சிறுசேமிப்பு--சேமிப்பின் சிறப்பு,
சிறுசேமிப்பு "உங்கள் கண்மணியை கடனாளியாக்காதீர்கள் ! கல்விச் செலவுக்கு கைகொடுக்கும் 'கலக்கல்' திட்டம் ! சிறுசேமிப்பு மூ...


சிறுசேமிப்பு
"உங்கள் கண்மணியை கடனாளியாக்காதீர்கள் !
கல்விச் செலவுக்கு கைகொடுக்கும் 'கலக்கல்' திட்டம் !
சிறுசேமிப்பு மூலமே, உங்கள் கண்மணிகளை 'கல்விக் கடனாளி' ஆக்காமல், அவர்கள் விருப்பப்படும் கல்விக்கான செலவுகளை ஈடுகட்டிவிட முடியும் என்றால்... வேறென்ன வேண்டும்?!
எந்தத் துறையில் பணியாற்றினாலும், அங்கே அதிரடியாக புதுமைகளைப் புகுத்தி, மொத்த துறையையும் முழுக்க மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றிவிடக்கூடிய குணம் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகையோரில் ஒருவராக இருக்கும் சி.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., தற்போது தமிழ்நாடு சிறுசேமிப்புத் துறையின் ஆணையராக இருக்கிறார். அவர் கொடுக்கும் ஐடியாதான்... "கண்மணிகளை கல்விக் கடன்காரர்கள் ஆக்காதீர்கள்" என்பது!
"பணத்தைப் பெருக்குவதற்காக ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், சிட் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என்று ஆயிரத்தெட்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சிறுதுளிகூட ஆபத்து இல்லாமல் பணத்தைப் பெருக்குவதற்கு ஏதாவது வழி சொல்ல முடியுமா? என்று யாராவது கேட்டால், சந்தேகமே இல்லாமல் அடித்துச் சொல்லலாம்... அஞ்சலக சிறுசேமிப்பு! வீட்டிலிருக்கும் உண்டியலில் சேமிப்பதைவிட, மிகச்சிறப்பான பாதுகாப்போடு, பணத்தையும் பெருக்கக்கூடிய ஓர் இடம் இருக்கிறது என்றால்... அது அஞ்சலக சிறுசேமிப்புதான்.
தமிழ்ப் பெண்கள், ஆதிகாலம் தொட்டே சிறுசேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர்கள். அந்தக் காலத்தில் 'சிறுவாட்டு காசு' என்று தனியாக ஒரு சேமிப்பு, பெண்களிடம் இருக்கும். குடும்பத்தின் அவசரத் தேவை, கல்விச் செலவு என்று எல்லாவற்றுக்கும் பயன்படுவது இந்தச் சிறுவாட்டுச் சேமிப்புதான்! இப்படி சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து வைக்கத்தான் நம்முடைய அரசாங்கம், அஞ்சலகம் மூலம் சிறுசேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது மற்றும் அவசரத் தேவைகள் என்று அனைத்துக்கும் உதவக்கூடிய சீரிய திட்டம் என்றால்... அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்) என்பதைச் சொல்லலாம். 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டிய இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தது 10 ரூபாயில் ஆரம்பித்து சேமிக்கலாம். இதற்கு 7.5% கூட்டுவட்டி வழங்கப்படுகிறது. ரூ. 50 வரையிலான மாதாந்திர முதலீட்டுக்கு இலவச ஆயுள் காப்பீட்டு வசதியும் இருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன்பெறும் வசதியும் இதில் உண்டு.
18 முதல் 53 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத் தில் சேரலாம். முதலீடு செய்பவர் 24 மாதங்கள் வரை தவறாமல் தவணை செலுத்தி வந்து, திடீரென உயிரிழக்க நேர்ந்தால், வாரிசுதாரருக்கு ஐந்தாண்டு முடிவில், முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பெண்கள்தான் களத்தில் வலம் வருகிறார்கள். உங்கள் இருப்பிடத்துக்கே மாதந்தோறும் வந்து பணத்தைப் பெற்று அஞ்சலகங்களில் சேர்ப்பித்து விடுவார்கள்" என்று சொன்ன உமாசங்கர், அடுத்து பி.பி.எஃப். பக்கம் கவனத்தைத் திருப்பினார்.
"மியூச்சுவல் ஃபண்டில் போட்டால், இத்தனை லட்சம் கிடைக்கும், அத்தனை லட்சம் கிடைக்கும் என்று வரும் விளம்பரங்களைக் கண்டவுடன், என்ன... ஏது என்று விசாரிக்காமல், லட்சாதிபதி கனவுகளோடு பலரும் அதில் போய் விழுகிறார்கள். ஆனால், அந்த விளம்பரங்களில் கண்களுக்குத் தெரியாத எழுத்தில் 'மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை' என்று எழுதப்பட்டிருப்பதை கவனிப்பதில்லை.
பெரிய பெரிய நிதி நிறுவனங்கள்கூட, 'இந்தத் தொகையைப் போட்டால்... இவ்வளவு ரூபாய் கிடைக்கும்' என்று சேமிப்பு விஷயத்தில் துல்லியமாக கணக்குகளைச் சொல்வதில்லை. மாதம்தோறும் வட்டி மட்டுமே பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று துல்லியமாக கணக்குப் போட்டுச் சொல்லப்படுவது மத்திய அரசின் இத்தகைய சேமிப்புத் திட்டங்களில்தான்.
'பொது சேம நல நிதி' என்று சொல்லப்படும் 'பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்' (PPF) திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானலும் சேர முடியும். முதலீட்டுக்கு 8 சதவிகிதம் கூட்டுவட்டி வழங்கப்படுகிறது. ரூ. 70 ஆயிரம் வரையிலான முதலீட்டுக்கும், வட்டிக்கும் முழுமையான வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. நாட்டுடமையாக்கப்பட வங்கிகள், தலைமை அஞ்சலகங்கள், மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐ.டி.பி.ஐ., யூ.டி.ஐ., விஜயா போன்ற வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் கணக்குத் தொடங்க லாம். ஓரிடத்தில் தொடங்கும் கணக்கை, இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். அஞ்சலகங்களில் இருந்து வங்கிக்கும், வங்கியில் இருந்து அஞ்சலகக் கணக்குக்கும்கூட மாற்றிக் கொள்ள முடியும்.
எப்படி சேமிப்பது என்பதை உதாரணமாக பார்த்தால்... ஒருவர் 20 வயதிலிருந்து ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் (ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்) அல்லது மாதம் ரூ.2,085 மட்டும் இந்தக் கணக்கில் சேமிக்க ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். 36 ஆண்டுகளுக்கு பின்பு... அதாவது, 56-ம் வயதில் அவருடைய கணக்கில் 50 லட்சத்து 51 ஆயிரத்து 732 ரூபாய் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக 3 லட்சத்து, 74 ஆயிரத்து 202 ரூபாய் கிடைக்கும். இதை மறுபடியும் சேமிப்புக் கணக்கிலேயே சேர்த்துவிட்டால், மாதம் 31 ஆயிரத்து 184 ரூபாய் வீதம் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் சேமிப்புத் தொகை அப்படியே இருக்கும். என்ன... ஒய்வு காலத்தை ஜாலியாக கழிக்க நீங்கள் ரெடியா?" என்று கேட்ட உமாசங்கர், அடுத்து கல்விக் கடன் விஷயத்துக்கு வந்தார்.
" 'எனக்கு ஒரு பையன், ஒரு பெண். ஆனால், அவர்களுக்குஎன்று பெரிதாக சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. படிக்க வைப்பதுதான் சொத்தே. ஆனால், மேற்படிப்புச் செலவுகளுக்கு வழியில்லை. பேங்க் லோன் கேட்டு அலைவதற்கு பயமாக இருக்கிறது. வட்டி, குட்டியாக போட்டு வாட்டி எடுத்துடும். என்ன செய்வது?' இப்படி பலரும் கவலைப்படுவார்கள். கடைசி நேரத்தில் இப்படிக் கவலைப்படுவதைவிட, குழந்தை பிறந்ததுமே கொஞ்சம் யோசித்திருந்தால், இதற்கு அவசியமே இருக்காது.
ஆம், உங்கள் குழந்தை பெயரில் பி.பி.எஃப்., கணக்குத் தொடங்கி, ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் (ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்), அல்லது மாதம் ரூ. 2,085 மட்டும் சிறுகச் சிறுக சேமியுங்கள். குழந்தைக்கு 16 வயது ஆகும்போது, வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.60,648 கிடைக்கும். இந்தத் தொகையை மொத்தமாகவோ, மாதம், மாதம் ரூ.5,054 என்ற விகிதத்திலோ பெற்றுக்கொள்ளலாம். அதேசமயம், உங்களுடைய குழந்தையின் சேமிப்புக் கணக்கில் ரூ.8,18,753 அப்படியே இருக்கும். இந்தத் திட்டத்தில் 131.11% வரிச் சலுகையும் உண்டு" என்று விவரித்த உமாசங்கர்,
"கல்விக்காக கடன் வாங்கி, காலமெல்லாம் உங்கள் கண்மணியை கடன்காரன் என்று ஆக்காமல், ஆரம்பத்திலிருந்தே சேமித்து வந்தால், கல்விச் செலவை எளிதாக சமாளித்துவிடலாம். அதுமட்டுமல்ல... மொத்தமாக சுமார் 8 லட்ச ரூபாய் கையில் இருப்பதால், சொந்தமாகத் தொழில் தொடங்கக்கூட முடியும்’’ என்று நிதி ஆலோசனையும் சொன் னார்.
கண்டபடி ஆசைப்பட்டு கடைசியில் 'பேராசை... பெருநஷ்டம்' என்று ஆகாமல், 'சிறுகக்ட்டி பெருக வாழ்'வது.. சிறப்புதானே!
முகவராவது எப்படி?
அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவராக முடியும். முகவராக விரும்புபவருக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி (அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி-யும் ஏற்றுக்கொள்ளப்படும்). இருப்பிட ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல் மற்றும் கல்விச் சான்றுகளுடன், பதிவு பெற்ற அரசு அலுவலர்கள் இருவரிடம் நன்னடத்தைச் சான்று பெற்று, மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) மற்றும் சென்னையில் உள்ள சிறுசேமிப்புத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து முகவர் நியமனம் பெற்றிடலாம். இது பணம் கையாளும் வேலை என்பதால், குறிப்பிட்ட அளவுக்கு கையில் பணம் வைத்திருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆணையர், சிறுசேமிப்புத் துறை, 735, அண்ணா சாலை, சென்னை- 600 002. தொலைபேசி: 044-28527095/28527486.
வட்டியை உயர்த்த வேண்டும்!
சிறுசேமிப்புத் துறைக்குப் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருக்கிறார் உமாசங்கர்.
"சிறுசேமிப்பு மூலம் திரட்டப்படும் தொகை, மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றுக்கு பெரிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. ஆக, அஞ்சலக சேமிப்பு என்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவும் திட்டமாகும். அப்படிப்பட்ட திட்டத்தில் மக்களை மேலும் ஈர்க்க வேண்டும் என்பதற்கு நான் முயற்சி எடுத்து வருகிறேன். அதற்காக சிறுசேமிப்புக்கு வழங்கப்படும், வட்டி விகிதம், வங்கிகள் வழங்குவதைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். வரிவிலக்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் அரசுக்கு எழுதியிருக்கிறேன்" என்ற உமாசங்கர்,
"சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட விளம்பர முயற்சிகள் பெரிதாக பலன் தரவில்லை என்பதால், குறும்படங்கள் மூலம் கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் கூறினார்.
1 comment
Pls give me a details Rs 5051732/-.
Post a Comment