30 வகை வடை-பாயசம்-கொழுக்கட்டை -- 30 நாள் 30 வகை சமையல்,
கி ருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகள் அணிவகுக்கும் சீஸன் இது. பண்டிகை விருந்தில் வடை - பாயசம் இடம்பெறுவது தொன்று...
https://pettagum.blogspot.com/2013/08/30-30-30_31.html?m=0
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என்று வரிசையாக
பண்டிகைகள் அணிவகுக்கும் சீஸன் இது. பண்டிகை விருந்தில் வடை - பாயசம்
இடம்பெறுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். பண்டிகைகளை நீங்கள் தடபுடலாக
கொண்டாடி மகிழ உதவும் விதத்தில், '30 வகை வடை - பாயசம் - கொழுக்கட்டை’
ரெசிபிகளை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்,
''வடைக்கு அரைக்கும்போது தண்ணீரை ஊற்றாமல் கெட்டியாக
அரையுங்கள் (தேவைப்பட்டால் நீரை தெளிக்கலாம்). மாவை அரைத்தவுடனேயே வடை சுட
வேண்டும். மாவு நீர்த்துவிட்டால்... ரவை, அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு
ஏதேனும் ஒன்றை சிறிதளவு சேர்க்கலாம். எண்ணெய் நன்கு சூடானதும் வடையை
பொரித்தால், அதிகமாக எண்ணெய் குடிக்காது'' என்று 'டிப்ஸ்’களையும்
அக்கறையுடன் அளிப்பதுடன், ''வெங்காயம் சேர்க்க சொல்லப்பட்டிருக்கும் வடைகளை
பண்டிகை, விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யலாம்'' என்று ஆலோசனை
கூறுகிறார்.
அடைப் பிரதமன்
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், அடை - கால் கப் (கடைகளில் 'பாலடா’ என்று கிடைப்பது),
சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2
டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை:
சுடுநீரில் அடை துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்
குளிர்ந்த நீரில் கஞ்சிப் பசை போகுமளவுக்கு அலசவும். பாலை அடுப்பில் வைத்து
கொதிக்கவிட்டு, அலசிய அடைத் துண்டுகளைப் போட்டு வேகவிடவும். பாதி
வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த
முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி னால்...
பிரதமன் (பாயசம்) தயார். இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.
பருப்பு பாயசம்
தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப், வெல்லம் - 2 கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த
முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் -
கால் டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலைப்
பருப்பை குக்கரில் வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை தனியே வேக வைக்கவும். முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை
நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து, மசித்த கடலைப்பருப்பு, வெல்லக்
கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, வேக வைத்த
ஜவ்வரிசி, ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, முந்திரி, திராட்சை, தேங்காய்
துண்டுகள் சேர்த்து, கொதி வரும்போது சுக்குப்பொடி, தேங்காய்ப் பால்
சேர்த்துக் கலக்கி இறக்கினால்... பருப்பு பாயசம் ரெடி.
சம்பா ரவை வெல்ல பாயசம்
தேவையானவை:
சம்பா ரவை - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை -
தேவைக்கேற்ப.
செய்முறை:
2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். வெல்லத்தைக்
கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சம்பா ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு
வறுத்து, 2 கப் நீர் விட்டு வேகவிடவும். ரவை வெந்ததும், வெல்லக் கரைசல்
சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த்தூள்,
சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும்.
விருப்பப்பட்டால்... தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம்.
மீல்மேக்கர் கீர்
தேவையானவை:
மீல்மேக்கர் உருண்டைகள் - 30, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப்,
ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை -
சிறிதளவு.
செய்முறை: கொதிக்கும்
நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பிழிந்து கொள்ளவும். பிழிந்த
உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி துருவலாக எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே
வாணலியில் மீல்மேக்கர் துருவலை நன்கு வதக்கிக் கொள்ளவும். காய்ச்சிய பாலில்
மீல்மேக்கர் துருவலை சேர்த்து, குறைந்த தீயில் வேகவிடவும். 20 நிமிடம்
கழித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது,
முந்திரி, திராட்சை, ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். இதை குளிர
வைத்தும் பரிமாறலாம்.
சுரைக்காய் கீர்
தேவையானவை:
துருவிய சுரைக்காய் - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை
கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, பாதாம்
பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) பாதாம் எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை: துருவிய
சுரைக்காயை 10 நிமிடம் அப்படியே வைத்திருந்து, தண்ணீரை வடிக்கவும். பாலைக்
காய்ச்சி, அதனுடன் சுரைக்காய்த் துருவலை சேர்த்து வேகவிடவும். பிறகு
சர்க்கரை சேர்க்கவும். பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கவும். முந்திரி,
திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். விருப்பப்பட்டால், இறக்குவதற்கு
முன் பாதாம் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
மஞ்சள் பூசணி கீர்
தேவையானவை:
துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை
கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, வெனிலா
எசன்ஸ் அல்லது பன்னீர் - 2 சொட்டு.
செய்முறை: வாணலியில்
நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே
வாணலியில் துருவிய மஞ்சள் பூசணியை வதக்கிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி,
அதில் பூசணித் துருவலை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், சர்க்கரை
சேர்க்கவும். பாதியாக சுண்டியதும், முந்திரி, திராட்சை, வெனிலா எசன்ஸ்
அல்லது பனீர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
பனீர் பாயசம்
தேவையானவை:
பனீர் - ஒரு கப், பால் - முக்கால் லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பாதாம் அல்லது பிஸ்தா
பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை:
பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாக வரும்போது, துருவிய
பனீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, பாதாம் அல்லது பிஸ்தா பவுடர், முந்திரி,
திராட்சை சேர்த்துக் கலக்கவும். எசன்ஸ் சேர்த்து இறக்கி... சூடாகவோ, குளிர
வைத்தோ பரிமாறவும்.
ஓட்ஸ் பாயசம்
தேவையானவை:
ஓட்ஸ் - அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், நெய்யில்
வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை: அரை
லிட்டர் பாலுடன் ஓட்ஸ் சேர்த்து வேகவிட்டு, எடுத்து வைக்கவும். மீதி அரை
லிட்டர் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். பால் குறுகிவரும்போது, வேக
வைத்த ஓட்ஸ், முந்திரி, திராட்சை சேர்க்கவும். பிறகு, எசன்ஸ் சேர்த்து
இறக்கிப் பரிமாறவும்.
ஓட்ஸை வேக வைத்து ஆறவிட்டு, பின்னர் சேர்ப்பதால், பாயசம் இறுகாமல் சிறிது தளர இருக்கும்.
பார்லி பருப்பு பாயசம்
தேவையானவை:
பார்லி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், வெல்லம் - ஒன்றரை
கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.
செய்முறை: பார்லியை
6-8 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குக்கரில் பாசிப்பருப்புடன் சேர்த்து
வேகவிடவும். வெந்தவுடன் சிறிது மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து,
வடிகட்டி... வெந்த பார்லி, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கி
கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சை
சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால்... காய்ச்சி, ஆற வைத்த
ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம். அல்லது ஒரு டம்ளர் தேங்காய்ப் பால்
சேர்க்கலாம்.
மேக்ரோனி கீர்
தேவையானவை:
மேக்ரோனி - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு லிட்டர், முந்திரி,
திராட்சை - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்
ஸ்பூன்.
செய்முறை: மேக்ரோனியை
கழுவி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலைக்
காய்ச்சி, கொதி வரும்போது கழுவி வைத்துள்ள மேக்ரோனியை சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது... முந்திரி,
திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை சூடாகவோ, குளிர
வைத்தோ பரிமாறலாம்.
பட்டாணி கீர்
தேவையானவை:
பச்சைப் பட்டாணி - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், ரோஸ் வாட்டர் - 2
டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -
தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சைப்
பட்டாணியை வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். அதை சிறிது
நெய்யில் வதக்கிக் கொள்ள வும். மீதி நெய்யில் முந்திரியை வறுத்துக்
கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அதில் மசித்த பட் டாணியை சேர்த்துக் கரைத்து
கொதிக்க விடவும். பாதியாக குறுகியதும் சர்க்கரை சேர்க்கவும். பிறகு,
முந்திரி சேர்த்துக் கலக்கவும். இறக்கு வதற்கு முன் ரோஸ் வாட்டர்
சேர்க்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
இளநீர் டிலைட்
தேவையானவை: இளநீர் - 2, பால் - அரை லிட்டர், பிஸ்தா - சிறிதளவு, சர்க்கரை - அரை கப்.
செய்முறை:
இளநீர், வழுக்கையை தனித்தனியாக எடுக்கவும். வழுக்கையை இள நீருடன் சேர்த்து
அரைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சி
இறக்கவும். பால் ஆறியதும், அரைத்து வைத்துள்ள வழுக்கையை சேர்த்துக்
கலக்கவும். பிஸ்தாவை பொடியாக நறுக்கி அலங் கரிக்கவும். இதை குளிர வைத்துப்
பரிமாறவும்.
டிரைஃப்ரூட்ஸ் சேமியா பாயசம்
தேவையானவை:
சேமியா - 100 கிராம் (மிகவும் மெல்லியதான சேமியா என்று கேட்டு வாங்கவும்),
பால் - ஒன்றரை லிட்டர், பாதாம், முந்திரி - தேவைக்கேற்ப, பேரீச்சம்பழம் -
10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2
கப்.
செய்முறை:
வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். அதே
வாணலியில் சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பாலை சூடாக்கி, பாதியாக
வரும் வரை காய்ச்சவும். இதனுடன் வறுத்த சேமியாவை சேர்க்கவும் (அடுப்பை
மிதமான தீயில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து, சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுண்டி வரும்போது பாதாம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம் பழத்
துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.
மக்னா டிலைட்
தேவையானவை: மக்னா (தாமரை விதை) - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 கப், பிஸ்தா - சிறிதளவு, பிஸ்தா எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை: தாமரை
விதையைக் கழுவி, 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும். ஊற
வைத்த தாமரை விதையை பிழிந்து பாலில் சேர்த்து வேகவிடவும். வெந்ததும்
சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சுண்டி வரும்போது, பிஸ்தா, பிஸ்தா
எசன்ஸ் சேர்த்தால்... சுவையான மக்னா டிலைட் ரெடி.
திடீர் பாயசம்
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி,
திராட்சை - தேவைக்கேற்ப.
செய்முறை: முந்திரி,
திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலில் பாதாம் பவுடர், சர்க்கரை
சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது... முந்திரி, திராட்சையை
சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
அவசரமாக தயாரிக்க வேண்டிய நேரத்தில் கைகொடுக்கும் அசத்தலான பாயசம் இது.
முப்பருப்பு வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து - தலா கால் கப், சோம்பு - அரை
டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்),
மிளகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக்
கொள்ளவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, கொத்தமல்லி
- சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று
பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை
வடித்துவிட்டு, இஞ்சி, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து
கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி,
பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, சூடான
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பார்லி வடை
தேவையானவை:
பார்லி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை
மிளகாய் - 4, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: பார்லியை
6-8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதை பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும்
வரை வேகவிடவும். வாணலியை சூடாக்கி, அதில் வெந்த பார்லி, தோல் சீவிய இஞ்சி,
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கடலை மாவு சேர்த்து மேலும் 2
நிமிடம் வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை
வேக வைத்து மசித்து... அதனுடன் அரைத்த பார்லி கலவை, உப்பு, நறுக்கிய
வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை
வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வேர்க்கடலை வடை
தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவிடவும். நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய
இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன்
நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். மாவை
வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சென்னா வடை
தேவையானவை:
சென்னா (கொண்டைக்கடலை) - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - அரை
டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, புதினா - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை
6-8 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய்,
சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக
அரைத்துக் கொள்ளவும் (தேவைப்பட்டால் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
சேர்க்கவும்). அரைத்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில்
பொரித்தெடுத்தால்... சென்னா வடை தயார்.
தட்டைப் பயறு வடை
தேவையானவை:
வெள்ளை தட்டைப் பயறு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4,
சீரகம் - கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, எண்
ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தட்டைப்
பயறை 6 மணி நேரம் ஊற விடவும். நீரை வடித்துவிட்டு உப்பு, பச்சை மிளகாய்,
சீரகம், தோல் சீவிய இஞ்சி, புதினா சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வடைகளாகத் தட்டி, எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.
பட்டாணி வடை
தேவையானவை:
பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை
கப்), கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - அரை
டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பட்டா ணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற
வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி,
சோம்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். அதனுடன்
கடலை மாவு, உப்பு சேர்த்து, வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி,
ஆறவிடவும். ஆறிய விழுதை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
ஸ்டப்ஃடு வடை
தேவையானவை:
உருளைக் கிழங்கு - 2, முந்திரி, பாதாம், திராட்சை (சேர்த்து) - கால் கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பேரீச்சை - கால் கப், சோள மாவு - 2
டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை
வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், திராட்சையை பொடியாக
நறுக்கவும். பேரீச்சையை நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்குடன்
மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த உருளைக்கிழங்கை
சிறிய செப்பு போல் செய்து... முந்திரி, பாதாம், திராட்சை, பேரீச்சையை
வைத்து மூடி, சோள மாவில் புரட்டி, வடை போல் தட்டி, சூடான தவாவில் போட்டு,
சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால்... ஸ்டஃப்டு வடை தயார்.
கீரை வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரை - கால் கப்,
சோம்பு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை
முக்கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, தோல் சீவிய
இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்துக் கலக்கி, வடைகளாகத் தட்டி,
சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
ஸ்வீட் கார்ன் வடை
தேவையானவை:
ஸ்வீட் கார்ன் - 2 கப், இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று, புதினா - சிறிதளவு, எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உரித்த ஸ்வீட் கார்ன் முத்துக்களுடன் தோல் சீவிய இஞ்சி, சீரகம், உப்பு,
காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில்
வெங்காயம், புதினா சேர்த்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில்
பொரிக்கவும்.
பொட்டுக்கடலை வடை
தேவையானவை:
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சித்
துருவல் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை
மாவுடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், கொத்தமல்லி
சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து
கொள்ளவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வடை
தேவையானவை:
வேக வைத்து, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, புதினா, கொத்தமல்லி -
சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 (நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 2
டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கடலை மாவு சேர்த்து வதக்கிக்
கொள்ளவும். இந்தக் கலவையை ஆறியவுடன் வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில்
போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்கவும். இதை
தோசைக்கல்லில் போட்டும் சுட்டு எடுக்கலாம்.
பச்சைப் பயறு வடை
தேவையானவை:
பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய
துண்டு, மிளகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சைப் பயறை 2-3 மணி நேரம் ஊறவிடவும். பச்சரிசியை தனியே அரை மணி நேரம்
ஊறவிடவும். பின்னர் நீரை வடித்து, பயறு, அரிசி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து...
தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியாக
அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில்
பொரித்து எடுக்கவும்.
அம்மணி கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு - 100 கிராம், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன், கடுகு -
ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பங்கு அரிசி மாவுக்கு, ஒரு பங்கு என சம அளவில் தண்ணீரைக் கொதிக்க
வைத்து, உப்பு சேர்த்து மாவைத் தூவி கெட்டியாகக் கிளறவும். கடுகு,
பெருங்காயத்தூள் தாளித்து மாவுடன் சேர்க்கவும். தேங்காய் துருவல் மற்றும்
இட்லி மிளகாய்ப் பொடியையும் போட்டு பிசைந்து, சீடை போல உருட்டி இட்லித்
தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: கொழுக்கட்டை தயாரிக்கும்போது பூரணம் தீர்ந்துவிட்டால், மிச்சமிருக்கும் அரிசி மாவை வீணடிக்காமல் இப்படிச் செய்யலாம்.
பால்கோவா கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பால்கோவா - 100 கிராம்.
செய்முறை: ஒரு
பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க
வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து,
உள்ளே பால் கோவாவை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக
வைத்து எடுக்கவும்.
குறிப்பு: கோவாவை
கடையில் வாங்குவதைவிட, நாமே பாலை சுண்டக் காய்ச்சி தயாரித்துக் கொள்ளலாம்.
முந்திரியை அரைத்து சேர்த்துக் கிளறினால் சுவை கூடும்.
ஓட்ஸ் அவல் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், பால், ஓட்ஸ், அவல் - தலா ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஓட்ஸ்,
அவல் இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடித்து, பாலுடன் கலந்து
கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக்
கிளறி உருட்டி னால்... பூரணம் ரெடி!
ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற
அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக
உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து
மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன் ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
வாழைக்காய் போண்டா
தேவையானவை:
வாழைக்காய் - 3, பச்சை மிளகாய் - 4, ஆச்சி தனி மிளகாய்தூள் - ஒரு
டீஸ்பூன், ஆச்சி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - 200 கிராம், மைதா
மாவு - 100 கிராம், ஆச்சி பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சூரியகாந்தி எண்ணெய் - பொரிக்க
தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காய்களை
நன்றாகக் கழுவி மேல் தோலை நீக்கி, தண்ணீர், விட்டு, தேவையான அளவு உப்பு
சேர்த்து வேக வைத்து, பின்னர் குழைவாக நன்கு மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், மசித்து வைத்த வாழைக்காய், ஆச்சி தனி மிளகாய்த்தூள், ஆச்சி
மஞ்சள்தூள், ஆச்சி பெருங்காயத்தூள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கிக்
கொள்ளவும். கடலை மாவு, மைதா மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல், கெட்டியாக
கரைத்துக் கொள்ளவும். வாழைக்காய் கலவையுடன் கொத்தமல்லி சேர்த்து
உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எண்ணெயை வாணலியில் ஊற்றி காய வைத்து, வாழைக்காய்
உருண்டைகளை, கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Post a Comment