குழந்தைகள் சகோதரச் சண்டை தவிர்க்க வழிகள்!
பேரன்ட்டிங் கைடு குடும்பம் சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர் ‘வீ ட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப...
https://pettagum.blogspot.com/2017/03/blog-post_67.html?m=0
பேரன்ட்டிங் கைடுகுடும்பம்சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர்
‘வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்’ என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. அது உண்மையும் கூட! அந்த அளவுக்கு வீட்டில் பிள்ளைகள் சண்டைபோட்டுக் கொண்டு படுத்தி எடுப்பார்கள். அது சேட்டை என்ற நிலையில் இருந்து மாறி, அந்தக் குழந்தைகளுக்கு இடையில் தீராக் கோபத்தை, பழி வாங்கும் உணர்வை ஏற்படுத்தும் நிலையை அடைவதை, ‘சிப்ளிங் ரைவல்ரி (Sibling Rivalry)’ என்கிறது மருத்துவ உலகம். பல நேரங்களில் குடும்பத்தினரின் நிம்மதியைக் கெடுத்து பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பில் பெரும் சவாலாகவே எழுகிறது இந்த உடன்பிறந்தோர் சண்டை.
முதல் குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்சும் பெற்றோர், அடுத்த குழந்தை
பிறந்ததும் கொஞ்சல், முக்கியத்துவத்தை இரண்டாவது குழந்தைக்குக்
கொடுக்கின்றனர். தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டதை உணரும்
குழந்தையின் மனதில் ஏக்கம், கோபம் உள்ளிட்ட குணங்கள் அதிகரிக்கின்றன.
ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், புதிதாக ஒரு குழந்தை பிறக்கும்
சூழலில் ஏற்படும் சிப்ளிங் ரைவல்ரியைத் தவிர்க்கும் வழிகளைப் பார்ப்போம்.
இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு...
குழந்தை வயிற்றிலிருக்கும்போதே, கிட்டத்தட்ட ஏழு மாதங்களில், தாய் தன் முதல் குழந்தையிடத்தில் இதைப் பற்றித் தெரிவிப்பது நல்லது.
முதல் குழந்தையிடத்தில் அவர்களுடைய சிறு வயது புகைப்படங்களைக்
காண்பிக்கலாம். இப்படித்தான் பிறக்கப்போகும் குழந்தையும் இருக்கும் எனக்
கூறலாம்.
தாயின் வயிற்றைத் தொட்டுப்பார்க்கச் செய்து, குழந்தையின் அசைவை உணரச்
செய்யலாம். இது முதல் குழந்தைக்கு ஒரு எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும்
ஏற்படுத்தும்.
குழந்தைக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அதனுடன் கலந்தாலோசிக்கலாம்.
இரண்டாவது குழந்தை பிறக்கும் தருணத்தில், முதல் குழந்தைக்கு டாய்லெட்
பயிற்சி, தொட்டிலில் இருந்து கட்டிலில் படுக்கவைப்பது எனத் திடீரென முக்கிய
மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டாம். ஏற்கெனவே சிக்கலான சூழலில் இருக்கும்
குழந்தையால், இந்தப் புதிய மாற்றங்களை எதிர்கொள்ள முடியாது.
குழந்தை பிறக்கும் முன்னர், அதற்கான துணிமணிகள், பொருள்கள் வாங்க முதல்
குழந்தையை அழைத்துச் செல்வதோடு மட்டுமின்றி, தோ்வு செய்யவும் சொல்லலாம்.
அப்போது, அதற்கும் சேர்த்துப் பரிசுகள் வாங்கி வைக்கலாம்.
குழந்தை பிறந்த பின்னர்..!
குளிக்க டவல் எடுத்து வைப்பது, டயப்பர், பவுடர் எடுத்துக் கொடுப்பது எனச்
சிறு சிறு உதவிகளை, மூத்த குழந்தையைச் செய்யச் சொல்லிப் பழக்கலாம்.
முதல் குழந்தைக்கெனத் தனியே நேரம் ஒதுக்குவது முக்கியம். தாயினால்
முடியவில்லை எனில், தந்தையாவது சற்று அதிக நேரம் அந்தக் குழந்தையுடன்
செலவழிக்க வேண்டும்.
பிறந்த குழந்தையைப் பார்க்க வந்திருப்பவர், உடை, விளையாட்டுப் பொருள்கள்
என்று அதற்குக் கொடுப்பர். அப்போது, பெற்றோர் ஏற்கெனவே சில பரிசுப்
பொருள்களை வீட்டில் வாங்கி வைத்திருந்து, அதை மூத்த குழந்தைக்குக்
கொடுக்கலாம்.
மூத்த குழந்தை திடீரெனப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலோ, கவலையாக,
கோபமாகக் காணப்பட்டாலோ, அதிகம் அடம்பிடித்தாலோ அவா்களை அழைத்துத் தனியாக
மனம் விட்டுப் பேசச் சொல்லி, அடக்கி வைத்த உணர்ச்சியை வெளியே கொட்டச்
செய்வது அவசியம்.
வளர்ந்த குழந்தைகளுக்கு இடையேயான சண்டையைக் கையாள...
பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது
தவறு... தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச்
சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு
ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும்.
உதாரணமாக, சண்டையின் போது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் குழந்தைக்கு,
மூன்று நாள்கள் வீட்டில் ரிமோட்டின் மீதான உரிமையைத் தடை செய்யலாம்.
சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக்
கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல
செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு
கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம்.
ஒவ்வொரு குழந்தையின் தேவையும் வித்தியாசப்படும். கைக்குழந்தைக்கு, பள்ளி
செல்லும் குழந்தையைக் காட்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைக்கு அதிகளவு பாடத்தில் உதவி செய்ய
வேண்டியிருக்கலாம். அதனால், எல்லா நேரங்களிலும் இரு குழந்தைகளையும் சமமாகப்
பாவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பெற்றோர் இதை
எண்ணிக் குழப்பமோ, குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம்.
இரண்டு குழந்தைகளையும் நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. முதல் குழந்தையிடம்,
‘உன் தங்கையைப் பார்த்துக் கத்துக்கோ’ என்பது, ‘உன் வயசில் அக்கா அழகா
ரைம்ஸ் சொல்லுவா’ என்பது... இதுபோன்ற உரையாடல்களைப் பெற்றோரும்
மற்றவர்களும் அறவே கைவிட வேண்டும். ஏனெனில், இரண்டு குழந்தைகளிடம்
இடைவெளியும் வெறுப்பும் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.
குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள
வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக
பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும்.
அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது,
தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.
டிவி, கம்ப்யூட்டர் நேரத்துக்கு இரண்டு குழந்தைகளுக்கும் அட்டவணைப்படி
நேரம் ஒதுக்கிக் கொடுக்கலாம். உதாரணமாக, மூத்த குழந்தைக்குக் கம்ப்யூட்டர்
நேரம் மாலை 6.00 - 6.45. அந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை டிவி
பார்த்துக்கொள்ளலாம். பிறகு, இளைய குழந்தைக்குக் கம்ப்யூட்டர், மூத்த
குழந்தைக்கு டிவி என அமைத்துக்கொள்ளலாம்.
இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக்
கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான்
அவா்களுக்கு எப்படிப் பேசுவது, பிரச்னையை எவ்வாறு அணுகி சமாளிப்பது,
விட்டுக்கொடுப்பது போன்ற குணங்களும், திறன்களும் வளரும். பெற்றோருக்குக்
குழந்தைகளின் பொழுதுகளில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தள்ளியிருக்க
வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே
முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா
செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது,
அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது
மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்னையில் குறுக்கிடும்போது, யார்
பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம்கொள்ளாமல், அவா்களுக்கு என்ன
வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான
வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும்
நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின்
சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.
சண்டைக்குப் பின்னரும், ‘அதற்கு நீதான் காரணம்’, ‘நான்தான் காரணம்’ என
அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பழிபோடாமல், பிரச்னையை ஒரேயடியாக முடித்துவிட்டு
வெளிவரச் செய்ய வேண்டும்.
சண்டை அளவுக்கு மீறிவிட்டால், இருவரையும் சிலநேரம் பிரித்துவிட்டு,
உணா்ச்சிகள் வடிந்த பின்னா் திரும்பவும் சந்திக்க வைப்பது நல்லது; இது
அடிதடி, காயங்கள் ஏற்படாமல் தடுத்துவிடும்.
கோபத்தைக் கையாளும் முறையைக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் தான்
கற்றுக் கொள்கின்றனா். எனவே, கோபமாக இருக்கும்போது பெற்றோர், தவறான
வார்த்தைகளைப் பிரயோகிப்பது, கதவை அடித்துச் சாத்துவது, பொருளை வீசுவது,
சுவரில் முட்டிக் கொள்வது போன்ற விஷயத்தில் ஈடுபடாமல், தெளிவாகப் பேசித்
தீா்த்துக் கொண்டால் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள்.
தினமும் குடும்பத்தில் அனைவரும் சோ்ந்து சாப்பிடுவது, சேர்ந்து டி.வி
பார்ப்பது, சேர்ந்து அரட்டையடிப்பது போன்றவை குடும்பத்தில் இணக்கத்தை
ஏற்படுத்தும்.
வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு
ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப்
பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான
நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!
‘வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்’ என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. அது உண்மையும் கூட! அந்த அளவுக்கு வீட்டில் பிள்ளைகள் சண்டைபோட்டுக் கொண்டு படுத்தி எடுப்பார்கள். அது சேட்டை என்ற நிலையில் இருந்து மாறி, அந்தக் குழந்தைகளுக்கு இடையில் தீராக் கோபத்தை, பழி வாங்கும் உணர்வை ஏற்படுத்தும் நிலையை அடைவதை, ‘சிப்ளிங் ரைவல்ரி (Sibling Rivalry)’ என்கிறது மருத்துவ உலகம். பல நேரங்களில் குடும்பத்தினரின் நிம்மதியைக் கெடுத்து பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பில் பெரும் சவாலாகவே எழுகிறது இந்த உடன்பிறந்தோர் சண்டை.
இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு...
குழந்தை பிறந்த பின்னர்..!
வளர்ந்த குழந்தைகளுக்கு இடையேயான சண்டையைக் கையாள...
உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!




Post a Comment