வரகரிசி மிளகுச் சாதம்! பாரம்பர்ய உணவு!

வரகரிசி மிளகுச் சாதம் ஒ ரு காலத்தில், உணவை உற்பத்தி செய்யும் விவசாயிதான், உலகின் ஆகப்பெரிய ஆக்கச் சக்தியாக கருதப்பட்டார். விவசாயிகளுக...

வரகரிசி மிளகுச் சாதம்

ரு காலத்தில், உணவை உற்பத்தி செய்யும் விவசாயிதான், உலகின் ஆகப்பெரிய ஆக்கச் சக்தியாக கருதப்பட்டார். விவசாயிகளுக்கு அரணாக இருந்து அவர்களின் செயல்பாடுகளுக்கு சிறிதும் பங்கம் வராத வகையில் ஆட்சியாளர்கள் காத்து நின்றார்கள். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்தது விவசாயம் தான்.

இன்று, விவசாயம் வேண்டாத வேலையாகி விட்டது. வாழ வழி கேட்டு நிர்வாணப் போராட்டம் நடத்தியும்கூட விவசாயிகளை வந்து பார்த்து நம்பிக்கையூட்ட நேரமில்லை ஆட்சியாளர்களுக்கு.

அந்தக் காலத்தில், கிராமம் தன்னிறைவாக இருந்தது. விவசாயிகள் கிராமத்துக்குத் தேவையான உணவை விளைவித்துக் குவித்தார்கள். உழவுக்கருவிகள் செய்ய, மண்பாண்டங்கள் செய்ய என அன்றாட வாழ்க்கைக்கான அத்தனை தேவைகளையும் நிறைவேற்றித்தர அத்தொழில்களை வாழ்வாதாராமாகக் கொண்டவர்கள் கிராமங்களில் இருந்தார்கள். பண்டமாற்றாகவே எல்லாப் பணிகளும் நடந்தன. உப்பு விற்பவர் அதற்குப் பதிலாக நெல்லை வாங்கிக் கொள்வார். தானியம் பெற்றுக்கொண்டு சட்டி, பானை தருவார்கள். ஏர்க்கலப்பை செய்து தரும் தொழிலாளிக்கு அறுவடை முடிந்ததும் மூட்டை மூட்டையாக நெல் இறக்குவார்கள். இப்படி கிராமத்தின் ஜீவனாக வேளாண்மை இருந்தது. அதைச் சார்ந்து மக்கள் இருந்தார்கள். நாடு இருந்தது. ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

உணவு உற்பத்தி பசிக்கானதாக இருந்தவரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. நிலம் எந்தச் செயற்கை ஊட்டத்தையும் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவை விளைவித்துத் தந்தது. நிலத்துக்கும் மனிதர்களுக்குமான பந்தம் உயிர்ப்போடு இருந்தது.

உணவு பசிக்கானது என்ற இலக்கைத் தாண்டி பணத்துக்கானதாக மாற்றப்பட்ட பிறகு, எல்லாம் குலைந்து விட்டது. செயற்கை ஊட்டங்களை நிலத்தில் கொட்டி, நிலத்தின் மடியை மொத்தமாக உறிஞ்சி நோஞ்சானாக்கியது முதல் விளைவு. போதைக்குப் பழகிய மனிதனைப் போல, நிலம் செயற்கை உரங்களுக்குப் பழகிப்போனது. இயற்கையான நம் பாரம்பர்ய விதைகள் இந்த மாற்றத்தை உள்வாங்க முடியாமல் திணறி செயல் இழக்க, நிலத்தோடு சேர்த்து மொத்த வளமும் பறிபோனது. படிப்படியாக விவசாயம் கைநழுவியது போலவே, நம் இயற்கையான உணவுப் பண்பாடும் கைநழுவிப் போய் விட்டது.

அக்காலத்தில் நம் உணவில் பெருமளவு நிறைந்திருந்தவை சிறு தானியங்கள். பெயர் தான் சிறு தானியங்களே தவிர, அவற்றின் செயல் பெரிது. உழைப்புக்கும், உணவுக்கும் நேர்த்தொடர்பு இருந்தது. அதனால் ஆரோக்கியத்தில் சிக்கல் இல்லை.

சிறு தானியங்களில் வரகு தனித்தன்மை வாய்ந்தது. நம் பாரம்பர்யத்தில், மரபில் வரகு இரண்டறக் கலந்திருக்கிறது. வழிபாடுகள், சடங்குகள், பண்டிகைகள், இறுதி நிகழ்வுகள் என வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் வரகு இருந்திருக்கிறது. வரகின் சிறப்பே, எல்லாத் தட்பவெப்பத்தையும் தாங்கி வளரும் அதன் தன்மை தான். நிலத்தைக் கீறிவிட்டு, விதையை தூவிவிட்டு வந்தால் போதும். பிறகு, விளைந்து முகிழ்ந்து நிற்கும் தானியத்தை அறுவடை செய்யத்தான் போக வேண்டும். பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. பறவைகளோ, கால்நடைகளோ இதை தின்றழிக்க முடியாது. காரணம், வரகின் 7 அடுக்கு மேல்தோல்.

வரகை அறுவடை செய்து தாளோடு சேர்த்து வீட்டில் வைத்துக் கொள்வார்கள். எப்போது தேவையோ, அப்போது கல்லுரலில் போட்டு இடித்து, தோல் நீக்கி சமைப்பார்கள். நெல் அரிசியில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாமே, வரகரிசியில் செய்யலாம்.

வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, மிளகுச் சாதம்.

“வரகின் பயன்பாடு இன்று மிகவும் குறைந்து விட்டது. ஆனாலும் பழங்குடி மக்கள் மத்தியில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. ஜவ்வாது மலை, கல்வராயன் மலைகளில் வசிக்கும் பழங்குடிகள், தங்கள் பண்டிகைகள், வழிபாடுகளில் வரகையே சமைத்துப் படைக்கிறார்கள். குறிப்பாக வரகரிசி மிளகுச் சாதம். சொந்தமாக கால்நடைகள் வளர்த்து அதில் கிடைக்கும் நெய்யைக் கொண்டு செய்வார்கள். வாசனையே ஈர்க்கும். நெய்யைத் தவிர்த்து நிறைய நல்லெண்ணெய் விட்டுச் செய்து கட்டுசாதமாகவும் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். வயிறுக்கு நிறைவாக இருப்பதோடு, மனதுக்கும் நிறைவு தரும் இந்த வரகரிசி மிளகுச் சாதம்...” என்று கூறி நாவூற வைக்கிறார் தேனியைச் சேர்ந்த இயற்கை உணவு சமையல் நிபுணர் செஃப் எஸ்.பழனிசெல்வம். இந்த வரகரிசி மிளகு சாதத்தில் அப்படி என்ன சத்துகள் இருக்கின்றன..?

“நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு மிகப்பெரும் வரப்பிரசாதம். பசியாற்றும் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் அது வேலை செய்யும். அதனால் தாராளமாக இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நெய், உப்பு பயன்பாட்டை சற்றுக் குறைத்துக் கொள்வது நல்லது...” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“கோதுமை, அரிசியை விட வரகு உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்பு, கால்சியம், வைட்டமின்கள், புரதச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து என எல்லாவிதமான சத்துகளும் இதில் இருக்கின்றன. பைட்டிக் அமிலம், மாவுச்சத்து இரண்டும் குறைவாக இருக்கிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடம்புக்கு சக்தியையும் உடனே கொடுக்கும். வரகோடு மிளகும், சீரகமும் சேர்வதால் இந்தச் சாதமே மருந்தைப் போல மாறிவிடுகிறது.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். அந்த அளவுக்கு மிளகு விஷமுறி மருந்தாக வேலை செய்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துகள் தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துகள் மிளகில் இருக்கின்றன. மேலும் இந்த உணவில் பாசிப்பருப்பு சேர்க்கப்படுகிறது. துவரம் பருப்போடு ஒப்பிடும்போது, பாசிப்பருப்பில் சூடு குறைவு. அதனால், இதை எல்லா வயதினரும் எடுத்துக் கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் வாரம் ஒருமுறையேனும் இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வரகரிசி மிளகுச் சாதத்தை காலை மற்றும் மதிய உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. இரவில் தவிர்க்கலாம். காரணம், வயிறு கொஞ்சம் கனமாகத் தெரியும்” என்கிறார் கற்பகம்.

நெய்யோடு மிளகும் சீரகமும் மட்டுமின்றி நம் பாரம்பர்யமும் மணக்கும் வரகரசி மிளகு சாதத்தின் வாசனை உங்கள் வீட்டையும் நிறைக்கட்டும்!


வரகரிசி மிளகுச் சாதத்தின் செய்முறையையும் தருகிறார் பழனிசெல்வம்.

வரகரிசி மிளகுச் சாதம்

தேவையானவை:

வரகரிசி- 250 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

மிளகு - 10 கிராம்

சீரகம் - 10 கிராம்

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

நெய் - 100 கிராம்

நல்லெண்ணெய் - 50 கிராம்

செய்முறை:


வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய்யில் பாதி விட்டு மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள். நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள். முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி+பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள். இறக்குவதற்கு முன்பு, மீதமிருக்கும் நெய்யைவிட்டு கிளறி இறக்குங்கள். குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

Related

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் 8392096658368586454

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item