மழையில் பொங்கிய மனிதநேயம்!

 மழையில் பொங்கிய மனிதநேயம்! மு கம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகி...


 மழையில் பொங்கிய மனிதநேயம்!
முகம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகிறார்கள். குடிசைவாசிகளோடு உணவைப் பிரித்து உண்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள்’ எனக் குரல்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் விளிம்பு நிலை மனிதர்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவளித்தார்கள். மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. காவடி தூக்கியவர்களும், பால் குடம் எடுத்தவர்களும், மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் எங்கே போனார்கள்?
சவப்பெட்டி தூக்கிய இஸ்லாமியர்கள்..!
‘எங்கள் பாட்டி இறந்துவிட்டார். உடலைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம். உதவி செய்யுங்கள்’ - மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க-வினருக்கு சூளைமேடு ஏரியாவில் இருந்து வந்தது இப்படியொரு தகவல். சூளைமேடு பகுதியில் வசிக்கும் பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ போனில் உதவி கேட்க களத்தில் குதித்திருக்​கிறார்கள் த.மு.மு.க-வினர். அந்தோனி அம்மாளின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சூளைமேடு ஏரியா முழுவதும் கழுத்தளவு தண்ணீர். மருத்துவமனையில் இருந்து உடலை ஸ்டெரக்சரில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தனர் த.மு.மு.க-வினர். மழை அதிகமாக இருந்ததால், அடக்கம் செய்யக் குழிகூட தோண்ட முடியவில்லை. ஒரு நாள் கழித்துத்தான் குழி தோண்ட முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி சவப்பெட்டியில் அந்தோனி அம்மாளின் உடலை வைத்து அடக்கம் செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த த.மு.மு.க-வினர்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டில் இருந்து சவபெட்டியை இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்துபோயிருக்​கிறார்கள்.
‘‘அஞ்சலி செலுத்த உறவினர்கள்கூட வரமுடிய​வில்லை. வெள்ளம் சூழ்ந்து மழையும் பொழிந்துகொண்டிருந்த அந்த நரக வேதனையில் வீட்டில் மரணம் என்றால், அந்த வலியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் செய்த உதவியை நினைத்து நெகிழ்ந்து போகிறேன்’’ என நெகிழ்கிறார் பிரிட்டோவின் அம்மா மரியம்மாள்.
த.மு.மு.க. மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் முஹம்மது அலி தலைமையிலான டீம்தான் இந்தச் சேவையை செய்திருக்கிறது. ‘‘கிறிஸ்தவரின் உடலை முஸ்லிம்கள் சுமந்தார்கள் எனச் சொன்னால்கூட அது மலிவான பிரசாரம் ஆகிவிடும். இது மனிதநேய உதவி. இந்த வெள்ளத்துக்காக மட்டுமல்ல... ரத்ததானம், ஆம்புலன்ஸ் உதவிகள் என ஏற்கெனவே செய்து வருகிறோம்’’ என்றார்.
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வீட்டில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த தகவலை முதல் மாடியில் குடியிருந்தவர்கள் த.மு.மு.க-வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் கட்சியின் தொண்டர் அணியினர்தான் உடலை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் தலைமையில்தான் இந்தப் பணி நடைபெற்றி ருக்கிறது. “தற்கொலை செய்தவரின் உடலை வெளியே கொண்டு வரவே சிரமமாகிவிட்டது. அந்தப் பகுதி முழுவதும் வெள்ளநீர் நிரம்பியிருந்ததால் ஆம்புலன்ஸ்கள்​கூட வரவில்லை. எங்கள் அமைப்பில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுத்தான் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்” என்றார் தாஹா நவீன்.
பிணத்தோடு மூன்று நாட்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தின் அருகில் வயதான மூதாட்டி ஒருவர் தனியாக குடிசைபோட்டு வசித்து வந்தார். வெள்ளம் திடீரென்று பெருக்கெடுத்து ஓடியதால் மூதாட்டியின் வீடு அடித்துச் செல்லப்பட்டது. உதவி கேட்டு மூதாட்டி அலற, மாடியில் வசித்து வந்த அவருடைய மகள், மூதாட்டியைத் தூக்கிக்கொண்டு வரும்போது உயிர் பிரிந்துவிட்டது. அதனால், மாடியில் இருந்து உடலைக் கீழே கொண்டு வர முடியவில்லை. வெள்ளம் வடியாததால் மூன்று நாட்களாக உடலை வைத்துக்கொண்டு திண்டாடி யிருக்கிறார்கள். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினருக்குத் தகவல் கிடைத்து உடலை மீட்டு அடக்கம் செய்திருக்கிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்த அமைப்பின் நிர்வாகி அப்துல் ரஹ்மான், ‘‘அந்தப் பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் உடலை மாடியில் இருந்து இறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் துர்வாடை வீசியது. அந்த உடலோடு உறவினர்கள் பரிதவித்து நின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர், போலீஸ் என யாருமே உதவவில்லை. ஃபிரிசர் பாக்ஸைக்கூட அங்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்து உடலைத் துணியால் சுற்றி வெளியே கொண்டு வந்து நல்லடக்கம் செய்தோம்’’ என்றார்.
லாரியில் காப்பற்றப்பட்ட கர்ப்பிணிகள்!
வெள்ளத்தில் சராசரி மனிதர்களே சிக்கியபோது இன்னொரு உயிரை சுமந்துகொண்டிருந்த கர்ப்பிணிகளின் நிலையைச் சொல்லவா வேண்டும். அப்படி வெள்ளத்தில் சிக்கிய நான்கு கர்ப்பிணிப் பெண்களை மீட்டனர் த.மு.மு.க-வினர். “வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மூன்றாவது பிளாக் பகுதியில் தண்ணீர் கீழ்தளம் முழுவதும் மூழ்கிவிட்டது. வீட்டில் மேல்தளத்தில் நிறைமாதக் கர்ப்பிணி ஒருவருக்கு வலி ஏற்பட 108-க்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தெருவுக்கு ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. தகவல் அறிந்து அங்கே போன த.மு.மு.க-வினர் ஏணி மூலம் முதல் மாடிக்குப் போய் கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு லாரி ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள். இப்படி வெள்ளத்தில் சிக்கிய மூன்று கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார்கள். ‘‘வலியால் அவர்கள் துடித்து அழ.. தண்ணீர் வேகமெடுத்து ஓட அவர்களை மீட்டு லாரியில் ஏற்றியது சவாலான பணிதான்’’ என்கிறார் த.மு.மு.க நிர்வாகி ஜாஹிர் ஹுசைன்.

உடலை மட்டுமே மீட்க முடிந்தது!
தியாகராய நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பில் வெள்ள சூழ்ந்தது. தரை தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. கனகாம்பாள் என்ற மூதாட்டியை உறவினர்கள் சிலர் பரணில் படுக்கவைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். தண்ணீர் உணவு இல்லாமல் கனகாம்பாள் இறந்துவிட இரண்டு நாட்கள் கழித்துத்தான் கனகாம்பாள் பிணத்தை போலீஸ் மீட்டது. “அம்மா இருந்த வீட்டுக்குள் தண்ணி வந்துடுச்சினு தெரிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டேன். நான் வர்றதுக்குள்ள தண்ணி சரசரனு ஏறிடுச்சு. உதவிக்கு படகு கேட்டு போலீஸுக்கும் ராணுவத்துக்கும் போன் பண்ணோம். ஆனா யாரும் வரல. மறுநாள் பக்கத்து வீட்டுக்காரங்க உங்க அம்மா வீட்டுல இருந்து நாத்தம் அடிக்குதுனு சொன்​னாங்க. அப்புறம் போலீஸுக்கு போன் செஞ்சு வீட்டுல இருந்து நாத்தம் அடிக்குது, இப்பவாச்சம் வாங்கனு சொன்ன பிறகுதான் படகு கொண்டு வந்தாங்க. உள்ள போய் பாத்தா அம்மா பிணமா கிடந்தாங்க” என்றார் கனகாம்பாளின் உறவினர் செல்வம்.
சித்ராவின் மகள் யூனுஸ்!
சென்னையைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ் என்கிற இளைஞர். இ-காமர்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த செலவில் மீட்புப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். சென்னை பெசன்ட் நகர் ஆலையம்மன் கோயில் பகுதி மீனவர்களுடன் பேசி படகுக்கு 1,500 ரூபாய் என வாடகை  பேசி 4 படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு நாட்களில் அதிக நபர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட, 20 ஆயிரம் ரூபாய்க்கு படகுகளை வாடகைக்கு எடுத்து செல்போன் மூலம் இணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். 17 படகுகள் வரை தனது சொந்தச் செலவில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார். ஒரு கட்டத்தில் தனது பர்ஸ், வங்கி ஏ.டி.எம் அட்டைகள் தண்ணீரில் தொலைந்து போக, முகநூலில் தனது நண்பர்களை உதவு​மாறு கேட்டுக்கொள்ள உதவி குவிந்திருக்கிறது. ஊரப்பாக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் மாடி வரை மூழ்கி இருந்த வீட்டின் மாடியில் கர்ப்பிணிப் பெண் சித்ரா இருந்தார். உதவிக்கும் யாரும் இல்லை. முகம்மது யூனுஸ் உடனடியாக நீரில் குதித்து சித்ராவைக் காப்பாற்றி படகில் சேர்த்திருக்கிறார். அவரது கணவர் சந்துருவையும் மீட்டிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக பிறந்த குழந்தைக்கு ‘யூனுஸ்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். யூனுஸிடம் பேசிய போது ‘‘இந்த உதவி மனிதாபிமானம் பார்த்து செய்தது. அதற்கு எந்த சாயமும் பூச வேண்டாம்’’ என்றார்.
ரோட்டில் நடைபெற்ற தொழுகை..!
மதங்கள் பார்க்காமல் பள்ளிவாசல்களில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மக்கா பள்ளி, மண்ணடி பள்ளி, தாம்பரம் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடை, மாத்திரைகள் அங்கு வழங்கபட்டன. வேளச்சேரியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அன்று பள்ளிவாசலில் உள்ள மக்களை வெளியேற்ற கூடாது  என முடிவு செய்து சிறப்புத் தொழுகையை அங்கிருந்தவர்கள் சாலையில் தொழுத சம்பவமும் நிகழ்ந்தது.

தவித்த கண்பார்வையற்றோர்!
சென்னை பெருவெள்ளத்தில் சாதாரண மனிதர்களே தத்தளித்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நிலையைச் சொல்ல வேண்டுமா? கோடம்பாக்கம் லிபர்டி அருகே ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் வெள்ளம் சூழத் தொடங்கியது. அதில் தங்கி இருந்த கண்பார்வையற்ற மாணவர்கள் 11 பேருக்கு என்னவென்று நிலவரம் புரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள  இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மஸ்ஜித்துர் ரஹ்மான் மசூதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சிக்கியிருந்த இடத்துக்குச் சென்று பத்திரமாக மீட்கப்பட்டு மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். உதவி!
ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி, விஸ்வா சம்வாத் கேந்த்ரா அமைப்புகள் சேர்ந்து 90 இடங்களில்  நிவாரணப்பணிகளை செய்தனர். குரோம்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மாடியில் தங்கியிருந்த சிலர் வீடுகளை விட்டு வெளியே வர மறுத்தனர். போலீஸ், தீயணைப்புத் துறை முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர் களிடம் சென்று பேசி, அவர்களின் அச்சத்தைப் போக்கி மீட்டுள்ளனர். பெண்களுக்கு இவர்கள் சானிடரி நாஃப்கின் வழங்கியபோது, ‘எங்களோட நிலைமையை புரிந்துகொண்டு உதவி செய்கிறீர்கள்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்கள்.
மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதை நிரூபிக்க மழை காரணம் ஆகிவிட்டது!
- கே.பாலசுப்பிரமணி, ஆ.நந்தகுமார், அ.சையது அபுதாஹிர், மா.அ.மோகன் பிரபாகரன்

Thanks to ஜூனியர் விகடன் - 13 Dec, 2



Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 66446706879138651

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item