பலம் தரும் பழங்கள்!

பலம் தரும் பழங்கள்! நம்ம ஊர் ஸ்பெஷல் நம் நிலம்... நம் பழங்கள்... நம் ஆரோக்கியம்! மா , பலா, வாழை...

பலம் தரும் பழங்கள்!
நம்ம ஊர் ஸ்பெஷல்
நம் நிலம்... நம் பழங்கள்... நம் ஆரோக்கியம்!
மா, பலா, வாழை எனக் கனிகளைப் போற்றிக் கொண்டாடிய சமூகம் நாம். ஒவ்வொரு பகுதியிலும், அதன் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப விதவிதமான பழங்கள் விளைகின்றன. நம் ஊர் பழங்களுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது. மறுபுறம், வெளிநாட்டுப் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை எனக் கூறப்பட்டு, இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் தகுந்த மாதிரி காய்களையும் கனிகளையும் இயற்கை வாரி வழங்கியிருக்கும்போது, நாம் ஏன் அயல்நாட்டுப் பழங்களை வாங்க வேண்டும்?
‘உணவே மருந்து' என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் ஊர் பழங்கள். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொருவிதமான சத்து பொதிந்து கிடக்கிறது. பொதுவாக, பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டவை; நார்ச்சத்து மிகுந்தவை; பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றன. வெவ்வேறு நிறத்தில் இருக்கும் பழங்களில் அரிய வகை ஃப்ளேவனாய்டு சத்துக்கள் இருக்கின்றன.
நம் நாட்டில் விளையும் பழங்களின் சிறப்புகளையும், எந்தெந்த கனிகளை யார் யார் சாப்பிட வேண்டும் என்பன குறித்தும் விளக்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சமோசா, இனிப்புப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகளை ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்துத் தருவதற்குப் பதிலாக, ஏதாவது ஒரு பழத்தைத் தினமும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொடுத்து அனுப்பவும். சிறு வயதிலிருந்தே பழங்களைச் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியம் மிளிரும் ஆயுள் கூடும்.

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?
பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.
ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை  தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.
பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.
பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.
பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.
சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.
உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.
நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.
ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பலாப்பழம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.
நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, கே ஆகியவையும் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.
கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பலாக்காயை சாம்பார் வைத்துச் சாப்பிடலாம். பலாக்கொட்டையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது.
பலாப்பழம், மலச்சிக்கலுக்கான சிறந்த நிவாரணி. உணவுக்குழாயில் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு.

மாதுளை
மாதுளை மணப்பாகு: மாதுளையைக் கொட்டையுடன் சேர்த்து அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன் சர்க்கரைப்பாகு கலந்தால், மாதுளை மணப்பாகு (மாதுளை சிரப்) ரெடி. இதை, குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், ரத்தசோகை குணமடையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி பிரச்னைக்கு மாதுளை மணப்பாகு நல்ல தீர்வு.
நுண்ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளை. ரத்தக் குழாய்கள் தடிப்பதால் ஏற்படும் இதயநோய்களைத் தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு.
அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து மாதுளை. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.
கரு நன்றாக வளர மாதுளை உதவும். எனவே, கர்ப்ப காலத்தில் அவ்வப்போது மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.
ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, அதன் அளவைக் குறையச் செய்யும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள வறட்சி (வாதம்), உடல் சூடு (பித்தம்) இரண்டையும் சமப்படுத்தும்.
உடலுக்கு அவசியம் தேவைப்படும் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தைக் கொடுத்துவந்தால், பிரச்னை தீரும்.
வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும். ஞாபகமறதியைத் தடுக்க அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடலாம்.
வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில், வாழைப் பழத்தைச் சாப்பிட்டால்,  மூளையில் செரட்டோனின் ஹார்மோன் சுரந்து, மன அழுத்தம் குறையும்.

சீதாப்பழம்
ஒரு சீதாப்பழத்தில் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில், 25 சதவிகிதம் வரை  கிடைக்கும்.
சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் எனப் பல்வேறு தாது உப்புகள் நிறைவாக உள்ளன. மக்னீசியம் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். இதயத் தசைகளுக்கு மிகவும் நல்லது.
நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் இருக்கின்றன. தாமிரம் அதிகம் இருப்பதால், உடலின் இணைப்பு மூட்டுக்கள் உறுதியாகும்.
சூடான உடல்வாகு கொண்டவர்கள், சூட்டுக்கட்டி போன்ற பிரச்னை உள்ளவர்கள் சீதாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் குளிர்ச்சி அடையும்.

மாம்பழம்
வாதம், பித்தம் இரண்டையும் சமப்படுத்தும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு.
மாம்பழத்தில் கரோட்டின் சத்து மிக அதிகம் என்பதால், பார்வைத்திறன் மேம்படும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.
மாம்பழத்தில் மில்க்‌ஷேக்  செய்து சாப்பிடக் கூடாது. மாம்பழ ஜூஸ் சாப்பிட விரும்பினால், கொஞ்சம் ஜாதிக்காய் மற்றும் இஞ்சித் தூளுடன் மாம்பழத்தை மிக்ஸியில் அரைத்துப் பருகலாம்.
மாம்பழத்துக்கு ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. மாம்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்து இருக்கிறது.

விளாம்பழம்
இருமல், கோழை, காசநோய், தொண்டைப்புண், ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் விளாம்பழத்துடன் திப்பிலிப்பொடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அடிக்கடி விக்கல் பிரச்னை இருப்பவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என வருத்தப்படுபவர்கள், விளாம்பழ டானிக் சாப்பிட்டுவந்தால், உடல் எடை கூடும்.
கல்லீரலைச் சரிசெய்யும் ஆற்றல் விளாம்பழத்துக்கு உண்டு. கல்லீரல் சுருக்க நோயில் இருந்து கல்லீரலைக் காக்கும் ஆற்றல் இருப்பதால், குடிநோயில் இருந்து மீண்டவர்கள் கல்லீரலில் ஏற்பட்ட புண்கள் ஆற விளாம்பழத்தைச் சாப்பிடலாம்.
மழை, குளிர்காலங்களில் (செப்டம்பர் - பிப்ரவரி) அதிகம் கிடைக்கும்.

நாவல்பழம்
நாட்டுநாவலில் ஆன்தோசயனின் சத்து அதிகம் இருக்கும். ஆப்பிளைவிடவும் அதிக அளவில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள், நாவல்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீர்ப்போக்கு கட்டுக்குள் வரும். கல்லீரல், மண்ணீரல் போன்ற வற்றைச் சுத்தப்படுத்திச் சீராக்கும்.
நாவல்பழம் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.பசியைத் தூண்டும் ஆற்றல் நாவலுக்கு உண்டு. உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

அன்னாசிப்பழம்
அன்னாசியில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து இரண்டும் இருக்கின்றன.
ரத்தம் உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். ஆர்த்ரைட்டிஸ் போன்ற மூட்டுவலிகளைத் தடுக்கும். செரிமான கோளாறுகளைச் சீர் செய்யும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், பல்வேறுவிதமான புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றும்.
அன்னாசியில் ‘புரோமிலெய்ன்’ எனும் அரிய வகை சத்து இருக்கிறது. அன்னாசியில் இருந்து இந்த சத்தைப் பிரித்துத்தான், உடல் எடையைக் குறைப்பதற்கான மாத்திரைகளை உருவாக்குகின்றனர்.

நெல்லிக்கனி
நம் ஊரில் இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.   ‘அரை நெல்லிக்கனி’ எனப்படும் சிறிய நெல்லிக்கனியில் சத்துக்கள் குறைவு. ‘மலை நெல்லிக்கனி’ எனப்படும் பெரிய நெல்லிக்கனியில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.
நெல்லிக்கனி, நெல்லிக்காயைவிடக் கொஞ்சம் புளிப்புச்சுவை குறைவானது.
காரத்தைத் தவிர்த்து இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து சுவைகளும் கலந்த ஒரே பழம் நெல்லிக்கனி மட்டுமே.
மாதவிடாய்க் கோளாறுகளை நெல்லிக்கனி சரிசெய்யும். இதய நோய் வராமல் தடுக்க, தினமும் நெல்லிக்கனி  சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்தது.
ஆஸ்டியோ பொரோசிஸ் பிரச்னையைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க நெல்லிக்கனி உதவும்.
நெல்லிக்கனியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் தேகம் பொலிவுறும்.

கொய்யாப்பழம்
வைட்டமின் சி அதிகம் உள்ள பழம் என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆரஞ்சு. ஆனால், விலை உயர்ந்த ஆரஞ்சைக் காட்டிலும் மூன்று மடங்குக்கும் அதிகமான வைட்டமின் சி கொய்யாப் பழத்தில் இருக்கிறது.
உட்புறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதுதான் நம் ஊர் கொய்யா. இந்தக் கொய்யாவில்தான் லைக்கோபீன் சத்து இருக்கிறது. இது, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
கொய்யாப்பழம் மலச்சிக்கலைப் போக்கும். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இந்தப் பழத்தில் மட்டுமே அதிக அளவு கிடைக்கிறது. தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டு
வந்தால் ஆரோக்கியம் கூடும்.

பேரிக்காய்
மலைப்பிரதேசங்களில் நன்றாக வளரும். ஆப்பிளில் உள்ள அளவுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் பேரிக்காயிலும் இருப்பதால் இதனை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைப்பார்கள்.
கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. கருவின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.
சூப்பர் மார்கெட்டில் இருக்கும் வெவ்வேறு நிற பேரிக்காய்களில் சத்துக்கள் குறைவு. நாட்டுபேரிக் காயில்தான் சத்துக்கள் அதிகம். பேரிக்காயை நன்றாகக் கழுவி, தோலுடன் சேர்த்தே சாப்பிடவும்.
பேரிக்காய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி, இ, கே ஆகியவை சிறிதளவு இருக்கின்றன.

பேரீச்சம்பழம்
இரும்புச்சத்து, பேரீச்சையில் மிகவும் அதிகம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
கால்சியம் சத்து அதிகம் கொண்டது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், குழந்தைகள் தினமும் 25 - 50 கிராம் அளவுக்குப் பேரீச்சம்பழம் சாப்பிட, எலும்புகள் உறுதியாகும்.
சிலருக்கு, அடிக்கடி சளிப்பிடித்து, எந்தப் பழமும் சாப்பிட முடியாத நிலை இருக்கும். சளி, இருமல் பிரச்னை உள்ளவர்களும் தாரளமாகப் பேரீச்சை சாப்பிடலாம்.
பேரீச்சம்பழம் தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விதை நீக்கிய பேரீச்சையைவிட விதை நீக்காத நம்மூர் பேரீச்சையில் தான் அதிக சத்துகள் இருக்கும்.

ஆரஞ்சு
இது நம் ஊர் ஆரஞ்சுப் பழம். ஓர் ஆரஞ்சுப் பழத்தில் ஒரு நாளுக்கு அவசியம்  தேவையான வைட்டமின் சி  இருக்கிறது.
ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ‘பெக்டின்’ என்ற ரசாயனம், குடல் புண்கள் உருவாவதைத் தடுக்கிறது. நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் ஆரஞ்சு குறைக்கிறது.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருக்கிறது.
ஆரஞ்சுப் பழத்திலும், பழத்தோலிலும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. ஆரஞ்சு  ஜூஸ் குடிப்பதைவிட பழமாகச் சாப்பிட்டால், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்டும் அதிகம் இருப்பதால், ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் அண்டாது.
ஆப்பிள், ஆரம்பகட்ட பித்தப்பைக் கற்களை வளரவிடாமல் தடுத்து, கரைத்து வெளியேற்றும்.
மாவுச்சத்து மற்றும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்.
செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். லூட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்களும் ஆப்பிளில் நிறைந்துள்ளன.
வளர் இளம் பருவத்தினர், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்குமே ஆப்பிள் ஏற்றது.

வில்வம்பழம்
வில்வம்பழத்தின் ஓடினை உடைத்து, தண்ணீரில் போட்டு நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் வெல்லம், சீரகத் தூள், இந்துப்பு சேர்த்து, நன்றாக அரைத்து ஜூஸாகப் பருகலாம்.
வெயில் காலங்களில் வரும் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னைக்கு வில்வம்பழம் சிறந்த மருந்து. வில்வ சர்பத் மிகவும் பிரபலம்.
வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குறிப்பாக, சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோயான ‘இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்’ பிரச்னையைக் குணமாக்கும்.
இதில் ‘டானின்’ என்ற சத்து இருக்கிறது. வில்வம் பழத்தில் இருக்கும் துவர்ப்புச்சுவை, உடலின் தசைகளைச் சுருக்கும். வில்வம்பழம் சாப்பிட்டால், ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது தவறான கருத்து.
கார்போக் அரிசி, வெந்தயம், பால், வில்வம்பழம் சேர்த்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நன்றாக முடி வளரும். கண் நோய்கள் வராது.

எலுமிச்சை
வைட்டமின் சி நிறைந்தது. வாந்தி, விக்கல் ஏற்படுபவர்கள் எலுமிச்சைப்பழத்தைச்  சிறிதளவு சுவைத்தால் உடனடியாக நிற்கும்.
எலுமிச்சைப்பழம், தேன், வறுத்த சீரகம் சேர்த்துச் சாப்பிட்டால், வாந்தி உணர்வு மறையும். இதயநோய்களைத் தடுக்கும்.
கரப்பான், சொரியாசிஸ், வேர்க்குரு பிரச்னை இருப்பவர்கள், எலுமிச்சைச்சாற்றைத் தோலின் மீது தடவி, வெயிலில் சில நிமிடங்கள் காயவைத்த பின் குளித்தால், தோல் பிரச்னைகள் தீரும்.
சிறுநீர்ப் பிரச்னை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப்பழம் சிறந்த நிவாரணி. கால்சியம் சத்து இருப்பதால், எலும்புகளுக்கு நல்லது.

இலந்தைப்பழம்
அதிக தாகம், ரத்தம் கசிதல் போன்ற பிரச்னைகளை இலந்தைப்பழம் சீர் செய்யும்.
வயிற்றுப்புண்களை ஆற்றும். ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். மற்ற சிட்ரஸ் பழங்களைவிட 20 சதவிகித வைட்டமின் சி இதில் அதிகமாக இருக்கிறது.
இலந்தைப்பழம் உடல் சூட்டைக் குறைத்து, பித்தத்தைச் சமப்படுத்தும். கல்லீரல் சுருக்கம் உள்ளவர்களுக்கு நல்லது.
யுனானி மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கும் இலந்தைப்பழம் மருந்தாகத் தரப்படுகிறது. வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருப்பவர்கள், அடிக்கடி வாந்தி உணர்வு இருப்பவர்கள் இலந்தைப்பழம் சாப்பிட பிரச்னை சீராகும்.

பனம்பழம்
பனம்பழம், உடலுக்குக் குளிர்ச்சிதரும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. பனம்பழம் உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம்.
பனம்பழத்தைத் தீயில் சுட்டு, சதைப் பகுதியைச் சாப்பிட வேண்டும். பனம்பழத்தில் மாவுச்சத்து அதிகம்.
குறைந்த கலோரி மட்டுமே கொண்டுள்ளது. பாஸ்பரஸ் சத்து இருப்பதால், எலும்புகள் வளர்ச்சிக்குப் பனம்பழம் துணைபுரியும். ஆனால் அதிகம் சாப்பிட்டால், வயிற்று உபாதை ஏற்படக்கூடும்.
பனம்பழத்தின் சத்துக்கள் நுங்கிலும் கிடைக்கும். பனம்பழத்தை அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், நுங்கு உடலுக்கு மிகவும் ஏற்றது.

தர்பூசணி
நம் ஊர் தர்பூசணி சதைப்பிடிப்பு கெட்டியாக இருக்காது. ஓரளவு இனிப்புச் சுவையும் மிதமான சிவப்பு நிறமும் கொண்டது.
தர்பூசணியைப் பழமாகச் சாப்பிட்டாலே நீர்ச்சத்து கிடைக்கும். எனவே, ஜூஸாகச் சாப்பிடத் தேவை இல்லை.
தர்பூசணியில் கரோட்டின் சத்து அதிகம் இருப்பதால், கண்களுக்கு  நல்லது. லைக்கோபீன் சத்து அதிக அளவு உள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த தர்பூசணியை, வெயில் காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் பாதிக்கப்படும் தோல் மீண்டும் பொலிவடையும்.

திராட்சை
பன்னீர் திராட்சைதான் நம் ஊர் திராட்சை. கொட்டையுடன் இருக்கும் திராட்சையில்தான் சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.
உடலில் அதிகப்படியான பித்தத்தைச் சரி செய்யும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கொட்டையுடன் திராட்சையை அரைத்து, சாறு எடுத்து அருந்தினால், நோயின் தீவிரம் குறையும்.
ரத்தக்குழாயில் ஏற்படும் பிரச்னைகள், வெரிகோஸ்வெயின் முதலான தொந்தரவுகளைத் தடுக்கும் ஆற்றல், திராட்சைக்கு உண்டு.
திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் சத்து இதயம் சீராக இயங்கத் துணைபுரியும். திராட்சை ரசம் சிறந்த ‘இதய டானிக்’.
திராட்சை, மலச்சிக்கலுக்குச் சிறந்த நிவாரணி. குடல் புண்களை ஆற்றும். சிறுநீரை நன்றாக வெளியேற்றும். ‘அல்சைமர்’ எனும் மறதிநோயைத் தடுக்கும்.

பப்பாளி
போர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்திய பழம். தற்போது, பப்பாளி நமது மண்ணில் எளிதாக விளைகிறது.
பப்பாளிக்காய், பழம் இரண்டுமே அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. கரோட்டின் அதிகம் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.
பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் அண்டாது.
‘பாபெய்ன்’ எனும் அரிய வகை என்சைம் பப்பாளியில் இருக்கிறது. இது ஜீரணத்தைத் தூண்டும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
பப்பாளியைச் சாப்பிட்டுவந்தாலும், சருமத்தில் தடவிவந்தாலும், தோல் பொலிவுபெறும். வயிற்றுப்புண், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றைச் சீர்செய்யும்.

சப்போட்டாபழம்
சப்போட்டாவை செங்காயாகச் சாப்பிடுவது உடலுக்கு பலம் சேர்க்கும். சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தோல் பொலிவடையும். சப்போட்டா ஃபேஷியல் செய்வது உடனடி முகப்பொலிவைத்  தரும்.
சப்போட்டா உடனடி ஆற்றலைத் தரும். பழச்சர்க்கரை அதிகம் இருப்பதால், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் நல்லது.
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் வயிற்றைக் கலக்கிவிடும். ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டவுடன் கழிப்பறைக்குச் செல்வார்கள். ‘இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்’ எனச் சொல்லப்படும் இந்த பிரச்னையைச் சரி செய்யும் ஆற்றல் சப்போட்டாவுக்கு உண்டு.
வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முலாம்பழம்
முலாம்பழம் நம் ஊரில் அதிகம் விளையக்கூடியது. கிர்ணிப்பழமும் முலாம்பழத்தின் மற்றொரு வகையைச் சார்ந்ததே.
முலாம்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகம் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
முலாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். மலச்சிக்கல், அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் முலாம்பழத்துக்கு உண்டு.
கொடி வகையைச் சார்ந்த பழங்கள் அனைத்துமே தோல் பொலிவடைய உதவும். முலாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்,  இளம்வயதில் வரும் முதுமைத் தோற்றம் மறையும்.

முந்திரிப்பழம்
முந்திரிப்பழத்தில் வைட்டமின் சி அதிகம். சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் இந்தப் பழத்துக்கு உண்டு.
முந்திரிப்பழத்தை தண்ணீரில் போட்டு அரைமணி நேரத்துக்குப் பிறகு, பழத்தைத் தனியாக எடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்தால், உடல் எடை குறையும்.
கரோட்டின் சத்து இருப்பதால், பார்வைத் திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
முந்திரிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலமாகும். தசைகளை நன்றாகச் சுருங்கி விரியச் செய்யும். இதயத்துக்கு நல்லது.
முந்திரிப்பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது, தோலுக்கு நல்லது.

சாத்துக்குடி
அனைவரும் சாப்பிட  ஏற்ற பழங்களில் சாத்துக்குடிக்கு முக்கியமான இடம் உண்டு. வைட்டமின் சி அதிகம் நிறைந்தது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. ஆனால், எடை குறைக்க விரும்புபவர்கள் சாத்துக்குடியைப் பழமாகவே உரித்து, சுளைகளை மென்று உண்ணுவது நல்லது. ஜூஸாக அருந்துவதைத் தவிர்க்கலாம்.
செரிமானக் கோளாறுகளைச் சரி செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை விரைவில் அதிகரிக்கும். சிகிச்சை முடிந்து  மீள்பவர்களுக்கு சாத்துக்குடி சிறந்த மருந்து.
வயிற்றுப்புண்களை ஆற்றும். குறிப்பாக பெப்டிக் அல்சர் பிரச்னையைச் சரிசெய்யும்.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது, ரத்தத்தை விருத்தி அடையச் செய்யும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை அத்திக்கு உண்டு என்பதால், சிறந்த டீடாக்ஸாகச் செயல்படும். மூல நோயைத் தடுக்கும் ஆற்றலும் அத்திக்கு உண்டு.
நா வறட்சி உள்ளவர்கள் அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். பேச்சு சரியாக வராமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு, அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.
நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.

பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பழங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நல்ல வண்ணத்தில், எந்த அழுக்கும் இல்லாமல், பளபளவென இருக்கும் பழங்களை வாங்கக் கூடாது. ஆப்பிள் போன்ற பழங்களில் மெழுகு தடவி விற்பார்கள். அதை, அப்படியே சாப்பிடும் போது, மெழுகு உடலுக்குள் சென்று பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செயற்கை ரசாயனம் கலக்காத ஆர்கானிக் பழங்களை வாங்குவது நல்லது. எந்தப் பழத்தை வாங்கினாலும்  வேகமாக வெளிவரும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும்.

மில்க்‌ஷேக் வேண்டாம்!
மில்க்‌ஷேக்  சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஜூஸாக  சாப்பிடுவதற்கு பதில் பாலுடன் சேர்த்து மில்க்‌ஷேக்காகச் சாப்பிடுவது சத்து மிகுந்தது என பலர் நினைக்கின்றனர். ஆனால்,  பாலுடன் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம்.
பாலுடன் பழத்தைக் கலந்து, மில்க்‌ஷேக், தயிருடன் பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் செய்து சாப்பிடுவது போன்றவை தவறு. இது போன்ற தவறான உணவு காம்பினேஷன் காரணமாகவே பலருக்கு ஃபுட் பாய்சன், அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.
பாலில் இருக்கும் புரதச்சத்து செரிமானத்துக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். பழங்கள் எளிதில் செரிமானம் ஆகும் தன்மைகொண்டவை. இவை செரிமான மண்டலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
உணவுடன் பழங்களைச் சேர்க்கக் கூடாது என்பதைப் போலவே,  பாலுடனும்  பழங்களை சேர்க்கக் கூடாது. ஓரிரு நாட்கள் பாலுடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் வராது. தொடர்ந்து நீண்ட நாட்கள் மில்க்‌ஷேக் சாப்பிடும்போதுதான், செரிமானக் கோளாறுகள் வரும்.
குழந்தைகளுக்கு தோலில் ஏற்படும் அரிப்புகள், அலர்ஜிகள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மில்க்‌ஷேக் அதிகம் அருந்துவதும் ஒரு  மறைமுகக் காரணம். எனவே, பழத்தை தனியாகச் சாப்பிடவும், பாலை வேறொரு நேரத்தில் தனியாகக் குடிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?
பழங்களில் எண்ணற்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்றவை. தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும்.
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் அரிசி சோற்றிலோ, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளிலோ கிடையாது, பழங்களில் தான் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே   கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான். பழங்களில் கொலஸ்ட்ரால்  இல்லை என்பதால் தாரளாமாக தினமும் சாப்பிடலாம்.
பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளித்தோற்றத்துகும் பயன் உண்டு. பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது தோல் பொலிவடையும், வயதான தோற்றம் இளமையிலேயே வருவது தடுக்கப்படும்.செயற்கை கிரீம்களை முகத்தில் தடவுவதற்கு பதில் பழம் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு  இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் முதலான நோய்கள் வருவதற்கான் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு...
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எந்தப் பழமும் சாப்பிடக் கூடாது என்று வருந்தத் தேவை இல்லை. இனிப்புச் சுவை குறைந்த, கலோரி குறைந்த சில பழங்களை அளவாகச் சாப்பிடலாம்.
பழங்கள் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டவை என்பதால், இனிப்புச் சுவை மிகுந்த பழங்களைச் சாப்பிடும்போது  பழச்சர்க்கரை விரைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம். எனவே  நெல்லிக்கனி, கொய்யா, எலுமிச்சை, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி, நாவல் ஆகிய பழங்களை, சர்க்கரை நோயாளிகளும் அளவோடு சீரான இடைவெளிகளில் சாப்பிடலாம்.
நாவல்பழக் கொட்டையை மட்டும் எடுத்துக் காயவைத்து, பொடித்து, மோரில் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
கொய்யாவை முழுப்பழமாகச் சாப்பிடுவதைவிட செங்காயாகச் சாப்பிடுவது சிறந்தது. நெல்லிக்கனி சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு நல்லது. மாதுளையை அளவோடு சாப்பிடலாம்.
சப்போட்டா, முக்கனிகள், திராட்சை, தர்பூசணி போன்றவற்றைச் சுவைக்காக எப்போதாவது ஒருமுறை மிகச்சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம். இயன்றவரை, தவிர்ப்பதே நல்லது.

Related

பழங்களின் பயன்கள் 6834639753978962606

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item