எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? -- அமுத மொழிகள்
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? ஒரு மனிதன் தினமும் என் னென்ன சிந்திக்க வேண்டும் என் பது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம். * மனிதர்கள் செய்த உத...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_16.html?m=0
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?
ஒரு மனிதன் தினமும் என் னென்ன சிந்திக்க வேண்டும் என் பது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம்.
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.
* நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றி சிந்தியுங்கள்.
* நீங்கள் <உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் இறைவனை வணங்கி கிடைக்கும் பலனை கெடுத்து விடும்.
* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார்.
* அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்.
* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே அவர்களை ஓழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தல் ஆகும்.
* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.
இந்த சிந்தனை மொழிகளை தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.
*********************************************************************************
வாழ்க்கை ஒரு புகை
வாழ்க்கை என்பது என்ன என்பதற்கும், வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது பற்றியும் விளக்கமளிக்கிறது பைபிள். அது என்ன சொல்கிறது என்று தான் கேளுங்களேன்!
* உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்றுநேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை.
* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலிலுள்ள பூவைப்போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.
* என்னுடைய நாட்கள் நெசவாளியின் எறிநாடாக் கருவியை விட வேகம் நிறைந்தவை.
* ரத்த வெறியர்களும், வஞ்சனையாளர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியளவு கூட வாழ்வதில்லை.
* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரையொருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.
*******************************************************************************
கைமாறு கருதிய உதவி எதற்கு?
ஒருவருக்கு உதவும் போது, அவரால் திரும்பவும் நமக்கு உதவி கிடைக்கும் என கருதி செய்வது உபகாரமே ஆகாது. பிரதியுபகாரம் எதிர்பாராத உதவியே நிஜமான உதவியாகும். இதுபற்றி பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?
* நீ விருந்து செய்யும் போது ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக. அவர்கள் பதிலுக்கு பதில் செய்ய முடியாதவர்களாய் இருந்தால் நீ பாக்கியவானாய் இருப்பாய்.
* நீ பகல் விருந்தோ, இரவு விருந்தோ நடத்தும் போது, உன் நண்பர்களையோ, உடன் பிறந்தவர்களையோ, உன் உற்றார் உறவினரையோ, செல்வந்தர்களான அண்டை அயலாரையோ அழைக்க வேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப் பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும்.
****************************************************************************
பள்ளிவாசலில் வீண்பேச்சு எதற்கு?
பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
ஒருமுறை அவர் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக்கேட்டார் நாயகம்.
அதற்கு ஜிப்ரில் (அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர் கள்,'' என்று பதிலளித்தார்கள். பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல் லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்.
பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள், வீண் பேச்சுகளின் மூலம் பாவமூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர் உணர வைக்கிறார். அதுமட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர் உடனே தொழுகைக்கு சென்றுவிடுவார்.
பள்ளிவாசல் பற்றி நபிகள் நாயகம் மேலும் சொல்வதாவது.
* எமது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்) அல்லாஹ் வுக்கு பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார்.
இனியாவது பள்ளிவாசலுக்கு செல்லும் போது வீண்பேச்சு வேண்டாம். சரிதானே!
1 comment
அமுத மொழிகள் அருமை.
இறைவன் சந்நதியில் வீண் பேச்சு எதற்கு!
இறைவன் நாமம் சொல்வோம்.
Post a Comment