30 வகை ‘COOL’ ரெசிபி! 30 நாள் 30 வகை சமையல்!!

இ தமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வ...


தமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வெயில் காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதன் மூலம், அதையும் சுகானுபவ காலமாக கொண்டாடலாம்'' என்று கனிவுடன் கூறும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், '30 வகை COOL ரெசிபி’களை இங்கே வழங்குகிறார்.
''வெயிலின் கடுமையைத் தணிக்க உதவும் இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், கம்பு, சுரைக்காய், வெந்தயம், தேங்காய்ப்பால் போன்றவற்றைக் கொண்டு விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்துள்ளேன். இந்த கூல் ரெசிபிகளை, புன்னகை யுடன் பரிமாறினால்... சாப்பிடுபவரின் உடலும் உள்ளமும் டபுள் கூல்தான்!'' என்று ஆருயிர் தோழியாக, அன்புப் பெருக்குடன் கூறுகிறார் கிருஷ்ணகுமாரி.
லிச்சி - கார்ன்   - வெள்ளரி சாலட்
தேவையானவை: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில்  போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதையும் ஊற்றிக் கலக்கவும்.
குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

சாக்லேட் ஸ்ரீகண்ட்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஜெம்ஸ் மிட்டாய்கள், பொடித்த பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப.
செய்முறை: தயிரை ஒரு மஸ்லின் துணியில் கட்டித் தொங்கவிடவும். நீர் வடிந்தவுடன், கெட்டியான தயிரை பாத்திரத்தில் போடவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், பாதாம், பிஸ்தா சேர்த்துக் கலக்கவும்.   சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி, மேலே ஜெம்ஸ் மிட்டாய்களால் அலங்கரித்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

பிரெட் ஐஸ்கிரீம்
தேவையானவை:  பிரெட் ஸ்லைஸ் - 5 , கெட்டித் தயிர் - ஒரு கப், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், பழத் துண்டுகள் - ஒரு கப், (ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்), ஏதேனும் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் பருப்பு - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரே அல்லது கிண்ணங்களில் வைக்கவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும். துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து,   இதை கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸர் பகுதியில் வைத்து, பின்னர் பரிமாறவும்.

சம்மர் கூலர்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையை சிறிய துண்டு களாக்கிச் சேர்க்கவும். புதினாவால் அலங்கரித்து... குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்.

சுரைக்காய் தோசை
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும்.  தோசை மாவுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, புதினா, கொத்தமல்லி, சுரைக்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

தர்பூசணி - ப்ளம் பஞ்ச்
தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், ப்ளம் பழம் - 5, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, பாதாம் துருவல் - ஒரு டீஸ்பூன், டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: டீ டிகாக்ஷனுடன் கொட்டை நீக்கிய ப்ளம் பழம், தர்பூசணி துண்டுகள், எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஐஸ் துண்டுகளை நொறுக்கிச் சேர்க்கவும். துருவிய பாதாம் தூவி பரிமாறவும்.

லேயர்ட் புட்டிங்
தேவையானவை:  மேரி பிஸ்கெட் - 5 (நொறுக்கிக் கொள்ளவும்), வெனிலா கஸ்டர்டு - 2 கப், க்ரீம் - கால் கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், துருவிய சாக்லேட் - 5 டீஸ்பூன்
செய்முறை: கண்ணாடி பவுல் அல்லது டம்ளரில்... பொடித்த பிஸ்கெட் தூளுடன் சர்க்கரை சேர்த்துப் போடவும். அதன் மேல் வெனிலா கஸ்டர்டு சேர்க்கவும். பிறகு, 2 டீஸ்பூன் சாக்லேட் துருவலை மேலே தூவவும். அதன் மேல் க்ரீம் ஊற்றவும். மீதமுள்ள சாக்லேட் துருவலையும் தூவி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: வெனிலா கஸ்டர்டுக் குப் பதில் வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கலாம். க்ரீம் வேண்டாமென்றால் விட்டுவிடலாம்.

பொரி தண்டாய்
தேவையானவை: பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.
செய்முறை: பொரி, பாதாம், முந்திரி, கசகசா, பூசணி - வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம்  ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பால் அல்லது தயிரில் கலந்து, சர்க்கரை, தேவையான நீர் சேர்த்து, நன்கு அடிக்கவும். பிறகு, அதைக் குளிர வைத்து எடுத்து... துருவிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.

கோகனட் ஐஸ் பாப்ஸ்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், பழுத்த வாழைப்பழம் - 2, பால் - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் பொடி (பெரிய மளிகைக்கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தயிர், வாழைப்பழம், பால், தேங்காய்ப்பால், தேன் சேர்த்து, மிக்ஸி ஜாரில் ஊற்றி அடிக்கவும். இதனுடன் தேங்காய் பொடி சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். ஐஸ் க்யூப் டிரேயில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைக்கவும். (குறைந்தது 4-5 மணி நேரம்). செட் ஆனதும் பல் குத்தும் குச்சியில் குத்தி எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் ஃபுட் கலர், சீரக மிட்டாய் சேர்க்கலாம். தேங்காய் பொடி இல்லையென்றால், துருவிய தேங்காய் சேர்க்கலாம்.

பிரெட் குல்ஃபி
தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
 
செய்முறை: பாலை சூடாக்கி, அதனுடன் வெண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், பிரெட் துண்டுகள், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். இதில் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, குல்ஃபி அச்சுகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட் ஆனதும் எடுத்து, தேன் சேர்த்துப் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் கஞ்சி
தேவையானவை: புழுங்க லரிசிக் குருணை - ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 8 பல், இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: புழுங்கலரிசிக் குருணை, பாசிப்பருப்பு, வெந்தயம், சீரகம், பூண்டு ஆகியவற்றை 2-ம் தேங்காய்ப்பால், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த கஞ்சியுடன் தேவையான உப்பு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

தர்பூசணி குல்ஃபி
தேவையானவை:  தர்பூசணி விழுது - ஒரு கப், முலாம்பழ விழுது - ஒரு கப், வெள்ளரிக்காய் விழுது - அரை கப், சாட் மசாலா - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: தர்பூசணி விழுது, முலாம்பழ விழுது, வெள்ளரிக்காய் விழுது, உப்பு, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி, குல்ஃபி அச்சுகளில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்து செட் செய்யவும். செட் ஆனதும், அச்சிலிருந்து எடுத்து, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

பாஜ்ரா - மேத்தி ரொட்டி
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெந்தயக் கீரை இலைகள் - அரை கப், கோதுமை மாவு - கால் கப், சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவும்.
குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதில் கடலை மாவும் சேர்க்கலாம். கம்பு, வெந்தயக் கீரை இரண்டும் குளிர்ச்சியைத் தரும்.

மணத்தக்காளி கீரை மண்டி
தேவையானவை:  மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் கீரையை சேர்த்து வதக்கி, அரிசி களைந்த நீரை ஊற்றி வேகவிட்டு... உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கீரை வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

பாஜ்ரா கிச்சடி
தேவையானவை: கம்பு - ஒரு கப், பச்சைப் பயறு - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 2, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேகவிடவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேகவைத்த கம்பு - பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

ஃப்ரூட் சாலட்
தேவையானவை: ஆப்பிள், ஆரஞ்சு, சிறிய கிர்ணிப்பழம் - தலா ஒன்று, வாழைப்பழம் - 2, தர்பூசணித் துண்டுகள் - கால் கப், திராட்சை - 10, மாதுளை முத்துக்கள் - கால் கப், கண்டன்ஸ்டு மில்க், தேன் - தலா 2 டீஸ்பூன், சாட் மசாலா அல்லது சீரகத்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், கிர்ணிப்பழம், வாழைப்பழத்தை துண்டுக ளாக்கி பாத்திரத்தில் போடவும். தர்பூசணி துண்டுகளையும் போடவும். ஆரஞ்சை தோல், கொட்டை நீக்கி இதனுடன் சேர்த்து... திராட்சை, மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும். பிறகு கண்டன்ஸ்டு மில்க், தேன் சேர்த்துக் கலக்கவும். இதை குளிரவைத்து... சாட் மசாலா அல்லது சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

கிவி ஸ்மூத்தி
தேவையானவை: கிவி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2, கெட்டித் தயிர் - அரை கப், பால் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.
செய்முறை: கிவி பழத்தை, தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் கிவி பழம், தயிர், பால், பொடித்த சர்க்கரை, ஐஸ் கட்டிகள் போட்டு நன்கு அடிக்கவும். அதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பாதாம் துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு:  கிவி பழத்துக்குப் பதில் ஆப்பிள், வாழைப்பழம் முலாம்பழம், பப்பாளி சேர்த்தும் 'ஸ்மூத்தி’ செய்யலாம்.

பூசணி தயிர்ப்பச்சடி
தேவையானவை: பூசணித் துருவல் - ஒரு கப், கெட்டித் தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக் கவும்), இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட் டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறி தளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பூசணித் துருவலில் இருந்து நீரைப் பிழியவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூசணித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக் கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
பூசணி, நாவறட்சியைப் போக்கும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும்.

மாம்பழ ஸ்ரீகண்ட்
தேவையானவை: மாம்பழம் - ஒன்று, கெட்டித்தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய பாதாம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, மிக்ஸி யில் அடித்துக்கொள்ளவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். ஒரு பாத்திரத் தில் மாம்பழ விழுது, கெட்டியாக உள்ள தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி, சிறிய கிண்ணங்களில் ஊற்றவும். மேலே பாதாம் துருவல், மாம்பழத் துண்டுகள் தூவி அலங்கரிக்கவும். குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கவும்.

கேரட் - பீட்ரூட் டிலைட்
தேவையானவை: பீட்ரூட், கேரட், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒன்று, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பீட்ரூட், கேரட், தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலு மிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்க வும். பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை சேர்த்துக் கலக்கிப் பரிமாற வும் (குளிரவைத்துக் கொடுத்தால்   சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்).

சம்மர் வெஜ் சாலட்
தேவையானவை: மாங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முள்ளங்கி, வெங்காயம், பேரிக்காய் - தலா ஒன்று, முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், மாங்காய் இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பசலைக்கீரை - கால் கப், நறுக்கிய முட்டைகோஸ் இலைகள் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
செய்முறை: காய்கறிகளைத் நறுக்கிக் கொள்ளவும். வெந்நீரில் பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் இலைகளை 5 நிமிடம் போட்டு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றை யும் பெரிய பாத்திரத்தில் போட்டு... மாங்காய் இஞ்சித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, முளைகட்டிய பயறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

தர்பூசணி சட்னி
தேவையானவை: தர்பூசணித் தோலின் உள்ளே இருக்கும் வெண்மைப் பகுதி - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - ஒரு பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், புளி, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை வதக்கி, ஆறவிட்டு அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி.
தர்பூசணியின் வெள்ளைப் பகுதி சத்துக்கள் நிறைந்தது.

ஜிகர்தண்டா
தேவையானவை: பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன், சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.
செய்முறை:  பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊறவிடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினைப் போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.
விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாமை மேலே சேர்க்கலாம். பாதாம் பிசின், குளிர்ச்சியைத் தரும்.

பழ கஸ்டர்டு
தேவையானவை: பால் - 2 கப், கஸ்டர்டு பவுடர் (விருப்பமான சுவை) - 3 டேபிள்ஸ்பூன், சர்க்  கரை - 2 டீஸ்பூன், ஆப்பிள், திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆரஞ்சு சுளைகள் மற்றும் விருப்ப மான பழ வகைகள் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 2 டீஸ்பூன் (கஸ்டர்டு பவுடரை இதில் கரைத்துக்கொள்ளவும்).
செய்முறை: 2 கப் பாலைக் காய்ச்சி... இதில் கஸ்டர்டு பவுடர் கரைசல், சர்க்கரை கலந்து கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு நறுக்கிய பழத்துண்டுகளைப் போட்டுக் கலக்கி, குளிர வைக்கவும்.
விருப்பப்பட்டால், பரிமாறும் முன் தேன் ஊற்றிப் பரிமாறலாம்.

வெந்தயக்களி
தேவையானவை: அரிசி மாவு - முக்கால் கப், வெந்தயத்தூள் - கால் கப், வெல்லம் அல்லது கருப்பட்டி - ஒன்றரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை  கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
சூட்டைத் தணிக்கும் அருமையான களி இது.

பனானா -பனீர் லஸ்ஸி
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பனீர் துருவல் - கால் கப், ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,  சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் ஐஸ் கட்டிகள், தயிர், உப்பு, சீரகத்தூள், பனீர் துருவல், வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்து அடிக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர், ஜவ்வரிசி தூள், வாழைப்பழ துண்டுகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ஃபலூடா
தேவையானவை: வேகவைத்த சேமியா - அரை கப், சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப், சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் கடைகள், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பழத்துண்டுகள் - அரை கப் (ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) ரோஸ் சிரப் - ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்.
செய்முறை: சுண்டக் காய்ச்சிய பாலை குளிர வைக்கவும். சப்ஜா விதையை 6-8 மணி நேரம் ஊறவைக்க வும். வேக வைத்த சேமியாவை ஆற விடவும். ஒரு உயரமான டம்ளரில் சப்ஜா விதையை முதலில் போடவும். பிறகு பாதி பால், ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்க வும். அதன் மேல் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கவும். பிறகு, வேக வைத்த சேமியா, மீதி பால், பழத்துண்டு கள் சேர்த்து, குளிர வைக்கவும். சாப்பிடும் போது ஸ்பூனால் எடுத்து சாப்பிடவும்.
ஃபலூடாவின் முக்கிய பொருளான சப்ஜா விதை, குளிர்ச்சி தரும்.

ஆம் பன்னா
தேவையானவை: மாங்காய் - ஒன்று, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2-4, கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கொட்டை நீக்கி, வேகவைத்து அரைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் மாங்காய் விழுது, சீரகத்தூள், கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா இலைகள் சேர்த்து அரைக்கவும். 2-3 டம்ளர் நீர், ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கலக்கவும். 'ஜில்’லென்று அருந்தவும்.
குறிப்பு: வெயிலில் செல்லும் முன் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு சென்றால், கடுங்கோடையில் ஏற்படும் 'சன் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தர்பூசணி கீர்
தேவையானவை: அரிசி - அரை கப், தர்பூசணி சாறு - 3 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை தர்பூசணி சாற்றில் வேகவிடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). நன்கு வெந்ததும் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கலக்கி... சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

கிர்ணிப்பழ லஸ்ஸி
தேவையானவை:  கிர்ணிபழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.
செய்முறை: மிக்ஸி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க் கரை, ஐஸ்கட்டிகள் போட்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரி மாறவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 7186367556851691661

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item