்றாலே... 'நிறைய தண்ணீர் இருக்கற ஆறு, அருவினு பார்த்துப் போடுங்க'
என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குஷியாவார்கள். ஆனால்,
இப்படிப்பட்ட நீர்நிலைகளைத் தேடி உற்சாகமாக ஓடுபவர்கள்... ஆவல் மிகுதியால்
அவற்றிலிருக்கும் ஆபத்துகளை மறந்து குதியாட்டம் போட... கடைசியில், 'பாண
தீர்த்த அருவிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் நீரில் மூழ்கி பலி',
'தேக்கடியில் படகு கவிழ்ந்து 30 சுற்றுலா பயணிகள் மரணம்' என்று தலைப்புச்
செய்திகளாகி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துவிடுகிறார்கள்!
''நீர்நிலைகளில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்குக்
காரணமே... சுயதவறுகள்தான். எச்சரிக்கை பலகைகளை மதிக்கத் தவறுவது,
பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றத் தவறுவது போன்றவையே உயிருக்கு உலை
வைக்கின்றன'' என்று சொல்லும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
துறையின் திண்டுக்கல் நிலைய அலுவலர் புருஷோத்தமன், நீர்நிலைகளில்
காத்திருக்கும் ஆபத்துகளையும், தப்பிக்கும் வழிகளையும் அக்கறையுடன்
அடுக்கினார்.
குளத்தில் காத்திருக்கும் ஆபத்து!
கோயில்களுக்குச் செல்வோர், அங்கிருக்கும் நீர் நிறைந்த
கோயில் குளத்தைப் பார்த்ததும் உடனே இறங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால்,
குளத்தின் படிக்கட்டுகளில் இருக்கும் பாசி, சட்டென்று வழுக்கி ஆளையே காவு
வாங்கிவிடும். பொதுவாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் குளம் என்றால்,
அதிகமாக பாசி இருக்காது. பயன்பாடு குறைவான இடமாக இருந்தால்... தனியாக இறங்க
நினைக்கும்போது, பாசியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே,
குளத்தின் தன்மை, படிகள் வழுக்குமா என்பதைஎல்லாம் அங்குள்ளவர்களிடம்
கேட்டுத் தெரிந்து, அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
தப்பிக்கும் வழி: குளம்,
ஏரி போன்ற தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் ஒருவர் தவறி
விழுந்துவிட்டால், பதற்றத்தில் அனைவருமே உள்ளே குதிப்பது போன்ற மடத்தனம்
வேறில்லை. மேலே இருப்பவர்களில் யாருக்காவது நீச்சல் தெரிந்தால் மட்டுமே
முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், உதவிக்கு வேறு யாரையாவதுதான் அழைக்க
வேண்டும். மீட்பு முயற்சியில் இறங்குபவர்கள், மூழ்கிக் கிடப்பவரின் தலை
முடியைக்கொத்தாக பிடித்துத் தூக்க வேண்டும். உடலின் வேறு பாகங்களைத்
தொடக்கூடாது. அப்படி தொட்டால், பயத்தின் காரணமாக, காப்பாற்றுபவரையும்
தண்ணீருக்குள் மூழ்கடித்துவிடுவார்கள்... ஜாக்கிரதை!
அச்சமூட்டும் ஆறுகள்!
'வெளியூர்க்காரனுக்கு ஆறு பயம்... உள்ளூர்க்காரனுக்கு
பேய் பயம்' என்பார்கள். அதற்குக் காரணம், ஆறுகளின் ஆழம் தெரியாமல் காலை
விடக்கூடாது என்பதுதான். பொதுவாக ஆறுகளில் அதன் வேகத்தின் காரணமாக
நீர்சுழல்கள் இருக்கும். அதிலும் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி
என்றால், கேட்கவே தேவையில்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கல்லணை,
அணைக்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் முதலைகள் நிறைந்திருக்கும். இதுபோன்ற
இடங்களுக்குச் செல்வோர், சட்டென்று தண்ணீரில் இறங்கிவிடக் கூடாது.
கோடைகாலத்தில், இந்த ஆறுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும்.
அவற்றிலும் முதலைகள் காத்திருக்கக்கூடும்! முதலைகளிடம் சிக்கிய பிறகு
மீள்வது சுலபமில்லை.
விழுங்கக் காத்திருக்கும் புதைகுழிகள்!
அணைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து தண்ணீர் தேங்கி
இருப்பதால், அணைகளின் கரையோரப் பகுதிகளில் புதைமணல் இருக்கும். இது
தெரியாமல் கால் வைத்தால், அதோகதிதான்! திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு
அணைப்பகுதியில் இப்படிப்பட்ட புதைமணல் குழிகள் நிறையவே இருக்கின்றன. இதில்
ஆண்டுதோறும் மரணத்தைத் தழுவுவோரின் பட்டியல் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
தப்பிக்கும் வழி: பொதுவாக
இப்படி புதைகுழியில் சிக்கிக்கொள்பவர்கள் உடனடியாக உள்ளே போய்விட
மாட்டார்கள். காப்பாற்ற அவகாசம் கிடைக்கும். நீச்சல் தெரியும் என்றாலும்,
நேரடியாக குதித்து காப்பாற்ற நினைக்கக் கூடாது. நீளமாக கம்பு, கயிறு
போன்றவற்றை கொடுத்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். வேறு வழியில்லாதபோது,
நீச்சல் தெரிந்தவர்கள், கயிறு ஒன்றை எடுத்து ஒரு முனையை
கரையிலிருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு, மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு
காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். புடவை, துப்பட்டா என கிடைத்ததைப்
பயன்படுத்தலாம்.
கலங்கவைக்கும் கடல் அலைகள்!
பொங்கி வரும் கடல் அலைகளைப் பார்த்ததுமே இறங்கி
விளையாடத் தோன்றும். ஆனால், இது மிக மிக ஆபத்தான ஒன்று. எச்சரிக்கை பலகை
வைக்கப்பட்டிருக்கும் கடல் பகுதி என்றால், கண்டிப்பாக கால் நனைப்பதைக்கூட
தவிர்த்துவிடுங்கள். குளிக்கக்கூடிய கடல் பகுதி என்றாலும் உஷார்... உஷார்.
தப்பிக்கும் வழி: ஒருவேளை
கடல் அலைகளில் சிக்கிக்கொண்டால் பதற்றப்படாதீர்கள். அலை வரும்போது,
நீருக்குள் மூழ்கி அலைக்கு அடியில் செல்லுங்கள் அல்லது குதித்து அலையின்
மேலே எழ முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் ஒரு சில அலைகளே உங்களை
கரைபக்கம் ஒதுக்கிவிடும்.
படகு சவாரி... ஜாக்கிரதை!
படகு சவாரி இல்லாத சுற்றுலா தலங்கள் மிகக்குறைவு.
ஆனால், இப்படி சவாரி செல்லும்போது, உயிர்காக்கும் கவச உடைகளை
அணிந்துகொள்வது முக்கியம். ஒரே பக்கமாக அனைவரும் சென்றுவிடக் கூடாது.
அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏறக்கூடாது போன்றவற்றை எல்லாம் கடைப்பிடியுங்கள்.
ஒருவேளை படகு ஓட்டுபவர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு

இஷ்டம்போல
ஆட்களை ஏற்றினாலோ... உயிர்காக்கும் சாதனங்கள் இல்லையென்றாலோ... பயணத்தையே
தவிர்த்துவிடுங்கள். 'இவ்வளவு தூரம் வந்துட்டு, படகுல போகலைனா எப்படி?'
என்று ஏறினால், அன்றைக்கு பார்த்துகூட அங்கே படகு விபத்து நடக்கலாம்...
யார் கண்டது?
தப்பிக்கும் வழி: படகு
கவிழ்ந்து விபத்து ஏற்பட்டால்... உடனே பயந்துவிடக் கூடாது. தண்ணீரில்
விழுந்தவுடன் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிடாமல், விழுந்த படகு... அல்லது
லைப் ஜாக்கெட் என ஏதாவது கைக்கு அருகில் கிடைக்கிறதா என பாருங்கள். நீரில்
மூழ்காமல் சற்று தாமதப்படுத்த முடிந்தால் போதும்... அதற்குள் உதவிகள்
கிடைத்துவிடக்கூடும்'' என்று ஒவ்வொன்றை யும் தெளிவாக விவரித்தார்
புருஷோத்தமன்.
அழகு ஆபத்து = அருவிகள்!
அருவிகள் என்றாலே அழகோடு ஆபத்தும் நிறைந்தே இருக்கும்.
குற்றாலம், பாபநாசம், காளிகேசம், கும்பக்கரை, ஒகனேக்கல், அதிரப்பள்ளி என்று
எந்த அருவிக்குச் சென்றாலும், அவற்றின் ஆபத்தான பக்கத்தைப் பற்றி முதலில்
தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த அருவிகளில் எல்லாம் தண்ணீர் விழும்
இடங்களில் ஆபத்தான பாறைகள் நிறைந்திருக்கும். இவற்றுக்குள் குதித்தால்,
பாறைகளில் சிக்கிக்கொண்டு பரலோகம் போக வேண்டியதுதான். அருவிகளின்
மேற்புறத்துக்குச் சென்று குளிப்பதும் ஆபத்தானது. கொஞ்சம் தவறினாலும்,
பாறைகளின் வழியாக வழுக்கிச் சென்று, பல அடி உயரத்திலிருந்து கீழே விழும்
அருவி நீருக்கு இரையாக நேரிடும்.
Post a Comment