கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணமும், மகத்துவமும்--சமையல் குறிப்புகள்
இளைத்தவன் எள்ளு விதைப்பான் , கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் , இளைப்பு , களைப்பு உள்ளிட்ட உப...

இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால், இளைப்பு, களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர். இந்த பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால், ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர். மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால், அதனை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். மகத்துவம்: இதேபோல் வனதேவதைகளுக்கு காணிக்கையாக கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள். மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளை ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில்
கூறப்பட்டுள்ளது. ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும். கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்...' என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா? கொள்ளு- பருப்பு பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 கப் கொள்ளு - 1/2 கப் மிளகு - 20 மிளகாய் வற்றல் - 10 பெருங்காயம் - 1 சிட்டிகை உப்பு - 2 டீஸ்பூன் செய்முறை * வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும். * அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும். * பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும். * உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். * வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். உபயோகிக்கும் முறை இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம். சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம். பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி' சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.
1 comment
கொள்ளு துவையல், கொள்ளு பொடி அடிகடி செய்வேன் முன்பு. இப்போது விட்டு விட்டேன்.
உங்கள் பதிவை படித்தவுடன் செய்ய ரெடியாகி விட்டேன்.
நன்றி.
Post a Comment