100 ஆடுகள், மாதம் ரூ. 1 லட்சம்! அசத்தல் லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

100 ஆடுகள், மாதம் ரூ. 1 லட்சம்! அசத்தல் லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!   பண்ணையில் ஆடுகள் சி வகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே உள்ளது சித்த...

100 ஆடுகள், மாதம் ரூ. 1 லட்சம்! அசத்தல் லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

 



பண்ணையில் ஆடுகள்
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே உள்ளது சித்தாலங்குடி கிராமம். கருவேல் மரங்கள் படர்ந்து கிடக்கும் காடு. அதற்கு நடுவே வாழை, தீவனப்பயிர்கள் எனச் சோலையாகக் காட்சியளிக்கிறது ஒரு பண்ணை.

28 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்துக்கு உரிமையாளர் குமரேசன். வாழைச் சாகுபடியுடன் ஆடு மாடு, வாத்து, முயல் என ஒருங்கிணைந்த பண்ணையாக இருக்கிறது அந்தத் தோட்டம். தற்போது குவைத் நாட்டில் பணியில் இருக்கிறார். அங்கிருந்து கொண்டே, கேமரா, ஆண்ட்ராய்டு போன் மூலமாக இந்த ஒருங்கிணைந்த பண்ணையை மேற்பார்வை செய்து வருகிறார்.


வயலிலேயே வீடுகட்டி, ஆடு வளர்ப்பைப் பிரதான தொழிலாகச் செய்துவருகிறார்கள். சிசிடிவி கேமரா, சென்சார் அலாரம் எனப் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கிறது அந்தப் பண்ணை.

ஒரு மாலை வேளையில் பண்ணைக்குச் சென்றோம். நம்மை வரவேற்ற குமரேசனின் மனைவி சரண்யா, பண்ணையைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தப் பண்ணைனா என் வீட்டுக்காரருக்கு உசுரு. அவுகதான் இந்தப் பண்ணையை நல்லபடியா மாத்தி இருக்காக. குவைத் அரசு எண்ணெய் நிறுவனத்தில வேலை செய்றாக. பண்ணை முழுக்க கேமரா இருக்கறதால அவுக ஊர்ல (குவைத்) இருக்கும்போது கேமராவுல பார்த்துப் பக்குவம் சொல்லுவாக. நேரடியா இங்க நான்தான் வேலை ஆளுங்களை வெச்சுப் பண்ணையப் பார்த்துக்கிறேன்.

நான் எம்.சி.ஏ படிச்சிட்டு, ஐ.டி கம்பெனியில வேலைபார்த்தேன். பிறகு, ஒரு ஸ்கூல்ல டீச்சராகவும் இருந்தேன். ஆட்டுப் பண்ணை ஆரம்பிக்கவும் வேலையை விட்டுட்டேன். நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லோரும் ஆரம்பத்துல கிண்டல் பண்ணுனாங்க. ஆனால், இப்ப இதுல கிடைக்குற வருமானம் அவங்க வாயை அடைச்சிடுச்சு” என்ற சரண்யா,

‘‘எங்க பண்ணையில சுமார் 1,000 ஆடுகளை வளர்க்க முடியும். ஆனா பாதி அளவு ஆடுகளைத்தான் வளர்க்கிறோம். தலச்சேரி, போயர், ஜமுனாபாரி, நாட்டு வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளக்கிறோம். இப்ப வளர்ப்பு ஆடு 250, நாட்டு வெள்ளாடு 100, செம்மறி ஆடு 100 கைவசம் இருக்கு. ஒவ்வொன்னையும் பக்குவமா பாத்து வளக்கிறதால ஆடுக தளதளனு இருக்கு. பசுந்தீவனம், அடர் தீவனம், உலர் தீவனம், தாது உப்பு, தண்ணி இதுகதான் ஆடுகளுக்கு முக்கியமான தீவனம்.

‘‘வளர்ப்பு ஆடுகள் உயிர் எடை கிலோ 400 ரூபாய்க்கும், நாட்டு வெள்ளாடு உயிர் எடை 370 ரூபாய்க்கும், செம்மறி ஆடு 350 ரூபாய்க்கும் கொடுக்கிறோம்.’’

ஆட்டுக்கு ஊட்டம் கொடுக்கும் அசோலா புட்டு

இங்க மொத்தமுள்ள 25 ஏக்கர்லயும் பசுந்தீவனம்தான் போட்டிருக்கோம். நாட்டு அகத்தி, முருங்கை, சூபாபுல் (சவுண்டல்), கடலைக்கொடி, மல்பெரி, வேலிமசால், அசோலா இப்படி ஏகப்பட்ட பச்சைகளைப் பயிர் செஞ்சிருக்கோம். மல்பெரி இலையில கொழுப்பு அதிகமாக இருக்கும். அதனால தாய் ஆடுகளுக்கு அத கொடுக்க மாட்டோம். சினைப்பிடிக்கிறது, கர்ப்ப காலத்துல தாய்களுக்குப் பிரச்னை வந்திரும். அதனால அதைத் தவிர்த்திருவோம். பசுந்தாள் உரங்களை மொதநாள் வெட்டி நிழல் காய்ச்சல்ல காயப்போட்டு நறுக்குவோம். அதை மறுநாள் சாயங்காலம் ஆட்டுக்குக் கொடுப்போம். தினமும் காலையில 7 மணி, சாயங்காலம் 3 மணின்னு ரெண்டு வேளை, கால் கிலோ அசோலா புட்டு கொடுத்திருவோம். அது ஆட்டுக்கு நல்ல ஊட்டச்சத்துக் கொடுக்கும்.


ஆட்டுடன் சரண்யா

கடலைக்கொடி சிற்றுண்டி

காலையில 11 மணிக்கு 75% பச்சைப் புல், 25% காய்ஞ்சக் கடலைக்கொடி கலந்து கொடுப்போம். ராத்திரி 7 மணிக்கு வெறும் கடலைக் கொடி மட்டும் கொடுப்போம். அது ஆட்டுக்குச் சுவையான சிற்றுண்டி மாதிரி, விரும்பிச் சாப்பிடும். அதனால ஆட்டோட எடையும் கூடும். ராத்திரியில கடலைக் கொடி மட்டும் போடுறதால செரிமானப் பிரச்னை இருக்காது. ஆட்டுக்கு எப்போதும் தண்ணி இருக்கும். வாரம் ஒருமுறை மட்டும் தண்ணியோட மஞ்சப்பொடி, சீரகப் பொடி, சித்தரத்தைப் பொடி மூணையும் கலந்து கொடுப்போம். அன்னைக்கு ஆட்டுக்குக் கடலைக் கொடி மட்டும்தான். அப்போதான் அதன் வீரியம் அதுல இருக்கும். இந்தச் சிறப்புத் தண்ணியால குடற்புழுப் பிரச்னை இருக்காது. அதேபோல மாசம் ஒரு தடவை வேப்ப இலையும் கொடுப்போம். சுகாதாரமான தண்ணி, உணவு இது ரெண்டும் சரியா இருந்தா போதும். நோய்த் தாக்குதலே இருக்காது. ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் வரக்கூடாதுனு பி.பி.ஆர் தடுப்பூசி மட்டும் போடுவோம். அது ஆட்கொல்லி நோய் வராம தடுக்கும்” என்றபடி ஆடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.


பண்ணையில் ஆடுகள்

குவைத்தில் இருந்த குமரேசனை போனில் தொடர்புகொண்டு பேசினோம். “எங்கள் குடும்பம் பாரம்பர்ய விவசாயக் குடும்பம். எங்க தாத்தா காலம்வரைக்கும் விவசாயத்தில் நல்ல லாபம் பார்த்தோம். யானை கட்டிப் போர் அடிக்காத குறை மட்டும்தான். தாத்தாவைத் தொடர்ந்து அப்பா 50 ஏக்கர் விவசாயம் பார்த்தாரு. ஆனா, எங்க அப்பா முனியாண்டி ரசாயன உரத்தில ஜெயிக்க முடியல. நிலங்க ஒரு பக்கம் கிடக்க, அரசு பள்ளிக்கூடத்தில ஓ.ஏ வேலைக்குச் சேர்ந்துட்டாரு. நான் வேதியியல் துறையில் எம்.எஸ்ஸி படிச்சதால தனியார் உர உற்பத்தி ஆலையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் ரசாயன உரத்தோட பாதிப்பு முழுமையா தெரிஞ்சுச்சு.


கழுகு பார்வையில் பண்ணை

அப்ப இருந்தே ‘இயற்கை விவசாயத்துக்கு மாறணும்’னு எண்ணம் உருவாகிடுச்சு. பிறகு, பசுமை விகடன் படிச்சப்போ அந்த எண்ணம் இன்னும் பலமாச்சு. நம்மாழ்வார் ஐயா கட்டுரைகள் ஊக்கத்தைக் கொடுத்துச்சு. திண்டுக்கல்ல பொரியியல் பட்டதாரி ஒருவர் பத்தி வந்திருந்த கட்டுரை ரொம்ப ஈர்த்துச்சு. அப்போ இருந்தே ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கணும்னு வைராக்கியம் ஆகிடுச்சு. தொடர்ந்து அதே ஆர்வத்தில் நிலத்தடி நீர் இருக்கிற மாதிரி நல்ல பொட்டல் காடா (தரிசு நிலம்) வாங்கிட்டேன். இடம் வாங்கி 8 வருஷம் ஆச்சு. 2 வருஷமா ஆடு வளர்க்குறோம். பண்ணையில இருக்கிற கிணத்துல எப்போதும் தண்ணி இருக்கிறதால தண்ணீர்ப் பிரச்னை இல்ல. ஆடுகளுக்குத் தேவையான தீவனங்களை உற்பத்தி செஞ்சுக்கிறதால பெரிய அளவுல செலவு இல்ல. ஆட்டுச் சாணத்தை நேரடியா உரமா பயன்படுத்திக்கிறோம். அதனால செடிகளும் செழிப்பா வளருது’’ என்றவர் தொடர்ந்து,

‘‘ஆடுகளை ஆடா வளர்க்கணும். ஆடு மாதிரி வளக்கக் கூடாது. ஆடுகளைப் பத்தி நல்லா புரிஞ்சுக்கணும். அது தெரியாம பண்ணை வெச்சு ஜெயிக்க முடியாது. இன்னிக்குப் பரண் முறையில ஆட்டுப்பண்ணை அமைச்சு, அதுக்கு தீவனத்தைக் கொடுத்து எடையை அதிகமாக்கி விற்பனைச் செய்றாங்க. இது ஒரு தொழிலா உருவாகிட்டு இருக்கு. நானும் பரண் அமைச்சிருக்கேன். என்னோட அனுபவத்துல ஆட்டுப் பண்ணைக்குப் பரண் தேவையில்லை. மழைக்காலத்துல சேறு, சகதி ஆடுகளுக்கு அலர்ஜி. அந்த நேரத்துல மேட்டுல ஏறி நின்னுக்கும். அந்த மாதிரி நேரத்துலதான் பரண் அமைப்பு உதவியா இருக்கும். நான் ஆரம்பத்துல ரொம்ப முதலீடு செஞ்சு பரண் அமைச்சுட்டேன். ஆனா, அது தேவை இல்லைன்னு இப்ப புரியுது.

‘‘பசுந்தீவனம், அடர் தீவனம், உலர் தீவனம், தாது உப்பு, தண்ணி இதுகதான் ஆடுகளுக்கு முக்கியமான தீவனம்.’’

மேய்ச்சல் முறைதான் மேலானது

காலாற நடந்தாதான் அதுக்கு பேர் கால்நடை. ‘மண்ணுலயும் கல்லுலயும் நடக்கும் போதுதான் ஆடுகளுக்குச் சில என்சைம்கள் சுரக்கும்’னு சொல்றாங்க. தரையில மேயணும். தரையில நடக்கணும். மேய்ச்சல் முறையில வளக்குற ஆடுகள்தான் ஆரோக்கியமா இருக்கும். எங்க தாத்தா காலத்துல 500 ஆடுகள் வரைக்கும் வளர்த்தாங்க. அன்னிக்கு யாரும் பரண் அமைக்கல. ஆடுகளை மேய்ச்சலுக்குதான் ஓட்டிக்கிட்டுப் போனாங்க. இன்னிக்கு குடற்புழுவுக்கு மருந்து கொடுக்குறோம். ஆனா, குடலுக்குள்ள புழு இருந்தா ஆடுகளுக்குக் குறுகுறுப்பு உண்டாகும். அதுவே வேப்பந் தழையைப் போய்ச் சாப்பிடும். மேய்ச்சலுக்குப் போற ஆடுகள், தேவையான மூலிகைகளையும் சேர்ந்தே மேய்ஞ்சிடும். அதனாலதான் அதுகளுக்குப் பெரிசா நோய் வர்றதில்ல.


செம்மறியாடுகள்

ஆடு வளர்ப்புல அனுபவம் இருக்கவங்களுக்கு, ஒவ்வொரு சீஸனுக்கும் என்ன மாதிரியான நோய்கள் தாக்கும்னு தெரியும். அதுக்கு தேவையான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துடுவாங்க’’ என்று சொன்னவர்,



தீவனம் எடுக்கும் ஆடுகள்

‘‘தோட்டத்தில ஆட்டுக்குத் தேவையான தீவனத்தைச் சாகுபடி செய்யுறோம். அதுக்கு கனஜீவாமிர்தம், பஞ்சகவ்யாதான் பயன்படுத்துறோம். செம்மறி ஆடு, நாட்டு வெள்ளாடுக மட்டும் வெளிய மேய்ச் சலுக்குப் போகும். மற்ற ஆடுகள் பரண்ல தான் இருக்கும். வளர்ப்பு ஆடுகள் உயிர் எடை கிலோ 400 ரூபாய்க்கும், நாட்டு வெள்ளாடு உயிர் எடை 370 ரூபாய்க்கும், செம்மறி ஆடு 350 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். செம்மறி ஆடுக பக்ரீத், ரம்ஜானுக்கு அதிகமா விற்பனையாகும். தீபாவளிக்கு நாட்டு ஆடுகள் அதிகளவு போகும். அதுபோக வீட்டு விசேஷங்கள், கோயில் திருவிழாக்களுக்கும் ஆடுகள் அதிகம் விற்பனையாகுது’’ என்றவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்,

ஆண்டுக்கு 250 குட்டிகள்

‘‘எங்ககிட்ட 100 தாய் ஆடுகள் இருக்குது. அது மூலமா ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டிக கிடைக்கும். வெள்ளாடு ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப்போடும். சில ஆடுக மூணு குட்டிக வரைக்கும் போடும். சராசரியா ரெண்டு குட்டிகனு வெச்சுகிட்டா, 100 ஆடுக மூலமா ரெண்டு வருஷத்துக்கு 600 குட்டிகள் கிடைக்கும். அதுலயும் 100 குட்டியைக் குறைச்சு 500 குட்டிகள்னு வெச்சுக்கலாம். நிச்சயம் 100 ஆடுகள்மூலம் 500 குட்டிகள் கிடைக்கும். இதை வருஷக் கணக்குல சொன்னா, வருஷம் 250 குட்டிகள் கிடைக்கும்.

150 ஆடுகள்... 12 லட்சம் ரூபாய்

இந்தக் குட்டிகள்ல 150 குட்டிகள் கிடா குட்டிகள்னு வெச்சுக்குவோம். அதை 6 மாசம் வளர்ப்போம். பிறக்கும்போது குட்டி எடை 3 கிலோ இருக்கும். நல்லா மேய்ச்சல், தீவனம் கொடுக்குறதால மாசம் 4 கிலோ எடை கூடும். 6 மாசத்துல 25 கிலோவுக்கு மேல எடை இருக்கும். 20 கிலோவுக்குக் குறையாது. உயிர் எடை கிலோ 400 ரூபாய்னு கொடுக்குறோம். ஆக, ஒரு ஆடு 8,000 ரூபாய். 150 கிடாக்களுக்கு 12,00,000 ரூபாய் கிடைக்கும். இது ஒரே நாள்லயோ, மாசத்துலயோ நடக்காது. வருஷம் முழுக்க நடக்கும். இந்த 12 லட்சத்தை மாசக் கணக்குல பார்த்தா, மாசம் ஒரு லட்சம் ரூபாய் வருமானமாக் கிடைக்கும். இது முழுக்க எனக்கு லாபம்தான்.


தீவனம் நறுக்கும் அறை

பண்ணைச் செலவுகளுக்கு, இன்னொரு கணக்கு இருக்கு. 250 குட்டிகள்ல 150 கிடா குட்டிகளைத்தான விற்பனை செய்தோம். 100 பெட்டை குட்டிகள் இருக்குல்ல. அது ஒரு வருஷத்துல பலனுக்கு வந்திடும். அதுக மூலமா, வருஷத்துக்கு 250 குட்டிக கிடைக்கும். அப்ப ஏற்கெனவே இருக்கும் தாய் ஆடுக மூலமா, 250 குட்டிக, இந்த ஆடுக மூலமா 250 குட்டிகனு வருஷம் 500 ஆடுகள் கிடைக்கும். ஆடு வளர்ப்புல மூணாவது வருஷத்துல இருந்து இது சுழற்சி முறையில வந்திடும். ஆக, மாச வருமானம் 2 லட்சத்தைத் தாண்டிடும். இதுல மாசம் ஒரு லட்சம் ரூபாய் செலவுக்கு ஒதுக்கிட்டாலும், ஒரு லட்சம் ரூபாய் லாபமா நிக்கும். நான் சொன்னது சராசரிக்கும் குறைவான கணக்குதான். 100 தாய் ஆடுகள்ல இருந்து, அதுங்களை முறையா பராமரிச்சா மாசம் ஒரு லட்சம் நிச்சய லாபம் எடுக்க முடியும். ஆனா, இது பண்ணை ஆரம்பிச்ச உடனே கிடைச்சுடாது. அதுல அடிபட்டு, மிதிபட்டு அனுபவம் வரணும். அதுக்கு பிறகுதான் நம்மளோட பராமரிப்பு முறை சரியா இருக்கும். அதுக்கு குறைஞ்சபட்சம் ஒரு வருஷமாவது ஆகும்’’ என்றார்.

தொடர்புக்கு, குமரேசன், வாட்ஸ்அப் எண் - 98944 33930.

சரிவிகிதத் தீவனம் அவசியம்!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் குமரவேல் ஆடு வளர்ப்பு பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “பொதுவா ஒரு தாய் ஆடு, ஆண்டுக்கு 8,000 முதல் 10,000 ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கொடுக்கும். புதிதாகப் பண்ணைத் தொடங்குபவர்கள் பரண் அமைத்து முதலீட்டை முடக்கக் கூடாது. பொதுவாக ஒரு ஆட்டுக்கு 4 முதல் 5 கிலோ பசுந்தீவனம், கடலைக்கொடி போன்ற உலர் தீவனம் ஒன்றரை கிலோ, மக்காச்சோளம், உப்பு சேர்த்த கலப்புத்தீவனம் 250 கிராம் கொடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் தீவனப் பயிர்மூலம் 30 ஆடுகளை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 40 சென்ட் இடத்தில் கோ.4 தீவனப்புல், 30 சென்ட் நிலத்தில் கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோளம், 30 சென்ட் வேலிமசால் நடவு செய்து வளர்க்க வேண்டும். அதன் ஓரங்களில் அகத்தி, சூபாபுல் போன்ற மரப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். அப்படி வளர்த்த பயிர்களை அறுத்து, ஒரு ஆட்டுக்குக் கொடுக்கும் 4 கிலோ தீவனத்தில், 40% கோ.4, 30% கோ.எஃப்.எஸ்.29, 30% வேலிமசால் என்ற அளவில் கொடுக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம், அவ்வப்போது தேவையான தடுப்பூசிகளை மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுப் பராமரித்தால் ஆடு வளர்ப்பு லாபமான தொழில்தான்’’ என்றார்.

Thanks to Pasumai Vikatan


Related

வேலை வாய்ப்புகள் 8360166049477103444

Post a Comment

Contributors

item