மனதில் நின்ற மாமணி! பெட்டகம் சிந்தனை!!

மனதில் நின்ற மாமணி இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். சரித்திரமாகிப் போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவா...

மனதில் நின்ற மாமணி
இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். சரித்திரமாகிப் போகின்றவர் வெகு சிலர்.
வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று. வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டடாக வாழ்ந்துச் சென்றவர் நம் பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்கள்.
தமிழ் எப்போது பிறந்தது எனக்குத் தெரியாது. தமிழ் எங்கு பிறந்தது அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ் தவழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன், என் தமிழாசான் “இறையருட் கவிமணியின் நாவில் எங்ஙனம் அது தவழ்ந்து விளையாடும்; எப்படியெல்லாம் புரண்டு விளையாடும் என்பதை நான் நன்கறிவேன். இந்த தமிழ்ப் பாவாணர் எனக்கு தமிழ்ப்பா ஆனவர்.
அந்த நாவுக்கரசரின் நறுமணம் கமழும் நற்றமிழ் மழையில் நாள்முழுதும் நனைவது நலம்பயக்கும் ஆனந்தம்; நயம்பூக்கும் பேரின்பம்.
இந்த எழுதுகோல் ஓவியரிடம் இலக்கியம் பயில்வது எழும்பிவரும் கடலலையில் இரண்டு கால்களையும் நனைக்கையில் ஏற்படும் நயாகரா அனுபவம். இந்த பன்மொழிப் புலவரின் பன்னீர் தெளிக்கும் பைந்தமிழை பருகுவது தெவிட்டாது நமக்கு.
இறையருட் கவிமணி!
இதயத்தின் ஒளிமணி!
சொல்லும் செயலும்
விரலும் ரேகையுமாய்
விளங்கிய வித்தகர்!
நாக்குத் திரியில்
மறைச் சுடரேந்தி
தீனெறி காட்டிய
மனித விளக்கு
என்று இவரை கவிபாடி களிப்புறுகிறார் கவிஞர் கஃபூர் தாசன்.
கடல் மடையின் திறப்பா அல்லது காட்டாற்று வெள்ளமா என கருத்தியம்பக் குழம்பும் கன்னித்தமிழுப் பேச்சு அவர் பேச்சு. தென்குமரி திருவையின் தேன்சிந்தும் தெவிட்டா தமிழ் அவரது தமிழ்.
பைந்தமிழ் வளர்த்த இவரது பண்ணையில் நானும் மேய்ந்தேன் என்பது நான் அடைந்த பாக்கியம். அவரது கூரிய சொற்களும் சீரிய சொற்களும் வீரிய விதைகளாய் என்னுள் விதைந்தன. இளம்பிறை பள்ளியை வளர்பிறையாய் ஆக்கிய முத்தமிழ் முழுமதி அந்த அறிவுமதி.
1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது விழா கவியரங்கத்தில் நம் பேராசிரியர் தலைமையேற்று பங்கேற்கிறார்..
ஒற்றை வரியில் தான் பணிபுரிந்த அனைத்து கல்லூரிகளையும் குறிப்பிட்டு ஒரு தன்னிலை விளக்கத்தை தருகிறார். அது அவரால் மட்டுமே முடியும்.
பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்
பாடிவிட்டுப் பட்டிருக்கும் பறவையென அழைத்துவந்தே
பாட்டரங்கில் மாட்டிவிட்டீர் பாப்புனையத் தூண்டிவிட்டீர்”
[பாடி – வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி
நடுநகர் – திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் – உத்தம்பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் – அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி]
தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் –
என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்
கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்
குருவிதாங் கேட்டாலும் கூடிவந்து பாராட்டும்
திருவிதாங் கோட்டுச் செழும் புலவ!
1973-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறையருட் கவிமணியை புகழ்ந்து கவிக்கோ அப்துல் ரகுமான் பாடிய வரிகள் இவை
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!
இது கவிஞர் மு.மேத்தாவின் புகாழாரம்
இருவரிகளைக் கொண்டு இலக்கியம் படைத்த திருவள்ளுவரைப் போல சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து பாமாலை கோர்க்கும் பூமாலை சூத்திரதாரி இவர்.
பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் தமிழறிவுக்கு இதோ ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
என்ற வள்ளுவரின் குறளுக்கு பரிமேலழகர், மு.வரதராசனார், மணக்குடவர், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற அனைத்து அறிஞர்களும் “குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்” என்ற பொருளில் தான் அருஞ்சொற்பொருள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
இதற்கு நேர்மறையான விளக்கத்தைக் கூறி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தவர் அவர். “பொய்மையும் வாய்மை இடத்த” என்பதற்கு குற்றமிலா நன்மை ஏற்படின் பொய்யைக் கூட உண்மையின் இடத்திலும் பார்க்கலாம் என்றாலும் பொய்மையானது வாய்மையின் “இடத்த”…..அதாவது இடப்பக்கமே இடம் பிடிக்க முடியுமே தவிர வலப்பக்கத்தில் ஒருபோதும் இடம் பிடிக்கவே முடியாது” என்று விரிவுரை தந்து வியப்பிலாழ்த்தியவர். ஆம். அபாரமான சிந்தனை கொண்ட அற்புத ஆசிரியப் பெருந்தகை அவர்.
தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான்.
உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.
தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் அப்துல் கபூர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.
“இவர் போன்ற நாவன்மை மிக்க நற்றமிழ் வல்லார் நம் கழகத்திற்கு கிடைப்பாரெனில் அதன் பொலிவும் வலுவும் மென்மேலும் சிறந்தோங்கும்” என்று அறிஞர் அண்ணா வியந்த பேரறிவாளர்.
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியைல் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த வரவேறு நிகழ்ச்சியில் நம் பேராசிரியரின் இரயைக் கெட்டு விட்டு “தன் சிந்தனையோட்டத்தில் முகிழ்ந்தெழும் அரிய கருத்துக்களை, தீந்தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, தனக்கே உரிய பாணியில் முழ்க்கம் செய்து வருபவர் நண்பர் கபூர் அவர்கள்” என்று புகாழாரம் சூட்டினார்.
நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியது போல், இன்றும் திருவிதாங்கோடு தந்த “அதங்கோட்டாசான்” நமது பேராசிரியர் என்று போற்றுகிறார் சகித்திய அக்காடமி விருது பெற்ற “சிற்பி” பால சுப்பிரமணியன்.
தமிழே என்னும் சொற்கொண்டு
தாயே ஊட்டிய கற்கண்டு
என்று பாடி தமிழின் பெருமையை நமக்கு புரிய வைத்தவர் அவர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு.
ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.
பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில்“மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசு கண்னதாசனும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.
ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:
ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !
அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.
அன்னார் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகி விட்டன. அருந்தமிழ் ஆர்வலர்கள் இன்றளவும் அவரை நினைவு கூறுகின்றனர். இஸ்லாமிய சமுதாயம் அவரது இலக்கிய பணியையும், ஆன்மீகச் சேவையையும் நேஆளும் எண்ணிப் பார்க்கின்றனர். அவரது இழப்பு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு ஈடு இணையில்லாத பேரிழப்பு.
[பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் (11.01.2002) அன்று இந்த மண்ணை விட்டு மறைந்தார்கள்.
– அப்துல் கையூம்
நன்றி: நாகூர் மண்வாசனை


Related

பெட்டகம் சிந்தனை 1846237297275806795

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item