தாயுமானவன்---கவிதைத்துளிகள்
தாயுமானவன் இன்பத்தோடு விலகாமல் துன்பத்திலும் துணை நின்று உன் தாரத்திற்கு தாயானாய்... பத்தியமாய்ச் சோறூட்டி பத்திரமாய்ப் காப்பாற்றி என் த...
இன்பத்தோடு விலகாமல் துன்பத்திலும் துணை நின்று உன் தாரத்திற்கு தாயானாய்...
பத்தியமாய்ச் சோறூட்டி பத்திரமாய்ப் காப்பாற்றி என் தாய்க்கும் தாயானாய்...
நீராட்டி நிலவைக் காட்டி சோறூட்டி எனைச் சீராட்டினாய்
நடக்கையில் தடுக்கிட விழாமல் எழுந்திட விரல் பிடித்து வழி நடத்தினாய்
உன் உறவின் முதல் எழுத்தை கரம் பிடித்து எழுத வைத்தாய்
தோள்கள் வளர்ந்து தோழியாய் உயர சுமைகளைச் சுமந்து வழிகாட்டினாய்
வாழ்க்கைத் துணையை கையணைத்து விழிநீரை விரல் துடைத்து வழியனுப்பினாய்
நொடிகள் யுகமாக காலத்திற்கு காத்திருந்து தலைப்பிரசவத்திற்கு வந்தவளின் தலைகோதினாய்
மறுமுறை பிரசவ வலி உனக்கு!
தாய்க்கும் மேலான தாயுமானவா...
உனக்குப் பிறந்ததில் உள்ளம் உருகிட கசியும் கண்களை கனிவாய்த் துடைக்கும் கரத்தின் ஸ்பரிசத்தில் கண் திறந்தேன்...
தொட்டிலில் பூத்த சின்னப் பூவை ஸ்னேகமாய் முத்தமிடும் என் மகளின் தந்தையிடம் உன்னை உணர்ந்தேன்!
தொடரும்... இந்த "தாயுமானவன்" சகாப்தம்.
Post a Comment