குஜராத்தில் ஜூ.வி.!
'ரட்சகர்’ என்று சிலரும் 'ராட்சஷர்’ என்று சிலரும் அவரை
அடையாளப்படுத்துகிறார்கள். 'திறமையான ஆளுமை கொண்டவர்’ என்று சிலரும்
'திமிரான நடத்தை கொண்டவர்’ என்று சிலரும் அவரைக் கணிக்கிறார்கள்.
'ஆளுமைமிக்க அரசியல்வாதி முதன்முறையாக இந்தியாவுக்குக் கிடைத்துள்ளார்’
என்று சொல்லப்படும் நேரத்தில், 'ஒரு சர்வாதிகாரி, ஜனநாயகத் தேர்தலில்
போட்டியிடுகிறார்’ என்று சிலர் கருத்துச் சொல்கிறார்கள். 'குஜராத்
மாநிலத்தை பத்தே ஆண்டுகளில் வளர்ச்சியடைய வைத்துவிட்டார்’ என்று சிலர்
மகிழ்ச்சியில் துள்ள, 'வளர்ச்சி என்ற பெயரால் அவர்கள் காட்டுவது அனைத்தும்
பம்மாத்துதான்’ என்று சிலர் துள்ளத்துடிக்கக் கொத்திப்போடுகிறார்கள்.
'இந்தியாவின் முதன்மை மாநிலமாக குஜராத் மாறிவிட்டது’ என்று சிலர்
சொல்லும்போதே, 'வறுமை தோய்ந்து, வளர முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாநிலம்
அது’ என்று சிலர் இருண்ட பக்கங்களை அடையாளம் காட்டுகிறார்கள். 'கொடூரக்
கொலைகள் 2002-ல் அரங்கேற்றியதை மறக்கவில்லையா?’ என்று சிலர் கேட்கும்போது,
'10 ஆண்டு காலத்தில் எந்த மத வன்முறையும் இல்லையே’ என்று சிலர் பதில்
சொல்கிறார்கள்.
இந்திய வரலாற்றில் சமீப காலத்தில் இவ்வளவு பாராட்டையும்
இவ்வளவு எதிர்ப்பையும் எந்தத் தனிமனிதனும் நரேந்திர மோடியைப்போலப் பெற்றது
இல்லை!
'மோடி நல்லவரா கெட்டவரா?’ என்ற கேள்வியைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டது, 'உண்மையிலேயே குஜராத் வளர்ச்சி அடைந்திருக்கிறதா...
இல்லையா?’ என்ற கேள்வி. ''நான் பிரதமர் ஆனால், இந்தியாவையே குஜராத் மாதிரி
வளர்ச்சியடையச் செய்வேன்!’ என்றுதான் மோடியும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம்
செய்து கொண்டிருக்கிறார். ''சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, தொழில்
வளர்ச்சி... என்று அனைத்துத் துறைகளிலும் குஜராத் நாட்டுக்கே முன் உதாரணமாக
இருக்கிறது'' என்று முகேஷ் அம்பானி தொடங்கி ரத்தன் டாடா வரை குஜராத்தை
தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். ''நீங்கள் குஜராத்தில் ஒரு ரூபாய்
முதலீடு செய்தால், ஒரு டாலரை லாபமாக எடுத்துக்கொண்டுச் செல்லலாம்'' என்று
மந்திரவாதியைப்போல மோடி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று 2005-ம் ஆண்டு
நடந்த இரண்டாவது வைபரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்கு இந்தியாவின் மிக
முக்கியமான பண முதலைகளான முகேஷ் அம்பானியும், சஷி ரூய்யாவும் கவுதம்
அதானியும் வந்து காத்திருக்கிறார்கள். ''எந்தத் திட்டத்தையும் நாங்கள்
டெண்டர் விடுவது இல்லை. மாறாக, அரசாங்கத்தின் திட்டங்களை முதலீட்டாளர்கள்
முன்பு வைப்போம். விருப்பம் உள்ளவர்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம்
செய்துகொள்ளலாம். அதாவது, அந்தத் திட்டத்தை தங்களுடையது ஆக்கிக்கொள்ளலாம்.
லாபத்தை அவர்கள் எடுத்துச் செல்லலாம்'' என்று படோடபமாக அறிவிக்கிறார் மோடி.
ஆனால், இதனை அவரது எதிர்ப்பாளர்கள் நம்பத் தயாராக இல்லை. ''அது
அப்பாவிகளுக்கான அரசாங்கம் அல்ல. அம்பானிகளுக்கான அரசாங்கம்தானே!'' என்று
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார்.
''மோடியின் ஆட்சிக் காலத்தில் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு குஜராத்தில் வரிவிலக்கு சிறப்பாக அளிக்கப்படுகிறது.
முதலாளித்துவம் கூறுகிற வளர்ச்சி என்பது, இந்தப் பூமியின் வளத்தை
ஒருசிலருக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் வளர்ச்சி ஆகும்.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனை அழித்து மனிதனை வாழவைப்பதாகச் சொல்வது.
குஜராத்தில் எல்லாம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆம், எல்லாம்
இருக்கிறது. ஊழல் இருக்கிறது. சாதி, மத வெறி இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு
இருக்கிறது. மக்கள் சொத்து தனியார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பச்சிளம்
குழந்தைகள் சாவு இருக்கிறது'' என்று குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகிறது.
''மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரிலையன்ஸ்,
எஸ்ஸார் குழுமம், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய பெரிய தொழிற்குழுமங்கள்
குஜராத்தில் இயங்கிவருகின்றன. மேலும், குஜராத் என்பது பாரம்பரியமாகவே
வணிகர்கள் நிறைந்த மாநிலம். மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில்
குஜராத்தில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் வளர்ச்சிகள் எல்லாமே
மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள். ஒரு மாநிலம் உண்மையிலேயே முன்னேறி
இருந்தால், கல்வியிலும் சுகாதாரத்திலும் அந்த மாநிலம் வளர்ச்சி
அடைந்திருக்க வேண்டும். ஆனால், ஹெல்த் இண்டக்ஸ் என்று குறிப்பிடப்படும்
அளவுகோளின்படி, அது மற்ற மாநிலங்களைவிட பல நிலைகள் பின்தங்கி இருக்கிறது.
மத்திய அரசு போட்டிருக்கும் பளபளப்பான சாலைகளையும், ஒருசில ஷாப்பிங்
மால்களையும் சில நிறுவனங்களையும் மட்டும் பார்த்துவிட்டு குஜராத் வளர்ச்சி
அடைந்துவிட்டது என்று வாய்பிளப்பது அபத்தம்'' என்று எதிராளிகள் முஷ்டி
முறுக்குகிறார்கள்.
இப்படி எதிரும் புதிருமான மேலோட்டமான விமர்சனங்களே அவரை
ஆதரித்தும் எதிர்த்தும் வைக்கப்படுகின்றன. இப்படி அங்கொன்று இங்கொன்று
என்று சில கருத்துக்களையும் காட்சிகளையும் மட்டும் பார்த்தால் உண்மையை
புரிந்துகொள்ள முடியாது. ஆகையால், குஜராத் இன்று வளர்ந்திருக்கிறது என்று
சொல்வது எந்த அளவுக்கு உண்மை, அப்படி வளர்ந்திருந்தால் மோடியால் வளர்ந்தது
எந்த அளவு... என்று வாசகர்களின் மனதில் எழுந்துள்ள ஏராளமான கேள்விகளுக்கு
விடைதேடித்தான் நம் பயணம் அமைந்திருந்தது!
எங்களின் கேள்விகளோடு, வாசகர் களாகிய நீங்கள்
அனுப்பியிருந்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடைகளைத் தேடி குஜராத் சென்று
ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து இரண்டு வார காலம் சுற்றினோம். குஜராத்தின்
தலைநகர் காந்திநகரில் அமைந்திருக்கும் சச்சிவாலே (தலைமைச் செயலகம்) தொடங்கி
'சீ சீ’ என்று மூக்கை மூடச் சொல்லும் பாம்பே ஹோட்டல் என்று
குறிப்பிடப்படும் தாலிலிமடா குடிசைப் பகுதிகள் வரை; பால் பெருக்கெடுத்து
ஓடும் ஆனந்த் முதல் மோடி பிறந்து வளர்ந்த வத்நகர் வரை பல ஊர்களில்
சுற்றினோம். 'அமைதி திரும்பிவிட்டது’ என்று சொல்லும் இஸ்லாமியத்
தொழிலதிபரையும் பார்த்தோம். 12 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் தன்னுடைய
சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சொந்த மாநிலத்திலேயே அகதியாக வாழும்
இஸ்லாமியக் குடும்பத்தின் இருட்டு வாழ்க்கையையும் பார்த்தோம். அரசு
அதிகாரிகள் புள்ளிவிவரங்களைச் சொல்லி மலைக்கவைக்கிறார்கள். அந்த
புள்ளிவிவரங்களில் உள்ள அபத்தமான சில விஷயங்களை குஜராத் அறிஞர்கள்,
கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மறுத்துச்
சொல்கிறார்கள். தொழிலாளிகள், விவசாயிகள், புறம்தள்ளப்பட்டவர்கள்... என்று
பலதரப்பட்டவர்களோடும் பேசினோம். குஜராத்தில் நாம் பார்த்து வியந்ததும்
உண்டு. கேட்டுத் துடித்ததும் உண்டு. கைகொட்டிச் சிரித்ததும் உண்டு. மலைத்து
நின்றதும் உண்டு. அத்தனையும் இனி வாசகர்களுக்காக!
- தொடரும்..
ஆதாரங்களின் அடிதளத்தில்...
Human Development Report 2013 released by the United
Nations Development Programme (UNDP), The Comptroller and Auditor
General (CAG) Report, Gujarat Industrial Policy, Socio - Economic Review
2012 -13 மற்றும் 2011 சென்சஸ் ரிப்போர்ட் மற்றும் சமூகநல அமைப்புகள்
தயாரித்து அளித்திருக்கும் அறிக்கைகள் ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் இந்தக்
கட்டுரைத் தொடர் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மோடியின்
ஆட்சியில் தொழில் வளர்ச்சி எந்த அளவுக்கு நடைபெற்றிருக்கிறது? அதற்கு
முன்னதாக குஜராத் எப்படி இருந்தது? அந்த மாநில அரசு சொல்லும்
புள்ளிவிவரங்கள் உண்மையா?
தொழிற்சாலைகளுக்கு
நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு அதற்கான நியாயமான விலை
கொடுக்கப்பட்டிருக்கிறதா? விவசாயிகளின் நிலத்தையும் எதிர்காலத்தையும்
விலையாகக் கொடுத்துத்தான் தொழில் வளர்க்கப்படுகிறதா?
மின் தட்டுப்பாடுள்ள மாநிலமாக இருந்த குஜராத், மின்மிகை மாநிலமாக வளர்ச்சி கண்டது எப்படி?
மோடியின் கடும் விமர்சகரான அரவிந்த் கெஜ்ரிவாலே புகழும் அளவுக்கு குஜராத்தில் நெடுஞ்சாலைகள் இருப்பதற்கு மோடிதான் காரணமா?
மோடியின்
ஆட்சியில் புதிதாக பல பல்கலைக்கழகங்கள் குஜராத்தில்
ஆரம்பிக்கப்பட்டிருப்பது உண்மையா? ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்
எத்தனை பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள்?
எதிர்க்கட்சியினரின்
விமர்சனங்களுக்கும், சொந்தக் கட்சியினரின் கோரிக்கைகளுக்கும், நாடாளுமன்ற
ஜனநாயகத்துக்கும் மோடி எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறார்?
அங்கு ஊழல் என்பதே இல்லையா? அப்படியானால் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர மோடி தயங்கியது ஏன்?
விவசாயம்
மறுமலர்ச்சியை அடைந்துள்ளதா? புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டுகள் எத்தனை?
முன்பு விவசாயத்தை மறந்த மக்கள், இப்போது விவசாயம் செய்ய வந்துவிட்டார்களா?
மனித உரிமை மீறல்கள், சட்டம் - ஒழுங்கு, சிறுபான்மையினர் நலன் எப்படி பேணப்படுகிறது?
2002-ம் ஆண்டு கொலைகளை இஸ்லாமியர்கள் மறந்துவிட்டார்களா? அன்று அகதிகளாக விரட்டப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்?
மோடி டெல்லி அரசியலுக்கு இடம்பெயர்ந்தால், குஜராத் முதல்வராக அடுத்து வரப்போவது யார்?
- தொடரும்..
Thanks
ஜூனியர் விகடன்
Post a Comment