நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!
நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர். நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ...
நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும் எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக் கொள்கிறோம்; இது அவசியமில்லை.
ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர் விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.
இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.
ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள், குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக் கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது; சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம் பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.
நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு, மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது; இதுவும், மிக ஆபத்தானது.
இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.
ஆங்கிலத்தில், 'புட் அப்' செய்வது என்று, ஒரு சொல்லாட்சி உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது என்று சொல்லலாம்.
வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது; சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது; சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை, அசல் என்பது; பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, 'சாருக்கு நான் தான் எல்லாம்...' என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.
இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது. உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.
ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்; நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.
இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், 'அந்த ஆளா... சரியான ஷோக்கு பேர் வழியாச்சே...' என்கிற பெயர் தான், கடைசியில் மிஞ்சும்.
தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.
பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும் என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.
நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது, 'உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்... எல்லாம் வசதிக் குறைவால் தான்... என்ன செய்வது...' என்று ஏற்றுக் கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.
பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும், பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒருபோதும், ஈட்டித் தராது.
செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!
லேனா தமிழ்வாணன்
Post a Comment