ஆடு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் !

வி வசாயப் பயிர்கள் கைவிடும்போது விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடை வளர்ப்புதான். அதனால்தான் கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் விவசாயம் பொ...

விவசாயப் பயிர்கள் கைவிடும்போது விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடை வளர்ப்புதான். அதனால்தான் கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் விவசாயம் பொய்த்துப் போனாலும், தொடர்ந்து வருமானம் எடுக்க முடிகிறது. விவசாயத்தில் வருமானம் குறைந்துபோன நிலையில், ஆடு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் பார்த்து வருகிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்.  
விக்கிரவாண்டிக்கு அருகேயுள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தில் இருக்கிறது பிரகாஷின் பண்ணை. தோட்டத்துக் கிணற்றை ஆழப்படுத்தும் பணியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பிரகாஷைச் சந்தித்தோம்.  “நாங்க பரம்பரையா விவசாயம் செய்றோம். விக்கிரவாண்டியில நானும் அண்ணனும் நகைக்கடை வெச்சிருக்கோம். குடும்பத்துக்குச் சொந்தமா 50 ஏக்கர் நிலமிருக்கு. பத்து ஏக்கர் நிலத்துல தென்னை, இருபத்தஞ்சு ஏக்கர் நிலத்துல கொய்யா, பத்து ஏக்கர் நிலத்துல மா, அஞ்சு ஏக்கர் நிலத்துல சவுக்கு இருக்கு. இதுல தென்னையை நட்டு நாலு வருஷம் ஆகுது.

இதை இளநீயாவே விற்பனை செஞ்சுட்டிருக்கோம். தென்னைக்கு இடையில கொய்யாவை ஊடுபயிரா நடவு செஞ்சிருக்கோம். தென்னந்தோப்புக்குள்ள பரண் அமைச்சு தலைச்சேரி, போயர், செம்மறியாடுகள்னு 200 ஆடுகளை வளர்க்கிறோம்” என்ற பிரகாஷ், தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்... 
“தோட்டத்தைச் சுத்தி வேலி இருக்கு. அதனால, ஆடுகளைத் திறந்து விட்டாலும் உள்ளயேதான் சுத்த முடியும். காலையில பரண்ல இருந்து வெளியே விட்டுடுவோம். சாயங்காலம் வரைக்கும் மேய்ஞ்சுட்டு அதுகளா பரணுக்கு வந்துடும். தோட்டம் முழுக்க ஆடுகள் சுத்துறதால எல்லா இடத்திலும் புழுக்கைகள் விழும். அதெல்லாம் நல்ல உரமாகிடுது. ஐம்பது ஏக்கர் பரப்புல தோட்டம் இருக்கிறதால மேய்ச்சல்லயே ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைச்சிடுது. இதுபோக ஊடுபயிரா கோ-5 ரகப் புல்லையும் போட்டிருக்கேன். ஆடுகளாலதான் எங்களுக்கு வருமானம் கிடைச்சிட்டிருக்கு.

ஆரம்பத்துல 10 தலைச்சேரி, 10 செம்மறி, 15 போயர் ரக ஆடுகளை மட்டும்தான் வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுகள்ல இருந்து ஆடுகளைப் பெருக்கியிருக்கோம். பசுந்தீவனத்தைத்தான் ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறோம். ஆடுகளைப் பகல் முழுசும் மேய்ச்சலுக்கு அனுப்புறதால ராத்திரி மட்டும்தான் பரண்ல அடையும். அதனால கழிவுகள் குறைவாத்தான் இருக்கும்.  
ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பரணைச் சுத்தம் செய்றோம். வாரம் ஒருமுறை பக்கத்து ஊர்ல இருக்குற கால்நடை மருத்துவர் வந்து ஆடுகளைப் பரிசோதிப்பார். தேவையான சமயங்கள்ல தடுப்பூசி போட்டுவிடுவார்” என்ற பிரகாஷ் ஆடுகள் பராமரிப்பு குறித்துச் சொன்னார்.

“ஆறு மாசத்துக்கு அப்புறம் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வரும். பருவத்துக்கு வந்த பெட்டை ஆடுகள் ஓரிடத்தில நிக்காது. வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். இந்த சமயத்துல கிடாவை இனப்பெருக்கத்துக்குப் பெட்டையோடு சேர்த்துவிடணும். அதேபோல பொலி கிடாவுக்கு 2 வயசு இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆட்டோட சினைக்காலம் 8 மாதங்கள். ஓர் ஆடு இரண்டு வருஷத்துல 3 முறை குட்டி போடும். பிறந்த குட்டிகளுக்கு நல்ல கவனிப்பு இருந்தால் 3 மாசத்துல 10 கிலோ எடை வந்துடும். குட்டி பிறந்து 20 நாள் வரைக்கும் தாயோட இருக்கவிடணும்.

அதுக்குமேல தீவனத்தைக் கொடுத்துப் பழக்கிடணும். 3 மாசத்துக்கு அப்புறமா வளர்ந்த குட்டிகள்ல இருந்து பெட்டையையும் கிடாவையும் தனியா பிரிச்சு வளர்க்கணும். ஆடுகளுக்குத் தீவனம் கொடுக்குறப்போ பசுந்தீவனமும் உலர் தீவனமும் சரியான முறையில இருக்குற மாதிரி கொடுக்கணும். குட்டிகளுக்குப் பால் கொடுக்குற ஆடுகளுக்கும் பொலி கிடாக்களுக்கும் அடர் தீவன அளவை அதிகமா கொடுக்கணும்.  
ஆடுகளுக்குத் துள்ளுமாரி போன்ற நோய்கள் தாக்கத்துல இருந்து காப்பாத்துறதுக்கு, வருஷத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போடணும். கோமாரி, ஜன்னி மாதிரியான நோய்களுக்கு, வருஷத்துக்கு இரண்டு தடவை தடுப்பூசி போடணும். பிறந்த குட்டிகள் முதல் 3 மாசக் குட்டிகள் வரைக்கும் 20 நாளைக்கு ஒரு தடவை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கணும். அப்புறமா மூணு மாசத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்தா போதும். நோய்வாய்ப்பட்ட ஆடுகளைத் தனியா பிரிச்சுடணும்” என்றவர் நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஆடுகளுக்கு எப்பவும் கிராக்கி இருந்துட்டே இருக்கு. குறிப்பா பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தான் கிராக்கி அதிகம். எட்டு மாசம் வளர்த்து ஆடுகளை விற்பனை செய்றோம். எட்டு மாசத்துல ஓர் ஆடு எப்படியும் 20 கிலோவுல இருந்து 25 கிலோ வரைக்கும் எடை வந்துடும். தலைச்சேரி ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் உயிர் எடைக்கு ஒரு கிலோ 250 ரூபாய்னு விற்பனை செய்றோம். குறைஞ்சபட்சமா ஓர் ஆடு 20 கிலோனு வெச்சுக்கிட்டாலே 5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிடும். தலைச்சேரி, செம்மறி ஆடுகள்ல வருஷத்துக்கு 60 ஆடுகள் வரை விற்பனையாகும். அந்தவகையில் 3 லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைச்சுடும்.
போயர் ஆடுகளை உயிர் எடைக்கு ஒரு கிலோ 500 ரூபாய்னு விற்பனை செய்றோம். எட்டு மாசத்துல போயர் ஆடுகள் 30 கிலோவுக்குமேல எடை வந்துடும். குறைஞ்சபட்சமா ஓர் ஆடு 30 கிலோனு 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிடும். போயர் ரகத்துல வருஷத்துக்கு 80 ஆடுகள் வரை விற்பனையாகும். அந்த வகையில 12 லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைச்சுடும்.

ஆக மொத்தம் ஆடு விற்பனை மூலமா வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்கிது. இதுல பராமரிப்பு, மருந்துச் செலவு, மருத்துவருக்கான செலவு, மின்சாரக் கட்டணம், வேலையாள் சம்பளம்னு 5 லட்ச ரூபாய் வரை செலவாகிடும். மீதி 10 லட்ச ரூபாய் லாபமா நிக்கும். இப்போதைக்கு இந்த வருமானத்தை வெச்சுதான் விவசாயத்துக்கான செலவுகளைச் சமாளிச்சுட்டு இருக்கோம்” என்றார் புன்முறுவலோடு.

தொடர்புக்கு, பிரகாஷ், செல்போன்: 94431 63043

இயற்கையில் தீர்வு உண்டு!

பிரகாஷ் தன் தோட்டத்திலுள்ள தென்னைக்கு ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனாலும், அவருக்கு இயற்கை இடுபொருள்கள் குறித்துத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்ததால், கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரனிடம் ஆலோசனை சொல்லுமாறு கேட்டோம். மனோகரன் சொன்ன விஷயங்கள் இங்கே...

“தென்னைக்கு மூணு மாசத்துக்கு ஒருமுறை ஆட்டு எரு, தொழுஉரம் ரெண்டையும் கலந்து கொடுக்கணும். தென்னை மரத்துல வண்டுகள் தாக்கினால் மேல் குருத்துல சலிச்ச மணல் அல்லது தவிட்டைக் கைப்பிடியளவு வைக்கணும். மாசம் ஒரு தடவை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வேரைச் சுத்தி ஊத்தணும். காண்டாமிருக வண்டுகளை விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வெச்சுத் தடுக்கலாம். இளநீரா விற்பனை செய்றதால, தென்னைக்கு விஷ மாத்திரைகள், யூரியா எதையும் உபயோகப்படுத்தக் கூடாது. என்னோட அனுபவத்துல வேப்பம் பிண்ணாக்குப் பயன்படுத்துனாலே இளநீரோட சுவை கெட்டுப்போயிடும். அதனால, கவனமா இருக்கணும். ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் தினமும் 120 லிட்டர் தண்ணீர் கொடுக்கணும்” என்று மனோகரன் சொல்லிய ஆலோசனைகளைப் பின்பற்றிப் பார்ப்பதாக பிரகாஷ் கூறினார்.

ஈரப்பதம் காக்கும் மூடாக்கு!

“எங்க தோட்டம் பசுமையா இருக்குறதுக்குக் காரணம் மூடாக்குத் தொழில்நுட்பம்தான்” என்று சொல்லும் பிரகாஷ், “தோட்டத்துல கிடைக்கிற கழிவுகள் எல்லாத்தையும் மண்ணுலயே போட்டு உரமாக்கிடுவோம். தென்னை மட்டை, தேங்காய் மட்டை எல்லாத்தையும் மூடாக்காகப் போட்டுடுவோம். இதுக்காகத் தென்னை மட்டை அரைக்கிற மிஷினை வாங்கி வெச்சுருக்கோம். தென்னை மட்டைகளை அரைச்சுத் தென்னந்தோப்புலயும் கொய்யாத்தோப்புலயும் மரங்களைச் சுத்தி மூடாக்காகப் போட்டுடுவோம்.

கொய்யா இலைகளையும்கூட மூடாக்குல கலந்து விடுவோம். இப்போதைக்கு ஆட்டுப்புழுக்கை, மூடாக்கோடு கொஞ்சமா ரசாயன உரங்களையும் கலந்துதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம்.

மூடாக்கு இருக்கிறதால மரத்தைச் சுத்தி எப்பவும் ஈரப்பதம் இருந்துட்டே இருக்கு. அதனால, குறைவாத்தான் தண்ணீர் தேவைப்படுது. மண்ணுல எப்பவும் ஈரப்பதம் இருக்கிறதால தோட்டம் முழுக்கக் குளிர்ச்சியாவே இருக்கும். மண்ல ஈரப்பதம் இருக்கிறதால மண்புழுக்கள் அதிகமா இருக்கு. மூடாக்காகப் போடுற கழிவுகள் மட்கி மண்ணுக்கு உரமாகிடுது. ஒரு கிலோ மூடாக்கு கிட்டத்தட்ட 4 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும். ஈரப்பதம் இருக்கிறதால ஆடுகள் மேயுறதுக்குப் புல்லும் கிடைக்குது” என்றார்.

புது ஆடுகள்... கவனம்!

“சந்தையில் இருந்து பண்ணைக்குப் புது ஆடுகளை வாங்கிட்டு வந்தா நம்ம பண்ணையில் இருக்கிற ஆடுகளோட உடனே சேர்க்கக் கூடாது. ஒரு வாரம் வரைக்கும் அந்த ஆடுகளைத் தனியா வெச்சுருந்து, அதுகளுக்கு ஏதாவது நோய் இருக்குதானு கண்காணிக்கணும். நோய் இருந்தால் சிகிச்சை கொடுக்கணும். அதோட நல்லா குளிப்பாட்டி தேவைப்படுற தடுப்பூசிகளைப் போட்டுதான், பண்ணையில் இருக்கிற ஆடுகளோட சேர்க்கணும். ஆட்டுக் கொட்டகையை எப்பவுமே சுத்தமா வெச்சிருக்கணும்” என்கிறார் பிரகாஷ்.

தென்னைக்கு இலவச உரம்!

மிழகத்தில் 4,500 ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைக்குத் தேவையான உரத்தை தென்னை வளர்ச்சி வாரியம், இலவசமாக வழங்க இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் ஜூன் மாதத்தில், அதிகளவு தென்மேற்குப் பருவமழை பொழியும். ஆனால், தற்போது வரை போதுமான அளவில் மழை கிடைக்கவில்லை.

அதனால், தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னை விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள்.

Related

வீட்டிலிருந்தே சம்பாதிக்க 8430465835751641352

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item