குறைந்த செலவு...அதிக மகசூல்..
தனித்துவமான
சிந்தனைகள் மூலமாக, சாதுர்யமான செய்முறைகளைக் கடைபிடிக்கக் கூடியவர்கள்,
மிகப்பெரிய வெற்றியை, எளிதாகவே பெற்றுவிடுவார்கள். இதற்கு உதாரணமாகத்
திகழ்கிறார், நாகப்பட்டினம் மாவட்டம், கொந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த
முன்னோடி இயற்கை விவசாயி, பரணி. குறைவான செலவு மற்றும் உழைப்பின் மூலமாக
அதிக பரப்பில் நெல் சாகுபடி செய்து, நிறைவான மகசூல் பார்த்து வரு கிறார்,
இவர்!
கொந்தங்குடி கிராமத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள கோமல் கிராமத்தில் அமைந்துள்ளது, இவருடைய நிலம். அங்கே, பகல்
பொழுதொன்றில் அவரைச் சந்தித்தோம்.
நாற்று உற்பத்தியில் கவனம்!
''இது களியும், மணலும் கலந்த இருமண் பூமி. ரெண்டு
ஏக்கர்ல தென்னை, 30 சென்ட்ல மா இருக்கு. 27 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றேன்.
பத்து வருஷமா இயற்கை விவசாயம்தான். இந்த முறை ஒரு ஏக்கர்ல தூய மல்லி, 11
ஏக்கர்ல வெள்ளைப் பொன்னி, 15 ஏக்கர்ல சி.ஆர்-1009 ரக நெல்லுனு சாகுபடி
செஞ்சுருக்கேன். இந்தப் பகுதிகள்ல நெல்லுல இலைப்புள்ளி நோய், மஞ்சள் நோய்,
இலைக்கருகல் நோய்கள் அதிகம் தாக்கும். ஆனா, என்னோட நெற்பயிர்கள்ல
கொஞ்சம்கூட இந்த பாதிப்புகள் இல்ல. பூச்சித் தாக்குதல்களும் இல்லாம
ஆரோக்கியமா விளைஞ்சுருக்கு. தண்டுகள் நல்லா திடகாத்திரமா உறுதியா இருக்கு.
அதுக்குக் காரணம் வளமான நாற்றுகள்தான். நாற்றங்கால்லயே நல்ல ஊட்டம்
கொடுத்து வளத்துட்டோம்னா, பயிர் எந்த பங்கமும் இல்லாம வளந்துடும். இதனால,
செலவையும் உழைப்பையும் பலமடங்கு குறைச்சுடலாம்'' என்று வியக்க வைத்த பரணி,
தொடர்ந்தார்.
களைச் செலவைக் குறைக்கும் யுக்தி!
''தரமான நாற்றா இருந்தா, சாகுபடி வயல்ல அதிகளவு எரு போட
வேண்டியதில்லை. ஒரு ஏக்கருக்கு 6 டன் எரு கொடுக்கணும். நான் 27 ஏக்கர்ல
சாகுபடி செய்யறதால, அவ்வளவுக்கும் எரு போட்டு நிரவுறது லேசுப்பட்ட
காரியமில்லை. செலவும் எக்கச்சக்கமா பிடிக்கும். அதைக் குறைக்கறதுக்குத்தான்
நாற்று உற்பத்தியில அதிக கவனம் செலுத்தி, வீரியமான நாற்றுகளை
உருவாக்குறேன். அதேமாதிரி நெல் வயல்ல இன்னொரு பிரச்னை... களை. அதுக்கும்
சுலபத் தீர்வு இருக்கு. சாகுபடி வயல்ல நாற்று நடவு செஞ்ச 20 நாள் வரைக்கும்
ஒரு சென்டிமீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வெச்சுடுவோம். அதனால களைகள்
அதிகமா வர்றதில்லை. 20 நாளுக்கு மேல பயிர்கள் வளர்ந்து, நிழல்
விழுந்துடும். அதுக்கப்பறம் களைகள் வளர சூரிய ஒளி கிடைக்காது. அதுக்குப்
பிறகு, மண்ல ஈரம் இருக்குற அளவுக்கு வாரம் ஒரு தடவை மட்டும் தண்ணீர்
கொடுப்போம். இந்த மாதிரி செய்றதால, ஒரு ஏக்கருக்கு களையெடுக்க அதிகபட்சமா
ஆயிரம் ரூபாய்தான் செலவாகுது. வழக்கமா 2 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கக்
கூடிய வேலை இது'' என்றபடி வயலைச் சுற்றிக் காட்டிக்கொண்டே வந்த பரணி,
பம்ப்செட் தண்ணீர் கொட்டும் இடத்தில் வந்து நின்றார்.

அங்கிருந்த ஐந்து சிமெண்ட் தொட்டிகளைச் சுட்டிக்காட்டி
பேசியவர், ''நடவுக்குப் பிறகு, பாசன தண்ணியில கலந்துவிடும் உயிர்
உரக்கரைசல் தயாரிக்கறதுக்கான தொட்டிங்கதான் இதெல்லாம்...
மீன் சந்தைகள்ல
இலவசமா கிடைக்கற கழிவுகளை அரைச்சி, ஒரு தொட்டிக்கு அரை கிலோ வீதம்
போட்டுடுவோம். அதோட, ஒவ்வொரு தொட்டியிலயும் 2 கிலோ பழக்கழிவு, 1 கிலோ
சாணம், 3 லிட்டர் மாட்டு மூத்திரம், அரை கிலோ வெல்லம் போட்டு கலக்கிடுவோம்.
கூடவே... அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா
விரிடி இது ஒவ்வொண்ணுலயும் 200 கிராம் அளவுக்குச் சேர்த்து, 15 லிட்டர்
தண்ணி ஊத்தி, கொஞ்சம் புளிச்ச மோர் சேர்த்து... ஈரச்சாக்குப் போட்டு
தொட்டியை மூடி, தினமும் ரெண்டுவேளை கலக்கி விடணும்.
பத்து நாள்ல இதுல
ஏகப்பட்ட நுண்ணுயிரிகள் பெருகி, நல்ல உயிர் உரமா மாறிடும். ஒரு தொட்டியில
இருக்கற கரைசல், ரெண்டு ஏக்கருக்கு போதுமானது. இந்தக் கரைசலை, நெல்
வயலுக்கு பாசனத் தண்ணியோட கலந்து விடும்போது விளைச்சல் அருமையா இருக்குது''
என்று சொன்ன பரணி, நாற்று உற்பத்தி, நெல் வயல் தயாரிப்பு மற்றும்
பராமரிப்பு முறைகளை விளக்கினார். அது பாடமாக... இங்கே விரிகிறது!
ஏக்கருக்கு 25 கிலோ விதை நெல்!
'ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு, எட்டு சென்ட் நிலத்தில்
நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஒன்றரை டன் மாட்டு எரு போட்டு, சேற்றுழவு
செய்து சமப்படுத்தி,
2 சென்டி மீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் கட்ட வேண்டும்.
ஒரு மாதம் வரை இதுபோல் தண்ணீர் நிறுத்தி, பழஞ்சேறாக்கி நன்கு புளிக்க
வைக்க வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் அதிகம் பெருகும். களைகள் வளர்ந்தால்,
அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான 25 கிலோ விதை நெல்லைத் தெளித்து, எப்போதும் ஈரம்
இருக்குமளவுக்கு தண்ணீர் விட்டுப் பராமரிக்க வேண்டும்.
விதைத்த 20-ம் நாள்,
300 மில்லி பஞ்சகவ்யா, தலா 50 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை
10 லிட்டர் தண்ணீரில் கலந்து பரவலாகத் தெளிக்க வேண்டும்.
இப்படிப்
பராமரித்தால், 25-ம் நாளில், 25 சென்டி மீட்டர் உயரத்தில் தரமான நாற்றுகள்
நடவுக்குத் தயாராகிவிடும்.
ஏக்கருக்கு 2 டன் மகசூல்!
நாற்று தயாரிப்பதற்கு முன்னதாகவே சாகுபடி நிலத்தைத்
தயாரிக்க வேண்டும். ஏக்கருக்கு 12 கிலோ வீதம் சணப்பு விதைகளைத் தெளித்து,
45-ம் நாள் மடக்கி உழவு செய்யவேண்டும். நன்கு மட்கிய 200 கிலோ கரும்பு
ஆலைக் கழிவுடன், 600 மில்லி பஞ்சகவ்யா, தலா 150 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம்,
டிரைக்கோ டெர்மா, பாஸ்போ-பாக்டீரியா, 5 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக்
கலந்து... நிழலில் பரப்பி, ஈரச் சாக்கால் மூடி வைக்க வேண்டும். தினமும்
இக்கலவையைக் கிளறி விட்டு சாக்கை ஈரப்படுத்த வேண்டும். 15 நாட்களுக்குப்
பிறகு, அடியுரமாக சாகுபடி நிலத்தில் போட வேண்டும்.
வழக்கமான முறையில் நாற்றுகளை நடவு செய்து, 20 நாட்கள்
வரை ஒரு சென்டி மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும்.
நடவிலிருந்து
15-ம் நாள், ஏக்கருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில்
கலந்து தெளிக்கவேண்டும்.
ஏக்கருக்கு 20 நாட்கள் இடைவெளியில் 3 முறை பஞ்சகவ்யா தெளிக்கவேண்டும்.
நடவிலிருந்து 21-ம்
நாள், நிலம் முழுக்க பரவலாகக் காலால் மிதித்துவிட வேண்டும். இதன் மூலம்
மண்ணில் இருக்கக்கூடிய தேவையற்ற வாயுக்கள் வெளியேறும்.
களைகள் இருந்தால்,
கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 22-ம் நாள் சிமென்ட் தொட்டியில்
தயாரிக்கும் உயிர் உரக் கரைசலை பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். அடுத்த ஒரு
மாதத்தில் இதேபோல உயிர் உரக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.'
நிறைவாகப் பேசிய பரணி, ''வேறு எந்தப் பராமரிப்போ,
பூச்சிக்கொல்லியோ தேவை யில்ல. இந்த நுட்பங்களை மட்டும் கடைபிடிச்சாலே...
எந்த நெல் ரகமா இருந்தாலும் ஏக்கருக்கு சராசரியா 2 டன் வரை நெல் மகசூல்
எடுக்கலாம்.
இனிமே அரிசியா அரைச்சு விற்பனை செய்யத் தீர்மானிச் சுருக்கேன்.
ரெண்டு டன் நெல்லை அரிசி யாக்கும்போது ஒரு டன் அரிசி கிடைக்கும். இந்த
அரிசியை சோழ மண்டல ஆர்கானிக் புரொடியூசர் கமிட்டி எனும் தனியார் அமைப்பு
மூலமா விற்பனை செய்யும்போது, தூயமல்லி அரிசி கிலோ 55 ரூபாய்க்கு விலை
போகும். வெள்ளைப் பொன்னி அரிசி50 ரூபாய்க்கும், சி.ஆர்-1009 ரக அரிசி 32
ரூபாய்க்கும் விற்பனை ஆகும்'' என்று கண்களில் தெம்பு மின்ன சொன்னார்.
தொடர்புக்கு, பரணி,
செல்போன்: 94862-78569
Post a Comment