பால் காளான் வளர்ப்பு....! மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!

இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது....

இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.

வழிகாட்டிய பசுமை விகடன்!
''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.

''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.

சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.

தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.

மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.

காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா 150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,

''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 99524-93556.

Related

வேலை வாய்ப்புகள் 4899724786991589826

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item