விபத்து காப்பீட்டு பாலிசி!---இன்ஷூரன்ஸ்,
விபத்து காப்பீட்டு பாலிசி! பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும் விபத்துகளும்’ என்பதுதான் வருத்தமான பதில். வாகன...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_6154.html?m=0
விபத்து காப்பீட்டு பாலிசி!
வாகனத்தை நாம் சரியாகச் செலுத்தினால்கூட எதிரே வருபவர்கள் தூங்கிக்கொண்டோ, குடித்துவிட்டோ, நிதானம் இல்லாமலோ, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி வந்தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந்த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்னது இது... ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இது ஒரு வரலாறுதானே தவிர எதிர்காலத்திலும் இப்படியே இருக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது!''
இதுதான் உண்மை. விபத்துகளை நம்மால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனென்றால், அது நம் கையில் மட்டும் இல்லை. ஆனால் விபத்தின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கின்றன பாலிசிகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக சாலை, ரயில் மற்றும் விமான விபத்துகளைத்தான் நாம் விபத்து என்கிறோம். ஆனால், இந்த பாலிசிகளில் விபத்து என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அனைத்துமே விபத்துகள்தான். உதாரணத்துக்கு குளியல் அறையில் வழுக்கி விழுவது, மிருகங்களால் தாக்கப்படுவது மற்றும் தீ விபத்து உள்ளிட்ட அனைத்துமே விபத்துகள்தான். ஆனால், செயற்கையாகவோ, தன்னிலை மறந்த நிலையிலோ இந்தச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடாது.
யாருக்கு கிடைக்கும்?
18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். (70 வயதுக்கும் மேலே இருப்பவர்களுக்கு அதிக பிரீமியத்துடன் இந்த பாலிசியை எடுக்க முடியும். அதேபோல 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தங்களது பெற்றோர் மூலமே பாலிசி எடுக்க முடியும்). விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், நாம் செலுத்தும் பிரீமியத்தில் எந்தவித வயது வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே பிரீமியம்தான். அதேபோல், எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லை. நீங்கள் இல்லத்தரசியாக இருக்கலாம், பணி செய்யலாம், படிக்கலாம்... இப்படி எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்கு பாலிசி கிடைக்கும். எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமலே சில நிறுவனங்களில், ரூ. 10 லட்சம் வரையிலும் இந்த பாலிசி எடுக்க முடியும். அதற்கு மேலும் வேண்டும் என்றால் உங்களது வருமானச் சான்றிதழ் தேவைப்படும். சாதாரண மருத்துவ பாலிசிகளைப் போல் உங்கள் குடும்பம் மொத்தத்துக்கும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
என்ன கிடைக்கும்?
காப்பீடு செய்துகொண்டவருக்கு உலகில் எங்கு விபத்து நடந்தாலும், க்ளைம் கிடைக்கும். விபத்தினால் உயிர் இழக்கும்பட்சத்தில் பாலிசி தொகை முழுவதும் வாரிசுதாரருக்கு (ஒரு வேளை வாரிசுதாரர் நியமிக்கப்படவில்லை என்றால், சட்டப்படி அவரது வாரிசுக்கு) கிடைக்கும். விபத்தினால் ஒருவர் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், எடுத்திருக்கும் பாலிசி தொகை முழுவதும் அவருக்குக் கிடைக்கும். ஓர் உறுப்பு மட்டும் முற்றிலும் செயல்படாதபட்சத்தில் பாலிசி தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகை கிடைக்கும். உதாரணத்துக்கு ஒரு கண் பார்வை பறிபோய்விட்டால், 50 சதவிகிதத் தொகை கிடைக்கும். அதாவது ரூ. 10 லட்சத்துக்கு பாலிசி எடுத்திருந்தால், ரூ. 5 லட்சம் கிடைக்கும். இந்தப் பட்டியல் மிகப் பெரியது. அதனால், பாலிசி எடுக்கும்போது கவனம் அவசியம்.
ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது முழுமையாகச் செயல்படாத நிலைக்குப் போய்விட்டாலோ, பாலிசி தொகைக்கு ஏற்ப ஒரு வருடத்துக்கு மட்டும் குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கான மாதாந்திரத் தொகையும் கிடைக்கும். விபத்தின் மூலம் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். தவிர பாலிசி எடுத்தவரின் இறுதிச் செலவுக்கும்கூட க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். ஒரு வருடத்தில் க்ளைம் ஏதும் இல்லை என்றால், பாலிசி தொகை ஐந்து சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.
வரிவிலக்கு?
இந்த வகை பாலிசிகளில் செலுத்தும் பிரீமியத்துக்கு வரிவிலக்கு கிடையாது. வாங்கும் க்ளைம் தொகைக்கும் வரி கட்டத் தேவையில்லை. பொதுவாக மருத்துவர்கள், 'உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, ரத்த அழுத்தத்தில் பிரச்னை இருக்கிறதா, ஒவ்வாமை இருக்கிறதா?’ என்றெல்லாம் அடிப்படையான சில கேள்விகளைக் கேட்பார்கள். அதேபோல், ஒரு நிதி ஆலோசகரிடம் நீங்கள் செல்லும்பட்சத்தில், 'உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஆக்சிடென்ட் பாலிசி இருக்கிறதா?’ என்றெல்லாம் வரிசையாகக் கேள்வி கேட்பார். இதில் இருந்தே இந்த பாலிசியின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய பாலிசி இது!
தேவையா?
சிலர் டேர்ம் பாலிசி எடுத்திருப்பார்கள். (பாலிசிதாரர் மறைந்தவுடன் பாலிசி தொகை வாரிசுதாரருக்குக் கிடைக்கும்) அதனால், விபத்து காப்பீடு தேவை இல்லை என்று நினைக்கலாம். ஆனால் இந்த பாலிசி நிச்சயம் தேவை. மரணம் ஏற்பட்டால் மட்டுமே டேர்ம் பாலிசியில் க்ளைம் கிடைக்கும். ஆனால், விபத்து நடக்கும் அத்தனை நேரங்களிலும் மரணம் நடக்க வேண்டும் என்றில்லை. நாம் செயல்படாத நேரங்களில் இந்த பாலிசி நமக்குக் கைகொடுக்கும்.
பிரீமியம் எவ்வளவு?
தனிநபர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்போது, ரூ. 1,500 வரைக்கும் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்கு தலா 10 லட்சம் என்றால், ரூ. 2,800 என்ற அளவில் பிரீமியம் இருக்கும். மேலே சொன்ன இதர சலுகைகள் இல்லாதபட்சத்தில் வருடத்துக்கு ரூ. 1,000-க்கு மட்டும் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளும் சந்தைகளில் இருக்கின்றன. வருடத்துக்கு ரூ. 1,500 என்றால், மாதத்துக்கு சுமார் ரூ. 125 மட்டுமே!
2 comments
very good, super.iam insurance advisor, i recomend this policy for my policy holders. iam planning to conduct INSURANCE INFORMATION AND AWARENESS CAMPAIGN. any one intrested pls call me.
NAGARAJ, CHENNAI 9840047520,
email nagarajvlic@gmail.com
welcome dear friend NAGARAJ, thanks for your comments by pettagum A.S. Mohamed Ali
Post a Comment