கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து... உடல் உறுதிக்கு உரமூட்டும் கேழ்வரகு!
கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து... உடல் உறுதிக்கு உரமூட்டும் கேழ்வரகு! ந மது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமா...

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க இது உதவும்.
இதில் உள்ள ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால், குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப் பொருத்தமான உணவு.
அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. இது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது. கேழ்வரகைக் கூழாகக் குடிப்பதைவிட, களியாகவோ, ரொட்டியாகவோ உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து.
ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று. எனவே, கோடை காலத்தில் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கச் செய்யும் நல்ல உணவுப் பொருள் இது. ராகியில் உள்ள தாதுச்சத்துகள் மனதுக்கு இதம் தந்து, மனஅழுத்தம் நீங்க உதவும்.
ராகியில் அதிக அளவில் புரதம் உள்ளதால், உடலுக்கு வலிமை கிடைக்கும். உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய தானியம் இது.
ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உணவு எளிதில் ஜீரணமாக இது உதவும்; மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கும்.
தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு ராகி. குறிப்பாக, ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டிய தானியம்.
கர்ப்பிணிப் பெண்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்துகளைத் தரும் சிறந்த தானியம் கேழ்வரகு. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்; குழந்தைபேறு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தபோக்கு, ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் உணவுச் சத்து குறைபாட்டை சரிசெய்யும்.
Post a Comment