இப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா!
கோவா பீச்சில்.. ஏன் அவ்வளவு தூரம்? பாண்டிச்சேரி,மாமல்லபுரம் போன்ற கடற்கரையோர சுற்றுலா ஏரியாக்களில் ஜோடியாகச் சுற்றும் வெளிநாட்டினரை ...
https://pettagum.blogspot.com/2016/12/blog-post_9.html
நம் சுற்றுலா எப்படி இருக்கும்? தினம் 7 மணிக்கு அடிக்கும் அலாரம் 4 மணிக்கே அடிக்கும். வழக்கத்தை விடப் பரபரப்பாய் வேலைகள் செய்வாள் அம்மா. மதிய உணவு மட்டுமே சமைப்பவள், அன்று மூன்று வேலைக்கும் புளிசாதம் கிளற வேண்டும். (வெயில்காலம் என்றால் கொடைக்கானல், மழைக்காலமென்றால் குற்றாலம்.ரெண்டே சாய்ஸ்தான்) அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்தால் டிரெயின் 2 மணி நேரம் தாமதம் என்பார்கள். ரயில் நிலையத்திலே ”காலை” என எழுதப்பட்டிருக்கும் புளிசாத பாக்கெட் காலியாகும். ரயில் வந்து ஏறுவதற்குள் அதுவும் செரித்துவிடும். ஒரு வழியாகச் சீட் பார்த்து அமர்ந்தால் ஏதேனும் ஒரு bagல் எதாவது ஒன்று கொட்டியிருக்கும். எரிச்சலில் வீட்டுக்காரரை எல்லோர் முன்னாடியும் திட்டும்போதுதான் வீட்டை யார் பூட்டியது, gasஐ யார் மூடியது என்றெல்லாம் தோன்றும். இந்த நினைவுகளோடு ஊட்டிக்கு சென்றால் வெகேஷனா அது?
டெலஸ்கோப் வழியாக வானத்தைக் காண இன்றும் 15 நிமிடங்கள் க்யூவில் நிற்க வேண்டியிருக்கிறது. “மலர்கள் கண்காட்சி” என மனித கூட்டத்தின் மத்தியில் ஏதோ ஒன்றை வருடா வருடம் அரசு நடத்தி வருகிறது. சீசன் டைம் என்பதால் கொடைக்கானல் தெருக்கள் ரங்கநாதன் தெருவாக மாறியிருக்கும்.மாலை 5 மணிக்கெல்லாம் கால் வலிக்க ஆரம்பித்திருக்கும். நண்பர் சொன்ன ஹோட்டலில் சென்று தங்கலாம் என் நுழையும்போது இரவு 9 ஆகியிருக்கும். குடும்பத்திற்குள் மனம் விட்டு பேச ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் சுற்றுலாக்களின் அடிப்படை. அதை மறந்துவிட்டு நிற்க நேரமின்றி ஊர் சுற்றி பார்ப்பதென மாற்றி வைத்திருக்கிறோம். (இன்னமும் “குணா குகைகள்” ஹைலைட்டான விஷயம்.)அடுத்த நாளும் இவை எல்லாம் ரிப்பீட் ஆகி, வீடு வந்து சேரும்போது உடலில் அனைத்து செல்களும் “low battery” எனக் கத்த ஆரம்பித்திருக்கும். இதற்குப் பதில் வேலைக்குச் சென்றிருந்தால் இரண்டு நாள் சம்பளம் கிடைத்திருக்கும், உடல் அசதி ஆகியிருக்காது. பணம் மிச்சமாகியிருக்கும். இதுதான் ஒரு சராசரி இந்தியனின் மனநிலை.
குளிரை மட்டும் ரசிப்பதற்காக மலைஸ்தலங்களுக்கு நாம் செல்வதே இல்லை. “புக்கு படிக்கவா இவ்ளோ தூரம் வந்த”. “பேசிட்டு இருக்கிற நேரத்துல lakeஐயாச்சும் பாத்திருக்கலாம்”. இந்தக் கேள்விகளில் இருக்கும் அபத்தம் நமக்குப் புரிவதே இல்லை. பயணங்களின் போதுதான் நம் அம்மாக்கள் ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கிறது. பின் எப்படி அவர்களுக்கு இது பிடித்தமான ஒன்றாக அமையும்? பிணைப்புகளை இறுக்க வைக்க வேண்டிய பயணங்கள் எரிச்சலை தான் கொடுக்கின்றன. அன்றாட அவசர ஓட்டங்களில் இருந்து ஓய்வை தர வேண்டிய விடுமுறை பயணங்களில் இன்னும்வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த முறை வெகேஷனுக்குக் கிளம்பினால் இதையெல்லாம் செய்யாதீர்கள்
அதிகப்படியான திட்டமிடல்:
செலவை குறைக்க திட்டமிடலாம். ஆனால் அதை ஃபாலோ செய்வதிலே சுற்றுலாவை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போய் விடும். பயணத்தின் அடிப்படையான விஷயம் மகிழ்ச்சிதான். அதை மீறி எதுவுமில்லை என்பதை மறக்க கூடாது
ஓவர் பேக்கிங்:
எந்த ஊர், எந்த சீசன்என்பதை கொஞ்சம் கவனித்தாலே நமது backbagன் சைஸை குறைத்துவிடலாம். அதிக சுமை அதிக பிரச்சினை என்பதுதான் ஃபார்முலா
டெக்னாலஜி:
மனித வாழ்க்கை எளிமையாக்கியதும் டெக்னாலஜிதான். பிரச்சினை ஆக்கியதும் அதுதான். முடிந்தவரை மொபைல், லேப்டாப் வகையறாக்களுக்கு தடா போட்டுவிடுங்கள்.
பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட்:
சுற்றுலாவில் டெட்லைன் கிடையாது. டார்கெட் கிடையாது. அலையை ரசித்தபடி மணிக்கணக்கில் கிடக்க ஆசையென்றால் அதுதான் முக்கியம். இரவு நேர தூறலில் நனைய விருப்பமென்றால் அதுதான் முக்கியம். எத்தனை இடங்களை பார்த்தோம் என்பதல்ல விஷயம். எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாய் இருந்தோம் என்பதே.
ஃபோட்டோஸ்:
புகைப்படங்கள் நமக்கான வரலாறு. கொடைக்கானலின் லொகேஷன் கைட் அல்ல.. சூசைட் பாயிண்ட்டை கூகிள் செய்தாலே லட்சம் புகைப்டங்கள் கிடைக்கும். நாம் நம் அன்புக்குரியவர்களோடு மனம் விட்டு சிரிக்கும் பொழுதுகளை சுட்டு வையுங்கள்
ஓய்வில்லா டைம் டேபிள்
சுற்றுலாவின் இன்னொரு முக்கியமான விஷயம் ஓய்வு. 24 மனி நேரமும் பிசியாக இருக்க அங்கு ஏன் செல்ல வேண்டும்? நிம்மதியாக பொழுதுகளை போக விடுங்கள். நல்ல இசை, புத்தகங்கள் கையோடு எடுத்து செல்லுங்கள். முடிந்தால் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடலாம்.
ஐரோப்பிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் நாடுகளில் எல்லாம் பயண விடுமுறையைச் சலுகையாகப் பார்ப்பதில்லை. அது ஓர் அத்தியாவசியத் தேவை. உடலும் மனமும் ஓய்வு பெற்று recharge செய்து கொள்வது அவசியமானது என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகள் பல இதை ஒரு குற்ற உணர்ச்சியோடே பார்க்கின்றன.
நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம் என்கிறது சீன பழமொழி. பொங்கல் கொண்டாட்டங்களில் ஒரு நாளையே “காணும் பொங்கல்” எனக் கொண்டாடிய தமிழர்களின் வாழ்வில் இப்போது அது அழிந்து கொண்டே வருகிறது. அதை மாற்றுவதும், நம் வாழ்க்கையை இன்னும் சிறப்பாய் வாழ்வதும் நம் கைகளில்தான் உள்ளது.
Post a Comment