துவளாத துலாக்கோல்!! அறிவார்ந்த கதை ஒன்று! கதைகள் சொல்லும் காவியம்!

சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் கார் நின்றதும், கதவை திறந்து இறங்கிய அருணாசலத்துக்கு, கோபுரத்தை பார்த்ததும், உடல், சிலிர்த்தது. ஒரு வார...

சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் கார் நின்றதும், கதவை திறந்து இறங்கிய அருணாசலத்துக்கு, கோபுரத்தை பார்த்ததும், உடல், சிலிர்த்தது. ஒரு வாரம் தான் வரவில்லை; ஆனால், வெகு நாட்கள் வராதது போன்ற உணர்வு, ஏற்பட்டது.

எவ்வளவு வேலையிருந்தாலும், வெள்ளிக்கிழமை தோறும், அர்த்த ஜாம பூஜை பார்க்காமல், இருக்க மாட்டார். இது, அவரது, 30 ஆண்டுகால பழக்கம். இந்நிலையில், கடந்த வாரம், அவரது மணி விழாவும், கூடவே, தன் அருணா டிபார்ட்மென்ட் ஸ்டோரின், 25வது ஆண்டு விழாவும் இருந்ததால், அவரால் கோவிலுக்கு வர முடியவில்லை.

காரிலிருந்து இறங்கியவர், தேரடி பிள்ளையாரையும், அதற்கு நேர் எதிரே, மேற்கு திசையில் உயர்ந்து நின்ற கோபுரத்தையும் கைகூப்பி வணங்கியபடியே நடந்தார். கோபுரத்தை தாண்டியவுடன், தன் மனைவியை திரும்பிப் பார்த்தார்.

அவரது பார்வையின் பொருளை உணர்ந்து, 'நீங்க போங்க; நான் வரலை...' என்று கூற, அவளை சன்னிதானத்துக்கு அனுப்பி விட்டு, பிரகாரத்தை வலம் வரத் துவங்கினார்.
குளிர்ந்த நிலவுக்கிடையே, லேசான பனிச் சாரலுடன் காற்று உடம்பில் உரச, அது தந்த சுகானுபவத்தை அனுபவித்தபடி, இதுவரை தான் கடந்து வந்த பாதையை அசைபோட்டபடி நடக்கலானார்.

அருணாச்சலத்தின் அப்பா இறந்த போது, அவருக்கு பத்து வயது. 'மூணு பிள்ளைகளையும் எப்படி வளர்த்து, ஆளாக்கப் போறேனோ...' என்ற ஆற்றாமையுடன், தலையில் அடித்து அழுதாள் அம்மா. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, துக்கத்தையெல்லாம் மூட்டை கட்டி, மளிகை கடைக்கு வேலைக்கு போனாள்.

இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்த அம்மாவின் செயல்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம், சாதாரணமானதல்ல. அம்மா மட்டும் அன்று தன்னை மாற்றிக் கொள்ளாமல் போயிருந்தால், இன்று, அவளது வாழ்வு மட்டுமல்ல, அவளை நம்பியிருந்த அனைவரது வாழ்வும், சூன்யமாகி போயிருக்கும்.

அருணாச்சலம், 18 வயதில் மளிகைக் கடைக்கு வேலைக்கு போன போது, அவனை பத்தோடு, பதினொன்றாகத் தான் நினைத்தார், கடை முதலாளி. ஆனால், 26வது வயதில், அக்கடையை முதலாளி விலை கூறிய போது, அதை அருணாச்சலமே வாங்கினார். சொந்தமாக கடை வைத்த சந்தோஷம் இருந்தாலும், முதலாளி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பயத்தை உருவாகியது...
'வியாபாரங்கிறது வெறும் பணம் சம்பாதிக்கத்தான்ங்கிற நினைப்பு எப்போதும் வரக்கூடாது; அப்படி வந்துட்டா, அது நியாயமான வியாபாரமா இருக்காது. நாம செய்ற வியாபாரத்தின் மூலம் பல பேரு பலன் அடையறாங்க என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டா தான், நல்ல வியாபாரியா இருக்க முடியுறதோட, வியாபாரத்தையும் சிறப்பா செய்ய முடியும். அதனால தான், நம் முன்னோர், தொழிலையும், தெய்வத்தையும் முடிச்சுப் போட்டு, 'செய்யும் தொழிலே, தெய்வம்'ன்னு சொன்னாங்க...' என்று கூறினார்.

பின், படிப்படியாக வளர்ச்சியடைந்து, 38 வயதில் டிபார்ட்மென்டல் ஸ்டோர், 45 வயதில் ஐந்து ஊர்களில் அதன் கிளைகளை விஸ்தரித்த போது தான், 'வாழ்வின் முழுமை எது' என்ற தேடலும், 'தன்னை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுவது, நியாயமான செயல்படாக இருக்கமுடியாது...' என்ற எண்ணமும் எழுந்தது.

அதன் விளைவாக, தான் ஆரம்பித்த புதிய கிளைகளுக்கு, தன் தம்பி, தங்கை, உறவினர் மற்றும் தன் நம்பிக்கைக்குரிய பணியாளர்களை பங்குதாரராக நியமித்த போது, மனதில் நிம்மதி ஏற்பட்டது.

''வணக்கமுங்க,'' என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார், அருணாச்சலம்.
எதிரில், இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.
''யாருப்பா நீ... என்ன வேணும்?''
''என் பேரு முருகன்ங்க... உங்க ஊரு தான்; பிள்ளையார் கோவில் கிட்டே மூக்குப் பொடிக் கடை வைச்சிருந்தாரே ராஜரத்தினம்... அவரோட மகன்.''
அவருக்கு சட்டென்று அந்தக் கடையும், எந்நேரமும் மூக்கு பொடியை உறிஞ்சுவதும், தும்மல் போடுவதாகவும் இருந்த அவனது தந்தையும் நினைவிற்கு வந்தது.
''அய்யா... உங்க மணிவிழா போட்டோவோட, உங்க கடையோட வெள்ளி விழா பற்றிய செய்திய பேப்பர்ல பாத்தேன்; ரொம்பவும் சந்தோஷமா இருக்கு,'' என்றான்.
''நன்றிப்பா... உங்கப்பா இறந்த பின், கடைய மூடிட்டு, நீ ஊரை விட்டு போயிட்டதாக கேள்விப்பட்டேன்; ஏதாவது, 'பிசினஸ்' செய்றியா...''
''ஆசை தான்... ஆனா, முதலீடு வேணுங்களே...''
''அப்ப என்ன செய்துகிட்டிருக்கே?''
''சொல்லிக்கற மாதிரி வேலை இல்ல.''
''பொய் சொல்லாம, திருடாம, எந்த வேலை செஞ்சாலும், அது கவுரவமானது தான்; கூச்சப்படாம சொல்லுப்பா.''
''பானிபூரி விக்கறேன்,'' என்றான்.
அவர், அமைதியாக அவனைப் பார்த்தார். ''வேலை தேடி அலைஞ்சேன்; ஒரு வேலையும் கிடைக்கல. பசியில பானிபூரி சாப்பிட போனேன்; அப்ப தான், இந்த யோசனை வந்தது.
''பானிபூரிகாரர்கிட்டே பேசிட்டிருந்த போது, வேலையில்லாத விஷயத்தை சொன்னேன். 'நான் வேலை தரேன் செய்யறியா'ன்னு கேட்டார்; சரின்னு சொன்னேன்.

''மறுநாள், அவரு கூட வியாபாரத்துக்கு போனேன், தினம், 200 ரூபாய் சம்பளம் தந்து, சாப்பாடும் போட்டாரு. ஒரு வாரம் கழிச்சு, ஒரு வண்டியை கொடுத்து, 'நீ தனியா வியாபாரம் செய்துக்கோ; வித்து முடிச்சுட்டு, சரக்குக்கு, 300 ரூபாயும், வண்டிக்கு, 100 ரூபாயும் கொடு'ன்னார்.

''முதல்ல ரொம்ப சிரமமா இருந்துச்சு; அப்புறம் பழக்கமாயிடுச்சு. இப்ப, எல்லா செலவும் போக, தினமும், 500 ரூபாய்க்கு மேல் கிடைக்குது; சில நாள்ல, 1000 ரூபாய் வரை கூட கிடைக்கும். குடும்பத்தை அழைச்சிட்டு வந்து, இங்கேயே செட்டிலாயிட்டேன்,''என்றான்.
''தெருவுல விக்கிறவங்க கிட்ட பானிபூரி வாங்கினா சுத்தமா இருக்காதுன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கேப்பா...''

''முன்னாடி அப்படி தான் இருந்தது; ஆனா, இப்போ பானிபூரி விற்பனையில், பெரிய கடைகாரர்களும் வந்துட்டதாலே, எங்கள மாதிரி வண்டியில வச்சு விற்கிற சிறு வியாபாரிகளும், சுத்தம், ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்.
''என் முதலாளியோட ஆசிர்வாதத்தோட இப்ப தனியா வியாபாரம் செய்றேன். என்கிட்டே, நாலு பசங்க வேலை பாக்கிறாங்க; நல்ல வருமானம் வருது. தரமான பொருட்களை வாங்கி, சுத்தம், சுகாதாரமா தயாரிக்கிறேன்,'' என்றான் முருகன்.

''கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. உனக்கு பொருட்கள் வேணுமின்னா சொல்லு... பஸ்சிலே போட்டு அனுப்பி வைக்கிறேன்; நீ பஸ்சிலே பணத்தை அனுப்பி வெச்சா போதும்,'' என்றார், அருணாச்சலம்.
''கோவிச்சிக்காதிங்க அய்யா... நான், அய்யர் கடையில தான் சரக்கு வாங்குறது வழக்கம். அங்கே விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், பொருள் சுத்தமாக, கலப்படம் இல்லாம இருக்கும்,'' என்றான்.

''என்னப்பா சொல்றே... இந்த ஊரில, நாலு பெரிய டிபார்ட்மென்டல் கடைகளும், 10 மினி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களும், அதோட, சின்னதும், பெரிசுமா, 100க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, விலை கூடுதலாக விற்கிற அய்யர் கடையப் போயி உசத்தியா சொல்றே.''
''அய்யா... தரத்திற்கு என்றுமே விலை அதிகம் தானுங்களே...'' என்றதும், அவருக்கு அந்தக் கடையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
''ஆமாம்; அந்தக் கடை எங்க இருக்கு...'' என்று கேட்டார்.
''இங்க, சன்னதி தெருவில தான் இருக்கு,'' என்றான்.
''சரி, சுவாமி தரிசனம் செய்துட்டு வர்றேன்; அந்தக் கடையப் போயி பாத்துட்டு வரலாமா...'' என்று கேட்டார்.
அவன், 'சரி' என்று தலையாட்டினான். பின், நடராஜரை வழிப்பட்டு, வெளியே வந்த போது, மனைவியை, காருக்கு போக சொல்லி, அவனுடன் சென்றார்.
''இதுதான்ங்கய்யா நான் சொன்ன கடை...'' என்றான், முருகன்.
கடையை ஏறிட்டுப் பார்த்தார்.

கடை முதலாளி, சிறிய மேஜையின் பின் அமர்ந்திருக்க, நடுத்தர வயதினர் மூவர், எடை போட, அதை, பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தனர், இருவர். முதலாளிக்கு பின் சிறிதும், பெரிதுமாக, 10 எவர்சில்வர், 'டின்'கள் மட்டுமே இருந்தன.

'பார்ப்பதற்கு, கடை மாதிரியே இல்லயே...' என்று நினைத்தார், அருணாச்சலம்.
''அய்யரே... இவரு எங்க ஊர்க்காரரு; அருணா டிபார்ட்மென்டல் ஸ்டோருன்னு சொல்வேனே... அதோட முதலாளி,'' என்று அவரை அறிமுகப்படுத்தினான், முருகன்.
அதை, காதில் வாங்கியபடி, சில்லரை எண்ணுவதில் மும்முரமாக இருந்தார் அய்யர். அவரது அலட்சியம் அருணாசலத்திற்கு எரிச்சலை ஏற்படுத்த, போய் விடலாமா என நினைத்தார்.
அப்போது, சில்லரையை எண்ணி முடித்த அய்யர், எழுந்து நின்று, வணக்கம் தெரிவித்து, ''வாங்கோ... நீங்க, எங்க கடைக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம். உங்களப் பத்தி முருகன் அடிக்கடி சொல்வார்,''என்றார்.

தன்னை அலட்சியப்படுத்துவதாக நினைத்ததற்கு மாறாக, எழுந்து நின்று வரவேற்றதில் மகிழ்ந்து, பதிலுக்கு வணங்கியவர், ''உங்க கடைய பத்தி, முருகன் ரொம்ப பெருமையா சொன்னார்; பாக்கணும்ன்னு தோணுச்சு; அதான் வந்தேன். மணி ஒண்ணாகப் போகுது... இந்த நேரத்திலயும் கடையில ஆட்கள் பொட்டலம் போட்டுட்டு இருக்காங்களே...'' என்றார்.
''எல்லாம் போன் ஆர்டர்; காத்தாலே ஆட்டோவிலே அனுப்பிடுவோம்.''
''கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... இந்த காலத்துல போயி, ஆட்களை வெச்சு பொட்டலம் போட்டுகிட்டு இருக்கீங்களே,'' என்றார்.

''எங்களுக்கு, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் கிடையாது; எங்க கடையிலே தான் வாங்கணும்ன்னு, கால்கடுக்க நின்னு வாங்கிட்டுப் போற நூத்துக் கணக்கானவர்கள் தான் எங்க வாடிக்கையாளர்கள். கடை சின்னதாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கேக்கிற பொருட்கள் எல்லாமும் இருக்கு. தேவையான பொருட்களை மட்டும் தரமானதா வாங்கி, சுத்தம் செய்து விக்கறோம். கடையில் பெரிய அளவுக்கு, பொருட்களை இருப்பு வைக்கறதில்ல; ரொம்ப நாட்கள் பொருட்களை வைச்சிருந்தா, காலாவதியாயிடும் அல்லது பூச்சி பிடிக்கும்ன்னு, அவ்வப்போது வாங்கி, விக்கிறோம்...

''போன் மூலம் சொல்ற வாடிக்கையாளர்களுக்கு தவிர, மற்றபடி, நாங்க, 'பேக்கிங்' போடுறதில்ல. காரணம், பேக்கிங் போடும் போது, மறதியா எடை குறைவா போட்டுட்டா, வாடிக்கையாளர்கள் தான் பாதிக்கப்படுவாங்க. அதோட, எண்ணெய் வகைகளை, பாத்திரம் எடுத்து வந்தா தான், கொடுப்போம். இந்த நடைமுறை, எங்க தாத்தா காலத்திலிருந்தே இருக்கு. முக்கியமா, ஒரு சின்ன, பிளாஸ்டிக் பேப்பரையோ இல்ல பையையோ நாங்க வெளியே விடறதில்லேங்றதில உறுதியா இருக்கோம். இதேமாதிரி, பொருட்களை வாங்கற இடத்திலேயும், நாங்க, 'பிளாஸ்டிக் பேக்கிங்'கில் வாங்கறதில்ல.

''எங்க தாத்தா, 'அரசனும், வியாபாரியும் ஒண்ணு; அரசன், செங்கோலை உயர்த்திப் பிடிச்சு, நியாயம் தவறாமல் ஆட்சி நடத்துவது போல, வணிகன், துலாக்கோலை, எந்த பக்கமும் சாய விடாமல் வாணிபம் செய்யணும். ரெண்டுமே நியாய தர்மத்துக்கு உட்பட்டவை. அரசன், தன் நாட்டு மக்கள், எந்த விதத்திலும் குறைபாடு இல்லாமல், இருக்கணும்ன்னு நினைக்கிற மாதிரி, வணிகனும், தன்கிட்டே பொருள் வாங்கறவங்க, எல்லா விதத்திலேயும் நிறைவடையணும்; எந்த பாதிப்புக்கும் உள்ளாகாம இருக்கணும்ன்னு நினைக்கணும். அதற்கேற்ப, தரமான பொருளை, சரியான எடையிலும், விலையிலும் கொடுக்கணும்; அதுதான் வியாபார தர்மம்'ன்னு சொல்வார். இதை நாங்க முணு தலைமுறையா கடைப்பிடிச்சுட்டு வர்றோம்,'' என்றார்.

'சிறிய கடையாக இருந்தாலும் பெரிய விஷயங்களை கடைப்பிடிக்கின்றனரே...' என்று நினைத்துக் கொண்டார்.
அய்யரிடம் விடை பெற்று, திரும்பிய போது, ''ஒரு நல்ல சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி; அடுத்த வெள்ளிக் கிழமை, மறுபடியும் சந்திப்போம்,'' என்றார், அருணாச்சலம்.
அப்போது, அங்கு வந்த தன் கடை பையன், நீட்டிய பொட்டலத்தை வாங்கி, அவரிடம் தந்தான், முருகன்.

''இது பட்டாணி சுண்டல்; இப்ப இந்த வியாபாரமும் செய்றோம். இதை வாங்கிட்டுப் போறதுக்குன்னே, நூத்துக் கணக்கான வாடிக்கையாளர்கள், தினமும் என் கடைக்கு வருவாங்க. நான், என்னுடைய பொருட்களை, வாழை இலை அல்லது தொன்னையிலே வெச்சு தான், வியாபாரம் செய்யறேன்; பிளாஸ்டிக் பிளேட்டுகளை பயன்படுத்தறதில்ல. எல்லாம், அய்யருகிட்ட கத்துக்கிட்டது தான்,'' என்றான்.
கார், நகரை விட்டு விலகி, மன்னார்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஹாட் பாக்சை திறந்து, சப்பாத்தியை தட்டில் வைத்து, கணவரிடம் தந்தாள், சீதாலட்சுமி.
சாப்பிட துவங்கியவருக்கு, அய்யரின் வார்த்தைகள் காதில் ஒலிக்க, தன் ஐந்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும், பிளாஸ்டிக் உறையிட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் நினைவிற்கு வந்தன.

ஒரு பாக்கெட்டுக்கு, ஒரு கிராம் பிளாஸ்டிக் குப்பை என்று கணக்கிட்டாலும், ஐந்து ஸ்டோர்களில் விற்பனையாகும் பொருட்களின் அளவை கணக்கிட்டால், நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம், 50 கிலோ; ஒரு மாதத்திற்கு, 1,500 கிலோ; ஆண்டிற்கு, 18 ஆயிரம் கிலோ. கிட்டதட்ட, ஒன்றே முக்கால், 'டன்' பிளாஸ்டிக் குப்பைகளை ஆண்டுதோறும் வெளியேற்றுகிறோம். அக்குப்பைகளோ, நிலத்தின் மீது தான் கொட்டப்படுகிறது என நினைத்த போது, அவருக்கு, தலைசுற்றியது.

கோடிக்கணக்கில் வியாபாரம்; லட்சக் கணக்கில் லாபம்; கூடவே, 'டன்' கணக்கில், குப்பை. 'வெறுங்கையால் முழம் போட்டு, கோடீஸ்வரனாக தெரிந்து என்ன பயன்... தான் வாழும் நாடு, சமூகம் பற்றிய அக்கறை இல்லாமல் போய் விட்டதே...' என வேதனையுடன் நினைத்தார்.
''சாப்பிடும் போது என்ன யோசனை...'' என்ற சீதாலட்சுமி, அவர் தட்டில், ஒரு சப்பாத்தியை எடுத்து வைத்தாள்.

''சப்பாத்தி போதும்; முருகன் கொடுத்த சுண்டல் பொட்டலத்தை எடு,'' என்றார்.
''தெருவுல விக்கிறது தானே, சுத்தபத்தமா இருக்குமா...''
''நிச்சயம் இருக்கும்; சமூக அக்கறையுடன், வியாபாரம் செய்றவன் கிட்ட, சுத்தம், தரத்தைப் பற்றி சந்தேகப்படாம, பயன்படுத்தலாம்,'' என்றார்.
அவர் சொல்வதன் அர்த்தம் புரியாமல், பொட்டலத்தை பிரித்தாள், சீதாலட்சுமி. வாழை இலையில், பக்குவமாக மடிக்கப்பட்டிருந்த சுண்டலிலிருந்து எழும்பிய மணம், கார் முழுவதும் வியாபித்து, அதன் தரத்தை பறை சாற்றியது.

அதை வாங்கி, ரசித்து, ருசித்து சாப்பிட்ட அருணாசலம், 'இதுநாள் வரை, சமூக பொறுப்புணர்வின்றி வாழ்ந்திருக்கிறோமே...' என்று நொந்து கொண்டவர், 'சமூக நோக்கம் இல்லாத நம் வெற்றி எல்லாம் வெற்றியே அல்ல...' என்று நினைத்தவர், முதலில், 'பிளாஸ்டிக் பேக்கிங்'கிற்கு பதிலாக, மாற்று, 'பேக்கிங்' முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

Related

பெட்டகம் சிந்தனை 8983047721200975248

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item