வாசகிகள் கைமணம் ஆஹா குல்கந்து... அசத்தல் வெஜ் பொங்கல்! சமையல் குறிப்புகள்-சைவம்!
வாசகிகள் கைமணம் ஆஹா குல்கந்து... அசத்தல் வெஜ் பொங்கல்! மல்டி வெஜிடபிள் பொங்கல் தேவையானவை: பச்சரிசி ஒரு டம்ளர், பாசிப்பருப்பு அர...
https://pettagum.blogspot.com/2014/11/blog-post_22.html
வாசகிகள் கைமணம்
ஆஹா குல்கந்து... அசத்தல் வெஜ் பொங்கல்!
மல்டி வெஜிடபிள் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி ஒரு டம்ளர், பாசிப்பருப்பு அரை டம்ளர், கேரட் ஒன்று,
தக்காளி 2, கோஸ், பீன்ஸ், பட்டாணி (சேர்த்து) - 100 கிராம், சிறிய பச்சை
மிளகாய் 5, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சிறிதளவு, மஞ்சள்தூள் ஒரு
சிட்டிகை, சீரகம் ஒரு டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: கனமான
குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, சீரகத்தைப்
போட்டு, வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை,
கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்னர் பொடியாக நறுக்கிய கேரட்,
தக்காளி, கோஸ், பீன்ஸ் ஆகியவற்றுடன் பட்டாணியையும் சேர்த்து... உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். இதில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். சுத்தம்
செய்து, களைந்த அரிசியையும் பாசிப்பருப்பையும் சேர்த்து, குக்கரை மூடவும்.
5 விசில் வந்ததும் இறக்கவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத்
திறந்து, மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கிளறி, சுடச்சுடப்
பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பப்பட்டால்,
தேங்காய் சட்னி செய்துகொள்ளலாம்.
சௌசௌ குல்கந்து!
தேவையானவை:
சௌசௌ, சர்க்கரை தேவையான அளவு, நெய் - நாலு கரண்டி, குங்குமப்பூ - ஒரு
சிட்டிகை, கேசரி பவுடர் - கால் சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10
(உடைத்துக்கொள்ளவும்) ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா கால்
டீஸ்பூன், ரோஜாப்பூ - 2.
செய்முறை: முந்திரிப்பருப்பை
சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். சௌசௌவை தோல் சீவி, கூட்டுக்கு
நறுக்குவதுபோல் நறுக்கி நன்றாக வேகவைத்து, நீரை வடித்து, நைஸாக
அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதிலிருந்தும் நீரை வடிகட்டிவிடவும். பிறகு,
இந்த விழுதை டபராவிலோ கிண்ணத்திலோ அளந்துகொண்டு, அதே அளவு சர்க்கரையை
அதனுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அடிகனமான பாத்திரத்தில் வைத்து, மிதமான
தீயில் கிளறவும். சிறுக சிறுக நெய் விட்டு, குங்குமப்பூ, கேசரி பவுடர்
சேர்த்து, சுருண்டு கையில் ஒட்டாமல் வரும்போது, ஏலக்காய்த்தூள்,
ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, ரோஜா இதழ்களை உதிர்த்துப் போட்டு, கிளறி
இறக்கவும்.
Post a Comment